
சே குவேராவின் 53ம் ஆண்டு நினைவு நாள்
வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற கெரில்லாத்தலைவர் — அங்கம் -01
போராயுதமும் எழுத்தாயுதமும் ஏந்திச்சென்றவரின் வாழ்வில் குறுக்கிட்ட காதலிகள்

முருகபூபதி
முன்கதைச்சுருக்கம்
ஒரு நாட்டில் பிறந்து மற்றுமோர் இனத்தின் விடுதலைக்காக போராடிய மாபெரும் போராளி ஏர்ணஸ்ட் சேகுவேரா நினைவிடத்தை காண்பதற்காக 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மெல்பன் இலக்கிய நண்பர் நடேசனுடனும் கனடா ஒளிப்படக்கலைஞர் ருத்ரனுடனும் சென்றிருந்தேன். அந்த மனப்பதிவுகளை சேகுவேராவின் 53 ஆவது நினைவு தினத்தில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
கியூபா புரட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் சாந்தா கிளாரா.
சேகுவேராவின் தலைமையில் புறப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு வாழ்வா- சாவா என்பதைத் தீர்மானிக்கவிருந்த உக்கிரமான போர் நிகழ்ந்த இடம்தான் சாந்தாகிளாரா.
இந்த நகரத்தின் முக்கியமான முகாம்களில் சர்வாதிகாரி பாடிஸ்டாவின் படையினர் சுமார் 2500 பேர் இருந்தனர். தவிர, மேலும் ஆயிரம்பேரைக்கொண்ட ஆயுதப்படையினர் சாந்தாகிளாராவைச் சுற்றியிருந்த பிரதேசங்களில் நிலைகொண்டிருந்தனர்.
ஆனால், சேகுவேராவிடம் 300 போராளிகள் மாத்திரமே தாக்குதலுக்குத் தயாராகியிருந்தனர். இங்கு நிகழ்ந்த போர்தான் கியூபாவின் தலைவிதியையே மாற்றியது.
துணிச்சலும் அயராத கடினஉழைப்பும் போர்த் தந்திரோபாயமும் கொண்டிருந்த சேகுவேராவின் வீரத்துக்கு அடையாளமாகத்திகழ்ந்த சாந்தாகிளாராவில்தான், பொலிவியா புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது எலும்புகளும் எச்சங்களும் வைக்கப்பட்ட கல்லறையும் நினைவில்லமும் அமைந்துள்ளன.
வீரம்செறிந்த போர்நிகழ்ந்த சாந்தாகிளாராவில் 1958 டிசம்பரில் சேகுவேராவும் அவரது கெரில்லாபடையினரும் முறியடித்து கவிழ்த்த ரயில் பெட்டிகளைப் பார்க்கச்சென்றோம்.
சேகுவேராவிடம் துப்பாக்கிமாத்திரம் இருக்கவில்லை. எப்பொழுதும் கைவசம் பேனாவும் குறிப்புப் புத்தகமும் வைத்திருப்பார்.
பிற்காலத்தில், சேகுவேரா தொடர்பான பல நூல்கள் வெளிவருவதற்கு, அவர் ஏற்கனவே எழுதிவிட்டுச்சென்ற போர்முனைக் குறிப்புகள்தான் உதவியிருக்கின்றன. குறிப்புகளுடன் மாத்திரம் அவர் நின்றுவிடவில்லை. தனது தாயாருக்கு தொடர்ச்சியாக கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
சாந்தாகிளாரா போர்க்களத்தில் நிகழ்ந்த சிறுசம்பவம்:-
போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபோது ஒரு போராளி களைப்பினால் சற்று கண்ணயர்ந்திருக்கிறார். அவரது கையில் துப்பாக்கியும் இல்லை. இதனைக்கண்டுவிட்ட சேகுவேரா, அந்தப்போராளியை அதட்டித்திட்டியுள்ளார்.
கட்டளை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு தான் சுட்டதாகவும் அதனால் தனது துப்பாக்கி பறிமுதல்செய்யப்பட்டதாகவும் போராளி சொல்லியிருக்கிறார்.
சரி, பரவாயில்லை போய்ச்சண்டையிடு, சண்டையிட்டு ஒரு ஆயுதம் தேடிக்கொள். என்றாராம் சேகுவேரா.
அந்தப்போராளி மீண்டும் களம் புகுந்துள்ளார்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில், காயமடைந்த சில போராளிகளுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த ( சேகுவேரா ஒரு மருத்துவர்) பொழுது, ஒரு போராளி, தமது உயிருக்குப்போராடியவாறே, சேகுவேராவின் கையைப்பற்றிக்கொண்டு, “ கொமாண்டர், என்னை நினைவிருக்கிறதா, ஆயுதத்தை தேடிப்பெற்று போராடச்சொன்னீர்களே, அது நான்தான். என்றாராம். பிறகு அவரது உயிர்பிரிந்ததாம். நிராயுதபாணியாகச்சாகாமல் ஆயுதத்துடனேயே இறக்கிறேன் என்ற பெருமிதம் அந்தப்போராளியிடம் இருந்ததாக பதிவுசெய்கிறார்.
போர்முனையில் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இயங்கிய சேகுவேரா, தமது நாட்குறிப்பில் இச்சம்பவத்தையும் உணர்ச்சியின்பாற்பட்டு நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்யவில்லை.
தமது புரட்சிப்படை எத்தகையது என்பதை உணர்த்தவே இச்சம்பவத்தை எழுதியிருக்கிறார்
இருபத்தியிரண்டு பெட்டிகளைக்கொண்ட ரயில்வண்டி இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு சாந்தாகிளாராவை நோக்கிவருகிறது. சேகுவேரா இதனைத்தெரிந்துகொண்டு தாக்குதலுக்குத்தயாராகிறார்.
துரிதமாக தண்டவாளங்கள் கழற்றப்பட்டன.
முன்னெச்சரிக்கையுடன் மெதுவாக ஓடிவந்த ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரள்கின்றன.
கெரில்லாக்களின் சரமாரியான வேட்டுக்களினாலும் வெடிகுண்டுவீச்சுக்களினாலும் இராணுவம் திணறியது. தொகையான ஆயுதங்களுடன் ரயிலை சேகுவேரா கைப்பற்றியபொழுது சுமார் 400 இராணுவத்தினர் சரணடைந்தனர்.
கியூபாவின் புரட்சியில் தலைமறைவுப்போராளியாக விளங்கிய அழகிய இளம்பெண் அலெய்டா மார்ச். இராணுவப்பொலிசாரால் ஏற்கனவே துரத்தப்பட்டிருந்த அலெய்டா எஸ்காம்பிரே என்னுமிடத்திலிருந்த சேகுவேராவின் முகாமில் முன்பு தஞ்சடைந்திருந்தவர்.
சாந்தாகிளாரா போரின் வெற்றிப்பரிசாக சேகுவேராவுக்குக்கிடைத்தவர்தான் அலெய்டா என்ற தகவலும் உண்டு.
வசீகரமான தோற்றமும் ஆளுமையும் மிக்க கெரில்லாத்தலைவரிடம் காதல்வயப்பட்டார் அலெய்டா.
சேகுவேரா கவிழ்த்த அந்த ரயில்பெட்டிகளுக்கு முன்னால் அலெய்டாவை வரச்செய்த சேகுவேரா, ‘’ அலெய்டா, வரலாற்றுக்காக நான் உன்னைப்புகைப்படம் எடுக்கப்போகிறேன்”- எனச்சொல்லி தமது கெமராவினால் படம் எடுத்தாராம்.
அந்த ரயில் பெட்டிகளைப்பார்த்தபோது இலங்கையில் வடபகுதியில் ஒரு தமிழ்ப்போராளி இயக்கம் தாக்குதல் தொடுத்த ரயில்பெட்டிகள் நினைவுக்குவந்தன.
எம்முடன் வந்த புகைப்படக்கலைஞரான ருத்ரனிடம், “நாங்கள் போராளிகள் இல்லை. போராளிகள் கவிழ்த்த ரயிலைப்பார்க்கவந்த பயணிகள். அலெய்டாவை, சேகுவேரா படம் எடுத்ததுபோன்று எங்களையும் படம் எடும்” என்றேன்.
சாந்தாகிளாராவுக்கு எம்மை அழைத்துச்சென்ற டாக்ஸி சாரதி எம்மூவரையும் படம் எடுத்தார்.
“சேகுவேராவுக்கு ஆயுதம் ஏந்தி போராடவும் தெரிந்திருக்கிறது. மருத்துவமும் தெரிந்திருக்கிறது. யாத்ரீகனாக பல தேசங்களுக்கும் அலைந்து டயறிக்குறிப்புகளும் எழுதத்தெரிந்திருக்கிறது. அமைச்சராக பணியாற்றவும் தெரிந்திருக்கிறது. புகைப்படம் எடுக்கவும் தெரிந்திருக்கிறது.”- என்றேன்.
“ அதுமட்டுமா, அவருக்கு சில பெண்களைக்காதலிக்கவும் தெரிந்திருக்கிறது’’ – என்றார் நடேசன்.
ஆமாம். ஆற்பாயுளில் மறைந்துவிட்ட இந்தகெரில்லாப்போராளியின் வாழ்வில் சில பெண்கள் குறுக்கிட்டுத்தான் இருக்கிறார்கள். இந்தவகையில் இவர் ஒரு காதல் மன்னன்தான்.
இதிலே சிறப்பு என்னவென்றால், தமது தாயாருக்கு எழுதும் கடிதங்களிலும் தமது காதலிகள் குறித்து அவரால் காவியநயத்துடன் எழுதமுடிந்திருக்கிறது.
சிச்சினா
ஸோய்லா ரோட்ரிகுசேஸ் கார்ஷியா.
ஹில்டா காடியா.
அலெய்டா.
இப்படியாக சில காதலிகள்.
எனினும் ஹில்டாகாடியாவும் அலெய்டாவும் அவரது சின்னங்களாக குழந்தைகளையும் பெற்றுக்கொடுத்தவர்கள்.
ஒருசமயம், டிரினிடாட்டிலிருந்து தமது அத்தையொருவருக்கு சேகுவேரா எழுதிய கடிதத்தில், ” இனிமையான பாடல்களை இசைக்கும் பழுப்பு நிற மோகினிகளுடன் போராடியபிறகு .இந்த அற்புதமான தீவின் நினைவுச்சின்னமாக ‘அழகிகள்’ நிறைந்த என் இதயத்தை கொண்டுசெல்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.
கியூபாவில் புரட்சி வென்றபின்னர் . அந்த நாட்டின் வங்கித்தலைவராகவும் அமைச்சராகவும் பதவிவகித்த சேகுவேரா, பல நாடுகளுக்கும் விஜயம்செய்திருக்கிறார்.
பல உலகத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்துல் நாசர், நேரு, மா ஓ சேதுங் ஆகியோர் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
சேகுவேரா கொழும்புக்கும் வந்து சிலநாட்கள் தங்கியிருக்கிறார்.
கியூபாவின் பிரதிநிதியாக ஐ.நா. சபையிலும் உரையாற்றியவர்.
பல சர்வதேச தொலைக்காட்சிகளில் தோன்றியவர். பல பத்திரிகைகளுக்கு அரசியல் கட்டுரைகள் எழுதியவர். கியூபாவின் பொருளாதாரத்தை ஆரோக்கியமான திசையில் வளர்ப்பதற்கு பிடல் காஸ்ட்ரோவுக்கு பக்கபலமாக இருந்தவர்.
அமைச்சராகப் பதவி வகித்துக்கொண்டே கரும்பு ஆலையில் கைவண்டியும் இழுத்திருக்கிறார்.
இப்படி பன்முகத்தன்மையுடன் இயங்கிய சேகுவேராவிடம் இயல்பாகவே குடியிருந்த போர்க்குணம்தான் பொலியாவுக்கும் சென்று போராடத்தூண்டியிருக்கிறது.
கியூபா புரட்சியின் முன்னணி நாயகர்களில் ஒருவராகவும் பதவியேற்ற அரசில் அமைச்சராகவும் இருந்த சேகுவேரா, அத்துடன் அமைதியடைந்திருக்கலாம்.
குழந்தைப்பருவம் முதல் ஆஸ்த்துமா நோயுடன் போராடியவர், போர்க்களத்தில் காயமுற்றவர், பல சந்தர்ப்பங்களில் மயிரிழையில் உயிர் தப்பியவர், வாழ்நாளில் பெரும்பாலும் நாடோடியாகவே அலைந்து திரிந்தவர், நெடிய பயணங்களில் பல நாட்கள் பட்டினி கிடந்தவர், உரிய நேரத்தில் ஆஸ்த்துமாவுக்கு தற்காலிகமாகவாவது நிவாரணம் தரும் மருந்துகள் கிடைக்காமல் அவதியுற்றவர், கியூபாவின் வெற்றிக்கு கடினமாக உழைத்திருந்தபோதிலும் தான் ஒரு ஆர்ஜென்டைனர்- கியூபாவுக்கு அந்நியன்- என்ற தாழ்வுச்சிக்கலுக்கும் உள்ளாகியிருந்தவர்………..
ஏன்… மீண்டும் ஒரு போராளியாக உருவெடுத்தார்?
சேகுவேராவைப்பற்றி தெரிந்துகொண்ட நாள்முதலாக என்னை அரித்துக்கொண்டிருந்த கேள்வி இது.
இவரைப்பற்றிய வரலாற்றாசிரியர்களின் பொதுவான கணிப்பு இதுதான்:-
முரண்பாடுகளிலிருந்து தப்பித்த மனிதன் மட்டுமல்ல,
தனது வாழ்வின் அவலத்தை தானே தேடும் ஒருமனிதன்தான் சேகுவேரா.
புட்சிப்படையில் துரோகம் இழைத்தவர்களை தண்டிப்பதற்கும் அவர்தயங்கவில்லை எனத்தெரிகிறது.
அத்தகையவர்களுக்கு மரண தண்டனை விதித்தபின்னர், தான் செய்தது சரியா? தவறா? எனச்சீர்தூக்கிப்பார்த்து தன்னைத்தானே சுயவிமர்சனமும் செய்திருக்கிறார்.
தமது 37 வயதில் கியூபாவில் குடியுரிமை பெற்றுக்கொண்ட இந்த ஆர்ஜென்டைனா நாட்டுப்பிரஜை, கொல்லப்பட்டது பொலிவியாவில்.
1500 ஆம் ஆண்டளவில் லியணார்டோ டா வின்ஸியால் வரையப்பட்ட மோனாலிஸா ஓவியத்திற்கு உலகெங்கும் கிட்டியுள்ள வரவேற்பு அறிந்ததே ஐந்து நூற்றாண்டுகளையும் கடந்து இந்த ஓவியம் வாழ்ந்துகொண்டிருப்பதுபோன்று, ஏர்ணஸ்ட் சேகுவேராவின் உருவப்படமும் உலகெங்கும் தென்பட்டுக்கொண்டிருக்கிறது.
வரலாற்றுச்சிறப்புமிக்க அந்தப்படத்தை எடுத்தவர் அல்பர்ட்டோ கோர்டாவின் என்பவர்.
இவர், ரெவில்யூஷன் என்ற பத்திரிகையின் புகைப்படக்கலைஞர்.
அந்தப்படம் எதிர்பாராதவிதமாக எடுக்கப்பட்டது என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.
புரட்சியின்போது லாகோர்போ என்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவமொன்றில் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலிக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. பிடல் காஸ்ட்ரோவும் வேறும் சிலரும் முன்வரிசையில் இருந்தனர். சில விநாடிகளில் அந்த இடத்தில் தோன்றி மறைந்த சேகுவேரா கெமராவின் லென்ஸில் சிக்குண்டார். அந்தப்படம், கோடிக்கணக்கான இளம்தலைமுறையினரின் மணக்கண்களில் நிரந்தரமாகப்பதிவாகிவிட்டது.
நீண்டநாட்களாக சி.ஐ.ஏ.யினது கண்களில் சிக்கியிருந்த இந்த புரட்சிப்போராளி, எதிர்பாரதவிதமாக கொல்லப்பட்டபோது, இறந்தவர் சேகுவேராதான் என்பதை உடனடியாக ஊர்ஜிதம் செய்யமுடியாமலிருந்தாம்.
1967 இல் சுட்டுக்கொல்லப்பட்ட சேகுவேராவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தேடிக்கண்டுபிடிப்பதற்கு முப்பது ஆண்டுகள் சென்றன.
ஆனால், ஹொலிவூட் திரையுலகம், சேகுவேரா கொல்லப்பட்டவுடனேயே ‘சே’ –என்ற திரைப்படத்தை தயாரிக்கத்தொடங்கிவிட்டது.
20 யத் செஞ்சரி ஃபொக்ஸ் என்ற சர்வதேசப்புகழ்பெற்ற நிறுவனம் தயாரித்த இந்தப்படத்தில், சேகுவேராவாக நடித்தவர் பிரபல நடிகர் ஓமர்ஷரீப். ஜாக் பலன்ஸ், பிடல்காஸ்ட்ரோவாக நடித்தார். இந்த வரலாற்று நாயகர்கள்குறித்து அரசியல் ரீதியாக விமர்சனங்கள் இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஹொலிவூட் தயாரிப்பாளர்களின் ஊடாக மோசமாக சித்திரிக்கமுயன்றது.
கருத்தை கருத்தால் வெல்லமுடியாதவர்கள், தனிநபர் அவதூறுகளிலேயே தீவிரமாக இறங்குவார்கள். இயங்குவார்கள். என்பதற்கு குறிப்பிட்ட திரைப்படமும் சிறந்த உதாரணம் என்பது விர்சகர்களின் சிந்தனை.
இத்திரைப்படம் தென்னமரிக்காவில் தடைசெய்யப்பட்டது. சிலியிலும் வெனிசூலாவிலும் திரையிடப்பட்டபோது வெடிகுண்டுகள் திரையரங்குகளில் வீசப்பட்டன.
இந்தப்பயணக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது த லொஸ்ட் சிட்டி என்ற கியூபா குறித்த திரைப்படமும் பார்த்தேன். பிறிதொருசந்தர்ப்பத்தில் இப்படம் பற்றி எழுதலாம்.
எங்கே புரட்சி நடந்தாலும் இனவிடுதலைப்போராட்டம் வெடித்தாலும் அந்த வரலாற்றை யதார்த்தபூர்வமாக அல்லது கொச்சைப்படுத்தும் விதமாக திரைப்படம் தயாரிப்பவர்களும் தமது இருப்பை வெளிப்படுத்தவே முனைவார்கள்.
திரையிலே ஓமர் ஷெரீப் சேகுவேராவாகத் தோன்றியவேளையில், பொலிவியாவில் வாலேகிரண்ட் என்னுமிடத்தில் தடயமே தெரியாதவிதமாக அடியாழத்தில் புதைக்கப்பட்டிருந்தார் உண்மையான சேகுவேரா.
1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாந்தகிளாரவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவில்லத்தில் போராளி குவேராவின் எலும்புகளும் எச்சங்களும் கல்லறைக்குள் அடக்கமாகின.
ஏகாதிபத்தியத்திற்கு அடங்கமறுத்து, கல்லறைக்குள் அடங்கிவிட்டவரின் நினைவில்லத்தை நோக்கி எமது பயணத்தை தொடர்ந்தோம்.
( தொடரும் )
மறுமொழியொன்றை இடுங்கள்