

மெல்பன் பொலிஸ் இலாகாவில் பணிபுரியும் சிமித் தம்பதியரின் செல்லப் பிராணி பூனை. பெயர் ரைகர். பக்கத்துவீட்டு நாய், சிமித் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததுமல்லாமல் அவர்களின் அருமையான பூனையையும் கடித்து பதம் பார்த்துவிட்டது. பக்கத்துவீட்டு- லிண்டா அந்த நாயின் சொந்தக்காரி Single mother . தன் பிள்ளைகளையே பொறுப்பாகக் கவனிப்பதில்லை. இந்தஇலட்சணத்தில் தனது நாயை மாத்திரம் பொறுப்போடு கவனிப்பாளா?”” – இது திருமதி சிமித்தின் வாதம். Single mother வாழ்வு வாழும் பெண்கள் மீது வித்தியாசமான பார்வை கொள்பவர்களின் சராசரிக் கணிப்புடன் அவளைத்திட்டிக்கொண்டிருந்தாள்
திருமதி சிமித். சிமித்தின் பூனையை மேசையில் ஏற்றிப் பரிசோதித்தேன். அதன் வலது பின்னங்காலில் இரண்டு முறிவுகள். அதன் இடுப்பின் கீழும் பாதங்களிலும் உணர்ச்சி இல்லை. எலும்பு முறிவை சிறுசத்திரசிகிச்சை மூலம் சுகப்படுத்தலாம். ஆனால் காலில் நரம்பு இயங்காவிட்டால் பலன் இல்லை. நிலைமைகளை சோதனையின் பின்பு சிமித்திடம் கூறினேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை காலை பிக்ஸ் பண்ணிவிடுங்கள்.”” அவள் அழாத குறையாகக் கெஞ்சினாள். எலும்பைப் பொருத்தலாம். நரம்பு இயங்காதுபோனால் பூனையால் நடக்கவும் முடியாதே என்று விளக்கினேன்.
சிமித் ஆத்திரமுற்றான். பக்கத்து வீட்டுக்காரிக்கு எதிராக கேஸ்” போடப் போவதாகவும் “”கவுன்ஸிலில் முறையிடப் போவதாகவும்பொரிந்து தள்ளினான்.
சட்டப்படி அந்தப் பக்கத்து வீட்டுக்காரிதான் உங்கள் பூனையின் மருத்துவச் செலவுகளை பொறுப்பேற்க வேண்டும். இல்லாவிடில்நீங்கள் அவவுக்கு எதிராக வழக்குத் தொடரலாம்” – என்றேன்.
சத்திரசிகிச்சை மூலம் எலும்புகளைப் பொருத்துவோம். ஆனால் கால் மீண்டும் பழைய உணர்வு நிலைக்குத் திரும்பாது விட்டால் காலையே எடுத்துவிடத்தான் நேரும் – எனவும் சொன்னேன்.
ஏதோ உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்” என்று என் பொறுப்பில் அந்தப் பூனையை ஒப்படைத்துத் திருமதி சிமித் அகன்றாள்.
தீர்மானித்தவாறு சிகிச்சை மேற்கொண்டு எலும்புகளை பொருத்தியாயிற்று. ஆனால் காலில் உணர்ச்சி இல்லை என்பது இரண்டுவார காலத்தில் தெரிந்தது. அது குண்டான பூனை. தனது பருமனான தேகத்தை சுமந்தவாறு பின்காலை இழுத்து இழுத்து நடந்ததைப் பார்க்க பரிதாபமாகஇருந்தது.
ஒரு மாதமாகியும் நிலைமை அப்படித்தான். சிமித் தம்பதியரிடம் பூனையின் நிலையைச் சொன்னேன். திருமதி சிமித் மீண்டும் பக்கத்து வீட்டுக்காரியை திட்டினாள். எனினும்- பூனையின் முதலாவது சத்திரசிகிச்சைக்கு அந்த பக்கத்துவீட்டுக்காரியே செலவு செய்திருப்பதனால்-இனிமேல் அவள் கவனமாக இருப்பாள் எனச் சொன்னேன்.
சிமித் தம்பதியின் அனுமதியுடன் பூனையின் குறிப்பிட்ட கால் மற்றுமொரு சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. நாலுகால்பிராணியின் ஒரு காலை அகற்றுவது என்பது கவலையான விடயம். எனினும் இந்தத் தொழிலில் அந்தக் கவலையை புறம் ஒதுக்க நேர்ந்தது. பூனை ஒரு காலை இழந்த நிலையில் மீண்டும் சிமித் வீட்டுக்குச் சென்றது.
தற்பொழுது அந்தப்பூனை உற்சாகமாக ஓடி ஆடித் திரிகிறது என்றும் – மூன்று கால்களினாலேயே வீட்டுக்கூரையில் ஏறி விளையாடுகிறது என்றும் அறிகிறேன்.
அதன் அங்கத்தில் குறை நேர்ந்தாலும் திருமதி சிமித்தின் கண்முன்னே அது வழமைபோன்று விளையாடுகின்றது, மூன்றுகால்களின் துணையுடன்.
மறுமொழியொன்றை இடுங்கள்