Gorden Weiss- Cage- தமிழாக்கமான கூண்டு.


(Gorden Weiss)கார்டன் வைஸ்சின் தமிழாக்கமான கூண்டு தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. பல இடங்களில் ஆங்கில புத்தகத்தை பார்த்திருந்தேன். அதை மேலாலே பார்த்து விட்டு நகர்ந்தேன் . ஆனால் கூண்டு என்ற அதன் தமிழாக்கம்.

ஏன் தமிழ்த்தேசியர்கள் பலர் அதைப் பேசவில்லை என ஆச்சரியப்படுகிறேன்.அவர்கள் பெரும்பாலானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்கள் அல்லது ஆனந்தவிகடன் குமுதத்தின் வாசகர்கள் என்பது தெரிந்தாலும் அவர்களில் ஒரு வீதத்தினராவது பேசியிருந்தால் புத்தகத்தைப்பற்றி எனக்குத் தெரிந்திருக்கும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் வெளியிட்டதாகத் தெரியவில்லை. பின் அட்டைக்கு பேராசிரியர் சேரன் போன்ற தமிழ்த்தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் முக்கிய ஒருவர் குறிப்பெழுதியபோதிலும் புத்தகம் குடத்தில் விளக்காகிவிட்டது.

தேசிய நண்பர்களே, புலிக்கொடியை வைத்து விட்டு நீங்கள் உங்கள் விவிலியமாகத் தலைமேல் தூக்கிப் பிடிக்க வேண்டிய புத்தகமிது.தமிழ்த் தேசியத்திற்கு, யாராவது புதிய மோசஸ் பிறந்தால் அவரது கையில் இதை வைத்து நீங்கள் போராடவேண்டும். போராட அறிவுக்கு நூல் தேவை.

புத்தகத்தில் கதை, மொழி, நோக்கு எல்லாம் இராஜபக்சா குடும்பத்திற்கு எதிரானது.

தமிழகத்தைச் சேர்ந்தவர் மொழி பெயர்த்திருந்ததாக நான் அறிந்த போதிலும் மொழி நமக்குப் பரிட்சியமான ஈழநாதம் போன்றவற்றில் வரும் உணர்வான வயகரா மொழி. முதுகிழவரையும் கையில் ஆயுதத்தை எடுக்கச் சொல்லும்.இதை நல்ல மொழியில் சொன்னால் நமது விவிலியம், கீதை, குரான் என்ற மத நூல்களில் வருமே – இதைச் செய்தால் நரகம் கிடைக்கும் ;இதுவே சத்தியம் இதைச் செய்தால் இறைவனை அடைவாய்- என சிறிதளவும் ஐயப்பாட்டை வைக்காத உணர்வு கலந்த மத போதகருக்கான மொழி.

புத்தகம் ஆரம்பத்திலிருந்து இலங்கையரல்லாதவருக்கு, இந்தப் போருக்கான இலங்கையின் வரலாற்றை சொல்கிறது. அதாவது வெளிநாட்டவருக்கென காடன் வைசால் எழுதப்பட்டது.

உண்மைகளுடன் தற்கால எழுத்து முறையான புனைவான மன ஊடலுடனாக செய்தி சொல்கிறது(Creative nonfiction or literary journalism).நடந்த உண்மைகள், எழுதுபவர் மனத்திற்கேற்ப புனைவாகிறது.

இந்த புத்தகம் கடைசி நாட்களில் நடந்த விடயங்களை நம்மை மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கிறது . இலங்கை அரசின் யுத்த மீறல்கள் அரசாங்கத்தின் மீறல்களாக சொல்லப்படும்போது விடுதலைப்புலிகளின் தவறுகள் எதுவும் தவறவில்லை. ஒரு விதத்தில் கடைசி யுத்தத்தமென்ற அரக்கனின் நாட்குறிப்புபோல் பக்கங்களில் விரிந்து செல்லுகிறது.

