கே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்.

காலமும் கணங்களும் :
இலக்கிய திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்
வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி !
ஒக்டோபர் 01 பிறந்த தினம் !!
முருகபூபதி

எனது நீண்ட கால நண்பரும் புகழ்பெற்ற இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் சுகவீனமுற்று கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனது செவிக்கு எட்டியதும், அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது சுகம் விசாரித்தேன்.
மறுமுனையிலிருந்து எனது குரலை அடையாளம் கண்டுகொண்ட அவர், என்னை “ சேர் “ என விளித்து, “தொடர்ந்தும் பேசமுடியவில்லை “ என்றார்.
“ நீங்கள் ஓய்வெடுங்கள். பின்னர் தொடர்புகொள்கின்றேன் “ என்றேன் அவர் இப்படித்தான் என்னை மட்டுமல்ல இன்னும் பலரையும் “ சேர் “ என்று விளிப்பதுதான் வழக்கம்.

நாம் அவரை சிவா என்றும் சிவகுமாரன் என்றும் அழைப்போம். தப்பித்தவறி அவரை சிவகுமார் என்று விளித்துவிட்டால், சற்று அதட்டலான குரலுடன், “ ஐஸே… எனது பெயர் சிவகுமாரன். அவ்வாறு அழையும். அல்லது சிவா என்று கூப்பிடும் என்பார்.
ஆனால், என்றைக்குமே அதிர்ந்து பேசமாட்டார்.

இவரது எழுத்துக்களை ஊடகங்களிலும் மல்லிகை முதலான இதழ்களிலும் 1970 காலப்பகுதியில் பார்த்திருக்கின்றேன். எனினும் முதல் முதலில் இவரை சந்தித்தது 1972 இல் கொழும்பில் பூரணி காலாண்டிதழ் வெளியீட்டின்போதுதான்.
அன்று முதல் கடந்த 48 வருடகாலமாக எந்தவொரு விக்கினமுமின்றி எப்போதும் புன்சிரிப்புடன் நட்புறவாடிவரும் இலக்கிய நண்பர் கே. எஸ். சிவகுமாரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது அறிந்ததும், மனம் பதறியது. 1936 ஆம் ஆண்டு இதே ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர், இம்மாதம் வீட்டிலிருந்து தமது அன்பு மனையாளுடன் தமது பிறந்த தினத்தை கொண்டாடினாரா..? என்பதும் தெரியவில்லை.

ஆனால், இவரது முகநூல் நண்பர்கள் சிலவேளை இவரது பிறந்த திகதி அறிந்து வைத்திருந்து, முகநூல் வழியாக இவருக்கு ஒற்றைவரியில் வாழ்த்துக்கூறியிருப்பார்கள் என நம்புகின்றேன்.

என்னிடம் அந்த ஊடகம் இல்லாதமையினால், இவ்வாறு விரிவான ஒரு பதிவை எழுதி வாழ்த்தையும் பகிர்ந்து கொள்வதற்கு நேரிட்டுள்ளது. நவீன தமிழ் இலக்கியத்திற்கு பொதுவாகவும் ஈழத்து இலக்கியத்திற்கும் மொழிபெயர்ப்புத்துறைக்கும் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அளப்பரிய சேவையை அர்ப்பணிப்போடு மேற்கொண்டுவரும் எங்களால் கொண்டாடப்படும் இலக்கிய நண்பர் – இலக்கியத்திறனாய்வாளர் பற்றி நான் அவரிடம் கற்றதையும் பெற்றதையும் பற்றி இங்கு பதிவுசெய்கின்றேன்.
இலக்கிய வாழ்வும் பணியும்
ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தளும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ்..சிவகுமாரன்.
இதுவரையில் தமிழில் நாற்பதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் சில நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருப்பவர். முகநூல் அறிமுகமானதன் பின்னர் அதிலும் எழுதுகிறார்.

தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா? என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள்.

சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கியவிமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியவர்.
ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார்.
இருமை, சிவகுமாரன் கதைகள் ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். கே.எஸ்.எஸ்., பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலப்பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்தவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர்.

விமர்சகர்கள், விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திறனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதிகாண்பவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத்தெரியாதவர்.

ஒருவரது குணம் அவரது இயல்புகளிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. அமைதியான சுபாவம், கலந்துரையாடல்களிலும் உரத்துப்பேச விரும்பாத இயல்பு மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக செவிமடுக்கும் குணம் முதலானவையே அவரது மிகச்சிறந்த பலம் என்று கருதுகின்றோம். அதனால்தான் இத்தனைகாலம் இவரால் இங்கு தாக்குப்பிடிக்கமுடிகிறது.

இலங்கை வானொலி, த ஐலண்ட், வீரகேசரி, முதலான ஊடகங்களிலும் பணியாற்றியவர். டெயிலிநியூசில் இவரது பத்தி எழுத்துக்களை பார்க்கலாம். இலங்கை வங்கி உட்பட பல வர்த்தக ஸ்தாபனங்களிலும் இவர் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியிருக்கிறார்.

இலங்கை வானொலியின் தமிழ்வர்த்தகசேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் செய்திப்பிரிவில் துணை ஆசிரியராகவும் சேவையாற்றிய கே.எஸ். சிவகுமாரன் இலங்கையில் அமெரிக்கத்தூதரக தகவல் பிரிவிலும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். நவமணி இதழின் ஸ்தாபக ஆசிரியரும் இவரே.

கொழும்பில் மூன்று சர்வதேசப்பாடசாலைகளிலும் அமெரிக்கா, மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளிலுள்ள பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரியாகவும் கடமையாற்றியவர். சிறுகதை, திறனாய்வு, பத்தி எழுத்துக்களில் மாத்திரம் கவனம்செலுத்தியவர் அல்ல. தரமான சினிமா பற்றிய பிரக்ஞையுடனும் இயங்குபவர்.

அசையும் படிமங்கள், சினமா ஒரு உலகவலம் ஆகிய இவரது நூல்கள் சினமா பற்றியவை. இந்தியாவில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றியவர்.
இவர் இத்தனை அனுபவங்களுக்குப்பின்னரும், தாம் இன்னமும் இலக்கியத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்தான் என்று மிகுந்த கூச்சத்துடன் சொல்லிக்கொள்கிறார். இதுவும் இவரது தன்னடக்கத்திற்கு ஒரு அடையாளம்.

சிவகுமாரன் 2011 இல் அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்திருந்தபோது . அவருக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கினோம். அதே ஆண்டு கொழும்பில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் நாம் வெளியிட்ட Being Alive (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவுஸ்திரேலிய தமிழ்ப்படைப்பாளிகளின் சிறுகதைகள்) நூலை இச்சந்திப்பில் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
மீண்டும் 2014 ஆம் ஆண்டு இவர் மெல்பன் வருகை தந்தபோது சிட்னியில் அடுத்தடுத்து மறைந்த மூத்த எழுத்தாளர்கள் எஸ்.பொன்னுத்துரை, காவலூர் இராஜதுரை ஆகியோருக்காக சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடத்தியபோது சிவகுமாரனும் உரையாற்றினார்.

அதே ஆண்டு டிசம்பரில் நடந்த எழுத்தாளர் நடேசனின் மணிவிழாவிலும் கலந்துகொண்டு நடேசனை வாழ்த்தி உரையாற்றினார்.

இந்நிகழ்வுகள் அவரைப்பொறுத்தவரையில் எதிர்பாராததுதான். அவுஸ்திரேலியாவுக்கு தமது மகனைப்பாரக்க வருமுன்னரே குறிப்பிட்ட Being Alive மொழிபெயர்ப்பு நூல் பற்றி டெயிலி நியூஸ் பத்திரிகையில் மதிப்பாய்வு எழுதியிருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் சிட்னியிலும் மெல்பனிலும் தமது கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறை நண்பர்களை நேரில் சென்று பார்த்து அவர்களது சுகநலன் விசாரித்தார். இலங்கை திரும்பியதும் தமது அவுஸ்திரேலிய பயண அனுபவங்களை ஆங்கிலத்தில் தமது பத்தியில் எழுதினார்.
மற்றவர்களின் படைப்புகளையும் அவர்தம் இலக்கியப்பணிகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமது பத்திகளில் அறிமுகப்படுத்தும் சிவகுமாரன்தான் தமிழில் பத்தி எழுத்து என்னும் பிரயோகத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற தகவல் பலருக்குத்தெரியாது.

Thamil Writing in Srilanka , Aspects of Culture in Srilanka ஆகிய நூல்களிலும் தமிழில் எழுதியிருக்கும் ஈழத்துச்சிறுகதைத்தொகுப்புகள், நாவல் இலக்கியம் தொடர்பான நூல் உட்பட பல நூல்களிலும் எம்மவர்களின் படைப்புகளை திறனாய்வு செய்து அறிமுகப்படுத்தியிருக்கும் இவரது இயல்பு ஏனையவர்களுக்கு குறிப்பாக விமர்சகர்களுக்கு முன்மாதிரியானது.

