
நடேசன்
ஒவ்வொருவரினது மனமும் இருண்ட நெடும் குகை. அவற்றின் இடுக்குகளில் பல கதைகள் வவ்வால்களாக ஒட்டிக்கொள்ளும். அதிலும் இளம் பருவத்து நிறைவேறிய மற்றும் நிறைவேறாத காதல், காமக் கதைகள் ஏராளம். பிற்காலத்தில் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் என சமூகத்தில் பொறுப்புகள் வந்தால் அவைகளை வெளியில் எடுக்க முடியாது. எடுத்தால் அவை பல்லிடுக்கில் முதல் நாள் சிக்கிய மாமிசமாகத் துர்மணம் வீசும்.
இளம்பருவத்து நண்பர்களிடம் போதையில் சிலவற்றை பரிமாற முடியும். கேட்பவர்களில் ஒருவன் எழுத்தாள நண்பனாக இருந்தால் ஒரு கதையாக சொல்ல முடிகிறது. நண்பனது கதை இப்படித் தொடங்குகிறது.
‘ என் மகனிடமிருந்து வாட்சப்பில் தகவல் வந்தது. கொரோனா காலத்தில் குடும்ப உரையாடல்களை தொலைப்பேசிகளாலே நடத்துகிறோம். அந்தத் தகவல் :உங்களது பழைய நண்பர்கள் யாரோ போன் நம்பரைத் தந்து தொடர்பு கொள்ளும்படி தகவல் அனுப்பியிருக்கிறார்கள். எனது முகநூலுக்கு இந்த செய்தி வந்தது. அந்தச் செய்தியை படமாக எடுத்து அனுப்பியிருந்தான். “அம்மாவைத் தொடர்பு கொள்ளவும் .பெயர் சகுந்தலா தொலைபேசி——– “ என்றிருந்தது.
யார் சகுந்தலா..? என்பது பல நிமிடங்கள் புரியவில்லை.
காளிதாசனின் சகுந்தலாவைக்கூட நினைத்துக் கொண்டேன். மறதி என்பது துருவாச முனிவர் சாபத்தால் மட்டும்தான் வருமா? வயதானாலும் வருமே. எனக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் அந்தப் பெயரில் இல்லையே. காலையில் வந்த செய்தி மதியம்வரை பெயர் நினைவு வரவில்லை.
மனைவி, மதிய உணவு பரிமாறியபோது மகனிடமிருந்து வந்த செய்தியைப் பற்றி பொதுவாகக் கூறியதும் ‘அது சேட்டுப் பெண் சகுந்தலாவாக இருக்கலாம்’ என்றாள்.
‘அப்படியென்றால் நீயே போன் பண்ணு. “ என்றேன்.
காலச்சக்கரம் வேகமாகப் பின்னோக்கி என் மனதில் பயணித்தது.
அது ஒரு கோடை மாதம். வாகனங்களால் எழுந்த தூசு கலந்த அனல்க்காற்றால் சென்னை குளித்துக் கொண்டிருந்தது. புறநகரான கோடம்பாக்கத்தில் ஒரு பழைய மாடிக்கட்டிடத்தில் சில மாதங்கள் தனிமையாக இங்கிலாந்து போவதற்குத் தங்கியிருந்தேன்.பகலில், திரைப்படங்கள், நூலகங்கள்- இரவில், வாகனங்களின் இரைச்சலுடன் சுழலும் மின்சார விசிறியைப் பார்த்துக் கொண்டு மனைவி குழந்தைகளை நினைத்தபடி நாட்களைக் கரைத்தேன். இந்த ஊரில் எவரையும் தெரியாது. நண்பர்கள் என்று சொல்ல எவரும் இல்லை. திடீரென குடும்பம் இலங்கையில் இருந்து சென்னை வருவதாகத் தகவல் வந்தது. அந்த நாளை பண்டிகையாக எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
எனது மாடி அறை, சேட்டுகள் என அழைக்கப்படும் ஒரு மார்வாடி குடும்பத்திற்குச் சொந்தமானது. அவர்கள் கீழ்ப் பகுதியில் குடும்பமாக இருக்கிறார்கள். அதில் இரண்டு ஆண்கள், தாயுடன் கூட்டுக் குடும்பம். மூத்த ஆண் திருமணம் செய்திருந்த ஒரு அழகான மார்வாடிப்பெண் கைக்குழந்தையுடன் வாசலில் கண்டால் எப்பொழுதும் புன்னகைப்பாள். அந்தக் குடும்பத்தில் மற்றவர்கள் யாவரும் புன்னகையைத் தொலைத்தவர்கள்.
பெண்ணின் கணவர் எனக்கு வீடு தந்தவர் . இந்த பெண், அவருக்கு பம்பர் லாட்டரியென எண்ணத்தோன்றும். திக்குவாயுடன் இடது பக்கம் உதடு இழுத்தபடி பேசுவார்; அந்த உதட்டில் எச்சில் துளிவிடும்.
காலையில் பாரிஸ் கோர்னர் பக்கமுள்ள அவரது கடைக்குப் போய் விடுவார். அவரது தம்பி இளைஞன், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான் என நினைக்கிறேன். மொட்டாக்கு போட்ட வயதான தாய் மாலையில் வாசலில் இருந்துகொண்டு வாகனங்களை எண்ணியபடியிருப்பார்.
சித்திரை மாதத்தில், ஒரு வருடத்திற்கென முன்பணம் கொடுத்து நான் வாடகைக்கு எடுத்திருந்தேன். ஆனால், எனது குடும்பத்தினர் மூன்று மாதங்களில் வருகிறார்கள். குடும்பத்துடன் தங்குவதற்கான வசதியற்ற அறை.
புதிய வீடு மாறும்போது கொடுத்த முன்பணத்தைத் தருவார்களா?
நான் மீனம்பாக்கம் விமான நிலயத்திற்கு குடும்பத்தை வரவேற்கப் போவதற்காக மதியத்தில் தயாராகியபோது மாடிப்படியில் ஒரு காலடி சத்தம் கேட்டது. அவசரமாகப் போட்டுக் கொண்டிருந்த சட்டையை பாண்டுக்குள் தள்ளியபடி வாசலுக்குச் சென்று கதவைத் திறந்தேன். மூடிவைத்திருந்த கதவைத் திறந்ததும் திடீரென வெளிச்சம் வந்தது. அத்துடன் சேட்டுப்பெண் வாசலில் சிரித்தபடி வந்தாள்
வழக்கத்துக்கு மாறாக கண்ணுக்கு மை வைத்து, உதட்டில் சாயத்துடன் தேவதையாக நின்றாள். கையில் குழந்தையில்லை. எனது அனுமதி எதுவும் கேட்காது என்னைத் தள்ளியபடி அவசரமாக உள்ளே வந்து, ‘ எனக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது ‘ எனச்சொல்லியவாறு நெஞ்சை மூடியுள்ள தாவணியில் கைவைத்தபோது ‘ ஐயோ நான் ஏர்போட் புறப்படுகிறேன்’ என்றேன்.
அதைப் பொருட்படுத்தாது நான் ஏதோ நகைச்சுவை சொல்லியதுபோல் சிரித்தபடி அந்த இடத்தை விட்டு அவள் போகவில்லை.
‘ நான் ஏர்போட் போகிறேன். உங்களை வைத்தியரிடம் இறக்கி விட்டுப் போகிறேன்’
‘தேவையில்லை . நான் போகிறேன் ‘ வந்த வழியே வேகமாகக் கீழே படிகளில் சென்றாள். வரும்போது முகம் நூறு வாட்ஸ் குமிழாக எரிந்தது. போகும்போது பத்து வாட்ஸ்சில் எரிந்த மின்குமிழாக இருந்தது.
ஏர்போட் போகும் வழியில் அந்த பெண்ணைப் பற்றியே சிந்தித்தபடி சென்றேன். அவள் என்னைச் சுத்த முட்டாளாக நினைத்திருப்பாள். இதற்குமேல் ஒரு பெண் வெளிப்படையாக நடந்து கொள்ளமுடியுமா? அவளது முகத்திலிருந்த பாவனை , கண்களில் இருந்த வெளிச்சம் எப்படி அணைந்திருந்தது?
குடும்பத்தினருக்காக ஏர்போட் போவதற்குத் தயாராக இல்லாத நேரமாக இருந்தால் எப்படி நடந்திருப்பேன் என என்னைக் கேட்டுக் கொண்டேன்.
எனது குடும்பம் சென்னை வந்த பின்பு நான் வேறு வீடொன்றுக்குப் போய்விட்டேன். கொடுத்த முன்பணத்திற்காக, இலங்கையில் இருந்து வந்த மருத்துவ மாணவனிடம் அந்த இடத்தைக் கொடுத்தேன்.
என் மனைவி வந்த பின்பு எங்களைத்தேடி அந்த சேட்டுப்பெண் சகுந்தலா வந்து என் மனைவியுடன் ஓட்டிக்கொண்டாள். அவளது வீடு அதிக தூரத்தில் இல்லை. பத்து நிமிட நடையில் பாலத்தைக் கடந்தால் எங்கள் வீடு. நாங்கள் சென்னையில் இருந்த ஒரு வருடத்தில் இந்தியர்களாக எங்களுடன் பழகியது அவள் மட்டுமே.
அன்று அவளது உடலைத் தொடாது புறக்கணித்தேன். ஆனால் அவள் மனதிலிருந்து அகற்ற முடியாத நிழலாகத் தொற்றிக் கொண்டாள். பகலில் வீடு வந்து மனைவிடம் விடைபெற்றாலும், இரவினில் வீட்டுக்குள் தங்கிவிடுகிறாள். அந்த இரண்டறை கொண்ட சிறிய வீட்டின் மூலைகளில் தங்கியிருந்து புறக்கணிப்புக்குப் பழி வாங்குகிறாள். இரவில் கட்டிலில்லாத எங்கள் வீட்டில் வந்து புல்லுப்பாயில் மனைவியருகே படுத்துக் கொள்கிறாள். இரவில் மனைவியிடம் நான் ஒட்டிக்கொள்ளும்போது, இடையில் புகுந்து அச்சத்தை உருவாக்குகிறாள். பெயரைக்கூறி அவளைத் தள்ளுவதற்கு அச்சமாக இருக்கிறது. ஓசையைத் தவிர்க்க கைகளால் பொத்தி எனது வாயை அடைக்கிறேன். மனைவியைத் தழுவி முத்தம் கொடுத்தபோது அவளது உதடுகள் அங்கிருக்கிறது. என்னையறியாது இருவருக்கு முத்தம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறேன். அவளது நிர்வாணமான உடல் இருவர் மத்தியிலும் வந்துவிடுகிறது. பல மாதங்கள் பிரிந்திருந்து என்னிடம் வந்திருந்த மனைவியிடம் ஆத்மார்த்தமாக உறவாடமுடியாத அன்னிய நிலைக்குத் தள்ளப்படுகிறேன். இதனால் பல தடவை மனைவியைத் தவிர்க்கிறேன். அணைக்க முடியாத தீயாக உடல் எரிகிறது.
கல்லுரியில் என்னுடன் படித்த நண்பன் பிரதாபன் கனடா செல்ல வந்தான். அவனிடம் அந்தரங்கமாக பகிரும்போது ‘ அன்றைக்கு ஏர்போட்டுக்கு அரை மணிநேரம் பிந்திப் போயிருந்தால் இன்று ஒழுங்காயிருப்பாய் ‘என்று சிரித்தான்.
‘ திருமணத்திற்கு உண்மையாக இருக்க நினைக்கிறேன். இப்போதும் அவ்வாறே இருக்க நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது மனைவியை நெருங்கினால் இந்தப் பெண் நினைவு வருகிறது . ‘
“உனக்கு ஒரு மருந்திருக்கிறது ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டாய்?”
‘என்ன?’
‘வேறு பெண்ணிடம் போ’
“தம்பி, நீ குழிக்குள் விழுந்த என்னைக் கிணற்றுக்குள் தள்ளப் பார்க்கிறாய்.’ சொல்லிவிட்டு விலகினேன்.
சில நாட்களின் பின் அவனுக்குக் கனடா செல்வதற்காக ஒழுங்காகியது.
‘மச்சான் இன்று விருந்து வைக்கிறேன் வா’ என்றான்.
அது ஒரு பகல் நேரம். மதியத்தில் நடக்கும் விருந்தென்பதால் பலர் ஹோட்டலில் இருந்து விரைவாக கலைந்துவிட்டனர். மிஞ்சியது நானும் பிரதாபனும் மட்டுமே.
‘நான் நாளை இரவு கனடா. இன்று ஒரு இடத்திற்குப் போகிறேன் வா’ என்றான்.
கோடம்பாக்கத்தின் சந்துகளுக்கூடாக நடந்து ஒரு வீட்டின் மாடிக்குச் சென்றோம்.
வேட்டியோடு இருந்தவர் வரவேற்று ‘ கேரளாவிலிருந்து இரண்டு வந்திருக்கு சார் ” என்றார்
அவர் பிரதாபனிடம் சினேகிதமாகப் பேசியதால், அவன் பல முறை வந்த இடம் எனத் தெரிந்தது.
பிரதாபன் ‘சார் புதிசு’ தள்ளியபோது ஒரு பெண் வந்து என் கையைப் பிடித்து சென்றாள்.
அவள் ‘நம்ம ஊரா’ என்றாள்.
இல்லை ‘சிலோன்’
‘நாம் ஏர்ணாகுளம்’ என்றபடி ஒரு பாய் போட்ட மரக்கட்டிலில் இருத்திவிட்டு ஆடையைக் களைந்தாள்.
அவளது நிர்வாணமான உடலின் இடது வயிற்றுப் பக்கத்தில் நீளமான தளும்பு தெரிந்தது.
‘இது என்ன சகுந்தலா?’
‘எப்படி என் பெயர் தெரியும்? அந்தாள் சொன்னானா?. ‘
‘இல்லை இல்லை ஏதோ நினைத்தபடி’ சமாளித்தேன்.
‘அப்படியா..? அது நான் ஏற்கனவே குடும்பத் தடை செய்துவிட்டேன். அதன் அடையாளமம் ‘என விரலால் தடவினாள்.
‘குழந்தைகள்?’
‘கல்யாணமே முடிக்கவில்லை . ஐந்து பெண்கள் குடும்பம் ‘ என்றாள்.
ஏற்கனவே மனதில் குழப்பமிருந்தது. காம உணர்வு, இப்பொழுது நேற்று திறந்த சோடாவாகியது.
எனது பர்சைத் திறந்து அதிலுள்ள முழுப்பணத்தையும் எடுத்து
அவளிடம் கொடுத்து விடைபெற, மீண்டும் கையை பிடித்து
‘கொஞ்சம் இருந்துவிட்டு போ சார். இதுதான் எனது முதல்நாள். நான் சரியில்லை என நினைத்து விடுவார்கள்.’ என்றாள்.
நாங்கள் விரைவாக இங்கிலாந்து பயணத்திற்குத் தயாராகியபோது கர்ப்பிணியாக சகுந்தலா வந்து அழுதபடி வழியனுப்பினாள்.
————–
புலம்பெயர்ந்த நான் லண்டனில் பெட்ரோல் செட்டுகள், கடைகள், டாக்சியென ஓடித் திரிந்ததால் சகுந்தலாவுடன் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், நினைவில் எப்பொழுதும் அவளது முகமும் பேச்சும் முகமன் விசாரிக்கும்.
பிற்காலத்தில் ஒரு போஸ்டாபிஸ் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஒருநாளில் நீல நிற இந்திய ஏரோகிறாம் எனது பெயருக்கு சகுந்தலாவிடமிருந்து வந்தது. அதை வாசித்தபோது என்னை நலம் விசாரித்துவிட்டு, அரவிந்தனது தொடர்பு இருக்கிறதா? அவன் டென்மாரக் சென்றான். விலாசம் தரமுடியுமா? என எழுதியிருந்தது.
எனக்கு, இதுவரை தெரியாத காளிதாசனின் புதிய சாகுந்தலம் விரிந்தது. நான் விலகிய எனது மேல்மாடி இடத்தை அரவிந்தனிடம் கொடுத்திருந்தேன். அரவிந்தன் மேல்மாடியை மட்டுமல்ல சகுந்தலாவிடமும் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறான். இந்தக்கடிதத்தை மனைவியிடம் காட்டியபோது
சகுந்தலாவைப்பற்றிப் பேசாது ‘அரவிந்தன் இப்படியா?’ அவனைத் திட்டினாள்.
‘திருமணமாக இளைஞனாகத் தனிமையில் இருந்தவன். நிச்சயமாக சகுந்தலாதான் அவனிடம் போயிருக்கும்’ அரவிந்தனுக்காக வாதாடினேன். எனக்கு அரவிந்தனைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது என்ற உண்மையையும் சகுந்தலாவுக்கு எழுதினேன்.