நாட்குறிப்பின் சம்பவங்கள் விவரிக்கப்படும்போது அந்த சம்பவங்களுக்கான காரணங்கள் புத்தகத்தில் விடுபடுகிறது. அந்த ஓட்டைகள் அரச படைகள், தளபதிகள் , அரசின் தவறுகளாக விபரிக்கப்படுகிறது. மேலெழுந்த கண்ணோட்டத்தில் சரியாகவே தோன்றும். அகழ்வாராச்சியில் உண்மை புரியும்.
உலகத்தில் சம்பவங்கள் தற்செயலாகவோ கடவுளாலோ நடத்தப்படுவதில்லை. தொடர்ச்சியான முடிச்சுக்கள் ஒன்றின்மேல் ஒன்றாக காரண காரியமாக விழுகின்றன. அதனது இறுதி விளைவே போர். விடுதலைப்புலிகளைக் காலம் காலமாக எதிர்த்த எங்களைப்போன்றவர்கள் இலங்கை அரசின் யுத்த மீறல்களைக் காணாமல் செல்லவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததொன்று. ஆனால் இப்படியான ஒரு அழிவான போரைத் திட்டமிட்டு உருவாக்கியதே விடுதலைப்புலிகள் . அதை இந்தப்புத்தகத்தில் காணமுடிகிறது.
போர் புதிதாகத் தோன்றவில்லை. சூரனை அழிக்க முருகன் பிறந்தது போல் இராஜபக்சா பிறந்து வரவில்லை. கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருந்த எந்த ஒரு போர்க்காட்சியிலும் இராஜபக்சா இருக்கவில்லை . அவரை இந்த இறுதிக் காட்சிக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அழைத்து வந்தவர் “தேசியத் தலைவரே”
அவ்வளவு தூரம் போகவேண்டாம். கார்டன் வைஸ் போன்றவர்கள் வடபகுதியில் முள்ளிவாய்காலை பற்றிப் பேசும்போது திருகோணமலையில் போரை, அத்திவாரக்கல்லை வைத்து உருவாக்கியவர்களைப் பற்றிப் பேசவில்லை . மன்னாரிலிருந்து மக்களை செம்மறிகளாகச் சாய்த்துக் கொண்டு வந்தது நமது நல்லாயன்களல்லவா?

இப்படிஒரு யுத்தம் வரும். எமது ஆயுதங்கள் எம்மை பாதுகாக்க முடியாதபோது, பொது மக்கள் அழிவார்கள். அந்த அழிவைப் பார்த்து, எம்மை அடப்பாவமே, அப்பாவி மக்கள்அழிகிறார்களே என்று யாராவது காப்பாற்றுவார்கள் என்ற கணக்கு, தப்புக்கணக்காகிவிட்டது . இந்த கணக்கில் மட்டுமே தவறு நடந்தது. பிரபாகரனுக்கு அரசுக்கும் நடந்த ஒரு விளையாட்டு ஆனால் விளைவு ?

It was like a child game – whoever blinks first loses.

சுதந்திரபுரத்தை பாதுகாப்பு பிரதேசமாக அரசு பிரகடனப்படுத்தியபின் அங்கு ஷெல் இராணுவத்தால் அடிக்கப்படுகிறது என்கிறார் கார்டன் வைஸ். உண்மை, ஆனால் அங்கிருந்து விடுதலைப்புலிகள் தங்களது வானொலி ஒலிபரப்பு செய்ததுடன் ராணுவத்தின் மேல் தாக்குகிறார்கள் என்பது புத்தகத்தில் இல்லை.இதை எதிர்த் த அரச உத்தியோகத்தர் இன்னமும் உயிருடன் இருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள், மக்களை தங்கள் துருப்பு சீட்டாக வைத்திருந்தாக கார்டன் வைஸ் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அது தொடங்கிப் பல வருடங்கள் என்பதை கார்டன் வைஸ் தவறவிட்டுள்ளார். 1995 ஒக்டோபரில் யாழ்பாண மக்களை வன்னிக்குக் கொண்டு சென்றதில் தொடங்கியது. ஆனால் யாழ்பாணத்தவர்கள் பலவிதமாக விடுதலைப்புலிகளை ஏமாற்றிவிட்டு சாகவச்சேரி கொடிகாமம்தோடு, அரசே தங்களுக்குப் பாதுகாப்பு என உறுதியாக நினைத்து யாழ்ப்பாணம் வந்துவிட்டார்கள். அப்படியே சிலர் விமானத்தால் வெளிநாடு வந்து, வெளிநாட்டு புலி ஆதரவாளர்களாகி விட்டார்கள் . பாவம் வன்னி மக்களுக்கு இந்த சூக்குமம் புரியவில்லை.அப்பாவிகள். புலியின் மடியில் அன்னையின் கதகதப்பைத் தேடிய மான்குட்டியாகிறார்கள்.
இந்தியா , இலங்கை அரசோடு ஒத்துழைத்ததாகவும் ரகசியத்தகவல்களைக் கொடுத்ததாக கார்டன் வைஸ் சொல்கிறார். இந்தியர்களைப் பிழை சொல்ல முடியுமா ?
2,977 மேற்பட்டவர்களை இரட்டைகோபுரத்தாக்குதலில் கொலை செய்ததால் அமரிக்கா 18 வருடங்களாக ஆவ்கானியர்களை கொன்று வருகிறது . ஆஸ்திரிய இளவரசன்மீது குண்டு வீசியதால் முதலாவது உலகப்போர் நடந்தது. இந்தியா ஒரு விதத்தில் கைலாகாத நாடாகவே நான் கருதினேன்.
நான் எனது கானல்தேசம் நாவலில் எழுதியது. ஆனால் கற்பனையில்லை . இந்திய உளவு அதிகாரியின் உண்மைக் கூற்று .
“ஆனாலும், எங்கள் நாடு மிகவும் பொறுமையானது. எங்களது ஐயாயிரம் வருட வரலாற்றில் எம்மிடையே உதித்த மதத்தலைவர்களான புத்தர், மகாவீர் மற்றும் குருநானக் என்பவர்கள் தர்மம் எது கர்மம் எது என்பதை உணர்த்தியுள்ளனர். பாவத்தின் சம்பளம் என்ன என்பதை புரிந்த பின்பு விமோசனம் தேட இப்பொழுது சரியான தருணம் வந்துள்ளதால், நாங்கள் உருவாக்கிய ட்ராகுலாவை அழிப்பதற்கு உங்களுக்கு உதவ விரும்புகிறோம். இதுவும் எனது கருத்தில்லை. எங்களது தலைவர்களினது கருத்து என நினைக்கிறேன்” என்றான் பாண்டியன்”

