
நடேசன்
மெல்பனில் இருநூற்றி ஐம்பது நாட்கள், ஐந்து மில்லியன் மக்கள் வீட்டுக் காவலில் இருந்தார்கள். உணவு, உடற்பயிற்சி முதலான அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் வெளியே போக முடியும். அதுவும் ஐந்து கிலோமீட்டர் மட்டுமே.
கடந்த இரண்டு கிழமைகள் கொரோனாவால் எதுவித தொற்றும் மெல்பனில் இல்லை என்பதால் நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு , தடுப்புக்காவல் முடிவடைந்து, முகமூடியோடு மெல்பன் மக்கள் வெளியேசெல்ல அனுமதியளிக்கப்பட்டது. அந்த அனுமதி விக்ரோரியா மாநிலத்தின் உள்ளே மட்டும் செல்லுபடியாகும். பக்கத்து மாநிலங்களுக்குப் போக முடியாது.
மனநிலை என்பதே வாழ்வு. வாழ்வே மனநிலை. கொரோனா, கூட்டமாக வாழ்ந்தவர்களைப் பிரித்துவிட்டது. குழந்தைகளிடமிருந்து பேரன் பேத்திகளையும், காதலர்களையும் நண்பர்களையும் தூரத்தில் வைத்துவிட்டது. நட்புகளிடமிருந்து பிரித்ததால் தொலைபேசி தொடர்புகள் குறைந்துவிட்டது. ஒன்றாக வேலை செய்பவர்களுடனும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலருடனும் தொடர்புகள் தொடர்ந்து இருந்தாலும், அது பூரணமானதல்ல.
முன்பு கடலில் மீன்பிடி படகுகளும் கரையெங்கும் மக்களும் நிரம்பியிருந்த அந்தப் பிரதேசம் தற்போது மாறியிருந்தது. கடற்கரையோரத்தில் பெரும்பாலான படகுகள் வெறுமையாக கிடந்தன. பல கடைகள் திறக்கப்படவில்லை. மீன்பிடி படகுத்துறைக்குச் சென்றபோது சோம்பல் முறித்துக் கொண்டிருந்த பெலிகனை படமெடுத்துவிட்டு மீண்டும் வந்தபோது, நாம் தங்கியிருந்த அறையில் மனைவி சியாமளாவிற்கு யோகாசன வகுப்பு இணையவழி சூம் மூலம் தொடங்கி நடந்துகொண்டிருந்தது.
அதை முடித்துவிட்டு வெளியே சென்று உணவுக் கடைகளுக்கு வந்தபோது ஓட்டல்கள் 1.5 மீட்டர் இடைவெளியில் எல்லாம் நிரம்பிவிட்டது. பல உணவகங்களுக்குள் சென்று பார்த்தோம். எல்லோரும் எம்மை உள்ளே விட மறுத்துவிட்டார்கள். பொரித்த மீனையும் உருளைக்கிழங்குப் பொரியலையும் கை ஏந்திப்பெற்றவாறு அறைக்குத் திரும்பி அங்கு வைத்து உண்டோம்.
வழக்கமாக எதிரில் வரும் பத்திற்கு ஒன்பது அவுஸ்திரேலியர்கள், அறிமுகமற்ற போதிலும் ஹலோ என்பார்கள். இம்முறை முகமூடி போட்டவர்களில் மிகச் சிலரே ஹலோ என்றும், சிறிதளவினர் தலையை மாத்திரம் அசைத்துவிட்டும் சென்றார்கள். பெரும்பாலானவர்கள் அக்காலத்து பேசா மொழி சினிமாவில் வருபவர்கள் போலிருந்தனர்.
இந்த நிலையில், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் வீட்டைவிட்டு விலகியிருப்போம் என நினைத்தபோது மெல்பனிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லேக்ஸ் என்ரன்ஸ் என்ற கடலோடு அண்டிய பகுதி நினைவுக்கு வந்தது . முன்பொரு முறை கோடைகாலத்தில் அங்கு போயிருந்தேன்.
