
நான் மட்டுமல்ல, வடபகுதியில் காலம் காலமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் எவரும் மறக்கமுடியாத அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. நெருக்கமாக அமைந்த வீடுகளானதால் பக்கத்து வீட்டு குழந்தைகளின் அழுகை, பெரியவர்களின் படுக்கையறை முனகல்கள், முதியவர்களின் குறட்டையொலி எல்லாவற்றையும் இரவில் கேட்கலாம். சிறுவர்களின் கூக்குரலுடன் அவர்களை நோக்கிய உம்மாக்களின் அழைப்புகள், வாப்பாமாரின் பயமுறுத்தல்கள் என்பன காலையில் காதை அடைக்கும்.
அன்றும் வழமைபோல் எதிர்வீட்டு இஸ்மாயிலின் சேவல் கூவியது. மசூதியின் பாங்கொலி முழங்கியது. பாண்காரன், மரக்கறிக்காரன் எல்லோரும் அன்று தாமதமின்றி வந்தார்கள். ஒன்பது மணிக்கே சுள்ளென வெயில் அடிக்கத் தொடங்கியது. உம்மா தந்த கோப்பையில் காலை உணவாக, பாணைப் பருப்புடன் தொட்டபடி கதிரையில் அமர்ந்தேன்.
‘நம்ம நாட்டு நிலவரம் என்ன சொல்லுது? இன்றைக்கு எங்கு குண்டு வெடிச்சது? கொலை நடந்தது? எந்தப் பக்கம் எண்ணிக்கை அதிகம்? இதைத்தானே வருடக்கணக்கா சொல்கிறார்கள். சரி இன்றைக்கு என்னதான் ரெலிவிசனில் வருகிறது என சலிப்புடன் சமீபத்தில் கொழும்பில் இருந்து வாங்கிவந்த அந்த நாசனல் பனசோனிக் ரெலிவிசன் ரிமோட்டை முடுக்கிவிட்டு அதில் லயித்தேன்.
பாணைத் தின்று முடிக்கவில்லை. வெளியே இரைச்சல் கேட்டது. உம்மாவும் பர்வீனும் பதறியபடி வெளியே ஓடினார்கள். வாப்பாவுக்கு காது கேட்காது. அவர் அதிர்ஸ்டசாலி. அமைதியாக இருந்தார். காது, கண் எனச் சில புலன்கள் செயல்படாதவர்கள் யுத்தகாலத்தில் அதிர்ஸ்டசாலிகள் அதிலும் மனநோயாளிகளாக இருந்தால் துன்பம் இருந்தாலும் புரியாது இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
உணவை முடிப்போம் என கடைசித் துண்டுப்பாணை வாயில் வைத்தேன். தூரத்தில் தோன்றிய இரைச்சல், மழைக்காலத்து இலங்கைத் தேசிய சேவை ரேடியோ ஸ்ரேசனின் ஒலிபரப்பு போலிருந்தது, இப்பொழுது நம்மை நோக்கி அருகில் வந்தபோது வர்த்தக சேவைபோல் துலக்கமாக கேட்டது. யாரோ வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து தெருவழியாகப் பேசினார்கள்.
அந்தக்காலத்தில் தேர்தல் அறிவிப்புகள், சினிமாப்பட விளம்பரம் என்றால் இப்படி மைக்போட்டு சொல்வார்கள். ஏதாவது முத்தவெளியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும் செய்வார்கள். இப்பொழுது அவையெல்லாம் இறந்தகால நிகழ்வுகளாகிவிட்டன. இயக்க வெடிகளும், விமானங்கள் வந்து குண்டுபோடும் இடியோசையும், தலைமேல் பறக்கும் விமானங்கள், ஹெலிகளின் இரைச்சல்களையும் மட்டுமே கேட்கப் பழகிவிட்டோம். பழகிய காதுகள் புதிய ஓசையை தெரிந்து கொள்ளத் தடுமாறுமா?
இது புதிதாக இருக்கிறதே?
கையைக் கழுவிவிட்டு வெளியே வந்தேன். ஒன்றுமில்லாத திருநாளாக இப்படி செய்கிறார்களே? யார் இவன்கள்? எனப் பார்த்தபோது தெருவிற்கு வந்த ஒருவர் ‘இயக்கம்’ என்றார்.
‘இவன்களுக்கு என்ன வேலை, சோனக தெருவில?” வெளியால் வந்தபோது ஏற்கனவே திரளாக மக்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். குழந்தைகள், குமருகள், கிழவிகள் என எவரும் உள்ளேயில்லை;. எல்லோரும் தெருவிலே. அந்த குறுகிய தெருக்களில் நிற்க இடமில்லை. போதாக்குறைக்கு யன்னல்கள், கதவுகள் முகங்களாக பூத்தது. இந்தத் தெருவில் இவ்வளவு சனமா? என்று ஆச்சரியமுற்றேன்.
“என்ன சொல்கிறாங்க?”
“எல்லோரையும் ஒஸ்மானியா கல்லூரியின் மைதானத்தில் ஒன்று கூடும்படி சொன்னார்கள்” என்றான் பக்கத்து வீட்டு ராசீக்.
நான் நம்பவில்லை. உள்ளே செல்லாமல் வாசலில் நின்றபடி பார்த்தேன். இராணுவ உடுப்பணிந்து துப்பாக்கிகளுடன் வாகனங்களில் பொடியள் வீதியில் வரத்தொடங்கியிருந்தனர். “சாவகச்சேரியில் நடந்தது, எமக்கும் வருமென நினைக்கவில்லை. மன்னாரில் சனங்களை அவங்கள் வெளியேற்றிய போதும் நீ நம்பவில்லை. கடைசிவரையும் நீ நம்பாத விடயம் நடந்திருக்கு” என் தங்கைச்சி பர்வீன் எனக்கு நறுக்காக சொல்லியபோது முள்ளில் மிதித்தது போல் உணர்ந்தேன். பதில் வார்த்தை வரவில்லை. நம்மட கையில் எதுவும் இல்லை என்ற நிலையில் என்ன பதில் சொல்லமுடியும்?
கடைசியாக கல்லூரிக்குச் சென்ற குடும்பத்தில் எங்களது குடும்பமும் இருந்தது. இரண்டு மணிநேரம் அந்த மைதானத்தில் நின்றும் நிலத்தில் குந்தியிருந்தும் சத்தமாக சொல்லப் பயந்து வாய்க்குள்ளே வார்த்தைகளை அமுக்கியபடி பலர் திட்டியபடி இருந்தார்கள்.
அந்த வார்த்தைகள்- சாபங்கள். அந்த வார்த்தைகளுக்கு அப்போது ஓசை இல்லை: பெறுமதியில்லை: வலுவில்லை. ஊமைகளின் சாபங்களே. அவை எப்பொழுதாவது உண்மையாக மாறுமா? அல்லாவுக்குத் தெரியும். அப்பொழுது ஆசனிக்போல் காலமெடுத்து நஞ்சாக மாறினால் அவை அவர்கள் பாவிக்கும் சயனைட்டை விட வீரியம் வாய்ந்தவையாகத் தெரியும்.
பணக்காரரும் ஏழைகளும் சமமாக இந்த அந்த இரண்டு மணிநேரமும் நின்றிருந்தனர். குழந்தைகள் நிலைமையை உணராது அழத்தொடங்கின. ஆண்களிடம் பெண்கள் கைகளாலும் முகக்குறிப்பாலும் விளக்கம் கேட்டது அவர்களுக்குத் தெரியாது. ஆண்கள், பெண்களை அடக்கினாலும் சிறுவர்களை அடக்கமுடியவில்லை. பல்லாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்த அந்த இடம் அல்லோலகல்லோலப்பட்டது. எங்களுக்குப் பக்கத்தில் முகமது ஹாஜியார் குடும்பத்துடன் இருந்தார். வழக்கமாக அவருக்கு சலாம் போட்டு எழுந்து நிற்கும் எனது வாப்பா முகத்தை கால்களுக்குள் புதைத்தபடி, பாதங்களை சரத்தால் இழுத்தி மூடி, குல்லாய் மட்டும் வெளித்தெரிய இருந்தார். அவரது விரல்கள் பாடசாலையின் நிலத்தில் உள்ள கோரைப்புற்களில் வேகமாக மேய்ந்தன. ஒவ்வொன்றாக புற்களைப் பறித்து சிறிய கும்பலாக குவித்தார். அவரது வலது காலருகே கை நிறைந்த அளவு கோரைப்புல் சேர்ந்திருந்தது. வாப்பா அப்போது பட்ட மனக்கஸ்டத்தை புல்லைப் பறிப்பதில் காட்டியபடி அமைதியாக இருந்தார்.
இயக்கத்தின் பொறுப்பாளர் மதியம் வந்தார் “உங்கள் பாதுகாப்புக்கருதி எல்லோரையும் யாழ்ப்பாணத்தை விட்டு உடன் வெளியேறுபடி———-” தனது பணத்தைக் கவனமாகக் செலவு செய்யும் உலோபி போல் சில வார்த்தைகளில் சொன்னார். பெரும் கலகமே உருவாகும்போல் இருந்தது; மக்கள் கொதித்து எழுப்பிய கூக்குரல் இரைச்சலாக மாறியது; அந்த இடமே அதிர்ந்தது.
“அல்லாவுக்கு பொறுக்காது. இந்தக் கொடுமையை யாரும் கேட்கவில்லையா” என்ற வார்த்தைகள் மட்டும் புரிந்தன. ஆரம்பத்தில் மக்களின் நன்மைக்காக வெளியேற்றுவது போல் பொறுமையாக இருந்தவர்கள் கடுமையான குரலில் “இன்று கட்டாயம் வெளியேற வேண்டும்” என்றனர். மக்கள் குரலில் அவர்கள் சத்தம் அமிழ்ந்தது. பொறுமை இழந்த அவர்கள் துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி பல தடவைகள் சுட்டார்கள். அந்த சத்தத்தை கேட்ட கூட்டம் அமைதியாகியது;. சனங்கள் கதி கலங்கினார்கள். குழந்தைகள் தாய்மாரை கட்டிக்கொண்டும் மார்பிலும மடியிலும் முகம் புதைத்தும் மௌனமாக அழுதனர். வாப்பாவுக்கு துப்பாக்கிச் சத்தம் கேட்காத போதிலும் உயர்த்திய துப்பாக்கிகளைப் பார்த்தவுடன் இருந்த இடத்திலே தலையை வைத்து தொழத்தொடங்கினார். அம்மாவும் பர்வினும் பயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உறைந்து விட்டனர்.
“யாழ்ப்பாணத்தில் இருந்து எல்லோரையும் வெளியேற்றுகிறார்கள்” என அன்வர் காக்கா கூறியது கேட்டது. அன்வரை புதிதாக மிருகக்காட்சிச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட வினோதமான மிருகத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தனர். ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. முகத்தில் பயத்தையும் வெறுப்பையும் அடர்த்தியாக குழைத்துப் பூசிய அவர்கள் எவரும் ஆறுதல் வார்த்தைகளை தேடவில்லை. மரணத்திற்கு நேரம் குறித்துவிட்டது போன்ற ஒரு நிலை ஒவ்வொருவர் முகங்களிலும் தெரிந்தது. நிறைமாத கர்ப்பிணி பெண்களையும் சிறுகுழந்தைகளை வைத்திருந்தவர்கள் மீது பரிதாபமான பார்வையால் மட்டும் மற்றவர்கள் ஆறுதல் அளிக்க முடிந்தது. வீடு திரும்பி அம்மா கையில் ஒரு துணிப்பெட்டியையும், தோளில் பர்வீனுக்கு வைத்திருந்த நகைகள் கொண்ட பையையும் எடுத்துக் கொண்டார். இதை விட வாப்பா இரண்டு பெரிய பெட்டிகளைக் கையில் எடுத்தார். நான் வழக்கமாக இரண்டு சேட்டும் இரண்டு சாரமும் மட்டும் வைத்த ஒரு பெட்டியில் ரொக்கமாக இருந்த காசை வைத்திருந்தேன். காசை இயக்கத்திற்கு கொடுத்து தற்காலிகமாகவேனும் சில நாள் அவகாசம் கேட்டு சமாளிக்கமுடியும் என மனதில் வர்த்தக எண்ணம் இழையோடியது.
அவர்கள் தயாராக வைத்திருந்த லொரிகளில் ஏறுவதற்கு வரிசையாக நின்ற போது மனோகரா தியேட்டரருகில் இதுவரையில் எதிர்பார்க்காத இடி விழுந்தது. “500 ரூபாவும் ஒரு சோடி உடுப்பு மட்டும் எடுத்துச் செல்லலாம்” என்றபோது எல்லோரும் அழத்தொடங்கினர். அதைப் பொருட்படுத்தாது தியேட்டருக்கு உள்ளே அனுப்பி வரிசையில் நிற்க வைத்து பொருட்களைப் பறித்தார்கள். நகைகளை கழற்றித்தரும்படி வாங்கினர். மறுத்தவர்களை ஆயதமுனையில் பயமுறுத்தினர். சிறுமிகள், குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. குழந்தையின் காது தோட்டைக்கூட கேட்டு வாங்கினர்கள். அம்மாவிடம் இருந்து நகைப்பையைப் பறித்தபோது அம்மா கதறிய விதத்தை பார்க்க முடியாது நான் முகத்தை மூடியபடி இருந்தேன். யாரோ தோளில் தட்டியது போன்று இருந்தது. முகத்தில் இருந்து கையை எடுத்தேன். எதிரே நின்றவரில் இயக்கம் என்ற முத்திரை முகத்திலும் உடலிலும் தெரிந்தது. இராணுவ உடுப்பு அணியாது இடுப்பில் பிஸ்டல் வைத்திருந்தார்.
“நியாஸ்தானே”
“ஆ”தலையாட்டினேன்.
“அடையாள அட்டையையும் பெட்டியையும் தந்துவிட்டு என்னுடன் வாரும்” என மரியாதையாக கூறினார்.
அவருடன் நடந்து கே.கே.எஸ். வீதிவரையும் சென்றபோது சோனகத்தெருவில் வாழும் முதலாளிகள் பத்துப் பேர் வரையில் நின்றார்கள். அவர்களிடம் பேச முயன்றபோது தோளில் ஒரு ரைபிளின் பின்பகுதியால் அடி விழுந்தது. நோ தாங்கமுடியாது ‘ஆ உம்மா” எனக் கத்தியபடி குனிந்து, நெளிந்து அடி விழுந்த இடத்தை கையால் தடவிக் கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்தின் பக்கம் இருந்து வந்த ஒரு ஜீப் சடுதியாக பிரேக்போட்டு நின்றது. அதனது பின்கதவுகள் திறந்ததும் அங்கிருந்த இருவர் வந்து ஏறச் சொன்னார்கள். ஏறியவுடன் எனது கண்கள் கரிய துணியால் கட்டப்பட்டன. கைகளும் பின்பக்கமாக வயரினால் பிணைக்கப்பட்டது. ஜீப்பின் தரையில் அழுத்தி இருத்தினார்கள். அடிபட்ட முதுகை தடவக்கூட முடியவில்லை. இருபது நிமிட பிரயாணத்தின் பின்பு ஒரு இடத்தில் நின்றது. அப்படியே சேர்ட்டில் பிடித்தபடி கயிற்றில் கட்டிய நாயைப்போல் இழுத்துக்கொண்டு சென்றார்கள். எனது பெட்டி என்றபோது “அதைப்பற்றிக் கவலை தேவையில்லை” எனப்பதில் வந்தது. படிகளில் வெறும் காலோடு ஏறியபோது அது ஒரு மாடி வீடு என நினைத்தேன். இறுதியில் ஒரு அறையில் தள்ளினார்கள்.
அன்று அறையில் கிடந்தேன். எனது கண்கள் கட்டியிருந்தாலும் அங்கு பலர் இருப்பதை அறிந்தேன். தண்ணீர் கேட்டபோது ஒருவன் வாயில் போத்தலை வைத்தான். அன்று இரவு உணவு இல்லை. சுவரில் சாய்ந்தபடி ஏன் கைது செய்தார்கள்? இவர்களுக்கு நான் என்ன செய்தேன்? இனியும் உயிர் வாழ்வேனா? பர்வினுக்கு என்ன நடந்தது? அம்மா வாப்பா என்ன செய்வார்கள்? உம்மாவிற்கு டயபட்டீஸ்க்கு இன்சுலின் எடுத்திருப்பாவா? வாப்பாவுக்கு பிரசர் குளிசை இருக்குமா? என்று குடும்பத்தவரை நினைத்தபடி கோயில் மணியொசையைக் கேட்டபடி என்னையறியாது கண்ணயர்ந்து விட்டேன்.
