
நேரம் இரவு ஒன்பது மணியையும் கடந்து விட்டிருந்தது. தனது பெயர் மரியோ என அறிமுகப்படுத்திக் கொண்ட சுமார் இருபத்தைந்துவயது மதிக்கத்தக்க யுவதியொருத்தி எமது மிருக மருத்துவமனைக்கு வந்தாள்.
முகத்தில் அளவுக்கு அதிகமான மேக்கப். நித்திராதேவியுடன் இவள் சங்கமிப்பது குறைவோ எனச் சொல்லும்விதமாக கண்களின்கீழ்ப்புறம் கருவளையம். தனது நாயை கொண்டு வந்திருந்தாள். அதன் இனம் பாக்ஸர். பிரச்சினையை வினவினேன். நேற்று குட்டிபோட வேண்டிய நாய், இன்னும் பிரசவத்திற்கு தயாராகவில்லை – என்று கவலையோடு சொன்னாள்.
எப்பொழுதுஆண் நாயுடன் சேர்ந்தது என வினவினேன். சரியான திகதி சொன்னாள். அறுபத்தி மூன்று நாட்கள். முன்பின்னாக இருக்கலாம். தொடர்ந்தும் நாயை breed பண்ணவிருப்பதனால் சிசேரியன் செய்யவிரும்பவில்லை என்றாள். நாய்க்கு ஊசி மருந்து ஏற்றிவிட்டு இருட்டறைக்கு அனுப்பினேன்.
நாய்க்கு பிரசவத்துக்கு இருட்டறைதான் தகுந்தசூழல். அச்சமயம் எனக்கு ஊர் ஞாபகம் வந்தது. அங்கு டாக்டராக பணிபுரிந்த எனது நண்பன் சொல்வான்.பிரசவத்திற்கு வருபவர்களிடம் கரு உண்டாகிய திகதி கேட்டால், நல்லூர் தேருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு -அல்லது சித்திரைமாதம் அட்டமியில், இல்லையென்றால் சன்னதி கொடியேறமுன்பு… இப்படிக் கோயில்திருவிழாக்களும், பஞ்சாங்கக் குறிப்புகளுந்தான் சரியான திகதியை அவர்களுக்கு சொல்லும். இனி நாம் தமிழ்க் கலண்டரில் சன்னதி கொடியேற்றம் – நல்லூர் தேர் முதலானவற்றின் திகதிகளைத்தேடவேண்டும – என அலுத்துக் கொள்வான் அந்த டாக்டர் நண்பன்.
ஆனால் இங்கு – இன்று தனது நாயை பிரசவத்திற்கு கொண்டுவந்த யுவதிக்கு நாய் கருத்தரித்த நாள் சரியாகத்தெரிந்திருக்கிறது. நான், நாய்க்கு செலுத்திய ஊசியும் வேலை செய்யாத காரணத்தினால் சிசேரியன் செய்து 13குட்டிகளை எடுத்தேன். மரியாவுக்கு அளவுகடந்த சந்தோசம். நாயும், குட்டிகளும் அவளுடன் வீடு திரும்பின. இரண்டு வாரங்களின் பின்பு- தையல் வெட்டுவதற்காக நாயை கொண்டு வந்தாள்.
அப்பொழுதும் இரவு நேரம். ஏன் இந்த நேரத்தில் வருகிறாய்? பகலில் வந்தால் நாம் கட்டணம் வசூலிப்பதில்லை.இப்போது அவசர சிகிச்சை வேளை எனச் சொன்னேன்.
மன்னிக்கவும் – எனக்கு வேலைநேரத்தில் வரமுடியாது. அதனால் – கிடைத்த ஓய்வுநேரத்தில் வந்தேன் – என்றாள். எங்கே வேலை? – எனக் கேட்டேன்.
North Melbourneஇல் – என்றாள்.
என்ன வேலை?
சற்றுத் தாமதித்துப் பதில் வந்தது. “விபச்சார விடுதியில்வேலை”. நான் குனிந்தபடி நாய்க்குத் தையல் வெட்டிக் கொண்டிருந்தமையால் அவளது முகம் பார்க்க அவகாசம்இல்லை.
அவள் நாயுடன் சென்ற பின்பு – எங்கள் மருத்துவ மனைக்கு அருகில்தான் அந்த பிராத்தல் இருக்கிறது.நாம் உணவிற்குப் போவோமே – ஒரு ஹோட்டல் இந்தப் பெண் வேலைசெய்யும் பிராத்தலைக் கடந்துதான் தினமும்செல்கிறோம். ஒரு மஞ்சள் நிறத்தில் மின்குமிழ் ஒளிசிந்தும் அந்தக் கட்டிடம்தான் என்றாள் எமது மருத்துவமனையில் என்னுடன் பணிபுரியும் நர்ஸ்.
இந்தியாவில் சிவப்பு விளக்கு பகுதி என்பார்கள். அவுஸ்திரேலியாவில் ஹாஸ்பிடல், நர்ஸிங்ஹோமில் சிவப்புவிளக்கு.
ஆனால் – பிராத்தலில் மஞ்சள் விளக்கு. நாட்டுக்கு நாடு விளக்குகள் மாறும் விநோதம் ரஸனையானதுதான
மறுமொழியொன்றை இடுங்கள்