இம்முறை வாகனத்தில் வெளியே சென்றபோது, செல்லும் வழியில் நண்பர் முருகபூபதி வசிக்கும் புறநகரமான மோவல் என்ற ஊரில் அவரது இல்லத்திற்குச் சென்று இரண்டு மணித்தியாலங்கள் பேசிவிட்டு, மதிய உணவின் பின்னர் லேக்ஸ் என்ரன்ஸ் வந்து சேர்ந்தோம்.
தனிமையாக இருங்களென்ற அரசின் பிரசாரத்தை நூறுவீதமாக எடுத்து விட்டார்களோ?
எல்லோரும் முகமற்ற முகமூடி மனிதர்களாகிவிட்டதுடன் இதுவரை காலமாக இருந்துவந்த மனித இயல்புகளும் மறைந்துவிட்டன. ஒவ்வொருவரதும் வாழ்க்கையே முக்கியமாகிவிட்டது. போர்க்காலத்தில் ஒற்றுமை உருவாகுமென்பார்கள். இங்கு கொரோனா காலத்தில் பிரிகிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் பின்னர், நவீனத்துவம் மறைந்து பின்நவீனத்துவம் வந்தது என்பார்கள். ஆனால், எனக்கோ இந்த கொரோனாவின் பின்பாக புதிய, முற்றிலும் சுயநலமான ஒரு சமூகம் உருவாகும் என நினைக்கிறேன். கொள்கைகள், அறம் ஏன் சமூகம் என்ற வரைபுகளும் அற்ற தனிமனிதர்கள்தான் உருவாகுவார்கள் .
நல்ல வேளையாகக் காமம் என்ற உணர்வு இருப்பதால் உடலுறவு நீடிக்கும். ஆதலால் ஆண் – பெண் என்ற சோடி சேர்தலிருக்கும். எனது நினைப்பு தவறாகவேண்டுமெனவும் நினைக்கிறேன்.
அன்று மாலை ஆதி மனிதனின் தொழில்களில் ஒன்றான மீன்பிடிக்கச் செல்வதற்குப் பதிவு செய்திருந்தேன். அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து துறைமுகத்திற்குப் போகவேண்டும்.
காலையில் மீன்பிடிக்கச் சென்றபோது அங்கு இருளின் அரசாட்சி. கடற்கரையில் மீன்பிடி வள்ளம் கண்ணுக்குத் தெரியவில்லை. தொலைபேசியை எடுத்து பேசியபோது, ஐந்து பேருடன் எனக்காகக் காத்திருப்பதாக பதில் வந்தபோது எனக்கு கவலையாகிவிட்டது “ இரண்டு நிமிடத்தில் நான் வரவில்லையாயின் என்னை எதிர்பார்க்காது போகவும் “ என நான் சொல்லி முடிப்பதற்குள், “ எனது வாகனம் தெரிவதாக… “ மறுமுனையிலிருந்து கூறியபோது, வாகனத்தை விட்டு இறங்கி, சற்று அருகில் தெரிந்த சிறு வெளிச்சத்தை நோக்கிச் சென்றேன் .எட்டு உருவங்கள் நிழலாகத் தெரிந்தன. வெளிச்சத்தை பாய்ச்சி, நான் அந்தப்படகில் ஏறுவதற்கு உதவினார்கள்
ரோனி என்ற படகின் சொந்தக்காரருக்கு ஒரு உதவியாளரும் மற்றும் ஐந்து முகத்திரை அணிந்தவர்களும் நின்றார்கள். பத்து கிலோமீட்டர் தொலைவிற்கு செல்வதாகவும் கடலில் முகமூடி அணிவது இயலாத காரியம் என்று சொன்னபோது எல்லோரும் எங்கள் முகமூடிகளை எடுத்து பொக்கட்டில் வைத்தோம்.
பாதுகாப்புச் சட்டை (Life Jacket ) அணிந்து கொண்டோம். இருபத்தைந்து வயதிலிருந்து எண்பத்தைந்து வயதானவரும் அதிலிருந்தார். எண்பத்தைந்து வயதானவர் மேற்சட்டையில் “பார்வை குறைந்தவர்” என எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ரோனி உதவியாக கையை பிடித்திருந்தான் .
என்னால் இன்னமும் இருபது வருடங்கள் மீன்பிடிக்க முடியுமா?
அந்த மனிதரை நினைத்துக் கொண்டிருக்க வள்ளம் குதிரைபோல் அலைகளில் பாய்ந்தது. அமர முடியவில்லை. அக்கால இலங்கை பஸ்களில் கம்பியில் பிடித்தபடி வௌவாலாக தொங்கியதுபோன்று எழுந்து நின்றேன். அக்காலத்தில் முள்ளந்தண்டு உறுதியானது.
ஆனால், இக்காலத்தில்..?
அரை மணிநேர பயணத்தின்பின்னர், நங்கூரம் பாய்ச்சினார்கள். ஆனால், படகு கடல் அலையில் பைத்தியக்காரனால் ஆட்டப்பட்ட உஞ்சலாகியது. அவுஸ்திரேலிய கிழக்கு பசுபிக் சமுத்திரத்திலும் பார்க்க தென் சமுத்திரம் அலை கூடியது . அபாயம் நிறைந்தது. கப்பல்கள், மனிதர்கள், மற்றும் விலை உயர்ந்த செல்வங்கள் ஜலசமாதியடைந்த செய்திகள் வரலாற்றுப் புத்தகங்களின் பக்கங்களில் புதைந்துள்ளன.
கால்களை அகட்டி வைத்தபடி, தூண்டிலை எறிந்தபோது பிடித்த முதலாவதாகச் சுறா ( Dog shark) வந்தது. ஆனால், அது நல்லதல்ல என்றதும் அதை எறிந்து விட்டேன். இரண்டாவது தடவையாக பிடித்த மீன் கனட் ( Gunard) என்ற மீன். அதனது முதுகில் உள்ள முள்ளுகள் நஞ்சானவை. அதனால் அதனையும் எறிந்தேன். ஒரு மணிநேரம் எதுவும் நான் தூண்டிலில் போட்ட இரையைக் கடிக்கவில்லை. உதயசூரியன் பொன்னை உருக்கி கடலில் பரப்பியது. அந்த ஒளி நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பெரியதாக ஒன்று எனது துண்டிலை இழுத்தது.
ஓல்ட் மான் அன்ட் சீ கதையில் பிடிபட்டதுபோல் மாலன் மீன் பிடிபட்டுவிட்டதா?
தூண்டிலை சுற்ற முயன்றபோது, முடியவில்லை. அகப்பட்டது பெரியதுதானா?
எனது முன் கைகள் பலமிழந்துவிட்டதா?
ஒரு வருடமாக உடற் பயிற்சி கைகளுக்கு இல்லை. கொரோனாக்காலம். ஜிம்னாசியங்கள் பூட்டப்பட்டுள்ளன. நடப்பதோடு சரி .
கொழுப்புக் கூடி கைத்தசைகள் வலுவிழந்துவிட்டதா?
தூண்டிலின் தடியை வள்ளத்தில் அணைத்து இழுத்துப் பார்த்தபோது, டோனி சிரித்தவாறு தனது முன்கைகளை மடக்கினான். எனது வயதே டோனிக்கு . சந்தன மரத்தில் செதுக்கியது போல் உரமான கைகள் . பொறாமையாக இருந்தது
.அவனது நினைவில் என்ன ஓடியிருக்கும் ?
நகரத்திலிருந்து விட்டு, பல வருடங்களின் பின்னர் வந்தால் இப்படித்தான்?
இறுதியில் டோனியின் உதவியுடன் இழுத்தபோது, அது கம்மி சுறா (Gummy Shark) ஐந்து கிலோ இருக்கும். அதன் பின்பு ஒரே ஒரு விளைமீன் பிடிபட்டது. இரண்டு மணிநேரமாக மொத்தமாக ஐந்து மீன்கள் பட்டன.
மீண்டும் அங்கிருந்து கரையை நோக்கி வந்தபோது, நன்றாக விடிந்து சூரிய ஒளி , கண்களை கூசும் விதத்தில் கடலை வெள்ளியாக பரப்பியிருந்தது.
டோனியுடன் அவனது படகுபற்றிப் பேச்சுக் கொடுத்தேன்.
“ நான்கு வருடங்கள் பழைமையானது, 300, 000 டொலர் பெறுமதியானது “ என்றான்.
“ இங்குள்ள வீட்டின் பெறுமதியை விட அதிகம் இல்லையா? “ என்றேன்
“ இன்னமும் கடன் மாதாமாதம் கட்டுகிறேன் “ என்றான் சிரித்தபடி.
“ எட்டு மாதங்கள் உழைப்பில்லை. எப்படி சமாளித்தீர்கள் “ வார்த்தைகளை விரலாக்கி நோண்டினேன் .
“ 17 வருடங்களாக இந்தத் தொழில். சேமிப்பில் சமாளிக்க முடிந்தது. “
“ ஏழு நாளும் வேலையா? “
“ வீசும் காற்றைப்பொறுத்து. சில நாள் கிழமை முழுவதும் வேலை செய்யமுடியாது. ஆனால், எந்த நாளும் வேலைக்குத் தயாராக இருக்கவேண்டும். பிள்ளைகள் வீட்டிலில்லை நானும் மனைவியும் மட்டுமே. “
அவுஸ்திரேலியாவில் டோனி போன்று ஐந்து மில்லியன் பேர் சிறிய தொழில்கள் செய்பவர்கள். அவர்கள் ஒன்று அல்லது இரண்டு பேரை வேலைக்கு வைத்திருப்பார்கள். அவர்களுக்கு இந்தக் கொரோனா , சுனாமி போன்றது.
நானும் அவர்கள் போலவே சுமார் 25 வருடங்கள் இருந்தேன். அவுஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட அறுபது வீதமானவர்கள் இப்படியான தொழில்களில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஏழு நாட்களும் வேலை. இவர்களில்லாவிடில் அவுஸ்திரேலியா முடங்கிவிடும். பெரிய கம்பனிகளில் வேலை செய்யும் தொழிலாளர், இவர்களோடு ஒப்பிடும்போது அதிஷ்டசாலிகள். 32 மணி நேரம் வேலை. ஒரு கிழமை மருத்துவ விடுமுறை. ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறை என மிகவும் வசதியான நிலை.
இந்த 5 மில்லியனில் எத்தனை பேர் மீண்டும் இந்த கொரனாவின் விலங்கொடித்து எழுந்து தொழில் புரிவார்களோ ? என்னைப்போன்ற அந்த மீன்பிடிப்பயணத்தில் ஈடுபட்ட ஆறுபேரது பணமே டோனியினதும் அவனது சகாவினதும் சம்பளம்.
மீண்டும் சுறா பிடிக்கும் இடத்திற்கு வந்தபோது, சிறிதான மீன் ஒன்று பிடிபட்டது . எறிந்துவிட்டோம். ஐந்து மணி நேரத்தின் பின் கரை சேர்ந்தபோது மூவர் தங்களுக்கு மீன் தேவையில்லை என்றதால், மற்றைய மூவரும் பகிர்ந்து கொண்டோம். எனது பங்காக இரண்டு விளைமீனும் அரைச் சுறாவும் கிடைத்தது
மாலையில் கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. சிலர் தனியாகவும் சிலர் நாய்களுடன் நடமாடினர். பெலிக்கன், கரும் அன்னம், கடற்காகங்கள் எந்தப்பயமுமற்று குடும்பங்களாகத் திரிந்தன.
லேக் என்ரன்ஸ்ஸில் இரண்டு இரவுகள் விடுமுறை போதாது என நினைத்தவாறு, நண்பர் முருகபூபதியின் வீட்டிற்கு மீண்டும் வந்து, பிடித்துக்கொண்டுவந்த சுறாவையும் சேர்த்து கூழ் சமைத்துக் குடித்துவிட்டு மீண்டும் மெல்பன் வந்து சேர்வதற்கு மாலையாகியது.
சுறா போட்ட கூழ் குடித்தது அதுவே வாழ்க்கையில் முதல் தடவை. கூழ் நன்றாக இருந்தது.
—-0—-
மறுமொழியொன்றை இடுங்கள்