அவுஸ்திரேலியாவிலிருந்து நடேசன்

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் பேசுபவர்களில் பலர் தமிழர் வரலாறு அறிந்தவர்களோ அல்லது இதன் பின்விளைவுகளை புரிந்தவர்களோ அல்ல. இலங்கை அரசாங்கம் என்ற பாரிய இயந்திரத்தில் ஏற்பட்ட காழ்ப்புணர்வுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்வினையாக நினைக்கிறார்கள்;. அரசியலை புரிந்து கொள்ளாமல் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கடந்த முப்பது வருடமாக விதைத்த இனவாத விதையை விழுங்கியவர்கள்;;. இவர்களைப் போன்ற இனவாதிகள் சிங்கள சமூகத்திலும் உண்டு.
எங்கள் ஆச்சி அடிக்கடி சொல்லும்; ஒரு பழமொழி ‘பன்னீர்குடம் உடையும் போது கள்ளக்கணவன் கதவைத்தட்டினானம்‘
இந்த நாட்டுப்புற உதாரணத்தை விளக்கத் தேவையில்லை. வன்னியில் போர்முடிந்து மூன்று இலட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து அல்லல் அடையும் போதும் பத்தாயிரம் தமிழ் இளைஞர்கள் சிறைகளில் வாடும ;போது வெளிநாட்டுத்தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வெளிநாடுகளில் நிறைவேற்றுகிறார்களாம் என்ற செய்தி தமிழ் நெற் சிண்டிகேட்டில் வரும்போது இந்தப் பழமொழி;யை மட்டுமல்ல ஆச்சியையும் நினைவுக்குக் கொண்டுவரும். தமிழ் நெற் சிண்டிகேட்டுக்கு நன்றி சொல்லவேண்டும்.
தமிழ் தேசியம் என்ற விடயத்தை அறிவுபூர்வமாக நான் ஏற்றுக்கொள்ளாத போதும் உணர்வு ரீதியாக பல தமிழர்கள் இதை நம்பி உயிரை விட்டார்கள். இவர்கள் நம்பி வந்த இயக்கம் தற்பொழுது இலங்கையில் நி;ர்மூலமாக்கப்பட்டுள்ளது. இதனால் வந்த அழிவுகளை நிவர்த்தி செய்யாமல் அதேவழியில் நின்று வெளிநாடுகளில் கூச்சல் போடுவது எப்படி நியாயமாகும்?. இப்படி செய்பவர்கள் ஒரு சிலராவது கொழும்புக்குப் போய் இப்படிப் பேசினால் என்னால் இவர்களின் நேர்மையை பாராட்டமுடியும். பல நாட்டு பிரஜைகள் இஸ்ரேலுக்கு சென்று பாலஸ்தீனியருக்காக குரல் கொடுக்கிறார்கள். இவர்களை இஸ்ரேல் அரசாங்கம் இடைக்கிடை கைது செய்தாலும்; பாரிய அளவில் தண்டனை கொடுப்பதில்லை. இலங்கையும் இதே கொள்கைளை கடைப்பிடிக்கும் என நம்புகிறேன்.
ஜப்பானில் அமெரிக்கா அணுகுண்டை போட்டு இரு நகரங்களை நிர்மூலமாக்கியபின் ஜப்பானியர்கள் சமாதானத்தை நாடினார்கள். இங்கே அமெரிக்கா சரியா ஜப்பான் சரியா என்பது வாதப்பொருள் அல்ல. போரில் ஈடுபடும் இருபகுதியும் தங்களுக்கு சரியான வாதங்களை வைத்திருப்பார்கள். .மக்கள் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்பதே முக்கியமான விடயம். மக்கள் அழிந்த பின்பு உரிமை மானம் என்ற பேச்சுக்கள் வெறும் வார்த்;தைகளாக மட்டுமே இருக்கும் .
இன வாதத்தை இனவாதத்தால் எதிர்கொள்ள முடியாது. இந்த உண்மையை மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். மிகவும் சிறிய எண்ணிக்கையில் இருந்த ஆதிக்க எதிரிகளை வெறுக்காமல் அன்பால் அகிம்சையால் வென்று சிறந்த முன்உதாரணங்களை உருவாக்கி இருக்கிறார்கள். இதேவேளையில் பாரிய ஆதிக்க சக்தியை வென்று காட்டினார் மாட்டின் லூதர் கிங் எனும் கறுப்பு அமெரிக்கர்.
வெளிநாடுகளில் கடந்த பல வருடங்களாக இறுதிப் போர் நிதி, தமிழ் அகதிகள் நிதி மற்றும் மருத்துவ நிதி இடையிலே சுனாமி காலத்து நிதி இப்படி பல வகைகளில் தமிழ் மக்களிடம் சேகரித்த நிதிகள் யாவும்; விடுதலைப்புலிகள் போரில் அழிந்த மாதிரி வெளிநாடுகளில் இல்லாமல் போக சாத்தியம் இல்லை. விடுதலைப்புலிகள் ஒரு சட்டரீதியான நிறுவனம் இல்லாதபடியால் பல ஆதரவாளர்களின் பெயரில்தான் இந்த நிதி பொருளாகவோ பணமாகவோ இருக்கவேண்டும். இப்படியான சிலர் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிந்துகொண்டதாக இலங்கை ஆங்கில பத்திரிகையில் செய்தி வந்ததை நான் பார்த்தேன். இந்தப்பணத்தைப் பற்றி யாருக்குத் தெரியும?;. இந்தப்பணத்தை கையாள்பவர்கள் அல்லது மறைப்பவர்கள் தாமாகவே முன்வந்து சொன்னால் மட்டுமே தெரியவரும்.
தமிழ்மக்களுக்காகச் சேர்த்த பணத்தை அந்த மக்களுக்கே உதவுவதற்காக வழங்கவேண்டும். பல மாவீரர் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறார்கள். இதைவிட போரில் ஊனமாக்கப்பட்டவர்கள் இருக்;கிறார்கள். இந்தப்பணம் இவர்களுக்கும் உதவவேண்டும். இதை விட்டுவிட்டு வட்டுக்கோட்டையை சுவிசிலும் நோர்வேயிலும் நிறுவினால் அது துட்டுக்குக் கூட பிரயோசனப்படாது. உங்களுக்கு உண்மையில் ஈழம் வேண்டுமென்றால் நாடு கடந்த ஈழம் என்று வேலைமினக்கடாமல் ஒவ்வொருவரும் சைபர் வெளியில் ஈழத்தை அமைத்தால் ஒரு நூறு டொலருக்கு குறைவாகதான் செலவாகும்; . மிகுதியை பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் குடும்பங்களுக்கும் தயவு செய்து கொடுத்து உதவுங்கள்.
இந்தக்கருத்தை சிட்னியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய தமிழர் பேரவையைச் சேர்ந்த பெண்மணியிடம் கூறிய போது அழிவு இலங்கை அரசாங்கத்தின் போரால் வந்தது. இதற்கு அவர்களே பொறுப்பேற்கவேண்டும் என கூறினார்
அப்படியானால் உங்கள் பொறுப்பு ஆயுதத்திற்கு பணம் கொடுப்பது மட்டும்தானா என கேட்க நினைத்தேன்.
அவரது அறியாமையை எனது வாயை அடைத்தது.
இதே வேளையில் இலங்கைத்தமிழர் பிரதிநிதிகளாக தங்களை இங்குள்ள தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பிரபலப்படுத்த இவர்கள் பின்னிற்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் காரணமாக்கித்தான் 90 வீதமானவர்கள் புலம் பெயர்ந்தோம். நீங்கள் அவர்களுக்கு கடன் பட்டு இருக்கிறீர்கள.கடன் செலுத்தவேண்டிய நேரம் இது.
புலம் பெயர்ந்தவர்களே சிந்தியுங்கள்
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்