சேகுவேராவின் மரண வாக்குமூலம்

வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற கெரில்லாத்தலைவர் ( அங்கம் -02 )

மரணத்தின்போதும் மனைவிக்கு மறுவாழ்வு கொடுக்கவிரும்பிய விடுதலைப் போராளி !
முருகபூபதி

மரணம் நெருங்கிவிட்டதருணம் ஒவ்வொருவரும் என்ன நினைத்துக்கொள்வார்கள்?
இது அவரவர்க்கே வெளிச்சம்.
ஏர்ணஸ்ட் சேகுவேரா என்ற வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற சர்வதேசப்போராளி, தன்னைக்கொல்ல வந்தவர்களிடம் “ என்னைக்கொல்வதிலும் பார்க்க உயிரோடு என்னை வைத்திருப்பதே உங்களுக்கு பயனளிக்கும்” என்றாராம்.

பன்முக ஆற்றலும் ஆளுமையும் மிக்க ஒரு போராளியிடமிருந்து இயல்பாகவே வரக்கூடிய வார்த்தைகள்தான் அவை.
சேகுவேரா உட்பட அனைத்துப்போராளிகளையும் வேட்டையாடுவதற்காக நியமிக்கப்பட்ட உளவுத்துறையில் இயங்கிய ஒரு அதிகாரியான கேர்னல் ஓர்னால்டோ சாஸேடா பிராடா என்பவர் குவேராவின் இறுதிவாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.
எதிரியிடம் பிடிபட்டுவிட்டோமே என்ற வருத்தம் சேகுவேராவுக்கிருந்திருக்கிறது.
அதனால்தான் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:- “ நீங்கள் என்னைச் சுட்டுக்கொல்லப்போகிறீர்கள் என்பது எனக்குத்தெரியும். நான் உயிரோடு பிடிபட்டிருக்கக்கூடாது. இந்தத்தோல்வி புரட்சியின் தோல்வி அல்ல. புரட்சி எப்படியும் வெற்றிபெறும் என்று பிடல் காஸ்ட்ரோவிடம் சொல்லுங்கள். எனது மனைவி அலெய்டாவிடம், இதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் திருமணம்செய்துகொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வை தொடரச்சொல்லுங்கள். குழந்தைகளை நன்றாக படிக்கவைக்கச்சொல்லுங்கள்.”

மரணம் அருகில் வந்தவேளையில் தனது காதல் மனைவியையும் குழந்தைகளையும் தனது சகதோழன் பிடல் காஸ்ட்ரோவையும் அவர் நினைத்துப்பேசியிருக்கிறார்.
லா ஹிகுவேரா என்ற கிராமத்தில் ஒரு பாடசாலைக்குள் மறைந்திருந்த வேளையில் பிடிபட்ட சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரி, லெப்டினன்ட் மரியோ டெரான், துப்பாக்கியின் விசையை அழுத்துமுன்னர் ஸ்கொட்ச் விஸ்கி அருந்தி தன்னைச்சூடேற்றிக்கொண்டே ஆறு தோட்டாக்களை அந்த கர்மவீரனின் வசீகரமான தோற்றம்கொண்ட உடலில் பாய்ச்சினான்.

இராணுவ அதிகாரிகளிடம் சேகுவேராவின் உடலை என்ன செய்வது..? என்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்களும் தோன்றியிருக்கின்றன.
தாங்கள் சுட்டுக்கொன்றது சேகுவேராவைத்தான் என்பதை பொலிவிய அரசுக்கும் சி.ஐ.ஏ. உளவுத்துறைக்கும் காண்பிப்பதற்காக அவரது தலையையும் கைகளையும் துண்டித்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் உடலின் எஞ்சிய பகுதியை எரித்துவிடவேண்டுமென்றும்தான் ஒரு மேஜர் பிடிவாதமாக நின்றிருக்கிறான்.
ஆனால், தலை துண்டிக்கப்படுவதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கைகள் மாத்திரம் துண்டிக்கப்பட்டன.

துண்டிக்கப்பட்ட கைகள் ஃபோர்மலின் திரவத்தில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகவும் அவை பின்னர் மர்மமாக கியூபாவுக்கு கடத்தப்பட்டு எங்கோ இரகசியமாக மறைத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு போராளி வாழும் காலத்தில் பெற்றிருந்த சமூக அந்தஸ்த்துக்கும் அவருடைய மறைவுக்குப்பின்னர் கற்பிதப்படுத்தப்பட்டுள்ள மேதாவிலாசத்திற்கும் இடையேதான் எவ்வளவு துயரம்மேவிய சுவாரஸ்யங்கள்?
எங்கேயோபிறந்து ஒரு வேற்றுநாட்டின் (கியூபா) விடிவுக்காகப்போராடி, விடுதலை கிடைத்தபின்னரும் ஓய்வெடுத்துக்கொள்ளாமல், மற்றுமொரு நாட்டின் (பொலிவியா) விடிவுக்காகச்சென்று மடிந்துபோன இந்தச்சர்வதேசப்போராளியின் உடலைத்தேடியதே ஒருவரலாறாக பதிவாகியுள்ளது.

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சேகுவேரா யேசுகிறீஸ்துவைப்போன்று உயிர்த்தெழவில்லை. ஆனால் முப்பது ஆண்டுகளின் பின்னர் அவரது எலும்புக்கூடும் சீருடையும் வெளி உலகை எட்டிப்பார்த்தன.

சேகுவேராவைச்சுட்டுக்கொன்ற மரியோ டெரான், தலைமறைவாகவே வாழ்ந்துவருவதாகவும் எப்பொழுதும் குடிபோதையிலேயே இருப்பதாகவும் தன்னை கியூபா புரட்சியாளர்கள் தேடியலையக்கூடும் என்ற அச்சத்துடன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
கியூபா மற்றும் ஆர்ஜென்டைனா நிபுணர் குழுவின் தீவிர தேடுதலின்பின்னர் (சுமார் 30 ஆண்டுகள்) ஏர்ணஸ்ட் சேகுவேராவினதும் மேலும் 38 போராளிகளினதும் உடல்கள் எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை அரசமரியாதையுடன் கல்லறைகளில் வைக்கப்பட்ட நினைவில்லம் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசம்தான் சாந்தா கிளாரா.

இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கிய தகவலை தெரிவித்தாகவேண்டும்.
சேகுவேராவின் இறுதித்தருணத்தில் அவர் காயங்களுடன், தன்னைச்சுட வந்த மரியோ டெரான் சலாசாரைப்பார்த்து ஏளனமாகச்சிரித்தார். குவேராவின் ஏளனச்சிரிப்பை மேலும் தாங்க முடியாத மரியோவைப்பார்த்து, “நீ இங்கு என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். கோழையே என்னைச் சுடு. நீ ஒரு மனிதனை மட்டும்தான் கொல்லப் போகிறாய், புரட்சியை அல்ல ” என்றார்.
அதற்குமேலும் பொறுக்கமாட்டதா அவன் தனது துப்பாக்கியினால் சுட்டான். குண்டுகள் சீறிப்பாய்ந்தன. சேகுவேராவுக்கு அப்போது வயது 39. இச்சம்பவம் நடந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப்பின்னர் அதே பொலிவிய இராணுவ அதிகாரிக்கு கண்ணில் புரை வந்தபோது, கியூபா அரசின் மருத்துவ உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அந்த அதிகாரிக்கு கண்பார்வை வழங்கியது கியூபா அரசு.
“ எதிரிகளுக்கும் விடுதலையைத் தந்ததுதான் சே குவேராவின் புரட்சி. “ என்று தான் வரலாறு பேசுகிறது.
எதிரியையும் மன்னித்தது சேகுவேராவின் புரட்சி.

சமகால கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரஸுடன் போராடுவதற்கும் கியூபா அரசு ஏனைய நாடுகளுக்கு தனது மருத்துவ உதவிகளை வழங்குகிறது. ஒரு காலத்தில் அமெரிக்கா காஸ்ரோவின் அரசுக்கு எதிராக பொருளாத தடைவிதித்தபோது, அமெரிக்க விசுவாச நாடுகள் அதற்கு செவிசாய்த்து தலையாட்டியதையும் அறிவோம். ஒரு கொடிய நோய் பரவியபோது, அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறமுடியாமல் கியூபாவுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கும் சில நாடுகள் பின்வாங்கின.
காலம் அனைத்தையும் அவதானித்துவருகிறது. சமகாலத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிரயான கொரேனோ வைரஸிலிருந்து பல நாடுகளை காப்பாற்றுவதற்கு கியூபா முன்வந்தது. கியூபா மருத்துவத்துறையில் நன்கு முன்னேறிய நாடாக விளங்குகிறது.தோழர் சேகுவேராவும் ஒரு மருத்துவர்தான் என்பதை உலகம் மறக்காது.

கிருமிகளுக்கு வர்க்கபேதம், இன – மத – மொழி பேதம் தெரியாது. தேசங்கள் கடந்தும் கிருமிகள் பரவும். வறிய நாடுகளையும் வளர்முகநாடுகளையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகளையும் அது தொற்றிக்கொள்ளும். அணுவாயுதங்களுக்கு கந்தகப்பொடி தேடிய நாடுகள், முகக்கவசங்களையும் வென்டி லேட்டர்களையும் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றன.
காலம் இப்படித்தான் பதில் சொல்லிவருகிறது.

மீண்டும் எமது அன்றைய கியூபா – சாந்தகிளாரா பயணத்திற்கு வருகின்றேன்
முதலில் அங்கிருந்த கண்காட்சியகத்துக்குச்சென்றோம்.
அங்கே:- சேகுவேரா தனது வாழ்நாளில் பயன்படுத்திய பல பொருட்களும் உபகரணங்களும் கருவிகளும் துப்பாக்கிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கியூபாவின் புரட்சிக்கு உழைத்தமைக்காக பிடல் காஸ்ட்ரோவால் அவருக்கு வழங்கப்பட்ட கௌரவ பிரஜாவுரிமைச்சான்றிதழ், சிறுவயதில் அவர் பாடசாலையில் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் என்பனவும் அவரது வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்தன.

அந்தப் போராளியின் கரத்திலிருந்த பேனை, கெமரா, கிட்டார் இசைக்கருவி, தண்ணீர் குடுவை, பல் சுத்திகரிக்கும் பல்பிடுங்கும் கருவிகள் மருத்துவ உபகரணங்கள் யாவும் என்னை நெகிழச்செய்தன.

மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அதேசமயம், தனது மறைவுக்குப்பின்னர் தனது காதல் மனைவி தனித்துவிடக்கூடாது, அவள் தனக்கொரு துணையைத்தேடிக்கொள்ளவேண்டும் என்று சாகும் தருவாயிலும் வாக்குமூலமாகச்சொன்ன மனிதநேயவாதி அல்லவா?

காஸ்ரோவுடன் உரையாடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்டமான புகைப்படம் சேகுவேரா உயிரோடு எம்மருகே நிற்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தியது.
இந்தக்காட்சி அறைகளைப்பார்த்துக்கொண்டு, கல்லறைகள் அமைந்துள்ள அடுத்த கட்டிடத்துக்குள் பிரவேசித்தோம்.
அங்கே ஒரு நினைவுத்தீபம் ஒளிர்ந்தது. அது அணையாத தீபம் எனச்சொல்லப்பட்டது.
சுவரிலேயே கல்லறைகள்.
மொத்தம் 39 கல்லறைகள்.
நடுநாயகமாக சேகுவேராவின் கல்லறை.
அதன் முன்பாக மட்டுமல்ல, இந்த அறையைவிட்டு வெளியே வரும்வரையிலும் மௌன அஞ்சலியே செலுத்திக்கொண்டிருந்தேன்.
நினைவில்லத்துக்கு வெளியே வந்தபின்னரே படங்கள் எடுத்துக்கொண்டோம்.

எங்களால் முடிந்ததும் அதுதானே?

அன்று மாலை ஹவானாவைச்சுற்றிப்பார்த்தோம்.
பிடல் காஸ்ட்ரோ மக்களிடம் தோன்றி பகிரங்கமாக அமெரிக்காவுக்கு சவால்விட்டுப்பேசும் சதுக்கத்தையும் சென்றுபார்த்தோம். அன்று இரவு ஒரு இரவுவிடுதிக்குச்சென்று, கியூபாவின் இசையையும் தனிநபர் நடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சியையும் ரசித்தோம்.


அந்தமொழி புரியாமல் எப்படி ரசித்திருப்போம் ?
வாசகர்கள் நிச்சயம் இப்படி ஒரு கேள்வியைக்கேட்கக்கூடும்.
எங்களுடன் வந்திருந்தாரே ருத்ரன்- அவர் அந்தமொழியே தெரிந்தவர்போன்று பாசாங்கு செய்ததைத்தான் ரசித்தோம். நகைச்சுவை நடிகர் ஏதோ சொல்லவும் ரசிகர்கள் அட்டகாசமாகச்சிரித்தார்கள்.
உடனே ருத்ரனும் கைதட்டி அட்டகாசமாகச்சிரித்தார்.

“ என்ன ? உமக்கு ஏதும் புரிந்ததா? “ – என்று அவரது காதுக்குள் கேட்டேன்.
“ புரிந்தது போல நடிக்கிறேன். அந்த ஆள் ஏதோ பெரிய நகைச்சுவையைச்சொல்கிறான். இவர்கள் சிரிக்கிறார்கள். நாங்கள் சிரிக்காமல் முகத்தை ‘உம்’ என்று வைத்துக்கொண்டிருந்தால், எங்களை ரஸனை தெரியாத முழு மூடர்கள் என்றல்லவா நினைத்துவிடுவார்கள். அதனால் இவர்கள் சிரிக்கும்போது நானும் சேர்ந்து சிரிக்கிறேன். நீங்களும் அவ்வாறே சிரியுங்கள்.” – என்றார் ருத்ரன்.
எனக்கு, ருத்ரன்தான் நகைச்சுவை நடிகராகத்தென்பட்டார்.

அதனால் நானும், அவர் சிரிக்கும்போதெல்லாம் சிரித்துக்கொண்டேன்.
ஒன்றுமட்டும் உண்மை, அந்த விடுதியில் அருந்திய மதுவின் சுவை மாத்திரம் புரிந்தது. வேறு ஒரு கோதாரியும் புரியவில்லை. விடுதியைவிட்டு வெளியே வரும்வேளையில், தனிநபர் நடிப்பினால் ரஸிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த நடிகருக்கு ருத்ரன் ‘கைவிசேஷம்’ கொடுத்தார்.
விடுதிக்குத்திரும்பும்பொழுது, அந்த நடுச்சாமத்திலும் டாக்ஸியின் மின் வெளிச்சத்தில் ஆங்காங்கே தென்பட்ட ஏர்ணஸ்ட் சேகுவேராவின் பதாதைகள், “ இந்த மக்களின் சிரிப்புக்காகவும் சுதந்திரத்திற்காகவுமே நான் வாழ்ந்திருக்கிறேன்”- எனச்சொல்வதுபோல் பட்டது.

மறுநாள் காலை ஹவானாவைவிட்டுப்புறப்படும் தருவாயில் எம்மை விமானநிலையத்திற்கு அழைத்துச்சென்றதும் அதே டாக்ஸி சாரதிதான்.

கியூபாவை விட்டுப்புறப்படும்பொழுது, வயது முதிர்ந்த ? ஃபிடலுக்குப்பின்னர் இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை மனதை அரித்தது.
சோவியத் நாட்டின் நேச சக்தியாக விளங்கிய பிடல், 1980 களின் இறுதியில் சோவியத் அதிபர் மிகையில் கொர்பச்சேவின் தலைமையில் நிகழ்ந்த மாற்றங்களை எதிர்த்தார். கியூபா பின்பற்றக்கூடிய சிறந்த பாதை சேகுவேரா காண்பித்த பொருளாதாரப்பாதைதான் எனவும் சூளுரைத்தார்.
எனினும், சேகுவேராவின் அந்தக்கொள்கைகள் அங்கே நடைமுறைக்கு வரவேயில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

ஃபிடல் காஸ்ரோவுக்குப்பின்னர் கியூபாவின் அதிபரான ராவுல் காஸ்ட்ரோவும் புரட்சியின்போது களம் பல கண்ட கெரில்லாப்போராளிதான். சிறையிலிருந்தவர். யுத்தமுனையில் போராடியவர். ஃபிடலின் உடன்பிறந்த சகோதரர். சேகுவேராவிடம் அளவுகடந்த பாசம் கொண்டவர்.
இன்றைய கியூபா
கியூபா புரட்சிக்கு தலைமை வகித்த ஃபிடல் காஸ்ட்ரோவால் பிரதமர் பதவி 1976 இல் நீக்கப்பட்டது.

கியூபாவில் கடந்த 2019 ஆண்டின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது.
அதிபரிடம் இருக்கும் சில பொறுப்புகளை தற்போதைய பிரதமர் மாரேரோ ஏற்றுள்ளார்.

அதிபரின் “ நிர்வாக ரீதியிலான வலது கரமாக பிரதமர் பொறுப்பு திகழும் “ என்று கியூபாடிபேட் என்னும் அரசின் உத்தியோக பூர்வ செய்தி ஏடு தெரிவித்துள்ளது.

(பிற்குறிப்பு:- கியூபாவைப்பற்றி எழுதுவதற்கு உசாத்துணையாக விளங்கிய நூல்கள்:-
1. சேகுவேரா: வாழ்வும் மரணமும் – ஜோர்ஜ் ஜி. காஸ்நாடா- தமிழில்: எஸ். பாலச்சந்திரன்
2. ஆபிரிக்கக் கனவு – ஏர்ணஸ்ட் சேகுவேரா.
3. எனது இளமைக்காலம் – பிடல் காஸ்ட்ரோ- அறிமுகம்- கேப்ரியல் கார்ஸியா மாரக்வெஸ்.
4. கியூபப்புரட்சியின் இன்றைய பொருத்தப்பாடு. –
கி. வெங்கட்ராமன்.
—–0—–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: