
இக்கதையின் நாயகன் பெருநண்டு. ஆறறிவுள்ள மனிதன் வில்லன்.
நண்டு வர்க்கத்தில் பெரியது பெருநண்டாகும். அதனது சுவை மறக்கமுடியாதது. அதிலும் எழுவைதீவு எனும் சிறிய தீவில் பிறந்து வளர்ந்த எனக்கு நண்டுகறி பிடித்தமானதாகும். ஆஸ்திரேலியாவுக்கு வந்தபின் நண்டுக் கறி சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.இங்கு சீனக்கடைகளில் மட்டுமே நண்டு காணப்படும். எங்கள் ஊரில் மீன்வலையில் நண்டு சிக்கினால் மீனவர்களுக்குப் பலத்த கோபம் ஏற்படும். நண்டு வலையில் சிக்கியவுடன் வலையைக்கடித்து சிதைத்துவிடும். மீனவர்கள் நண்டின் மீது கொண்ட ஆத்திரத்தால் அதன் இருகால்களையும் முறித்துவிடுவார்கள். கால்கள் இழந்த நண்டுகள் கரையை அடையும் போது இறந்துவிடும். இறந்த நண்டைச் சாப்பிடும் போது அதைப்பற்றிய காருண்யம் ஏற்படுவதில்லை.மேலும் வீட்டில் மற்றவர்கள் உடைத்து கறியாக்கும் போது நண்டின் உயிரைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதிக அளவில் உள்ளியும்,இஞ்சியும் போட்டு வாய்வு ஏற்படாமல் கறியாக்கினால் சுவையாக இருக்கும் என உருசியை மட்டும்தான் கவனத்தில்கொள்வது எமது வழக்கம். இங்கு சீனக்கடைகளில் நண்டுகளைப் பிடித்து அதனது கால்களை முறிக்காமல் சேர்த்து கட்டி வைப்பார்கள். அப்படி துடிக்கும் நண்டுகளைஉண்ணாமல் காலம் கடத்தினேன்.
அன்று ஸ்பிரிங்வேல் மாக்கட்டுக்கு சென்றபோது பழைய நினைப்பு கனவுகாட்சி போல் வந்தது. நண்டை விலைக்கு வாங்குவதற்காக நண்டுப்பெட்டி அருகில் சென்ற போது எனது மனைவி என்னைக் கொலைகாரனைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். நண்டைக் கறிசமைப்பதும் எனது வேலையாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
மனைவிக்குப் பயந்து நண்டை வேண்டாமல் செல்லும் கோழைகள் வர்க்கத்தில் சேர விரும்பவில்லை. இருபது டொலரைக் கொடுத்து எல்லாத்திலும் பெரிதாக உள்ள பாரிய நண்டைத் தூக்கி எடுத்து காசு வாங்கும் பெண்ணின் மேசையில் வைத்தேன்.
நான் காசைக் கொடுத்து முடிப்பதற்குள்நண்டு மேசையை விட்டு ஓடிவிட முயன்றது. சிரித்தபடியே ” நண்டு அகதி அந்தஸ்து கேட்டுத் தப்ப முயல்கிறது” என நகைச்சுவையை உதிர்த்தேன்.
“நண்டு உயிருக்குப் போராடுகிறது. அது உங்களுக்குச் சிரிப்பாக இருக்கிறது”, என் மனைவி நண்டுக்காக வாதாடும் வக்கிலாகக் கன்னத்தில் அறைந்தது போல் கூறினாள்.
அந்தப் பதில் என் மனத்தில் கண்ணி வெடியை காஸ்சிலின்டருக்குள் வைத்து வெடித்தது போல் இருந்தது. என் மனத்தில் இருந்த ஜீவகாருண்யம் சிதறியது. மிருக வைத்தியரான எனக்கு நாலுகால் பிராணிகள் மட்டுமே கருணைக்கு உரியவை என்ற அடிப்படையில் வைத்தியம் பார்க்கும் போது பத்துக்கால் நண்டுக்கும் உயிர் வாழ உரிமை உண்டு என்ற உண்மை புரியத் தொடங்கியது.
மனைவியுடன் தொடர்ந்து பேச்சு வைக்க விரும்வில்லை. கதையை வளர்த்தால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சட்டம் நண்டுகளுக்கும் பொதுவானது என விவாதிக்கச் சாத்தியக் கூறு உண்டு. பலகாலம் அகதிகள் கழகத்தில் வேலை செய்த நான் நண்டுவதை செய்த குற்றத்திற்காக மனசாட்சி என்ற கூண்டில் ஏற விரும்பவில்லை. வாய் திறக்காமல் வீடு நோக்கி காரைச் செலுத்தினேன்.
காரில் வரும்போது காரின் பின் பகுதியில் வைக்கப்பட்ட நண்டு தப்பியோட நடத்தும் போராட்டம் என் காதுக்குக் கேட்டது. நண்டு இருந்த பிளாஸ்ரிக் பை சலசலப்பை ஏற்படுத்தியது. பிளாஸ்ரிக் பையின் சலசலப்பு என் மனத்திலும் குறுகுறுப்பைஏற்படுத்தியது.
நண்டைத் திருப்பிக் கொடுத்தால் யாராவது ஒருவர் வாங்கித் தின்னப் போகிறார். எனவே வேறு வழியில்லை. வீடு வந்தவுடன் நண்டைஉபாதை இல்லாமல் மேல்லோகத்திற்கு அனுப்புவது என முடிவு செய்தேன். அதிலும் ஒரு சிக்கல், மற்ற மிருகங்களைப் போல் ஊசி மூலமோ அல்லது கலால் (halal)முறையில் கழுத்தை அறுத்தோ கொல்ல முடியாது.
நண்டை ஐஸ் பெட்டிக்குள்( Fridge) வைத்தால் உயிர் போகப் பல நிமிடங்கள் செல்லும். எனக்குத் தெரிந்த ஒருவர் ஆயுதம் கடத்தியதற்காக 72 மணிநேரம் சிங்கப்பூரில் குளிர் அறையில் இருந்த பின்னும் உயிர் தப்பினார். எனவே நண்டுக்கு அந்த வழி சரிவராது. அதன் கால்களை முறித்துவிட்டாலும் பல மணிநேரம் செல்லும். எனவே கடைசியில் சுடுதண்ணிக்குள் அழுத்துவதுஎன முடிவு செய்தேன்.
பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தபோதும் பல நிமிடங்கள் எடுத்தது.
அந்த நேரத்தில் என்மனம் பலவற்றை நினைத்து, நண்டைக் கொலை செய்ய எவ்வளவு திட்டம் போடவேண்டி உள்ளது. மேசையில் உள்ள நண்டோ கடைசிவரையும் தப்பி ஓட முயற்சி செய்தது.
இலங்கை அரசியல் விடயங்களை வெளிநாட்டு பத்திரிகைகளில் பிரசுரிக்கும் போது கடைசிப் பந்தியில் இருபது வருடங்களாக நடக்கும் இந்தச் சண்டையில் 70,000 பேர் மாண்டார்கள் எனக் குறிப்பிடுவது வழக்கம். இந்தக் கணக்கு குத்துமதிப்பு என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் ஒரு நண்டைக் கொலை செய்ய இவ்வாறு திட்டம்போட்டு குற்ற உணர்வுடன் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த 70, 000 மனிதர்களையும் கொலை செய்வதுஎவ்வளவு கடினமான காரியம். இவர்கள் இந்த நண்டை விட உயிர் தப்புவதற்காக எவ்வளவு வேகமாக முயன்றிருப்பார்கள். இலங்கையில் இந்தப் போர் துவங்கிய பின் 700, 0000 (7 இலட்சம்) தமிழரும் சிங்களவருமாகவெளியேறி இருப்பார்கள். ஆகவே கணக்கியலின் அடிப்படையில் பத்துப் பேர் தப்பும் போது ஒருவர் உயிர் இழக்கிறார் என நினைத்தேன்.
தண்ணி கொதிக்கும் சத்தம் கேட்ட போது யாழ்தேவி மாதிரி வேகமாக போய்க் கொண்டிருந்த என் மனஎண்ணங்கள் ஒரு நிலைக்கு வந்தது. நண்டை எடுத்துத் தண்ணியில் அழுத்தினேன். ஒரு நிமிட போராட்டத்துடன் மேல் உலகம் சென்றது.
நண்டைக் கொலை செய்து விட்டு வெற்றியுடன் என்மனைவியைப் பார்த்தேன். உடனே சமைக்கும்படி கூறினாள்.ஆரம்பத்தில் நண்டு வக்கிலாகிய என்மனைவி இப்பொழுது பொருளாதார நிபுணராகிறாள். இருபது ரூபாய் நண்டை வீணாக்க விரும்பவில்லை.
மிக வேகமாக நண்டைச் சமைத்துவிட்டேன். இனிமேல் சாப்பிடுவது கஸ்டமாக இருந்தது, வயிற்றுக்குள் பல பட்டாம் பூச்சிகள் சிறகடித்தன. மேலும் நண்டின் துடிப்புகள் கண்ணுக்குள் நின்றது. அலுமாரியில் இருந்து நெப்போலியனில் இரண்டு கிளாஸ் சாப்பிட்டேன். வயிற்றுக்குள் சென்ற நெப்போலியன் பட்டாம் பூச்சிகளைக் கொன்றுவிட்டான். ஆனாலும் இனிமேல் பெருநண்டு சாப்பிடுவதில்லை என சபதம் எடுத்துக் கொண்டேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்