பேர்ள் துறைமுகத்தை தாக்கிய யப்பானியத் தளபதியை அமரிக்கர்கள் விசாரணையின்றியே கொன்றார்கள். ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டம் போட்டபோது இவைகளைப்பற்றி சிந்தித்திருக்கவேண்டும்


சரணடைந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்றது உண்மை. அதை ஒரு இராணுவ அதிகாரியே ஒப்புக்கொண்டார். எனக்குத் தெரிந்த யோகி மாஸ்டரை பற்றி அவரிடம் கேட்டபோது எல்லா முட்டைகளும் ஒரு கூடையிலே என்றார்.

முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதலின் பின், 800 மேற்பட்ட சரணடைந்த ராணுவ வீரர்கள், கொலை செய்யப்பட்டது எனக்குத் தெரியும் .

எப்படி நாம் அறத்தைப் பற்றிப் பேசமுடியும்?

மனித உரிமைகளைப் பற்றியோ ஜெனிவா ஒப்பந்தத்தையோ எப்படி நினைத்துப் பார்க்க முடியும் ?

அகதிகளாகச் சரணடைந்த பெண்களை ஆரம்பத்தில் பரிசோதிப்பு குறைவாக இருந்தபோது பெண் ஒருவரைத் தற்கொலைப் போராளியாக்கி, வெடித்து பலர் இறந்ததார்கள் அதற்காக ஒரு பிரிகேடியர் ராணுவரீதியாக தண்டிக்கப்பட்டதாக அவரே என்னிடம் கூறினார் .

எமது போராட்டம் தண்ணீருக்குள் விட்ட சல்பூரிக் அமிலமாக இருந்திருக்கவேண்டும். தேசிக்காய்த் தலையர் சல்புரிக் அமில போத்தலுக்குத் தண்ணீரை ஊற்றி வெடிக்க வைத்து தானும் அழிந்து போய்விட்டார். போரும் கடந்து, காலங்களும் கடந்துவிட்டது. இவற்றை விவாதித்து பயன் என்ன ? ஆனாலும் கார்டன் வைஸின் கூண்டு (Cage) புத்தகம் முக்கியமான ஒரு ஆவணம். இதை யார் படிக்கவேண்டும்?

முக்கியமாக நமது தமிழ் அரசியல்வாதிகள் கையில் இந்தப் புத்தகம் தவழவேண்டும் .ஆரம்ப வட்டுக்கோட்டை சூத்திரதாரிகளில் ஒருவரான சம்பந்தர் இன்னமும் உயர் வாழுகிறார்.

இந்த அவலத்திற்குப் பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பித்தவர்கள். தம்பி பொடியள் எனக் கொம்பு சீவி தடவி உருவி விட்டவர்கள்.

சம்பந்தரே, நீங்கள் போர்க்காலத்தில் அரசாங்க பாதுகாப்பிலிருந்தீர்கள். மீண்டும் வந்து தமிழ்த் தேசிய வீர வசனம் பேசுகிறீகள். மற்றயவர்கள் போரில் ஈடுபட்டு கொலைகள் கொள்ளைகள் செய்தவர்கள். இன்று அரசியல் செய்தாலும் பழைய விடயங்கள் மறக்க முடியாது. மண்டையில் மசாலா இல்லாத மக்கள் உங்களை மீண்டும் தலைவர்களாகிறார்கள் . அது அவர்களும் நீங்களும் செய்துகொண்ட அபத்தமான ஒப்பந்தம்.

இப்பொழுது புத்தகத்தை பார்ப்போம்

காலச்சுவடு, கூர்வாளின் நிழலைக் காலச்சுவடு பிரசுரித்தபோது திட்டினீர்கள். இப்பொழுது கூண்டு உங்கள் புத்தகம் அதற்காகப் பாராட்டவேண்டாம். வாங்கி வாசியுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: