
எழுத்தாளர் மு. பொன்னம்பலம் சந்திப்பு
நடேசன்
இலங்கையில் கவனத்திற்குட்பட்ட எழுத்தாளர் மு. பொன்னம்பலம் அவர்களின் சங்கிலியன் தரை நாவல் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி கொழும்பில் சந்தித்து உரையாடினேன். அவரது கருத்துக்களை ஒலிப்பதிவும் செய்தேன்.
தொடர்ச்சியாக பயணங்களும் இதர பணிகளும் இருந்தமையால், அன்று பதிவுசெய்ததை எழுத்துருவாக்க மறந்துவிட்டேன்.
இந்த கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருக்க நேரிட்டதனால், அந்த ஒலிப்பதிவை மீண்டும் கேட்டுவிட்டு, அதில் அவர் சொன்னவற்றில் முக்கியமாக நான் கருதியவற்றை மாத்திரம் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.
விடுதலைப் புலிகளிடமிருந்த தீவுப்பகுதிகளை இராணுவத்தினர் கையகப்படுத்திய காலப்பகுதியை பற்றிய நினைவுகளை மீட்டியபோது அவர் சொன்னது:

விடுதலைப்புலிகள் இருந்த இடத்தை (புங்குடுதீவு) இராணுவம் கைப்பற்றியது . இராணுவம் அவர்களது பிரசுரங்களை பார்த்தார்கள் . அப்பொழுது நான் சொன்னேன்: “ நாம் சுமார் ஐந்து வருடங்கள் அவர்களின் கீழ் இருந்தோம்.
மொத்தமாக 500 பேர் இருந்தோம். 140 பிள்ளைகள் பாடசாலைக்குப் போகவேண்டும் அதில் எனது குடும்பமும் ஒன்று. எனக்கு இன்சுலின் வேண்டும்.
மூன்று மாதங்கள் வரை சாப்பாட்டை குறைத்துக் கொண்டு இன்சுலின் இல்லாது இருந்தேன். நடமாடமுடியாத நிலை வந்தது. பணியாற்றிய ஆசிரமத்தில், இனி எனக்கு வரமுடியாது எனச் சொன்னேன். ஆமி இன்சுலினோடு வீட்டிற்கு முன்பாக வந்து நிற்கிறார்கள். அதன் பின்பு பிரஜைகள் குழுவுக்குத் தலைவராகப் போட்டார்கள். புலிகளின் ஆளாக நான் இன்னமும் இருப்பதாக ஈபிடீபியினருக்கு என்னில் கோவம். அவர்களை இராணுவம் என்னோடு பேசாது தடுத்துவிட்டது.
ரணில் விக்கிரமசிங்க வந்தபோது நான் மட்டுமே அவரை வரவேற்றேன் . அக்காலத்தில் உணவு வினியோகத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் பற்குணம். என்னோடு படித்தவர். “ நாங்கள் இராணுவமோ புலிகளோ இல்லை ஈபிடீபியினருக்கோ பயமடையத் தேவையில்லை. கடமையை செய்வோம் “ என்றார்.
கவிஞர் வில்வரத்தினம் உறவுமுறையில் எனது மருமகன், இக்காலத்தில் எனக்குச் சொல்லாது யாழ்ப்பாணம் போய்விட்டான். பண்ணைக்கடலால் போனால் வரமுடியாது . அவனது பிள்ளைகளையும் நான்தான் பார்த்தேன். அது பயங்கரமான கால கட்டம். ஒரு வருடத்திற்குப் பின்பாக வில்வரத்தினம் வந்தபோது ஈபிடீபி, அவர் உளவாளியாக வந்ததால் தாங்கள் சுடப்போவதாகச் சொன்னார்கள்.
அப்பொழுது நான் சொன்னேன், “ ஒரு வருடமாக நான் இருக்கிறேன். உங்களுக்கு என்ன நடந்தது? அவனை விடுங்கள். “ என்றேன்.
தொடர்ந்து, பொன்னம்பலத்தின் அண்ணன் தளையசிங்கம் பற்றியும் அவர் தீவுப்பகுதியில் நடத்திய சாத்வீகப்போராட்டங்கள் பற்றியும் கேட்டேன், அதற்கு அவர், குடிநீர் பெறும் போராட்டம் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
“ அந்த மக்களுக்கு ஆலய கிணற்றை திறந்துவிடுவதற்கு தளையசிங்கம் போராடியபோது அவரை பொலிஸ் அடித்து சிறையில் போட்டதால், கா .பொ. இரத்தினம் வந்து பஞ்சாயத்தோடு பேசி தண்ணீர் கிணற்றைத் திறந்து விட்டார். ஏனென்றால், தளையசிங்கம் நினைத்திருந்தால் வெள்ளாளருக்கு அடித்துப் போட்டுச் செய்திருக்கலாம்.
அதன்பிறகு கிறிஸ்தவர்களை ஒதுக்கிப் போட்டு சைவப்பறையரை மட்டும் அள்ளவைத்தது, பாவம்.
தொடர்ந்து எனது கேள்விகளும் அவரது பதில்களும்:
நடேசன்: கிறீஸ்தவர்கள் அங்கே அதிகம் இருந்தார்களா..?
மு பொ: அந்தப் போராட்டத்திற்கு வந்தவர்கள் கிறிஸ்தவர்களே. ஒரு சைவப்பறையர் கூட இல்லை. கோட்டுக்கு முன்னால் சிறைக்கு முன்னால் வந்தவர்கள் கிறிஸ்தவர்களே . அதை நாங்கள் அடக்கு முறையின் கீழ் அவர்கள் வாழ்வதாக விளங்கிக் கொள்ளவேண்டும் . சிறையிலிருந்து தளையசிங்கம் வெளியேவந்த பின்பு, மண்டைதீவில் அவர் ஒரு இலக்கியக்கூட்டத்தில் பேசும்போது, இலங்கை, இந்திய, யாழ்ப்பாண சிறுகதைகள் பற்றிய உரையின் இறுதியில் சொன்னது- போராட்டத்தால் கா. பொ. இரத்தினம் வந்து பாவனைக்கு திறந்துவிடப்பட்ட கிணற்றில்- சைவப்பறையர்களுக்கான அக் கிணற்றில் செல்வநாயகம் போன்றவர்கள் தண்ணீர் அள்ள முடியாது- கிறிஸ்தவர்கள் – இதனை தளையர் அன்று ஒரு முரண் நகையாகச் சொன்னது . நமது சமூகத்தில் நல்ல சிந்தனை கிடையாது .
நடேசன் : சமூக அமைப்பு அப்படி..!
மு. பொ. : அதை பிரேக் பண்ணிவிட்டு வருவது போல் செய்யவேண்டும். தமிழருக்கு உரிமை கொடுக்கவேண்டும் அதை ஓப்பானாகவே சொல்லிச் செய்திருப்போம். சிங்களவர்கள் தமிழ் கற்கவேண்டும். அதேபோல் தமிழரும் கற்கவேண்டும். அப்போதே ( ஒருவரை ஒருவர்) விளங்கிக்கொள்ள முடியும். நாங்கள் தீமை செய்ய வரவில்லை சமஷ்டி ஆட்சி ஒருவருக்கும் தீங்கில்லாதது. சிங்களவர்கள் மத்தியில் அதனை விளங்கப்படுத்த வேண்டும் . அதற்காகவே சர்வோதய முன்னணி அமைத்து கா.பொ. இரத்தினம் மற்றும் தங்கமூளை நவரத்தினத்தின் காலத்தில் தேர்தலில் போட்டியிட்டு கா.பொ. வென்றபோது, நாங்கள் இரண்டாவதாக வந்தோம். எஸ் எல் எஃப்பி.யினர் வந்து தங்களோடு சேரச் சொனனார்கள். அப்போது தளையசிங்கம் , “ நாங்கள் சேருகிறோம். ஆனால், உங்களது மத்திய குழுவில் இடம் தரவேண்டும். ஏனென்றால் சிங்களவர் மத்தியில் எங்கள் பிரச்சினைகளைச் சொல்லவேண்டும் “ என்றார். எங்களைக் கூப்பிட்டவர் செல்லையா குமாரசூரியர் . ஆனால், பின் கூப்பிடவில்லை. அது நடக்கவில்லை பிற்காலத்தில் சந்திரிக்கா வந்தபோது, தமிழருக்குப் பலதும் செய்ய விரும்பினார்.
இறுதியில் எதுவும் நடக்கவில்லை.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்