பதினைந்து வருடங்களின் பின்பு நாங்கள் இந்தியா சென்றபோது, சென்னையில் சகுந்தலாவைத் தேடிச் சென்றோம் . சகுந்தலா நரைத்த தலைமயிருடன் முகத்தில் சோகம் ஓட்டிய கன்னங்களுடன் வயதுக்கு மீறிய முதிர்வுடன் ஒரு பிள்ளையை தனது தனது மகள் என அறிமுகப்படுத்தினாள். எங்களுடன் ஒளிவு மறைவற்று அரவிந்தனுடனான தனது தொடர்பைக் கூறியபோது சகுந்தலாவின் காதலற்ற வாழ்வு புரிந்தது. உறவென்பதற்காகத் ஆரோக்கியமற்ற ஒருவனை திருமணமென்ற கயிற்றால் இணைக்கப்பட்டிருந்தாள். அரவிந்தன் வருகை அவள் வாழ்வில் பாலைவனச் சோலையாகியிருந்தது. சகுந்தலா அவனை உடலளவில் பிரிந்திருந்தாள். மனத்தளவில் காலம் முழுவதும் காவிய சகுந்தலாபோல் வாழ்ந்திருக்கிறாள் என்பது புரிந்தது.
நாங்கள் கொடுத்த பரிசுப்பொருட்களை வாங்கிவிட்டு பணத்தைக் கொடுத்தபோது . ‘பணத்திற்கு எனக்குப் பிரச்சினையில்லை. அரவிந்தனை அறிந்தால் என்னிடம் சொல்லுங்கள். ‘ அவன் திருட்டுப்பயல்’ சென்னைத் தமிழில் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
அவள் கடந்த பாலையில், சோலையாக மாதங்களோ வருடமோ இருந்த ஒரே மனிதன் அரவிந்தன் மட்டுமே . அவனது தொடர்பை விரும்பினாள். பிரிந்தாலும் அவனை வெறுக்கவில்லை . அவனது நினைவுகளைச் சுவாசித்தபடி வாழ்கிறாள் என்பது எங்களுக்குப் புரிந்தது.
சரியாக அடுத்த பதினைந்து வருடங்கள்பின் மகனுக்கு வந்த செய்தியில், இருந்த தொலைபேசி இலக்கத்தில் என் மனைவி தொடர்பு கொண்டு அறிந்தது:- கணவன் இறந்துவிட்டான் . சொத்துக்களைக் கணவனின் தம்பி எடுத்துக்கொண்டதால் வீட்டிலிருந்து விலகி தனிவீட்டில் இருக்கிறார்கள். மகன் வளர்ந்து வேலை செய்கிறான். மகள் காதலித்து திருமணம் செய்தபோது தலை சின்னதாகக் குழந்தை பிறந்துள்ளது. இதுவரையும் வேலை செய்த மகனுக்கு கொரோனாவால் வேலை போய்விட்டது. பணஉதவி கேட்டிருந்தாள்.
‘ இப்பொழுது உங்களுக்கு அரவிந்தனது தொடர்பு இருக்கிறதுதானே? அந்தப் பெண் அவனது மகளாகவும் இருக்கலாம். நீங்கள் அவனுக்குத் தகவல் அனுப்புங்கள்’ எனது மனைவியின் வாதம் .
‘அரவிந்தனது குடும்பத்தில் வீணாகப் பிரச்சினையை ஏன் உருவாக்குவான்? நாம் ஏதாவது உதவுவோம்’ என்றேன்
‘உண்மைதான். சகுந்தலா ,தேவையில்லாது பணம் கேட்கும் ஆளில்லை. போனமுறை நாங்கள் கொடுத்தபோது கூட வாங்கவில்லை.’
சென்னையில் உள்ள எனது நண்பனிடம் சொல்லி சகுந்தலாவின் கணக்கில் பணம் போட்டேன்.
அரவிந்தனது இடத்தில் இலகுவாக நான் இருந்திருக்க முடியும் என்ற எண்ணம் இராட்சத ஹீலியம் பலூனாக மனதில் எழுந்தது.
நன்றி நடு இணையம்
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்