
8 கரையில் மோதும் நினைவலைகள்
1970 ஆம் வருடத்தில் எனது பத்தாவது வகுப்பு பரீ ட்ஷையின் முக்கியமான பாடங்களின் வினாத்தாள் முதல் நாள் இரவு கிடைத்ததும் அதற்கான பதில்களை மற்றைய மாணவர்களிடமிருந்தும் புத்தகங்களைத் தடவியும் விடைகளை எடுத்தோம். அன்றைய இரவில் எம்மைப் பொறுத்தவரை அக்கால பிரித்தானிய சாம்ராச்சியம்போல் சூரியன் மறையவில்லை .
வினாக்களிற்கான விடைகளை எழுதும்போது சிரித்தபடியே எழுதினேன் . வகுப்புக்குப் போகாது சுற்றித் திரிந்த எனக்கு இப்படி ஒரு விடயம் நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. என்னைத் தவிர மற்றைய மாணவர்கள் எல்லோரும் பக்திப் பழமாகத் விபூதி மற்றும் சந்தனப்பொட்டுடன் தோற்றமளித்தார்கள். எனது நண்பர்களில், கடவுள் இருப்பதை நம்பியவர்கள் அன்று விடைத்தாள் கிடைத்ததை அதற்கான சாட்சியமாக நினைத்தார்கள்.
விடுதியில் இருந்தவர்கள், தீவுப்பகுதி மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் . வினாத்தாள் வெளிவந்ததற்கு முருகன் , ஐயனார், நாகம்மாள், வற்றாப்பளை அம்மன் மற்றும் வினாயகர் எனத் தங்கள் தரப்புத் தெய்வங்களை பொறுப்பாகினார்கள்.
இதில் முக்கிய விடயம் உயர் கணிதம் (Advance maths) எனப்படும் கணித பாடத்திற்கு வினாத்தாள் கிடைத்தும், எனது நண்பர்கள் விடைகளைச் சொல்லித்தந்தும் என்னால் கிரகிக்க முடியவில்லை. காரணம் அந்த வகுப்பிற்கு நான் சென்ற நாட்களை கைவிரல்களில் எண்ணமுடியும். எனக்கும் ஆசிரியருக்கும் உள்ள உறவு நீதிபதிக்கும் தொழில்முறைத் திருடனுக்கும் உள்ள உறவுபோல் தவிர்க்க முடியாத சந்திப்புகள் நடந்தாலும், அவற்றை இருவரும் பரஸ்பரம் பொருட்படுத்துவதில்லை . படிக்காத மத்தியூவின் கைபிடித்து தேவதை விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை எழுதியதாக ஒரு கதையுண்டு. அதேபோல் எழுவைதீவு முத்தன்காட்டு முருகன் எனது கையைப்பிடித்து எழுதியிருந்தாலும், அந்தப்பாடத்தில் பதில் எழுதியிருக்க முடியாது . அதனால் அந்தப் பாடத்தை எழுதும் நாள் கல்லூரிக்குப் போகாமல் மனோகரா தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்த்தேன்.
மார்கழி மாதத்து நாட்களில் இந்துக் கல்லூரியின் விடுதியில் பரீட்சை எடுக்கும் பத்தாம் தரமாணவர்கள் மட்டுமே இருப்பார்கள். மற்றைய வகுப்பு மாணவர்கள் விடுமுறையில் சென்றிருப்பார்கள் . அதனால். எங்களுக்கு சமையல் நடத்துவதற்கு ஓரிரு சமையல்காரர் மட்டுமே நிற்பர். வழமையாகவே விடுதிக்குப் பொறுப்பானவர் மாலையில் ஆறுமணிக்கு யாழ்ப்பாண சந்தையில் வழமையாக காய்ந்து வதங்கிய விற்காத காய்கறிகளை மலிவு விலையில் வாங்குவது எமக்குத் தெரியும் . அதுவும் குறைந்த எண்ணிக்கையினர் விடுதியில் இருக்கும் காலத்தில் மேலும் கொடுமையாக இருக்கும் .
எங்கள் கல்லூரியைச் சுற்றி அடிக்கொரு கோயில். மாதத்தில் ஏதாவது கோயிலில் கொடியேறும். அதைவிட மார்கழி , திருவெம்பாவை காலத்து பக்தி மாதம். வாடிய கத்தரிக்காய் முற்றிய வெண்டைக்காயில் உள்ள புழுக்களைத் தவிர அசைவமாக எதுவும் நாக்கில் படாத எங்களுக்கு, யாழ்ப்பாணத்து சைவக்கடைகள் ஏற்கமுடியவில்லை. இந்தக் காலத்தில் வெளியே சென்று உணவருந்த எமக்குச் சிறிது சுதந்திரமளித்திருந்தார்கள். இதனால் ஒவ்வொரு இரவுகளிலும் வெளியே சென்று சாப்பிட்டு வருவது எமது வழக்கம். இக்காலத்தில் மச்சம் மாமிசத்தைத் தேடுவோம்..
மீன்கடைகளை பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் நகரைக் கடந்து போகவேண்டும். அவை எமக்குத் தூரமானது . எமக்கு அருகிலே இஸ்லாமியர்கள் நடத்திக்கொண்டிருந்த கடைகளே நடந்து போய் சாப்பிட்டு வர உதவியது . அதிலும் ஒரு கடை அக்காலத்தில் ஐந்து லாம்படி பகுதியில் இருந்தது.ஆரம்பத்தில் ஹமீதியா கபேயாக இருந்தது .அதனை மொக்கங் கடை என்போம். ஏதோ ஒரு நாள் அங்கு பணத்தை குறைத்து வாங்கியதால் அந்தப்பெயர்ச் சொல்லில் அழைத்து, அந்தப் பெயரே பிற்காலத்தில் அதன் விளம்பரப் பலகையிலும் வந்தது . அங்கு தரப்பட்ட மாட்டுக் குருமா மூளை மற்றும் பிஸ்ரேக் என்பன எமது வாழ்கையில் கண்டதும் தின்றதும் அக்காலத்திலேதான்.
இப்படி உணவை ரசித்து வெற்றிகரமாகப் பரீட்சை எழுதி முடித்தபின், எழுதாத பாடத்தைத்தவிர மற்றைய பாடங்களில் A சித்தி வருமென நினைத்திருந்தேன். அதிக நாள் போகவில்லை. அந்தச் செய்தி எம்மை மரத்தில் கட்டிய பசுமாட்டைத் தாக்கிய இடியாக விழுந்தது. அந்தப் பரீட்சை ரத்துச் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் மீண்டும் தோற்றவேண்டும் என்பதே அச்செய்தி.
மீண்டும் பரீட்சை எழுதியபோது நான் எனது பரீட்சை முடிவைக்கூட பார்க்க விரும்பவில்லை . பரீட்சை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே வீட்டில் உள்ளவர்கள் எனது பிரச்சினைகளை முகர்ந்து பிடித்தார்கள்.
“விடுதியிலிருந்து இவன் உருப்பட மாட்டான் “ என நினைத்த அவர்கள், என்னையும் அழைத்துக்கொண்டு குடும்பமாக யாழ்ப்பாணம் நோக்கிக் குடிபெயர்ந்தனர். இதுவரையிலும் பிறந்து வளர்ந்த ஊரான எழுவைதீவு அன்னியமாகியது. பரம்பரையாக வாழ்ந்த ஊரில் தபால் அதிபராக இருந்த அம்மா, தனது வேலையை விட்டுவிட்டு ஆறு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள கல்வியங்காடு என்ற இடத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடியேறினார்.
இதுவரை பாடசாலையில் இருந்து வாரமொரு முறை பஸ் ஏறி பின்பு வள்ளத்தில் கடல் கடந்து சென்றவன், இப்பொழுது சைக்கிளில் ஒவ்வொருநாளும் பாடசாலை போகவேண்டும். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு சைக்கிளாவது ஒரு வீட்டில் இருக்கும். அதுவும் ரலி என்ற இங்கிலாந்து சைக்கிள் வைத்திருப்பவர்கள் பெருமைப்படுவார்கள்.
எனக்கு அதுவரையும் சைக்கிளோடத் தெரியாது. கல்வியங்காடு வந்தபின்பே சைக்கிள் ஓட் பழகினேன். அப்பொழுது பதினேழுவயது. கிட்டத்தட்ட நாற்பது வயதுக்குப்பின் திருமணம் முடிப்பதுபோல் கஷ்டமாக இருந்தது. விழுந்து விழுந்து விழுப்புண்களைப் பெற்று ஓடிப் பழகினேன்.
கல்வியங்காட்டு வந்ததும் புதிய நண்பர்கள் சேர்ந்தார்கள். அதை விடச் சைக்கிள் எவ்வளவு தெய்வீகமான வாகனம் எனவும் புரிந்து கொண்டேன். இந்துக்கல்லுரி கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம். வழியெங்கும் பெண்கள் பாடசாலைக்குப் போவதற்காக கொத்துக் கொத்தாக வெள்ளை உடையுடன் பூத்திருப்பதையும் அவர்களை வழியனுப்ப அக்காமார் அம்மாமார் ஆன்ரிகள் வாசலில் நிற்பதையும் பார்த்ததும் அது புதுஅனுபவமாகியது. அதனால் எனது உடை மற்றும் முடியலங்காரங்கள் மாறின.
அக்காலத்தில் எனது ஆதர்ச நடிகராக தமிழ் நடிகர்கள் எவருமில்லை. ராஜேஷ் கன்னாவே இருந்தார் . தலையை அவர் மாதிரியே வாரிவிட்டேன். மேலும் அக்காலத்திலே பெல்பொட்டம் எனப்படும் தரையை தழுவும் காற்சட்டையும் அணியத்தொடங்கினேன்.
சென்னை
அமைந்தகரையில் அடுக்கு மாடியில் ஒரு வீட்டில் காசி விஸ்வநாதன் மாஸ்டர் மனைவியுடன் இருந்தார். மாஸ்டரும் மனைவியும் ஏற்கனவே என்னுடன் படித்த செல்வகுமாரின் பெற்றோர்கள் என்பதால் ஏற்கனவே அறிமுகமானவர்கள்.
அவர்கள் வீட்டில் பரந்தாமன் என்ற சிறுவயது நண்பன் எனக்கு ஞானம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஈழமக்கள் புரட்சிகரமுன்னணியின் முக்கியஸ்தராகவும் காசி விஸ்வநாதன் மாஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
என்னுடன் படித்தவர்கள் இப்படி அரசியல் முக்கியஸ்தர்களாக இருப்பது ஒருவிதத்தில் ஆச்சரியமளித்ததுடன், அந்த அறிமுகம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது.
அதுவரையும் இயக்கம் என்பது எனக்கு தெரியாத – சம்பந்தப்படாதவர்கள் என்ற சிந்தனைதான் இருந்தது. நான் நினைக்கிறேன். பல மத்தியதர வகுப்பினருக்கு பொதுவானதாக அந்தச் சிந்தனை இருக்கும். 83 கலவரம் தூரத்துப் பச்சையாக இருந்த ஆயுதக்குழுக்களை தங்களவராக நினைக்க வைத்திருக்கும் எமது யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு.
ஆனால், நான் சிங்களப்பகுதிகளில் வேலை பார்த்தபடியால் அந்த எண்ணம் என்னைத் தொற்றிக் கொள்ள இந்தியா வரவேண்டியிருந்தது. ஒருவன் வாழும் சூழ்நிலை அவனது சிந்தனை கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை உருவாக்குகிறது என்பது எவ்வளவு சரியானது என்பதை அத்தருணத்தில் உணர்ந்தேன்
பரந்தாமன் ஒரு வித்தியாசமானவனாக மாணவனாக படிக்கும் காலத்தில் இருந்தான். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் வேறு வகுப்பில் படித்தாலும் ஒரே தரத்தில்தான் இந்துக்கல்லூரியில் சேர்ந்தோம். பல வருடங்கள் பழகிய நட்பு.
அக்காலத்தில் விடுதியில் இருந்தபோது எமது பொதுவான பொழுதுபோக்கு தமிழ்சினிமாப் படங்கள் பார்ப்பது. இதைத்தவிர அக்காலத்தில் முக்கிய நடிகருக்கு இரசிகர்களாக இருந்து அவர்கள் பற்றி பேசுவதும், அவர்கள் பற்றிய தகவல்கள் சேரிப்பதும் எமது கல்லூரி வாழ்வில் முக்கிய அமம்சங்களாக விளங்கின.
நான் சிவாஜி கணேசனது இரசிகன். அதேபோல் பலர் எம்ஜி இராமச்சந்திரன் ஜெய்சங்கர் முதலானவர்களது இரசிகர்களாக இருந்தார்கள். ஆனால், அப்பொழுது சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் சிறுமியாக நடித்த மஞ்சுளாவுக்கு இரசிகனாகவும் அந்த சாந்திநிலையம் படத்தை ஒன்பது தடவைகள் பார்த்தவனாகவும் இருந்த நண்பன் பரந்தாமன் மட்டும்தான்.
அதனால் அவன் வித்தியாசமான சினிமா இரசிகனாக எம்மிடையே அறிமுகமானான். எப்பொழுதும் பரந்தாமனை பார்க்கும் போது நடிகை மஞ்சுளாவின் உருவம் எனக்கு மனதில் நிழலாடும்.
காலங்கள் கடந்து நான் பல்கலைக்கழகம் போனபின் பரந்தாமனது தந்தையார் இறந்தார் என்ற தகவல் காதில் விழுந்தது. வாழ்க்கை என்ற இரயில் பிரயாணத்தில் வேறு வேறு திசைகளில் பயணப்பட்டதால் நாங்கள் பிற்காலத்தில் பல வருடங்களாக சந்தித்துக்கொள்ளவில்லை
மாஸ்டர் வீட்டில் சந்தித்த பரந்தாமனைக்கண்ட வியப்பிலிருந்து மீள்வதற்கு முன்னால் பரந்தாமன் என்னிடம் ‘உனது நண்பர் குண்சி என்பவர் இங்கே இருக்கிறார்’ – என்றபோது இந்துக்கல்லுரியின் விடுதியில் இருந்த இடைக்காட்டைச் சேர்ந்த குணசேகரம் என்பவர் மனதில் வந்து சென்றார்.
அவரை நான் மதவாச்சியில் வேலை செய்யும் நாட்களில் ஒரு நாள் யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் சந்தித்தேன். அந்த மாலைநேரத்தில் தாடிவளர்த்த ஒருவர் கையில் சுரண்டியபோது திரும்பினேன். பார்ப்பதற்கு பிச்சைக்காரன்போல் தாடிவளர்த்து தலையில் ஒரு டவலால் மொட்டாக்கிட்டபடி இருந்தார்.
என்னிடம் “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டுவிட்டு பறந்து சென்ற பறவைபோல் மறைந்துவிட்டான். பின்பு யோசித்தேன் – அவன் வாழ்வு ஏதோ தலைமறைவு வாழ்வு போல் இருக்கிறது என்று.
‘வேறு யார் நமக்கு தெரிந்தவர்கள் நம்மோடு படித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்?’ புதிய இடத்தில் அறிமுகமானவர்களை தெரிந்து கொள்ளும் சாதாரண விருப்புடன் கேட்டேன்.
‘குகனும், ஹரிசந்திரா என்ற இந்துக்கல்லூரியில் படித்தவர்கள் இருவர் புலியோடு இருக்கிறார்கள்.
‘அப்படியா ஹரிசந்திரா இயக்கத்தில் இருப்பான் என கற்பனை பண்ணமுடியாது எனக்கு.
இப்படி பேசிக் கொண்டிருந்தபோது ‘இரண்டு இளம்தாரியள் இருக்கிறீர்கள்’ என்று எங்களை நோக்கி சொல்லிக்கொண்டு என ஒரு லீட்டர் பிளாக் அன்ட் வையிட் போத்தலை எங்கள் முன்பு வைத்தார் மாஸ்டர்
அந்த போத்தில் மதுவோடு வேறு சில விடயங்களும் வெளியே வந்தன.
பரந்தாமன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு ஜெயிலில் இருந்தது தெரியவந்தது. வாழ்க்கையில் பொலிஸ் ஸ்ரேஷனே போய் இராத எனக்கு இத்தகவல் பெரிய ஆச்சரியமாக இருந்தது.
நான் படிக்கும் காலத்தில் வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராசா, காசி ஆனந்தன் போன்றவர்கள் சிறையில் இருந்து வெளியேவரும்போது அவர்களுக்கு நடந்த வரவேற்புக் கூட்டங்களையும் இரத்த திலகங்களையும் உணர்வு கொந்தளிக்க பார்த்திருக்கிறேன்.
அக்காலத்தில் சிறை மீண்ட செம்மல் என்ற வார்த்தைகள் எனக்கு அடிக்கடி காதில் விழுந்தன. சங்கிலித்திருட்டில் யாழ்ப்பாணத்தில் சிறைசென்றவர்களும் தங்களை சிறை மீண்ட செம்மல்களாக காட்டிக் கொண்டார்கள். படித்த இளைஞர்களுக்கு எப்பொழுதும் யாழ்ப்பாணத்தில் மரியாதை இருந்தது. பிற்காலத்தில் இப்படியான “செம்மல்களால்” அந்தச் செல்வாக்கு சரிந்தது உண்மையே.
‘அப்ப நமது பரந்தாமனும் சிறை மீண்ட செம்மல்தானே?”
‘உனக்கு நக்கலாக இருக்கு. மேலும் சிலநாட்கள் நான் இருந்திருந்தா நான் வெலிக்கடையில் கொலை செய்யப்பட்டிருப்பேன்.”
நான் கவலையடைந்த மனநிலைக்குப் போனேன்.
‘நான் குட்டிமணி , ஜெகன் போன்றவர்களோடு சிறையில் இருந்தேன். 83 ஜுலை கலவரத்ததுக்கு சிலநாட்கள் முன்பாகத்தான் வெளியே வந்தேன். இருந்திருந்தால் நானும் அம்போதான். “
‘அதுசரி குட்டிமணி தங்கத்துரை முதலானோர் பிடிபடுவதற்கு பிரபாகரன்தான் காரணம் எனப் பலர் பேசுகிறார்கள். அதில் உண்மையுள்ளதா?” என்றபோது-
‘இங்கே இந்த விழல் கதைகளை கதையாதீங்க” என்றார் மாஸ்டர்.
‘குட்டிமணியும் தங்கத்துரையும் அப்படி நம்புகிறார்கள். மேலும் குட்டிமணி “வெளியே சென்றபின் அந்த முழியனுக்கு நான் யார் என காட்டுகிறேன் என கூறியதை எனது காதால் கேட்டேன்” என்று பரந்தாமன் சொல்லியபோது மீண்டும் மாஸ்டர் ‘இந்தக் கதைகளை விடுங்க. உறுதிப்படுத்த முடியாதவை.’ என்றார்
81 ஆம் ஆண்டில் சித்திரை மாதம் தங்கத்துரை குட்டிமணி ஆகியோர் கடற்கரையில் காத்திருந்த போது அவர்களுக்கு பிரபாகரன் இந்தியா செல்ல படகோட்டியை ஒழுங்கு பண்ணுவதாக இருந்தது . அந்தப் படகோட்டிக்கு காத்திருந்த போது கைது செய்யப்பட்டதாக அரசல்புரசலாக சில கதைகள் யாழ்ப்பாணத்தில் உலாவின. ஆனாலும் மாஸ்டரின வீட்டில் அவரது பிளக் அன்ட் வைட்டைக் குடித்துக்கோண்டு இதற்குமேல் கதைப்பது நாகரீகமில்லை என்பதால் அந்தப் பேச்சுகளை விஸ்கியுள் அமிழ்த்தினோம்.
மாஸ்டரின் மனைவி கொண்டு வந்த தோசையை சாப்பிட்டுவிட்டு அன்று இரவு அவரது வீட்டில் தங்கினேன்.
பரந்தாமன் என்ற ஞானத்தின் அழைப்பின் பேரில் எபிக் என்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தகவல் நிலையத்திற்கு(EPIC) சென்றேன். சூளைமேட்டில் ஒரு கட்டிடத்தின் மேல்மாடியில் அது அமைந்திருந்தது. அங்கிருந்தவர்கள் இனிய முகத்துடன் தோழர் என வரவேற்றது மட்டுமல்லாமல் அன்று இரவு சாப்பாடும் தந்தார்கள்.
ஐந்து தமிழ், ஆங்கில பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் இருந்தன. இரண்டு மணிநேரம் அங்கு இருந்து விட்டு வெளியே வந்தபோது வாசலில் நான் கழற்றிப் போட்ட செருப்பைக் காணவில்லை. மற்றவர்களது செருப்பை எடுக்கவும் மனமில்லாமல் வெறும் காலோடு ஆர்காடுரோட்டில் அரைக்கிலோ மீட்டர் சென்று புதிய இரப்பர் செருப்பை வாங்கி அணிந்து கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தேன்
செருப்பை பறி கொடுத்தாலும் தோழமையான அந்த இடம் என்னைக் கவர்ந்து விட்டது. மேலும் எனது பால்யகால நண்பரான குண்சி – நீ எப்பொழுதும் இங்கு வரலாம் எனச் சொல்லியிருந்தர். தொடர்ச்சியாக புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருந்துவிடுவேன். அந்த இடத்தில் பேசுவதற்கு துணையும் வசிப்பதற்கு புத்தகங்களும் எனது முக்கியமான கவர்ச்சியாக இருந்தன.
சில இரவுகள் அங்கு படுத்தும் எபிக்கில் இருக்கும் அழுக்கான தலையணைகளை போட்டுக்கொண்டு தரையில் படுத்துவிடுவேன். நடு இரவில் எழும்பியபோது தலைக்கு கீழ் இருக்கும் தலையணை காணாமல் போய்விடும். சுற்றியுள்ள சுவரில் உள்ள கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்ராலின் உருவப்படங்கள் எப்பொழுது நீ கம்யூனிஸ்டாக மாறுவாய் என முறைத்தபடி என்னைப்பார்த்தன.
என்னைப் பொறுத்தவரை கம்யூனிசத் தத்துவங்களை படித்தறிய முடிந்த இடம் அந்த எபிக்கேயாகும். அவுஸ்திரேலியா வரும்வரைக்கும், அக்காலத்திலே மாவோ ஸ்ராலினை உலக வரலாற்றில் மாபெரும் கொலைகாரர்களாக இனம்கண்டு கொண்டாலும் லெனின்மீதும் கார்ல் மாக்ஸின்பாலும் இளம்சிவப்பு அபிமானம் இருந்தது.
84 ஆம் வருடம் வைகாசி மதிய வெயில்வேளை – நான் எபிக்கில் இருந்த போது ரோட்டில் பெரிதாக சத்தம் கேட்டது. மாடிப்படிகளில் இறங்கி எபிக் கட்டிடத்திற்கு அருகே உள்ள சிறிய பாதையைப் பார்த்தபோது பல ஈபிஆர்எல்எவ் தோழர்கள் ஒரு முப்பது வயதான மனிதரை மொத்து மொத்தென அடித்தார்கள். அவன் அம்மே, அம்மே என சத்தமிட்டான்.
சிங்கள உளவாளி என சிலர் கூக்குரல் இட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு மனிதனை பலர் அடிப்பதை பார்ப்பது இதுவே முதலாவது தடவை.
ஒருவர் – அடிப்பதை நிறுத்திவிட்டு விசாரித்தபோது அந்த மனிதன் மலையாளி எனப்புரிந்தது.
அவன் அம்மே என்றது இவர்களுக்கு அவனை ஒரு சிங்களவராக அடையாளம் காட்டியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தை அதில் பங்கு பற்றியவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் என்னால் மறக்கமுடியாத சம்பவம். அடிவாங்கிய அந்த மலையாளத்து மனிதன் மெதுவாக திரும்பி பார்த்தபடி நடந்து போனது – அடித்தவர்கள் அவனிடம் மன்னிப்புக் கேட்டது – அடித்த தோழர்கள் பலர் மனம் நொந்து பேசியது என்பன என்னால் மறக்கமுடியாத காட்சிகள்.
நல்லவேளை அப்பாவியான ஒரு சிங்களவர் அகப்பட்டிருந்தால் அவரது நிலை எப்படி இருக்கும் என்பதையும் அந்தக்கணத்தில் எண்ணிப் பார்க்கவும் மனம் தவறவில்லை.
ஒரு மாலை நேரம் சினிமாவுக்குச் சென்றுவிட்டு ஒரு நாள் எபிக்கிற்கு போனபோது மிகவும் தலையிடியாக இருந்தது . அங்கிருந்த தோழர்களிடம் தலைவலி மருந்து கேட்டேன்.
எல்லோரும் இல்லை என்று சொன்னார்கள்.
அப்போது ஆறடி உயரமான நெய்யில் வளர்ந்த செழிப்பான உடலுடன் ஒருவர் சிரித்தபடி வந்தார். எனது வயதுதான் இருந்தாலும் – அவரது உடலும் புன்னகையும் அவரை மதிப்புக்குரிய மனிதராக உயர்த்தி விட்டது.
இயக்கத்தவர்கள் எல்லோரும் மெலிந்தவர்கள். அதுவும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் நித்திய பஞ்சத்தில் வாழ்ந்தவர்கள் போன்ற தோற்றம் உடையவர்கள். மேலும் அவர்களுக்கு கிடைக்கும் உணவைத்தான் நான் பார்த்திருக்கிறேனே! நிச்சயமாக இந்த மனிதர் அவர்களில் ஒருவராக இருக்க முடியாது என்பதை எனது உள்ளுணர்வு சொல்லியது.
அந்த செழிப்பான மனிதர் இதோ நான் மருந்து தருகிறேன் எனக் கூறிவிட்டு ஏதோ வெள்ளைப்பசையை எடுத்து எனது நெற்றியில் சூடு ஏறத் தேய்த்தார். நானும் மனிதர் ஏதோ வைத்தியம் தெரிந்தவர் என நினைத்து அவர் தேய்த்தபின்னர் எனது அறைக்குச் சென்று படுத்து விட்டேன். நிச்சயமாக தலையிடி குறைந்துவிட்டதாக உணர்ந்தேன்
அடுத்த நாள் நான் எபிக்கிற்கு சென்ற போது குன்சி அங்கு என்னை கையில் பிடித்து சமையல் அறைக்கு அழைத்துச் சென்று ‘நீ கொஞ்ச நாளைக்கு இங்கு வரவேண்டாம்’ எனச் சொன்னார். எதற்கு… என எதுவும் கேட்காமல் – நான் வெளியே வந்தபோது, முதல்நாள் நான் சந்தித்த அதே மனிதர் வந்து ‘எப்படி தலையிடி? என்றார் சிரித்தபடி.
‘ஏதோ உங்கள் புண்ணியத்தில் இரவு தூங்க முடிந்தது’
‘நான் உங்களுக்கு நெற்றியில் தடவியது சிக்னல் பற்பசை’ என சிரித்து விட்டு தனது பெயர் விசாகன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்தேன் என அறிமுகமானார். அவருடன் அன்று அவரது பல்கலைக்கழக நண்பனான மகேஸ்வரராஜாவும் சேர்ந்து கொண்டார்.
எனது மனதில் எதற்கு என்னை வரவேண்டாம் என சொன்னார்கள் என்பது தலைக்குள் வண்டாக குடைந்து கொண்டிருந்தது. ஏதாவது ஓபரேசன் இலங்கையில் செய்யப்போகிறார்கள் என விசாகன் கோடி காட்டினார்.
ஏற்கனவே செல்வநாயகம் சந்திரகாசனோடு அவரது ஒஃபர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் தான்வேலை செய்வதாகவும் அங்கு வந்து தனக்கு ஒத்தாசை செய்யும்படியும் காசி விஸ்வநாதன் மாஸ்டர் கூறியிருந்தார்.
அடுத்த நாள் எக்மோரில் உள்ள ஒஃபர் அலுவலகத்திற்குப் போன போது அங்கிருந்த மாஸ்டர் – ‘ஏன் இவ்வளவு நாளும் வரவில்லை?’ எனக்கேட்டார்.
‘ஞானத்தின் ஆட்களோடு இடத்திற்கு( ஈழமக்கள் புரடசிகர மன்னணியின் ஆபீஸ்) போய் வந்தனான்’ என்றேன்.
‘அவன்கள் சரிப்படான்கள். அவன் நாபா மட்டும்தான் நல்ல மனுசன். இவன்கள் தேவையில்லாத கம்யூனிசம் பேசிக்கொண்டு நேரத்தை வீணாக்குகிறார்கள். புலியளைப் பார் – அவர்கள் இந்த மாக்சிசம், கம்யூனிசம் என்று ஏதாவது பேசுகிறார்களா ? அவங்களுக்கு தெரியும் சிங்களவருக்கு எங்கேயடித்தால் விடயம் நடக்கும் என்று’ – என்று மாஸ்டர் பேசிய விடயங்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தன.
ஆனால், புலிகளின் போக்கு சரி என என்னால் எண்ண முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஆயுதப்போராட்டத்தை மறுக்க முடியாதபோதிலும் மனிதாபிமானமான விடயங்களில் ஈடுபடுவது சாலச்சிறந்தது என நினைத்தேன்.
‘பேராதனை – கொழும்பு என பல்கலைக்கழகத்தில் இருந்து அரைவாசியில் படிப்பு முடியாமல் பல மாணவர்கள் இங்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தில் இடம் எடுப்பது சம்பந்தமான வேலையை நான் செய்கிறேன். அதுவிடயமாக கல்வி அமைச்சர் அரங்கநாயகத்தை நாளை சந்திக்கவேண்டும். அதற்கு நீ வருகிறாயா’ எனக்கேட்டார் மாஸ்டர்.
அடுத்த நாள் கல்விஅமைச்சரை சந்திப்பதற்கு நான் தயாராகினேன்;.
அஸ்திரேலியா.

வார்ணம்பூல் அக்காலத்தில் 20, 000 மக்கள் வசிக்கும் தென் கடல் சார்ந்த நகரம். கோடைகாலத்தில் குறிப்பாக மார்கழி மாதத்தில் விடுமுறைக் காலத்தில் மக்கள் தொகை கடற்கரைக்கு வெயில் குளிக்க வருபவர்களால் இரண்டு மடங்காகும் . கார்கள் மக்கள் எங்கும் நிறைந்து கலைந்த தேன்கூட்டை நினைவுபடுத்தும். மாறாக ஜுலை மாதத்தில் குளிர்காலம். தென்துருவத்தில் இருந்து குளிரை முதுகில் தாங்கியபடி வீசும் காற்று எலும்புக்குள் சென்று புல்லாங்குழல் ஊதும் . வீசும் காற்றின் ஓசை மட்டும் தாலாட்ட முழு நகரமே உறங்குவதுபோலத் தெரியும். நகரத்தின் உள்பகுதியான நிலங்கள் பசுமையான புல் தரையானதால் மாட்டுப்பண்ணைகள் அதிகமுள்ளது. ஆரம்பத்தில் அயர்லாந்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் குடியேறிய பகுதி.
மனைவி சியாமளா உதவி வைத்தியராக வார்ணம்பூல் வைத்தியசாலையில் பதவி எடுத்ததும் எனது தொழில் மாறிவிட்டது. சமையல் வேலையுடன் பிள்ளைகளைப் பராமரிக்கும் குடும்பத்தலைவனானேன். தங்குவதற்கு வைத்தியசாலைக்கு எதிரே ஒரு குவாட்டர்ஸ் தந்தார்கள் . மிகவும் பாதுகாப்பான ஊர். வீட்டுக்கதவை திறந்து விட்டு பல மணிநேரம் எங்கும்போய் வரலாம் .
பிள்ளைகளைப் பாடசாலையில் விட்டுவிட்டு வார்ணம்பூலில் உள்ள மிருகவைத்தியசாலைக்குச் செல்வேன் . அங்குள்ளவர்கள் எனக்கு அவுஸ்திரேலியாவில் மிருக வைத்தியத்தின் சூக்குமத்தை சொல்லித் தந்தார்கள். அங்குள்ளவர்களில் தலைமை வைத்தியர் டாக்டர் கமில்டனிடம் “நீதான் என் குரு “ “என்றேன்.
‘குரு’ என்ற வார்தையை அவன் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் “ நன்றி நண்பா உன்னைப் பரீட்சையில் சித்தியடைய வைப்பது எனது பொறுப்பு “ என்றான். அவனுடன் பண்ணைக்குச் செல்வேன் . பசுக்களை குதிரைகளை பரிசோதிப்பேன்.
அங்குதான் உண்மையான அவுஸ்திரேலிய பண்ணை மற்றும் விவசாயியின் பௌதீக அமைப்பைப் புரிந்து கொண்டேன். சராசரியாக 400- 500 பசு மாடுகளை 500 ஏக்கர் காணியில் வளர்ப்பார்கள் . அங்குள்ள புல் நிலத்தில் அவை மேயும். காலையிலும் மாலையிலும் அங்குள்ள தொழுவத்திற்கு வந்து பால் தரும். பால் கறப்பது மெசினால் என்றாலும் ஒரு இலகுவான வேலையல்ல. வாரம் ஏழுநாளும் வேலையிருக்கும். தொடர்ச்சியாக புல்லை வளர்ப்பதுடன் வரட்சியான காலத்திற்கு புல்லை காயவைத்தும் பாதுகாக்கவேண்டும். கன்றுகள் போட்டால் அவற்றை பராமரிக்கவேண்டும் . குடும்பத்தினரே சகல வேலைகளிலிலும் ஈடுபடுவார்கள் . வெளியில் இருந்து எவரையும் வேலைக்கு வைத்திருக்க கட்டுப்படியாகாது . விடுமுறையிருப்பதில்லை . பெரும்பாலானவர்களிடம் அதிகமான சொத்துகள் நிலமாகவோ ட்ராக்ரராகவோ இருக்கும். ஆனால், அதிகம் பணமிராது . இதனால் பலர் பண்ணைகளை விற்று விடுகிறார்கள். அடுத்த தலைமுறை பண்ணை விவசாயம் செய்யத்தயாரில்லை. நகரத்தை நோக்கி இடம்பெயர்வதால் பெரும்பாலான விவசாயிகள் தலைநரைத்த மத்திய வயதைக் கடந்தவர் களே. பால் விலையேறுவதும் பின்பு குறைவது மற்றும் மழையற்ற வரட்சி போன்ற காரணிகள் அவர்களை கடன்காரர்களாக்கும்.
இதில் மிருகவைத்தியராக நான் அவதானிப்பது: பசுக்கள் குளிர்காலத்திலே கன்று போடும். , அப்பொழுதுதான் அவை பால் கொடுக்கும். வசந்தகாலத்தில் அதிக புல்லுக்கிடைக்கும் . ஒரு முறை நான் அதிகாலை நாலு மணியளவில் பண்ணைக்குச் சென்று பசு, கன்றைபோடுவதற்கு உதவியபோது அந்த குளிற்காற்றில் நான் நடுங்கியது இன்றும் நினைவிலிருக்கிறது .
இந்தக் காலத்திலே நான் பரீட்சைக்காக மீண்டும் மிருகவைத்திய புத்தகங்களைக் கரைத்துக் குடித்தேன். ஆறு மாதத்தில் எனது பரீட்சையை குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் எடுக்க வேண்டியிருந்தது .
அந்தப் பரீட்சையின்போது மறக்க முடியாத இரண்டு சம்பவங்கள் நடந்தன. பல நாடுகளைச் சேர்ந்த பத்து மிருகவைத்தியர்கள் பரீட்சைக்கு வந்திருந்தார்கள் . தொடர்ச்சியாக எட்டுப்பேருக்கு பேராசிரியரகள் நேர்முகப் பரீட்சை நடத்திக்கொண்டிருந்தார்கள். எனது முறை வரும்போது பரீட்சையை நிறுத்திவிட்டார்கள். நான் அந்தரப்பட்டேன். அவர்கள் எல்லோரும் நண்பகல் இரண்டு மணியாகியதும் மெல்பன் குதிரைப்பந்தயத்தை தொலைக்காட்சியில் பார்க்கச் சென்று விட்டார்கள்.
சம்பேயின் போத்தல்களை திறந்து சீஸ் கட்டிகளுடன் அருந்தினார்கள். அத்துடன் எனக்கும் பரிமாறினார்கள். என்னைப் பொறுத்தவரை அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து மூன்று வருடமும் ஐந்து மாதங்களுமாகிவிட்டது . இந்தத் தேர்வு எப்பொழுது முடியும்..? எனக் காத்திருக்கிறேன். குதிரையோட்டத்தை பார்க்கவோ சம்பேயினை அருந்தும் மன நிலையிலோ நான் இல்லை. ஆனாலும் என்ன செய்வது ?
இரண்டுமணித்தியாலத்தின் பின்பு எனக்கு நேர்முகப் பரீட்சை நடந்தது.
தலைமைப் பேராசிரியர் ரெக்ஸ் என்பவர் அடுத்தநாள் என்னைக் கண்டவுடன் “ மகனே பயப்படாதே . நீ சித்திபெறுவாய் .
“பரீட்சையில் உனக்கான நோயியல் மாதிரிகளில், ( Pathological specimens ) இந்தியாவில் உள்ள நாய்களுக்கு வரும் நோயின் மாதிரியும் (specimen) உள்ளது என்றார்.
எனக்குப் புரியவில்லை . ஆனால், ஏதோ உதவ நினைத்து சொன்னதாக எண்ணி நன்றி சொன்னேன்.
பரீட்சையின்போது தெரிந்தது: இலங்கை இந்தியாவில் தெருவில் திரியும் நாய்களுக்கு அவற்றின் ஆண்குறி பெண்குறியில் குட்டைபோல் ஒரு நோய்வரும் . அவற்றை இலங்கையில் பார்த்திருக்கிறேன் . அவுஸ்திரேலியாவில் அந்த நோய் இல்லை
நன்றியுடன் நினைத்துகொண்டதுடன், இறுதிநாளில் நேரடியாக அவரிடம் கேட்டேன் “ எப்படிச் செய்தேன் என நினைக்கிறீர்கள்? “
“மகனே பயமற்று வீடு செல் “ என்றார்.
சிவகாசி கலண்டரில் பழனி முருன் படத்தின் மேல் எழுதிய வார்த்தைகள்போல் அவரது வாக்கு இருந்தது.
தெய்வ நம்பிக்யைற்ற எனக்கு, அன்று அந்த ஆறரை அடி உயரமான பேராசிரியர் தெய்வமாகத் தெரிந்தார்.
–
தொடரும்

மறுமொழியொன்றை இடுங்கள்