தட தடவென மாடியில் பூட்ஸ் காலின் பெரிய சத்தத்தின் பின் மணல் சீமெந்துப் படியில் உரசும் சிறிய ஓசை கண்ணாடித் துகள்களால் இதயத்தில் கீறுவதுபோல் இருந்தது. நள்ளிரவாக இருக்க வேண்டும். பலர் படிகளில் ஏறி வந்த சத்தம் கேட்டது. நித்திரையில் இருந்து எழுந்த என்னைத் தரதரவென வெளியே இழுத்தபோது சாரம் கழன்றது. “ஐயோ எனது சாரம்” என்றேன். என்னைப் பிடித்திருந்தவன் தோளில் இருந்த தனது பிடியைத் தளர்த்தாமல் ‘அது வரும் இப்பொழுது உனது பெண்டர் காணும்’ என இழுத்து ‘காலை உயர்த்தி வை’ என ஏற்றியதைப் பார்த்தபோது அதன் உயரத்தில் லாரி என நினைத்தேன். கண்களையோ கைக்கட்டையோ அவிழ்க்கவில்லை. கை பிடிக்காமல் நிற்கமுடிந்தது. அங்கு ஏற்கனவே பலர் நிற்கிறார் என்பது அவர்களது உடல் என்னில் உரசுவதைக் கொண்டு உணரமுடிந்தது. சாடின் தகரத்தில் மீன் அடைத்ததுபோல் அடைத்திருந்தார்கள். கதவை மூடியது தடார் என்ற பெரிய சத்தம். பின்னர் இரும்புச் சங்கிலியின் கிளிக் கிளிக் என இரண்டு சப்தத்துடன் லொரி வெளிக்கிட்டது. இதுவரையும் அமைதியாக இருந்தவர்களின் முனகல்களும் அனுங்கல்களும் கேட்கத் தொடங்கின. என்னைப்போல் பலர் இருப்பதாக உணர்ந்தேன்.
இவர்கள் அந்த சோனகத் தெருவில் வாழும் முதலாளிகளா? ஏன் ஒருவரும் பேசவில்லை? கண்ணைக் கட்டியிருப்பார்களா அல்லது பயத்தில் வாயடைத்து விட்டார்களா? நிச்சயமாக எங்களைக் கொல்லத்தான் ஆடு, மாடாக லொரியில் அடைத்து கொண்டு போகிறார்கள். கத்தியால் வெட்டுவதா? துப்பாக்கியா? ஏன் காசுக்கு வாங்கிய சன்னங்களைப் பாவிக்கவேண்டும் என நினைப்பார்களா?? எத்தனையே சக தமிழர்களையும், மாற்று இயக்கங்களையும் கொன்ற இவர்களுக்கு எங்களைக் கொல்வது பெரிய விடயமா? என்னை எதற்காக வந்து பிடித்தார்கள்? என் பெயரைச் சொல்லி நம்ம சோனக தெருக்காரன் யாராவது காட்டிக் கொடுத்திருப்பானா? அவங்களுக்கு நான் கெடுதல் செய்யவில்லையே? வியாபாரத்தில் என்னைப் போட்டியாக நினைப்பதற்கு வேறு ஒருவரும் எனது தொழில் செய்யவில்லையே! பொம்பிளை விடயத்திலும் நான் கிளீனே! பார்ப்பம் என்ன நடக்கிறது? மனமறிந்து எவனுக்கும் துரோகம் செய்ததில்லை. ஏதோ அல்லா விட்ட வழி என மனதுக்குள் ‘அல்லாஹ் அக்பர்’ என முனகிக்கொண்டேன்.
பலரது வியர்வை மணத்தை திரும்பிய பக்கமெல்லாம் மூக்கால் உணரமுடிந்து. என்னைப்போல் பலரும் உடையற்று நிற்கிறார்களோ! வாகன ஓட்டத்தில் பல முறை நிலைகுலைந்து சரிந்தாலும் நெருக்கமாக ஆட்களை ஏற்றியிருந்தபடியால் உலாய்ந்தபடி மீண்டும் நிற்க முடிந்தது. ஒருமுறை விழுந்தபோது மற்றவர்களின் கால்களுக்கு இடையில் இருப்பதாக உணர்வு ஏற்பட்டது. இடையே வந்த மூத்திர மணத்தை உணர்ந்தபோது சுன்னத்து செய்யாதவங்களா? அந்த லொறியில் தமிழர்கள் அம்மணமாக இருக்கிறார்களோ? என்ற கேள்வி ஏற்பட்டது. இறுதியில் வண்டி நிறுத்தப்பட்ட போது எனக்கு மேல் பலர் விழுந்தனர். ஆனால் நான் விழவில்லை. மற்றவர்களால் மீண்டும் பழைய நிலைக்கு வந்தேன்.
லொரி முக்கால் மணிநேரம் ஓடியிருக்கலாம். திடீரென நிறுத்தப்பட்டதுடன் லொரியின் கீழ்க்கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டது.
“எல்லோரும் இறங்குங்கடா” என்ற சத்தம் கேட்டதும் விழுந்தபடியே எழும்பாமல் வழுக்கினேன். மிகவும் அருகில் நின்றதால் தரையில் விழுந்த என்னை ஒருவன் பிடித்து “இனி ஒரு பு……டை மகனுக்கும் கண் கட்டுத்தேவையில்லை” என கண்ணில் கட்டிய துணியை இழுத்தான்.
என்னை விழாமல் சமாளித்தபடி பார்த்தேன். கண் தெரிய சில நிமிடங்கள் தாமதமானது. மெதுவான பின்னிரவு நிலவொளியில் தென்னந்தோட்டமாக இருந்தது. தூரத்தில் வீடு. அதனது மேல்மாடியில் ஒரு பல்ப்பின் வெளிச்சம் மரங்களுடாகத் தெரிந்தது.
குத்து மதிப்பாக ஐம்பது ஆண்கள் லொரியில் இருந்து இறங்கினார்கள். அவர்களைச் சுற்றி யூனிஃபோர்ம் அணிந்து துப்பாக்கி ஏந்திய பத்துப்பேர் வரையில் வளைத்து நின்றார்கள். எங்களது லொரிக்குப் பின்பாக தட்டிவானொன்று நின்றது.
என்னிடம் ஒருவன் சாரத்தை நீட்டி எனது தோளில் போட்டான். கட்டிய கைகளாகியதால் சாரம் சால்வையாக தோளில் தொங்கியது.
“எனது பை?”
“அது தேவையில்லை”
“அதற்குள் காசு?”
“அது தமிழீழ விடுதலைக்கு முன்பணமாகப் போய்விட்டது. உங்கள் பெயரில் வரவு வைத்து, நாடு விடுதலையாகும் போது வட்டியுடன் தரலாம்”
எனது காசை வரவு வைத்து பண வரவு – செலவில் முறையாகத்தான் நடக்கிறார்கள். ஆனால், கொல்லக் கொண்டு வந்திருக்கும் அவர்களின் பதிலில் நம்பிக்கை இல்லாதபோதும் விடுதலை என்ற வார்த்தை மனதிற்கு ஆறுதல் அளித்தது;.
அது எவ்வளவு மதிப்பு வாய்ந்தது.
அந்த நாலு எழுத்து எனது இதயவலிக்கு மருந்தாகியது.
எங்களுக்கு முன்பாக ஒருவன் டோர்ச் லைட்டுடன் செல்ல அருகிலும் பின்னும் இயக்கத்தவர்கள் செல்லும் அந்த ஊர்வலம் சென்றது. ஐம்பது மனிதர்கள் கொலைக்களத்திற்கு போகும் காலடி ஓசை, மணல் செறிந்த அந்த பிரதேசத்தில் மெதுவாக ஒலித்து அமைதியைக் குலைத்தது. எவரும் அவசரமாக நடக்கவில்லை. யாரும் வாய் திறக்கவில்லை. சிறுகுடலில் விழுந்த முடிச்சுக்களால் எனக்கு கால்கள் பின்னியது.
ச-ர-க்;-கெ-ன நீண்ட ஓசையுடன் தென்னைமரத்திலிருந்து விழுந்த காய்ந்த ஓலை நடந்தவர்களை தடை செய்தது. ஊர்வலத்தின் முன்னால் சென்றவன் துப்பாக்கியை முன்காட்டி, நடந்தவர்களை நிறுத்தி அந்த தென்னையை உச்சியிலிருந்த அடிவரை லைட்டடித்துப் பார்த்தான். அந்தக் கணம் எனக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. எனது உயிர் இந்தக்கணத்தால் உலகில் நீடிக்கப்படுகிறது. இவங்களும் மனப்பயத்தில் எங்களைப் போலதான். நாங்கள் இவங்களது துப்பாக்கிக்குப் பயப்படும்போது இவர்கள் தென்னோலைக்கே பயப்படுகிறார்கள்.
இருட்டில் தனியாக பயங்கரமாகத் தெரிந்த அந்த வீடு, பல அறைகளைக் கொண்ட மாடி வீடு.
அந்த வீடு அவர்களது முகாம்போல காட்சி தந்தது.
அங்கிருந்து ஒருவன் கண்ணைக் கசக்கியபடி வாசலுக்கு வந்தான். அவனுக்குப் பின்னால் பலர் நின்றார்கள். “இவர்களெல்லாம் உனது பொறுப்பு” என இதுவரையும் லைட்டுன் வந்தவன் சொல்லி விட்டு சில பைல்களைக் கையில் கொடுத்தான்.
என்னோடு வந்தவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் நாற்பது வயதானவர்கள். சாரமணிந்திந்திருந்தார்கள். மிகுதி இளைஞர்களில் சிலர் என்னைப்போல் உள்ளாடையுடன் மட்டும் இருந்தார்கள். இருவர் அறுபது வயதானவர்கள். ஒருவர் தாடியுடன் சேர்ட்டு நீளக்காற்சட்டை அணிந்திருந்தார். மற்றவர் வேட்டி சட்டையுடன் கிளீன் சவரம் செய்த முகமாக இருந்தார். அவர்களில் ஒருவரும் முஸ்லீம்களாகத் தெரியவில்லை. இவர்கள் எல்லோரும் தமிழர் போல தெரிகிறது. சோனகத்தெரு முதலாளிமாரை வேறு இடத்தில் வைத்திருக்கவேண்டும்.
எனது காசையும் எடுத்துவிட்டார்களே? என்னை மட்டும் இவர்களுடன் வைத்திருக்க காரணம் என்ன? நான் என்ன செய்தேன்? ஏன் ? ஏன் ? என்ற கேள்வி வெய்யில் காலத்தில் முகத்தை சுற்றி வரும் இலையானாகத் தொந்தரவு செய்தது.
மேல் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டு லைட்டுகள் எரியாத இரு அறைகளுக்குள் பிரித்து விடப்பட்டோம். திறந்து கிடந்த யன்னலால் வெளியே தென்னந்தோப்பு தெரிந்தது. தொலைவில் எதுவித வெளிச்சமும் இல்லை. நிலாவின் ஒளியால் சிறிது நேரத்தில் அறையின் உள்ளே கண்ணுக்கு உருவங்கள் தெரிந்தன. ஆனாலும் அடையாளங்களோ முகங்களோ தெரியவில்லை. யன்னலருகே பக்கத்தில் இருந்தவர்களின் உடலில் முட்டியபோது நெளிந்து தள்ளிப்படுத்தேன்.
அப்பொழுது “ஒருவருடன் முட்டாமல் படுப்பதற்கான தகுதியை நாம் இழந்துவிட்டோம்”எனக்குரல் வந்தது.
“நான் அந்த தகுதியை இழக்க என்ன செய்தேன் என எனக்குத் தெரியாது”
அடுத்த பக்கத்தில் இருந்து
“உன்னைப்போலத்தான் எல்லோரும். ஆனால் பகலில் பேசலாம். இரவில் சுவருக்குகூட காது இருக்கும்” என குரல் வந்தது.
பின்புறமாக கட்டப்பட்ட கையுடன் நிமிர்ந்தோ, குப்புறவோ படுக்க முடியவில்லை. சரிந்து படுத்தேன். யன்னலூடகத் தெரிந்த தென்னை மரம் பார்ப்பதற்கு சாத்தானாக ஏளனம் செய்வது போல் தெரிந்தது. இவர்கள் என்னைப் பிடிப்பதற்கு என்ன செய்தேன் என்ற கேள்வியைக் கேட்டபடியிருந்தேன். பதில் வரவில்லை. பசியாக இருந்தது. என்ன செய்வது? காலையில் பருப்புடன் தின்ற பாண் மட்டுமே. அப்படியே கண்ணயர்ந்துவிட்டேன்.
அடுத்தநாள் கைக்கட்டு அவிழ்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 பேர் எனது நிலையில் இருந்தார்கள். நாங்கள் வரிசையாக மலம் கழிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். பெரிய கிடங்குமேல் இரண்டு தென்னை மரக்குற்றிகள்போட்டு திறந்த வெளியாக விடப்பட்டிருந்தது. ஒருவருக்கு இரண்டு நிமிடம் எனச் சொல்லி ஒரு போத்தல் தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் அடைக்கப்பட்டோம். மற்ற இயக்கத்தினர் என சந்தேகத்தில் பெரும்பாலானவர்கள் பிடிக்கப்பட்டிருந்தனர். அதைவிட சில வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தினரும் இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் மீது இந்திய அமைதிப்படையின் காலத்தில் புலிகளுக்கு எதிராக இயங்கியவர்கள் என்ற குற்றசாட்டு இருந்தது.அதில் ஒருவர் இந்திய இராணுவத்திற்கு சப்பாத்தி போட்டு சமையல் வேலைக்கு உதவி செய்தவர். அவரது முதுகில் தோலே இல்லை. காயம் காய்ந்து நோன்புக்குத் தின்னும் பேரீச்சம் பழத்தின் தோலாக இருந்தது. கண்ணால் பார்க்க முடியவில்லை. பின்னிய வயரால் அடித்தார்கள் என்றார். எனது உடல் சிலிர்த்தது. பயம் பாம்பாக உடலில் நெளிந்தோடியது.
பத்துமணிக்கு வெறும் பாணும் கறுப்புத் தேனீரும் வந்தது. கிட்டத்தட்ட இருபத்தினாலு மணிநேரத்தின் பின்பாக நான் சாப்பிடும் உணவு. அந்தத் துண்டுப்பாணில் நியாஸ் எனப் பெயர் எழுதி வைத்த அல்லாவுக்கு நன்றி சொன்னபோது கண்ணீர் வந்தது. சில நிமிடங்கள் அழுதேன். அழுதபடியே உண்டபோது “தம்பி அழு. துன்பங்கள் வந்தால் அதன்பின்பு இன்பம் வரப்போகிறது என்றே நினைக்கவேண்டும்” என்றார் அந்த தாடிக்காரர்.
அந்த நேரத்தில் அவரின் தத்துவம் எரிச்சலைத்தந்தது. வயதானவர் என்பதால் அடக்கிக் கொண்டிருந்தேன்.
“ஐயா இங்கு தொழ முடியுமா?”
“தாரளமாக செய். நீ இஸ்லாமியனா?”
தலையாட்டினேன்.;;
“எல்லாரையும் விட்டு விட்டு ஏன் உன்னை பிடித்தார்கள்?”
“அதுதான் எனக்குத் தெரியவில்லை”
ஒரு கிழமை கழிந்தது. மாலையில் முகாம் பொறுப்பாளர் பசீர் வரச் சொல்லியதாக என்னைக் கொண்டு சென்றார்கள். ஒரு இஸ்லாமியன் பெயராக இருந்ததால் எனக்கு ஏற்பட்ட மகிழ்சிக்கு அளவேயில்லை. துள்ளவேண்டும் போல் இருந்தது. அல்லாவுக்கு நன்றி என வாய்விட்டு சொன்ன போது அவர்கள் முறைத்தார்கள். எப்படி இவர்கள் முஸ்லீமை வைத்திருப்பார்கள்? இது இவர்களின் புனை பெயர் என பொறிதட்டியதும் சந்தோசம் நீரில் கரைந்த வெல்லமாகியது. ஆனாலும், அந்தக் கணநேர மகிழ்வே கடந்த ஒரு கிழமையில் நான் சுகமாக அனுபவித்தது. அதற்காக பசீர் எனப் பெயர் வைத்த அவர்களுக்கு நன்றி சொன்னேன்.
நான் அழைத்து செல்லப்பட்ட தென்னந்தோட்டவளவில், வீட்டுக்கு எதிரில் அமைந்திருந்த நாலுபக்கமும் திறந்த சிறிய கொட்டில் தென்னோலையால் வேயப்பட்டிருந்தது. பள்ளம் திட்டியான தரை மண்ணால் மெழுகப்பட்டிருந்தது. அந்த மண் தரையில் சில கறுப்பான உலக வரைபடம் போன்ற பகுதிகள் மனித இரத்தமோ எனச் சந்தேகமாகவிருந்தது. முன்னொருகாலத்தில் பார்த்த மாடறுக்கும் கொட்டில் என்னையறியது மனதில் வந்து போனது. தோல் உரிக்கப்பட்டு கணுக்கால்களில் கொக்கிபோட்டு தொங்கும் தலையறுந்த மாடுகள் என்னையறியாது கண்ணுக்குள் வந்துபோனது.
கொட்டிலின் கிழக்குப் பக்கத்தில் பனை வரிச்சுக்கட்டி விறகுகளை இடுப்புயரத்திற்கு அடுக்கி வைத்திருந்தார்கள். அவை சமையலுக்கான விறகுக்கட்டைகள். கொட்டிலின் மேற்கும் பகுதி வெறுமையாக இருந்தது.அங்கு ஒரு சிறிய மேசையின் முன்புள்ள கதிரையில் பசீர் எனப்படுபவர் அமர்ந்திருந்தார். முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. இரானுவ கால்சட்டையும் வெள்ளை கைவைத்த பனியனும் அணிந்து மிகவும் குட்டையாக வெட்டிய தலைமயிருடன் இருந்தார். மெல்லிய உதடுகளுடன் சின்ன வாய். முகம் மொத்தமாக சவரம் செய்யப்பட்டதால் கடுமையாக இருந்தது. கழுத்தில் கறுத்த நூல் தெரிந்தது. கண்கள் என்னை கத்தியாக ஊடுருவின. இவ்வளவிற்கும் இருபத்தைந்து வயதுதான் இருக்கும். மெலிந்த உடல். ஆனால், கருங்காலியில் செதுக்கியது போல் நிறமும் உறுதியும் தெரிந்தது.
எப்படித்தான் இவர்களுக்கு இப்படி நடக்க முடிகிறது? மிருகங்கள் உள்ளே குடிவந்துவிடுகிறதா?
இருபுறமும் சீருடையணிந்த இருபது வயதான மீசைகூட முளைக்காத பால்வடியும் முகத்துடன் இருவர் துப்பாக்கிகளுடன் நின்றனர். பஷீர் முன்னிலையில் எனது கைவிலங்கு அகற்றப்பட்டது. கையைப் பார்த்தபோது கண்டியிருந்தது.
மேசையில் நீலம் பச்சையாக இரண்டு வயர்கள் ஒன்றாக பின்னப்பட்டு இருந்தன. இங்கு இதுவே பிடித்தமானதும் அதிகம் பாவிக்கப்படுவதுமான ஆயுதம் என அறிந்திருந்தேன். அதைவிட கொட்டான் தடி, ஒரு சுத்தியல், மின்சார ஊழியர்கள் பாவிக்கும் குறடு என்பனவும் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் எனது இதயம் மேளமடித்தபடி வாய்வழியாக வருவதற்குத் துடித்தது. பற்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதாக உணர்ந்தேன். வயிற்றில் மிருகம் புகுந்து வெளிவந்ததுபோல் வலித்தது. கால்கள் நடுங்கியபடியே தந்தியடித்தன.
“உனது பெயர் என்ன?” என கேட்டுவிட்டு தனது கோப்பைப் பார்த்தார்.
“நியாஸ்”
“சோனியா?”
பதில் சொல்லவில்லை.
“என்னடா பு…டை மகனே வாய்க்குள் என்ன இருக்கு? சாரத்தைக் கழட்டுங்கடா.”
இப்பொழுது பிறந்த மேனியுடன் நின்றேன்.
“உனது குற்றம் தெரியுமா?” பசீர் கண்களை அகல விழித்தபடி
“இல்லை”எனது நடுக்கமோ இதயத்துடிப்போ குறையவில்லை
மேசையில் இருந்த பொருட்களைக் காட்டி
“உனக்கு எது பிடிக்கும்?” உணவில் எது பிடிக்கும் என பட்சணக் கடையில் வேலை செய்பவன் கேட்பதுபோல் அவனது கேள்வியிருந்தது.
மௌனமாக இருந்தேன். ஓடும் இரயில் முன்பு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்து காத்திருப்பது போல் இருந்தது.
பஷீர் கதிரையைத் தள்ளிவிட்டு எழுந்து பின்பக்கமாக வந்தான். அவன் கையில் பின்னிய வயர் தொங்கியது .
எந்த எச்சரிக்கையுமற்று பின்னிய வயரால் எனது முதுகில் பட பட என இரண்டு அடி குருசு வடிவத்தில் விழுந்தது. உயிர் போய் உயிர் வந்தது.
“உண்மையிலே தெரியாது. தயவு செய்து சொல்லிவிட்டு அடியுங்கள்” என வலியில் ஆகாயத்திற்கும் நிலத்திற்கும் குதித்தேன்.
சிறிய இடைவெளியல் எனது குதிப்பை நிறுத்தி மேசையில் கையை வைத்தபோது மீண்டும் பசீரின் கை ஓங்கி காலுக்கு கீழ் அடிக்க முனைந்தபோது “அல்லாவின்மேல் ஆணையாகத் தெரியாது. ”என நிலத்தில் தொழுவதுபோல் தலையையும் கையையும் வைத்தபடி அழுதேன்.
மீண்டும் பசீர் கதிரையில் சென்று அமர்ந்தபடி “நான் சொல்லுகிறேன். நீ ரெலோக்காரர்களுக்கு மன்னாரில் போட் எஞ்ஜின் வித்தாயல்லவா?”
அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது: 84-85 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் இருந்து எஞ்ஜின்களை மன்னாரில் உள்ள மீனவர்களுக்கு விற்பேன். தமிழர்கள் கொழும்பில் நேரடியாக எஞ்ஜின்களை வாங்க முடியாத காலத்தில் அந்த வியாபாரத்தை செய்தேன். அதுவும் நான் வங்காலைச் சம்மாட்டிமாருக்குத்தான் விற்றேன். அவர்கள் இயக்கத்திற்கு மீண்டும், விற்றோ அல்லது கொடுத்தோ இருந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும்? நான் நிரபராதி. இப்பொழுது ஓரளவு துணிவு வந்தது. நான் செய்தது குற்றமல்ல; வியாபாரமே. அதைச்சொல்லி புரியவைத்தால் என்னை இவர்கள் விடுவார்களென நினைத்து எவ்வளவு எஞ்ஜின் வாங்கினேன், யாரிடம் விற்றேன் என்று விபரங்களை சொன்னபோது அந்த பொறுப்பாளர் எல்லாவற்றையும் எழுதினார்.
அரைமணி நேரத்தின் பின்பு எனக்கு தேநீர் தரப்பட்டது.
“நீ உண்மையை சொல்லியதாக எமது அம்மான் கருதினால் உனக்கு விடுதலை. இனிமேல் உனக்கு கைக்கட்டு கிடையாது. புதிதாக சரம் சேர்ட்டு தரச்சொல்கிறேன். நாளை விசாரணையில் ஏதாவது விட்டுப் போனால் நீயாக வந்து சொல். இதைவிட நீ ஏதாவது பொய் சொல்லியிருந்தால் உன்பாடு அதோகதிதான்.. ” பசீரின் குரல் எனக்கு விடுதலை அளிக்கும் நீதிபதியின் குரலைப்போல் நெஞ்சில் குளிர்ந்தது.
நான் அறைக்குப் போனேன். மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அந்தத் திசையைப் பார்த்து தொழுதேன். அதன்பின் பர்வீன், உம்மா, வாப்பா எங்கிருக்கிறார்கள்? அவர்களுக்கு சாப்பாடு தண்ணீர் கிடைக்குமா என கவலைப்பட்டேன். வயரால் அடித்த இடம் கொதித்தது. அதை தடவியபடி இருந்தேன்.
அந்தத்தாடிக்காரர் “தம்பி இரண்டு அடி மட்டுமே வாங்கியிருக்கிறாய். நீ அதிர்ஸ்டசாலி. கால் உடைபட்டவன், கையுடைபட்டவன், பல்லுடைந்தவன், விதை வீங்கியவன், மூத்திரம் பெய்யமுடியாதவன் என பலரை நான் பார்த்திருக்கிறேன்” என சிரிப்புடன் வார்த்தைகளை எறிந்தார் அந்த வயதானவர்
“அப்படியா? நீங்கள் ஏனையா இங்கு வந்தீர்கள்? உங்கள் வயதில் இவர்களுக்கு விரோதமாக என்ன செய்தீர்கள்?” அவர்மீது வந்த ஆத்திரத்தை அடக்கியபடி.
“தம்பி, இவர்களுக்கு எதிராக நீ இயங்க வேண்டியதில்லை. ஏன் நினைக்கவேண்டியதில்லை. இவர்களுக்கு எதிராக மனதில் நினைக்கிறாய் என அவர்களுக்கு சந்தேகம் வந்தாலே போதும் . உன்பாடு அதோ கதிதான். நான் துரோகமென இவர்கள் நினைப்பதைச் செய்திருக்கிறேன். இவர்களில் முக்கியமான ஒருவர் எங்களது ஊரில் அரசியல் கூட்டம்போட்டு ஆட்கள் சேர்த்தார்கள். அவர்களிடம் நான் அரசியல் பேசினேன். புரட்சிக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி ஹோசிமினது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை உங்கள் தலைவரிடம் கொடுக்கச் சொல்லி கொடுத்தேன். ஏற்கனவே தாடியுடன் இருப்பது இவர்களுக்கு என் மேல் சந்தேகத்தை வரவழைத்தது” எனத் தனது நரைத்த தாடியை தடவி விட்டார். “நான் சொன்னதைக் கேட்டு அந்த முக்கியமானவர் ‘தலைவருக்கு இதெல்லாம் தெரியும். உனக்கு புரட்சியை நாங்கள் புரியவைக்கிறோம்’ எனக்கூறி இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.”
“எவ்வளவு காலம்?”
“நல்லூரில் இரண்டு முகாமில் ஒரு மாதமாக இவர்களது சித்திரவதையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது இங்கு என்னைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், பாவம் என்ன வேடிக்கை என்றால், இவர்கள் இவற்றையெல்லாம் உண்மையில் புரட்சியென நம்பி செய்கிறார்கள். ஒரு விதத்தில் இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் ஏனென்றால் இவர்களுக்கு மண்டையில் சரக்கில்லை. அதேவேளையில் அபாயம் என்னவெனில் அதனால் சரக்கிருப்பவனை எல்லாம் மண்டையில் போட்டு முடித்துவிட்டுத்தான் ஆறுலடைவார்கள்”
“உங்களுக்கு எதுவும் செய்யவில்லையா?” சந்தேகத்துடன் கேட்டேன்.
“எனக்கு அடித்தால் செத்துப்போவேன் என அவர்களுக்குத் தெரியும். எனக்கு இதய வருத்தம் உள்ளது. தங்களது செயலை என்னைப் பார்க்க வைப்பதே எனக்குச் செய்யும் சித்திரவதை என நினைக்கிறார்கள். எனக்கு மருந்தெடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் வீட்டில் இருந்து மனைவி மாதா மாதம் மருந்து கொண்டுவருகிறார்”
“கொஞ்சம் வித்தியாசமாக இருக்கே? உங்கள் வயதை நினைத்து மரணதண்டனையை கொடுக்காமல் இருக்கிறார்களோ?”
“அப்படி நினைக்க வேண்டாம். இவர்கள் இலேசானவர்கள் அல்லர். மரணத்திலும் பார்க்க அவர்களது செயலைப் பார்பதே எனக்க மிகப் கொடூரமான தண்டனை என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள் . பயங்கரமான சாடிஸ்ருகள். அதனால்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறார்கள்.” எனக்கூறிய அந்தப் பெரியவர் தனது நீலதுணியாலான மருந்துப் பையில் இருந்து எண்ணையை எடுத்து எனது முதுகில் தடவினார். சிறுவயதில் இருமல் வந்தபோது வாப்பா முதுகில் விக்ஸ் தடவியதுபோல் இருந்தது. என்னையறியாமல் கண்ணீர் வந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்