ஒரு நூலைப்படித்தால் அது இவரைக் கவர்ந்துவிட்டால் தாமதமின்றி ஆங்கிலத்திலோ தமிழிலோ அதனை அறிமுகப்படுத்தி ஏதேனும் இதழில் எழுதிவிடுவார். அத்துடன் இலக்கிய உலகின் சமகால நிகழ்வுகளையும் இரண்டு மொழிகளிலும் தமது பத்திகளில் பதிவுசெய்துவிடுவார்.

வாழும்காலத்திலேயே பாராட்டி கொண்டாடப்படவேண்டியவர் கே.எஸ். சிவகுமாரன். இவரைப்போன்று பலர் எம்மத்தியில் தோன்றவேண்டும். அல்லது உருவாக்கப்படல்வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றிடங்கள் தோன்றலாம்.
இலக்கியத்தில் மொழிபெயர்ப்புத்துறை குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

கணினி இன்று எமக்கு வரப்பிரசாதமாகியிருக்கும் சூழலில் சிவகுமாரனுக்கு எம்மவர்கள் உரிய மரியாதை வழங்கி நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவரது வாழ்நாள் உழைப்புக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் மானுடத்தின் மதிப்பீடுகளை உயர்த்தமுடியும்.
இலங்கையில் நீண்டகாலம் வெளியான மல்லிகை, மற்றும் தற்போதும் வெளியாகும் ஞானம் இதழும் கே.எஸ்.சிவகுமாரனை அட்டைப்பட அதிதியாக கௌரவித்து பாராட்டியுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இவருக்காக பிரத்தியேகமாக தனிச்சிறப்பிதழும் வெளியிட்டுள்ளது.


மல்லிகை இதழ்களை வாசிக்கத்தொடங்கிய 1970 காலப்பகுதியில் அதில் பதிவாகும் குறிப்பிடத்தகுந்த பத்தி எழுத்துக்கள் என்னைக்கவர்ந்தன. அவற்றை தொடர்ந்து எழுதிவரும் கே.எஸ். சிவகுமாரனின் உரைநடை இலக்கிய உலகின் அரிச்சுவடியில் இருந்த எனக்கு அப்பொழுது ஆதர்சமாகவே விளங்கியது.
மல்லிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சபாஜெயராசா, நுஃமான் உட்பட பலர் எழுதிய ஆக்கங்களில் இடம்பெற்ற வார்த்தைப்பிரயோகங்கள் முதலில் என்னை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியவை.
“அது அவர்களின் தவறு அல்ல. எனது தவறுதான்” என்பதை நண்பர் பூரணி மகாலிங்கம்தான் சுட்டிக்காண்பித்து தொடர்ந்து விமர்சனங்களையும் படித்துவாருங்கள் என்று எனக்கு ஊக்கமளித்தார். ” ஆனால் – கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துநடை என்போன்ற ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உடனடியாகவே புரிந்துவிடுகிறதே ” என்றேன்.
அதற்கு மகாலிங்கம், ” சிவகுமாரன் எழுதுவது விமர்சனங்களாக இருந்தாலும் அவை அறிமுகப்பாங்கில் அமைந்த ஒருவகை பத்தி எழுத்து ” – என்று தரம் பிரித்து அடையாளம் காண்பித்தார்.

யார் இந்த சிவகுமாரன்…? என்று அப்போது தேடிக்கொண்டிருந்தேன். அக்காலப்பகுதியில் மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. வெள்ளவத்தையில் அமைந்திருந்த விஜயலக்ஷ்மி புத்தகசாலைக்கு அடிக்கடி சென்று நீர்கொழும்பில் நாம் நடத்திய வளர்மதி நூலகத்திற்கு நூல்கள் – இலக்கிய சிற்றிதழ்கள் வாங்குவேன்.
அங்குதான் தமிழகத்திலிருந்து வரும் தீபம், தாமரை இதழ் கள் கிடைத்தன. அந்த புத்தகசாலையின் உரிமையாளர் மூத்த எழுத்தாளரும் நாவலாசிரியருமான செ.கணேசலிங்கன் என்ற தகவலும் எனக்கு காலப்போக்கில்தான் தெரியவந்தது.
அவரையும் அங்கே சந்திக்கும் சந்தர்ப்பம் அப்போது கிட்டவில்லை. அந்தப்புத்தகசாலையில் ஒரு முஸ்லிம் அன்பர் பணியிலிருந்தார். ஒருநாள் அங்கிருந்த தாமரை , தீபம் இதழ்களை கையில் எடுத்துக்கொண்டு பணத்தை நீட்டும்பொழுது அந்த இதழ்களில் கே.எஸ்.சிவகுமாரன் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த விற்பனைப்பிரதிநிதி அந்த இதழ்களை எனக்கு விலைக்குத்தருவதற்கு மறுத்தார். ” அந்த இதழ்கள் கே.எஸ். சிவகுமாரன் என்பவருக்குரியவை. அவருக்காக அவை காத்திருக்கின்றன. உங்களுக்கும் குறிப்பிட்ட இதழ்கள் மாதாந்தம் தேவைப்படின் முற்கூட்டியே உங்கள் பெயரை பதிவுசெய்து வைத்துவிட்டுச்செல்லுங்கள் ” – என்றார்.
எனக்கு அன்று ஏமாற்றமாக இருந்தாலும், காலப்போக்கில் எனக்கும் அந்த இதழ்கள் கிடைப்பதற்கு அந்த முஸ்லிம் அன்பர் உதவினார். அத்துடன் அவரும் எனது பிரியத்துக்குரிய நண்பரானார். அவர் இலங்கை எழுத்தாளர்களின் புதிய நூல்களை விலைக்கு வாங்கி அமெரிக்க தூதரக தகவல் பிரிவுக்கும் வழங்கிவந்தார்.
அவரிடம் ” கே.எஸ். சிவகுமாரன் அவர்களைப்பார்க்க விரும்புகின்றேன். எங்கே பார்க்கலாம்…? ” எனக்கேட்டேன்.
அவர் வெள்ளவத்தையில் மறு புறத்தில் இருப்பதாகவும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றுவதாகவும் சொன்னார். உடனே ” வானொலியில் சில சமயங்களில் செய்தி வாசிப்பாரே… அவரா இந்த சிவகுமாரன்…?” என்று கேட்டேன். “ஆமாம் அவரேதான். ” என்றார்.

எனக்கு சிவகுமாரனை நேரில் பார்க்கவேண்டுமே என்ற ஆவல் முகத்தில் துளிர்விட்டிருப்பதை அவதானித்த அந்த அன்பர் தந்த முகவரியைப்பார்த்தேன். இலக்கம் 21 முருகன் பிளேஸ் வெள்ளவத்தை என்று இருந்தது.
வெள்ளவத்தையில் முருகன் பிளேஸ் என்று எமது கடவுளின் பெயரில் தெரு ஒன்று இருப்பதும் எனக்கு அன்றுதான் தெரியும். எனது வியப்பை அந்த அன்பரிடம் தெரிவித்தேன். உடனே அவர் சிரித்துக்கொண்டு – ” ஆமாம் உங்கள் முருகக்கடவுளின் மற்றுமொரு பெயரும் சிவகுமாரன்தானே ” என்றார்.
அதில் இருந்த ஆழமான உவமானம் என்னை ஈர்த்தது.
ஆனால், நான் தேடிக்கொண்டிருந்த கே.எஸ். சிவகுமாரனை பின்னாட்களில் எதிர்பாரதவிதமாக கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 முற்பகுதியில் நடந்த பூரணி முதல் இதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது.
சகோதர வாஞ்சைக்குரிய நட்புறவு ஆரோக்கியமாகவே தொடருவதற்குரிய ரிஷி மூலம் அவரிடம்தான் ஒளிந்திருக்கிறது.
கோபத்தையும் புன்சிரிப்பினால் புறம் ஒதுக்கிவிட்டு நேசிக்கும் இயல்புகொண்டவர். தன்னைவிட வயதில் இளையவர்களையும் அவர் ” சேர்…” என்று விளிப்பார்.
சில நாட்களுக்கு முன்னரும் மருத்துவமனையின் கட்டிலில் இருந்துகொண்டு மீண்டும் அவர் “ சேர் “ என விளித்தபோது நெகிழ்ந்துவிட்டேன்.

நான் சந்தித்த பல மனிதர்களிடம் இத்தகைய மென்மையான பண்புகளை பார்ப்பது அரிதாகவே எனக்குத்தென்பட்டிருக்கிறது.
அவரது இயல்புகளுக்கு ஏற்பவே அவரது எழுத்துக்களும் அமைந்திருக்கும்.

மட்டக்களப்பில் 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்த சிவகுமாரன் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் மாணாக்கர். பாலுமகேந்திரா இலங்கையில் மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் சச்சிதானந்தன் என்பவருடன் இணைந்து தேனருவி என்ற கலை இலக்கிய இதழை வெளியிட்டபொழுது அதில் பல ஆக்கங்களை எழுதியிருக்கும் சிவகுமாரனின் ஒரு நூலுக்கு பாலுமகேந்திரா முன்னுரை எழுதியுள்ளார்.
சிவகுமாரனின் அசையும் படிமங்கள் என்ற சினிமாத்துறை நூலின் முகப்பில் இந்த பால்யகாலத்தோழர்கள்தான் இணைந்து தோன்றுகின்றனர்.

நான் இவருக்கு மிகவும் நன்றிக்கடமைப்பட்டவன் என்பதற்காக பின்வரும் தகவல்களையும் இங்கு பதிவு செய்துவிடுகின்றேன்.
சிவகுமாரனை சந்தித்த காலப்பகுதியில் அவர் இலங்கை வானொலியில் பணியாற்றுவது அறிந்து வானொலி கலையகத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று எனது குரலை வானலைகளில் பரவச்செய்ய விரும்பினேன். எனது அன்றைய ஆசையை இன்று நினைத்துப்பார்க்கும் பொழுது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும்.
எனது விருப்பத்தை அவரிடம் சொன்னதும் எனது முகவரியை பெற்றுச்சென்றார்.

சில நாட்களில் எனக்கு அவர் அனுப்பிய அஞ்சலட்டையில் ஒரு மாலை நேரம் இலங்கை வானொலி நிலையத்திற்கு வருமாறும் அங்கே வி.என். மதியழகன் என்பவரைச்சந்தித்து பேசினால் அவர் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருவார் என்றும் என்னைப் பற்றி அவரிடம் சொல்லியிருப்பதாகவும் எழுதியிருந்தார்.
கொழும்பில் சுதந்திரச்சதுக்கத்தில் அமைந்த இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையத்தை தேடிக்கண்டுபிடித்துச்சென்றேன்.
அங்கு நான் சந்தித்த வி.என். மதியழகன் எனக்கு தான் நடத்திய சங்கநாதம் இளைஞர்களுக்கான நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்தார். அன்று முதல் அவரும் மற்றும் சண்முகநாதன் வாசுதேவனும் நண்பர்களானார்கள்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர்
வி.ஏ.திருஞானசந்தரம் அவர்களையும் சிவகுமாரன் எனக்கு அறிமுகப்படுத்தி , வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக சில மாதங்கள் நடத்துவதற்கும் வழிசமைத்துக்கொடுத்தார்.

1983 வன்செயலில் அவரது முருகன் பிளேஸ் வீடும் தாக்கப்பட்டது. அவர் மயிரிழையில் உயிர்தப்பினார். சில நாட்களில் தனது சில உடைமைகளை எடுத்துவருவதற்கு அவர் மீண்டும் திரும்பியபொழுதும் அந்த வீட்டருகே தீயசக்திகள் அடுத்த தாக்குதலுக்கு தயாராகத்தான் நின்றார்கள்.

” நான் எனது புத்தகங்களைத்தான் எடுக்க வந்தேன் ” – என்று இவர் சிங்களத்தில் சொன்னபொழுது “அவைதான் உமது வீட்டில் அதிகம் இருந்தன” என்று அங்கு நின்ற ஒருவன் சொல்லியிருக்கிறான்.
அதனைக்கேட்டு அவருக்கு சிரிப்பு வந்துள்ளது. அந்த இழப்பிலும் அவரது முகத்தில் தவழ்ந்த புன்னகையினால் வெட்கித்துப்போன அந்த ரவுடிகள் சமாவெண்ட (மன்னித்துக்கொள்ளுங்கள்) என்றார்களாம்.
” இனி எதுவும் நடக்காது வீட்டில் வந்திருங்கள் ” – என்றும் சொல்லியிருக்கிறான் ஒரு ரவுடி.
”இனி என்னதான் நடக்கவிருக்கிறது” என்று மனதிற்குள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொல்லிக்கொண்டுதான் இந்த அறிவாளி வீட்டினுள் நுழைந்திருப்பார்.

அதன் பிறகும் நாட்டை விட்டு புலம்பெயராமல் அதே வெள்ளவத்தை முருகன் பிளேஸ் இல்லத்தில் தொடர்ந்தும் வாழ்ந்தவாறே

இலக்கியப்பணியாற்றுகிறார் 84 வயது நிரம்பிய எங்கள் கே.எஸ். சிவகுமாரன். விரைவில் பூரண சுகம் பெற்றுத்திரும்பி, இலக்கிய எழுத்துப் பணிகள் தொடர வாழ்த்துவோம்.

letchumananm@gmail.comமறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: