குஜராத்- காந்தியின் நிலம்

Akshardham Temple Gandhi Nagar



இந்தியாவில் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான், கோவா, மற்றும் கேரளம் என்பன.

இதைவிடப் மற்றய மாநிலங்ளுக்கு செல்வதற்கான வசதிகள் செய்வதற்கு வழிவகைகள் வெளிநாட்டில் உள்ள பிரயாண முகவர்களிடம் இருப்பதில்லை.

பெரும்பாலும் நியூ டெல்கி – தாஜ்மகால்- ஜெய்ப்பூர் படங்கள் பதிவான முக்கோணத்தை இந்திய பயணத்திற்கான முக்கிய இடங்கள் என விளம்பரப்படுத்துவார்கள்.

இதற்கு யார் காரணம்?

பெரிய வசதிகள் உள்ள தமிழ்நாடு மாநிலத்திற்கான பயணத்தைப்பற்றிய தகவல்களை வெளிநாடுகளிலிருக்கும் முகவர்களிடம் தேடினால் கிடைக்காது. மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பவர்கள் பெரும்பாலும் சொந்த முயற்சியுடன் குறைந்த நிதிவளத்தோடு செல்பவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் பாக்பக்கர்ஸ்(Backpackers) எனப்படும் இளம் வயதினர்தான்.

இந்த நிலைக்கு இந்திய அரசின் உல்லாசப்பயணத்துறைதான் காரணம் என நினைக்கிறேன். உல்லாசப் பயணத்துறை வெளிநாட்டு முகவர்களை ஊக்குவிப்பதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தேவையான கட்டமைப்புகள் மற்றும் ஹோட்டல்கள் இல்லாதிருக்கலாம்.

இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் தலயாத்திரிகர்கள் மற்றும் பாக் பக்கேர்ஸ் (Backpackers) போவார்கள். அவர்கள் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் போன்ற எதிர்பார்ப்புள்ளவர்களல்ல. சிறிய ஹோட்டல்களிலும் தங்குவார்கள். ஆனால், உல்லாசப் பிரயாணிகள் அப்படியல்ல. சுத்தம் , குளிர்சாதன வசதி, நட்சத்திரக் ஹோட்டல்களின் உச்சமான சேவை மற்றும் வாகன வசதிகள் என நிறையவே எதிர்பார்ப்பார்கள் . ஆனால் , அஸ்திரேலியாவில் இருக்கும் பிரயாண முகவர்களின் பயண அட்டவணைகளில் எனக்கு வியப்பளித்த விடயம் என்னவென்றால், குஜராத் மாநிலம் செல்வதற்கு வழிகாண்பிக்கத்தக்கதாக எதுவும் இருக்கவில்லை என்பதே!

நான் இம்முறை குஜராத் போக விரும்பினேன். பத்து நாட்கள் அந்த மாநிலம் முழுவதும் செல்ல முடியாது போனாலும் முக்கியமான இடங்களுக்குப் போகவேண்டும் என விரும்பியபோது எனது நண்பனுக்குத் தெரிந்த இந்திய முகவரையே அணுகினேன். அங்கிருக்கும் வீதி விபத்துகளால் பயந்து அங்கே எனது பயணத்துக்கு ஏற்ற ஜீப் போன்ற வாகனம் தேவை என்றும் தங்குவதற்கு நல்ல ஹோட்டலும் அவசியம் என்றேன்.

பலரும் என்னிடம் கேட்டது : குஜராத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ? நான் பதில் சொல்ல விரும்பவில்லை. காரணம் பதில் விரிவானது. பலருக்கும் கேட்க பொறுமையிராது.

சிந்து நதி நாகரிகத்தின் தொடக்கப்புள்ளியான சிந்து சமவெளியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தற்போதைய குஜராத்தில் சில அக்கால ஹரப்பா குடியேற்றங்களைக்காணலாம்.
இந்தியர்களுக்கு, அரேபியர்கள் மற்றும் ஐரோப்பியர்களோடு கடல் வாணிபம் இங்கிருந்தே தொடங்கியது. குஜராத், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் எந்திரமாக இருந்தது. தற்போதைய 130 இற்கும் மேற்பட்ட இந்திய பிலியனர்களில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உள்ள ஒரே மாநிலம். அமெரிக்காவை, நியூயோக்கர்களும் கலிபோனியர்களும் மாறிமாறி ஆள்வதுபோல குஜராத்தியர்கள் பணத்தால் முன்பும், தற்போது அதிகாரத்தாலும் ஆள்கிறார்கள். இது தற்செயலான சம்பவமல்ல.

தற்பொழுது பல மொழி, மதம், மற்றும் மனிதத்தோற்றம் எனப் பிரிந்திருக்கும் உபகண்டத்தை இணைக்கும் சங்கிலியாகவுள்ள இந்திய முதலாளித்துவத்தின் ஆணிவேராக இன்னமும் அவர்களே இருக்கிறார்கள். இவற்றை விட இஸ்லாமிய – இந்து முரண்பாடுகள் அக்காலத்திலும் , இக்காலத்திலும் அடிக்கடி தீட்டப்பட்டு கூராக்கப்படுவதும் குஜராத்திலேதான் . கஜினி முகம்மதுவின் கால் நூற்றாண்டு கால , பதினெட்டு தடவைகள் நடந்த படையெடுப்பிலிருந்து 2002 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்கள்மேல் நடந்த தாக்குதலும் அங்கேயே நடந்தது.

இதைவிடப் பல விடயங்கள் விபரிக்கவிருந்தாலும் தற்போதைக்கு இதுவே போதும் என நினைக்கிறேன்.

குஜராத்தின் பெரிய நகரமான அகமதாபாத்துக்கு நான் செல்லும்போது, அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் இரண்டு நாட்களில் பின் என்னைத் தொடர்ந்து அங்கு வர இருந்தார். அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. அமெரிக்க ஏயர்ஃபோஸ் 1 விமானமொன்றை அகமதாபாத் விமான நிலையத்தில் கண்டேன். நமக்கான பாதுகாப்பாக்கும் என்று எனது மனைவியிடம் சொல்லவும் தவறவில்லை. நகரமும் சுத்தமாக இருந்தது. விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்லும் வழிகளில், ஏதாவது குடிசைகள் மற்றும் கட்டிட வேலைகள் நடந்தாலும் அவைகள் மறைக்கப்பட்டிருந்தன. ஒருவிதத்தில் விருந்தினர் வருகைக்கு முன்னர் மெழுகித்துடைத்து சுத்தமாக்கப்பட்டு கோலம் போட்ட வீடாகத் தெரிந்தது.

ஜனாதிபதி ட்ரம்ப்பைத் தவிர, கொரோனாவும், புது டெல்கியிலும் கேரளாவிலும் தரையில் கோழிக்குஞ்சுகளை நோட்டமிட்ட பருந்தாக வானில் பறந்துகொண்டிருந்த காலம்.

இரவில் அங்கு போய்ச் சேர்ந்தவுடன் இரண்டு விடயங்களைத் துறந்தேன். புலாலும் மதுவும் விலக்கப்பட்டது. காந்தி பிறந்த மாநிலத்திற்கு வருகிறேன். குறைந்த பட்சம் என்னால் செய்யக்கூடிய விடயமாக இருந்தது.

குஜராத்தில் எமக்குக் கிடைத்த வழிகாட்டி மிகவும் வித்தியாசமானவர். எழுபத்தைந்து வயதில் உள்ள இளைப்பாறிய மின்சாரப் பொறியியலாளர். வழக்கமான பெரிய பொறுப்பிலிருந்து ஒய்வானவர்கள்போல், வயிற்றில் கொழுப்போ, வாயில் தனது அந்தக்கால சாதனைகளோ பேசாததுடன், உற்சாகமாக வாழும் மனிதராக இருந்தார்.
அவரிடம் எனது கேள்விகளுக்குத் தெரிந்தவற்றிற்கு உடனும், தெரியாதவற்றிற்கு பின்பு பதிலும் தெரிந்திருந்தது. அவரது பிள்ளைகள் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் இருப்பதாகத் தெரிந்தது. வசதியான மனிதர். பத்து நாட்கள் எங்களுடன் வாகனத்தில் பிரயாணம் செய்தார். அவரது சுறுசுறுப்பும் ஆங்கிலப் புலமையும் அந்த வயதிலும் இப்படியான வேலை செய்யும் மனோபாவமும் என்னை வியக்க வைத்தது. அவரிடமிருந்து பல விடயங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.

சுவாமிநாராயணன் என்ற சாதுவின் பெயரால் நிர்மாணிக்கப்பட்ட அழகிய கோயில் (Akshardham Temple) எங்களது பயணத்தில் முக்கிய இடமாக இருந்து. அங்கு செல்வதற்கு முன்பு இந்த மதக்குழுபற்றி நான் அறிந்திருக்கவில்லை. இது கண்ணன் ராதாவுக்கான கோயிலானாலும், அங்கே சுவாமி நாராயணனது சிலையுமுள்ளது.
வட இந்தியாவில் பிர்லா மந்தீர் போல், அதனை நிர்மாணித்தவரது பெயரில் அகமதாபாத்தில் அக் கோயில் அமைக்கப்பட்டிருந்தது.
நிர்மாணித்தவரது பெயரில் கோவில் இருப்பது ஒரு விதத்தில் நல்லது. முருகன் ,சிவன், அம்பாள் என்று வரும்போது சுத்தத்தைக் கடவுளின் பொறுப்பில் அரசாங்க காரியம்போல் விட்டுவிடுகிறார்கள். தனியார் கோவில் என்றால் , தனியார் வங்கி மாதிரி பொறுப்போடு நடப்பார்கள் என நினைத்தேன். இதனாலோ என்னவோ, சுவாமிநாராயணன் மற்றைய கோவில்கள் மாதிரியல்லாது உள்ளும் புறமும் சுத்தமாக இருந்தது. அதைப்பற்றி எமது வழிகாட்டியிடம் விசாரித்தபோது சில விடயங்கள் புரிந்தது.

சுவாமிநாராயணன் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த வளர்ந்து பின்பு சாதுவாக வந்து குஜராத்தில் பிரித்தானியர்களிடம் நிலத்தைப் பெற்று அகமதாபாத்தில் மட்டுமல்ல பல இடங்களில் கோயில்களை நிர்மாணித்தார் . இவரது கொள்கைகள் மது மாமிசத்தைப் புறக்கணித்து மிருக பலிகளுக்கு எதிராக இருந்தன . அத்துடன் அவர் இந்து மதத்தின் பெண் நிராகரிப்பு சாதிப் பாகுபாடு என்பதற்கு எதிராகச் செயல்பட்டார் என ஒரு சாரரும் மற்றவர்கள் சாதியில் ஒதுக்கப்பட்டவர்களுக்குத் தனியான கோயில் கட்டியதாகவும் சொல்கிறார்கள் . சுவாமி சங்கராச்சாரியாரது கொள்கைகளை நிராகரித்து இராமானுஜரோடு ஒத்துப்போனவர் என்கிறார்கள். இவையெல்லாம் நமது அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பதால் மற்ற விடயங்களைப் பார்ப்போம்

இவரது கோவில்கள் உலகமெல்லாம் உள்ளன. குஜராத்தில் நிலவுடைமை சாதியான பாட்டில்கள் பலர் இந்தக் குழுவைச் சேர்ந்த பக்தர்கள் என்பதால் உலகம் முழுவதும் குஜராத் மக்கள் வாழும் இடங்களில் இவரது கோயில் உள்ளது. ஒரு விதத்தில் சத்தியசாயி பாபா போன்று மதப்பிரிவாக இருந்தாலும் தனக்காக வழிமுறைகளைப் புத்தர்போல் வகுத்துள்ளார்.

அகமதாபாத்தில் நாங்கள் இருந்த இரு இரண்டு நாட்களில் ஒரு நாள் காலை முழுவதும் காந்தி நகரில் உள்ள அந்த கோவிலில் (Akshardham Temple) நேரத்தைச் செலவழித்தோம். கோயிலுக்குச் சொந்தமாக உள்ள உணவுவிடுதி மிகவும் சுத்தமானது. 100 இந்திய ரூபாய்க்குச் சுத்தமான, போதுமான அளவு உணவு வேறெங்கும் கிடைக்காது என எமது வழிகாட்டி கூறினார். அதை விட மருத்துவ கிளினிக்குடன் தங்குமிட வசதிகள் உள்ள விடுதியும் அங்கே உள்ளது.

நாங்கள் போனபோது வாசலில் இராணுவமும் , பொலிஸும் துப்பாக்கியுடன் போருக்குத் தயாராக நின்றதைப் பார்த்தபோது காஷ்மீருக்கு வந்துவிட்டேனா என அதிர்ச்சியடைந்தேன். தென்னிந்தியக் கோவில்களில் இப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதில்லை. இங்கு ஏன்…? எனக் கேட்டபோது எமது வழிகாட்டி , “ இந்த கோயில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது எனவும் அக்காலத்தில் இங்குள்ள மின்சார நிலையத்தில் தான் பொறியியலாளராக இருந்ததாகவும் கூறி அச்சம்பவத்தை விவரித்தார்.

பயங்கரவாதிகளால் துப்பாக்கிப் பிரயோகமும் கைகுண்டு தாக்குதல்களும் நடந்த பின்பு, இந்த பாதுகாப்பு நடைமுறைக்கு வந்ததாக அறிந்தேன். 2002 இல் குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கெதிரான கலவரத்தின் பழிவாங்கலாக, அந்தச் சம்பவங்கள் நடந்த ஆறுமாதங்கள் பின்பு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த இரண்டு பயங்கரவாதிகள் உட்பட 33 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.
கோவிலுக்குள் கெமரா கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால், உள்ளே ஒரு கெமராவுடன் போட்டோ எடுப்பதற்கு ஒருவர் உள்ளார். கோவிலின் உட்பகுதியில் சுவாமிநாராயணனின் வாழ்க்கை வரலாறு ஓவியமாக எழுதப்பட்டிருந்தது. கோவில் மதநோக்கத்திற்கான வழிபாட்டுத்தலம் என்பதற்கு மாறாக கலாசார சின்னமாகவும் பராமரிக்கப்படுகிறது.

குஜராத்தின் பெரிய நகரம் அகமதாபாத் என்ற போதிலும் காந்திநகரே தலைநகரம். அதிக தூரமில்லை. காந்திநகரில் ஒரு படிக்கிணறைப் (Adalaj stepwell) பார்த்தோம். அது ஐந்து மாடிகளைப்போன்று நிலத்தின் கீழே உள்ளது. தொடர்ச்சியான படிகளையும் அந்தப் படிகளின் இருபக்கச் சுவர்களிலும் தூண்களிலும் சிற்ப வேலைப்பாடுகளையும் காணமுடிந்தது.

படிகளில் கீழே நடந்து செல்கையில் குளிர்ந்தபடியிருந்தது. ஐந்து அல்லது ஆறு டிகிரி குளிராக உள்ளதால் வெப்பமான காலத்தில் தண்ணீர் அள்ளுவதற்குப் பெண்கள் சென்றால் அந்த இடத்தில் அதிகநேரம் செலவழிப்பார்கள். வரண்ட பகுதியான குஜராத்தில் இப்படிப் பல படிக்கிணறுகளை நாங்கள் கண்டபோதிலும், இதுவே பெரிதாக இருந்தது. அத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருந்தது. ஒவ்வொரு தளத்திலும் நடனம் பாட்டு என கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மற்றும் தண்ணீர் அள்ளும் பெண்கள் வேலைகள் செய்வதற்கு வசதிகளுண்டு. இந்து கட்டிடக் கலையோடு பிற்காலத்தில் இஸ்லாமிய கட்டிக்கலையும் கலக்கப்பட்டுள்ளது

இந்த படிக்கிணறு பற்றிய ஒரு கதையில், 15 ஆம் நூற்றாண்டில் இந்து அரச குடும்பம் இந்தக் கிணறை மக்களுக்குக் கட்டும்போது பக்கத்து முஸ்லீம் ராஜாவால் இந்த அரசு தோற்கடிக்கப்பட்டது பற்றி சொல்லப்படுகிறது. அப்பொழுது அரசி ரூபாபாய் அரசனது சிதையில் தானும் தீ மூட்டிக்கொள்ள விரும்பினாள். ரூபாபாயைத் திருமணம் செய்ய முஸ்லீம் அரசன் விரும்பினான். மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்பதால் இந்த கிணற்றைக் கட்டி முடிக்கும் வரை பொறுத்திருக்கும்படி கேட்டிருந்தாள். கட்டி முடிந்ததும் அந்தக் கிணற்றினுள் பாய்ந்து ரூபாபாய் தற்கொலை செய்துகொண்டாள்.

குஜராத்தில் பிரித்தானியர்கள் காலத்தில் 200 வரை இஸ்லாமிய, இந்து சிற்றரசுகள் இருந்தன. பிரித்தானியர்கள் அவர்களை தங்களுக்குத் திறை செலுத்தும் அரசாக வைத்திருந்தார்கள். இப்படியான சிற்றரசுகளில் இருந்து எதிர்கால இந்தியத் தலைவர்கள் உருவாகவும் காரணமாக இருந்தது. காந்தி வல்லபாய் பட்டேல் மற்றும் முகம்மதலி ஜின்னா போன்றவர்கள் இந்த குஜராத் பகுதியிலிருந்து வந்தவர்களே

இந்த படிக்கிணற்றில் நாங்கள் இறங்கியபோது தமிழில் பேசுவது கேட்டு நின்றோம். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பறவைகள் பற்றிய கருத்தரங்குக்கு வந்ததாகச் சொல்லிய பின்பு, அதில் ஒருவராக வந்திருந்த கோயம்புத்தூரில் அருளகம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாரதிதாசன் சுப்பையா என்பவர் என்னிடம் , அருகிவரும் பாறு கழுகுகள் பற்றிய புத்தகத்தைத் தந்தார்.

அன்றிரவே அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு அதிர்ச்சியடைந்தேன். மாடுகளுக்குப் பாவிக்கும் மருந்து , இறந்த மாடுகளது இறைச்சியிலிருந்து கழுகுகளுக்குச் சென்று, அவைகளுக்கு நஞ்சாவதை அறிய முடிந்தது. கடந்த 33 வருடங்களாக எனது தொழிலில் நாய், பூனை மட்டுமே இருப்பதால் இந்த விடயம் புதிதாகத் தெரிந்தது. அதன் பின்பே இணையத்தில் தேடியபோது இது எவ்வளவு பாரிய சூழலியல் பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்டேன்.

அறிவை அக்காலத்தில் ஆற்றங்கரைகளில் வைத்துக் கற்பிப்பதுபோல காந்திநகர் படிக்கிணற்றிலும் அறிவைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதை உணர்ந்தேன் .

தென்னிந்திய மாநிலங்களில் போலின்றி, வட இந்திய மாநிலங்களில் மக்களது தோலில் ஆங்கிலம் ஒட்டவில்லை. ஆங்கிலேயர் முழு இந்தியாவையும் அரசாண்டபோதிலும் வடநாட்டில் ஆங்கிலம் கலக்கவில்லை.

சென்னை ஓட்டோக்காரர்களின் ஆங்கிலம், குஜராத்தில் கல்லூரிகளில் படித்தவர்களை விடக் கூடியது . அதைக் கடைவீதிகளுக்குச் சென்றபோது அனுபவித்தோம்
அகமதாபாத்தில் பருத்தித் துணிகள் மலிவு என்ற இரகசியம் எனது மனைவி சியாமளாவிற்குத் தெரிந்ததால், இரவு ஓட்டோ எடுத்துக் கொண்டு கடை வீதிக்குப் போனோம். மொழிப் பிரச்சினை ஓட்டோக்காரனிலிருந்து ஒவ்வொரு கடையின் வாசலில் உள்ள காவல்காரன் வரையும் கல்லக்குடி போராட்டமாகத் தொடர்ந்தது.
துணிக்கடையில் உடல் மொழியால் பேசி பொருட்களை வாங்கியபின் வெளியேவரும்போது எமது பொதியை வாங்கி பார்த்தான் அந்த காவலாளி. அவனோடு சண்டைக்குப் போகவேண்டியிருந்து. முக்கியமாகப் பெண்களது துணிக் கடையில் பொருட்களை வாங்க வருபவர்களை அங்கு மதிப்பதாகத் தெரியவில்லை. மொழி தெரியாததால் பிரச்சினை இரண்டு மடங்காகியது.

வட மாநிலத்தில் உள்ளவர்கள் இந்தியை ஆட்சி மொழியாக்க விரும்புவது அங்குள்ளவர்களிடம் ஆங்கிலம் பேச வராத காரணமென்றே நான் நினைக்கிறேன். நான் இந்தியாவிலிருந்த காலத்தில் இந்தி படித்திருக்கலாமே என எண்ணியபடி கடையை விட்டு வெளிவந்தேன்.



Step-Well , Adalaj -Entrance
Step-Well, Adalaj -From Down to up


—0–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: