காந்தி பிறந்த ஊர்.


நடேசன்

காந்தியின் நிலத்தில் எங்கள் பயணத்தின் அடுத்த இடம் ராஜ்கோட் நகராக இருந்தது. பிரித்தானியர் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகர். அங்கு காந்தியின் தந்தையார் திவானாக இருந்தார். அதுவே காந்தி சிறு வயதில் வாழ்ந்து, இங்கிலாந்து போகும் வரையும் கல்வி கற்ற இடம். அவர் கல்வி கற்ற மேல் நிலைப் பாடசாலையை தற்பொழுது அவரது நினைவிடமாக்கி, அதைக் காந்தியின் வரலாற்று அருங்காட்சியமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டு மாடி கட்டிடம்.

அங்கு போனால் அங்குள்ள வரலாற்றின் பகுதிகளை வாசித்தபடியே பல மணி நேரங்கள் செலவழிப்பேன் என்பதால் மனைவி சியாமளாவிடம் முன்னெச்சரிக்கை செய்திருந்தேன். எனக்குக் கடைத்தெருக்களில் அலைவதற்குப் பொறுமையில்லை. அதுபோல் சியாமளாவிற்கு அருங்காட்சியகங்களில் பொறுமை குறைவு. ஆனாலும் இம்முறை என்னுடன் வருவதாக ஒப்புக்கொண்டார்.

காந்தியின் ஜனனத்திலிருந்து மரணம் வரை அவரது வரலாறு, படங்களாகவும் குறிப்புகளாகவும் இருபத்தைந்துக்கு மேற்பட்ட அறைகளிலிருந்தன . ஒவ்வொன்றும் வகுப்பறை போன்று பெரிதானவை

காந்தியின் வரலாறுபோல் இந்தப் பாடசாலைக்கும் பெயர் மாற்றங்கள் உண்டு. 1953 இல் அத்திவாரமிட்டு சௌராஸ்ட்ரா அல்லது கத்திவார் குடாநாடு என்ற பிரதேசத்தில், பிரித்தானியர்கள் காலத்தில் கட்டப்பட்ட முதல் ஆங்கில பாடசாலை. ஆரம்பத்தில் அதற்கு ராஜ்கோட் மேல் நிலைப்பாடசாலை என்று பெயரிடப்பட்டது. பின்பு ஆல்பிரட் மேல் நிலைப் பாடசாலையாகியது. சுதந்திரத்தின் பின்பு மோகன்தாஸ் காந்தி மேல் நிலைப்பாடசாலையாக உருமாறியது. இறுதியாக 2017 இல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இந்தப் பாடசாலையில் 38 மாணவர்களுடன் காந்தி படித்தார். அதில் புலமைப்பரிசில் பெற்ற இருவரில் காந்தி ஒருவர். காந்தி பற்றிய கண்காட்சியை நான் இங்கு எழுதுவது அவசியமில்லை, பல காலமாக நான் நேசித்த ஒருவரது வாழ்வின் சுவடுகளைப் பார்த்தது எனது ஆத்மாவுக்கு நெருங்கிய விடயம்.

இங்கு என்னை மிகவும் ஆச்சரியம் தந்த விடயம் அங்கு செல்பவர்களுக்குக் கிடைத்த வரவேற்பாகும். எல்லா அறைகளிலும் இளம் பெண்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் முன் வந்ததுடன், கண்காட்சிஅறைகளின் கதவுகளைத் திறந்து விட்டு ஒவ்வொரு புகைப்படங்களைப் பற்றியும் விபரமாகச் சொன்னார்கள் . ஆரம்பத்தில் காது கொடுத்துக் கேட்டேன். பின்பு “நானே வாசித்துக்கொள்கிறேன்” “ என்றவர்களிடம் சொன்னேன். ஏற்கனவே மன ஓடையில் பதிந்து கொண்டவற்றை ஒப்பீடு செய்வதற்கு அடுத்தவர்களிடமிருந்து கேட்பது இடையூறாக இருக்குமென நினைத்தேன் .

இந்தியாவில் இப்படியான இடங்களில் புன்முறுவலைத் தொலைத்தவர்களே காணப்படுவார்கள். வட இந்திய நட்சத்திர விடுதிகள் பரவாயில்லை. ஆனால், பெரும்பாலும் ஆண்களே. அகமதாபாத் , ராஜ்கோட் போன்ற நட்சத்திர ஹோட்டல்களில் இருந்த பெண்களில் புன்முறுவலைப் பார்க்கவோ, ஆங்கிலத்தைக் கேட்கவோ முடியவில்லை.

சில பெண்களை நான் சிரித்தபடியே சிறிது நேரம் பார்ப்பதைக் கண்ட சியாமளா, “ என்ன பார்க்கிறீர்கள்…? “ என்று என்னை நோண்டியபோது, “ நான் அவர்கள் முகத்தில் கொஞ்சமாவது சிரிப்பைப் பதிலுக்குப் பார்க்க விரும்புகிறேன் “ என்றேன். இந்திய விமான நிலையங்களிலும் கிடைக்காத விடயம். பெரும்பாலும் அரச அலுவலகங்கள் அப்படியிருக்கலாம். தென்கிழக்காசிய நாடுகளில் புன்முறுவல் உபரியாகக் கிடைக்கும்.

ராஜ் கோட்டில் முக்கியமான அடுத்த இடமாக சுவாமி நாராயணன் கோவிலிருந்தது. அழகிய கட்டிடம். ஆனால், அதிகமானவர்கள் கூடும் மாலை நேரம். அதைத் தவிர்த்து, வெளியே நின்று படமெடுத்துக்கொண்டு நின்றபோது சியாமளா உள்ளே போய் வணங்கிவிட்டு வந்தார் . இந்த கோவிலுக்கு அருகில் சிற்றுண்டிக் கடையில் குஜராத்தி சிறப்பு உணவு வாங்கச் சென்றேன் .

குஜராத்தில் காந்தியையோ மோடியையோ வெறுப்பவர்கள் இருக்கலாம். ஆனால், டோக்ளா விரும்பி உண்ணாதவர்கள் எவருமில்லை . ரவையில் செய்யப்படும் இது, மலிவானது. சத்தான உணவும் கூட . அத்துடன் எனக்கு உண்பதற்குப் பிடித் திருந்து . குஜராத்தில் நின்ற நாட்களில் ஒவ்வொரு நாளும் உண்டேன் .

காந்தியின் பிறந்த இடமான போர்பந்தருக்குப் போனபோது அவரது மூன்று மாடி வீடும் தற்போது அருங்காட்சியகமாகியுள்ளதை அவதானித்தேன். நகரத்தின் மையத்தில் அந்த வீடு உள்ளது. அவர் பிறந்த இடத்தை கட்டம் போட்டு காட்டியிருந்தார்கள். அவரது தந்தையார் அங்குள்ள சமஸ்தானத்துக்குத் திவானாக இருந்திருக்கிறார் என்பதால் மேற்தட்டு வர்க்கத்தில் பிறந்துள்ளார். அத்துடன் வியாபாரம் செய்பவர்கள். செல்வாக்கான குடும்பம் எனத் தெரிந்தது.

அகமதாபாத் சபர்மதி ஆசிரமம், ராஜ்கோட் அருங்காட்சியகம் பின்பு போர்பந்தர் எனக் காந்தியின் காலடிகளைப் பின்தொடர்ந்து போய் புதிதாக என்ன அறிந்து கொண்டேன்.
காலனித்துவ காலத்தில் உள்ள மற்றைய தலைவர்கள் ஒரு சமூகத்தை அல்லது பிரதேசத்தை அல்லது வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியபோது காந்தியின் வரலாற்றில் அவர் எப்படி இந்தியாவின் மேல்வர்க்கத்தையும் அடிமட்ட மக்களையும் இணைக்கும் தலைவராக இருந்தார் என்பதுடன் அவரே இந்தியத் தேசியத்தின் தந்தையானார் என்பதையும் புரிய வைத்தது.

அதேவேளையில் அவர் தொடர்ந்து குஜராத்தியாகவும் இருந்திருக்கிறார் என்பதும் புரிந்தது . தற்போது இந்தியப்பிரதமர் மோடி குஜராத்தையும் இந்துத்துவத்தையும் பிரதிநிதித்துபடுத்துகிறார் .

இன்னுமொரு புதிய சிந்தனை வந்தது. மீண்டும் காந்தி பிறந்து வந்தால்கூட அவரால் எதுவும் செய்யமுடியாது . காலனியகாலத்தில் அவரது தேவையிருந்து . சுதந்திரத்தின் பின் அவரது சேவை தேவையற்றது என அவரே நினைத்திருக்கலாம். காந்தி போன்ற தனிப்பட்ட பிடிவாதங்களும் கொள்கைகளும் கொண்ட ஒருவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது போயிருக்கும். அவரது உண்ணாவிரதங்கள் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கும். அரசியலிலிருந்தால் அவர் புகழ் மங்கியிருக்கலாம்.

இக்காலத்தில் அலெக்சாண்டர் , ஜெங்கிஸ்கான் ஏன் நெப்போலியன் போன்றவர்கள் தோன்றினாலும் எதுவும் நடவாது. காலங்களுக்கேற்ப தலைவர்கள் தோன்றுகிறார்கள் என்பதே உண்மையானது எனத் தெரிந்து கொண்டேன்.

தேசிங்கு ராஜாவின் குதிரை மீண்டும் பிறந்து வந்தால் ஓட்டோக்களையும் பாதசாரிகளையும் விலத்தியே அண்ணாசாலையில் ஊர்ந்து கொண்டிருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: