

கடந்த நான்கு வருடங்களாக விவியனின் இருநாய்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன். ராணியை நான்கு வயது குட்டியாக இருந்தபோது தடுப்பூசி போட்ட காலத்தில் இருந்து எனக்கு தெரியும். எனது பரிசோதனைமேசையில் ஏறியவுடன் மிகவும் சாவகசமாக இருந்து என் கைகளையும் ஏன் முகத்தையும் கூட நக்க முயற்சிக்கும்.பொப்பி வயதான தீபெத்தியன் ரெரியர் எனப்படும் நாய். எனது விரலைக் கடித்து ருசி பார்க்க விரும்பும். நகம்வெட்டுவது போன்ற சிறிய வேலைகளுக்குக்கூட மயக்க மருந்து கொடுக்க வேண்டும். இது பல வருடங்களாகத் தோல் வியாதியில் துன்பப்படுகிறது. வெயில்காலத்தில் மிகவும் மோசமாகிவிடும்.தன்னையே கடித்து குதறி உடலில் உள்ள மயிர்களைப் புடுங்கி எடுப்பது வழக்கமாகும்.
ஏதோ அலர்ஜி என்றுதெரியும். ஆனால் எதற்கு என சரியாகத் தெரியாததால் தெள்ளுக்கு மருந்து, சாப்பாட்டை மாற்றுதல், போன்றபலவற்றால் தோல்வருத்தத்தை குறைக்க முடிந்தது. ஆனால் முற்றாக சுகமாக்க முடியவில்லை.
ஆறுமாத இடைவெளிக்குப் பின் தனது பொப்பி, ராணியுடன் தடுப்பூசி போடுவதற்காக விவியன் வந்தாள்.வழமையான கருநிறமான கூந்தல் மிகவும் அழகாக வெட்டப்பட்டு பொன்னிறத்தில் இருந்தது. உதட்டு சாயத்தில் என் முகம் பார்க்கலாம் போன்று மின்னியது.
இவ்வளவு நாளும் விவியனைக் கூட கூர்ந்து கவனித்தது கிடையாது. கார்களில் பின்பகுதியில் ஒரு கரும்புள்ளி உண்டு. அதில் வரும் கார்கள் தெரியாது. இதே போன்று ஆண்களும் பெண்களும் ஒரு காலத்தின்பின் அந்த கருமை பகுதிக்குப் போவதைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு காலமும் தெரியாத ஒளி விவியனின் முகத்தில் தெரிந்தது. விவியனுக்கு நான்கு வளர்ந்தபெண்பிள்ளைகள். எனக்கு நன்கு தெரியும். அவர்களும் பலமுறை தங்கள் நாயுடன் வந்திருக்கிறார்கள்.
“எப்படி விவியன்?”
நலம். பொப்பிக்கும், ராணிக்கும் வருடாந்த தடுப்பூசி போடவேண்டும்.
இரண்டு நாய்களையும் பரிசோதித்துத் தடுப்பூசி போட்டேன். வழக்கத்துக்கு மாறாகப் பொப்பியின் தோல்அழகாகவும், எந்தத் தோல் வருத்தத்திற்கான அறிகுறியும் இல்லாமல் இருந்தது.
“விவியன்! பொப்பியின் தோல் நல்லாக இருக்கிறது, என்ன விசேடம்? சாப்பாடு அல்லது சூழ்நிலையில் மாற்றமா?”என்று கேட்டேன்.
“விசேடமாக ஒன்றுமில்லை, என் கணவர் இப்பொழுது எங்களுடன் இல்லை. இதைவிட எதுவும் கிடையாது.”என்றாள்.
உள்ளுக்குள் திடுக்கிட்டு இருந்தாலும், நாயைப் பார்த்தபடி அப்படியா, என்றேன்.
சில கணநேரத்தில் விவியனின் கண்ணை நேரடியாகப் பார்த்தபொழுது, ஏதோ சொல்லத் துடிப்பது கண்களில்மட்டுமல்ல, உதடுகளில் மெல்லிய அசைவாகத் தெரிந்தது.
“தனிப்பட்ட விடயத்தைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டும். ஆனாலும் உன்னில் மாற்றம் தெரிகிறது.ஆனால் இந்த மாற்றம் உனக்கு நன்றாக இருக்கிறது என்றுமட்டும் நான் நினைக்கிறேன்.”
நான் இவ்வளவு சொன்னதும் வார்த்தைகள் வெள்ளமாக, வேகமாக வந்தன.
“எனக்கும் என் கணவருக்கும் 25 வருட திருமண உறவு. இதைவிட ஏழு வருடங்கள் திருமணம் செய்யும் முன்புஒன்றாக இருந்தோம். இந்த 32 வருட கால உறவை விட்டு விட்டு எங்களுக்குச் சொந்தமான கபேயில் வேலைசெய்த bimbo (அழகான அறிவற்ற பெண்) உடன் சென்றுவிட்டார். ஆறுமாதங்கள் எனக்குத் தெரியாமல் அவளுடன் உறவு வைத்திருக்கிறார். இதைவிட எனக்கு ஆத்திரம் ஊட்டுவது, அந்த bimboவுடன் இலண்டனுக்குவிடுமுறையில் சென்றுவிட்டார்.
எனது கணவர் எனக்குச் செய்த துரோகத்தை விட எனது நாலுபிள்ளைகள் செய்வதுதான் எனக்குத் தாங்கமுடியவில்லை. ஆரம்பத்தில் என்னை ஆதரித்து அப்பாவுடன் சண்டை போட்டவர்கள் தற்பொழுது தகப்பனுக்காகப் பரிந்து பேசுகிறார்கள்”.
“கவலைப்பட வேண்டாம். பிள்ளைகள் உங்கள் பிரிவில் பக்கம் சேர விரும்பவில்லை. மேலும் இரண்டு பக்கத்திலும்தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்புவதும் வழக்கமானது.”
“நான் கவலைப்பட்டு முடிந்துவிட்டது. தற்பொழுது எனது வாழ்க்கையில் ஒருவர் வந்துள்ளார். நாகரீகமானவார்போல் தெரிகிறது. “
“ஒரு கதவு மூடும்போது ஜன்னல் திறப்பது வழக்கம்.”
“எனது கணவர் என்னை விட்டுப் போனதால் பொப்பிக்கு தோல் வருத்தம் குணமாகிவிட்டது.”
“என்னால் எதற்கும் மருத்துவரீதியில் விளக்கம் கூறமுடியாது. ஆனாலும் பல வருட வியாதி மாறியதுஅதிசயம்தான்.”
“எனக்கும், பொப்பிக்கும் என் கணவர் போனது நல்லகாலம்தான் ” எனக் கூறியபடி விடைபெற்றார்.
உறவுகள் மட்டும்தான் இன்பத்தைக் கொடுக்கும் என்று நினைத்திருந்த எனக்கு, விவியனும் பொப்பியும் சிலபிரிவுகள் கூட சந்தோசத்தையும் சுகத்தையும் அளிக்கும் எனக் கூறிவிட்டுச் சென்றார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்