
அணிந்துரை – கோவை ஞானி
ஆஸ்திரேலியாவில் கால்நடை மருத்துவராகக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் டாக்டர் என்.எஸ் நடேசன் அவர்களை நேரில் நான் அறியவில்லை என்றபோதிலும், அவரது வாழும் சுவடுகள், வண்ணாத்திக்கும் ஆகிய படைப்புகளைப் படித்த நிலையிலும், அவரது படைப்புகளுக்கு திருவாளர்கள் எஸ்பொ- முருகபூபதி-எஸ் ராமகிருஷ்ணன் ஆகியவர்கள் வழங்கியுள்ள அணிந்துரைகளில் இருந்தும் நடேசன் அவர்களை என் நெஞ்சுக்கு நெருக்கமானவர்போல் உணர்கிறேன். வாழும் சுவடுகள் இரண்டாவது தொகுதி என்ற மகுடத்தில்; வெளிவரும் இந்த நூலை அணிந்துரை எழுதுவதற்குப் படித்தபோதும் அந்த உணர்வைப் பெற்றேன். திரு முருகபூபதி அவர்கள் எழுதியதைப்போல் மருத்துவர் நடேசன் அவர்களது உள்ளத்தில் உண்மை ஒளி இருக்கிறது. அதனாலே அவரது வாக்கில் இனிமை கூடி இருக்கிறது. எளியது இவரது தமிழ் என்றபோதிலும்-; தமிழுக்கே உரிய இனிமை இவரது எழுத்துகளில் மிளிர்கிறது.

இன்றைய சூழலில் மனிதர்கள் நெஞ்சில் அன்பும், இரக்கமும் வற்றி வருகிற நிலையில் வீட்டு விலங்குகள் உட்பட கால்நடைகளிடம் அன்போடு அக்கறையோடும் மருத்துவம் செய்யும் இவரது பணி நம் நெஞ்சை நெகிழ்விக்கிறது.
வாழும் சுவடுகள் என்ற முதலாவது தொகுப்பில் அடங்கியுள்ள இவரது அனுபவங்களைத் தொடர்ந்து இந்த இரண்டாவது தொகுதியிலும் பதிவு செய்கிறார். கலைநேர்த்தியோடு எழுதப்பட்ட கட்டுரைகள் சிறந்த சிறுகதைகள் படிக்கும் அனுபவத்தை நமக்குத் தருகின்றன. தொடர்ந்தும் இவரது அனுபவப் பதிவுகளை படிக்கும்போது நம்காலச் சூழலில் இங்கும் என்னவெல்லாம் நடைபெறுகின்றன என்பதைப்பற்றிய எனது சில நினைவுகளை இங்கு எழுதாமல் நகரமுடியாததுபோல் தோன்றுகிறது.
எங்கள் நகருக்கு (கோவை) அண்மையில் உள்ள கிராமங்களுக்குள் மலைக்காடுகளிலிருந்து உணவும் நீரும் தேடிச் செல்லும் யானைகள் சாகின்றன. யானைகள் செல்லும் பாதைகளை மறித்து கட்டிடங்கள், சாலைகள் அமைந்ததனானாலும், காடுகளைத் தொடர்ந்து அழித்து வருவதனாலும் இத்தகைய சோகங்கள் இங்கு அடிக்கடி நிகழ்கின்றன.வாழ்வியல் வசதிகளும் பணத்திற்கு தம்மை அடிமைப்படுத்திக் கொண்டவர்கள் யானைகள் செய்யும் அட்டகாசம் என எழுதுகிறார்கள்.
இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும்.நவீன மருத்துவ வளர்ச்சியின் விளைவாக மருத்துவத்துறையில் எத்தனையோ விந்தைகளை மருத்துவ மேதைகள் சாதிக்கிறார்கள் என்பது உண்மைதான். அதே சமயம் மருத்துவமும் ஒரு மாறிவரும் சூழலில், விபத்தில் அடிபட்டு உயிரிழக்கும் தருவாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும், தொடர்ந்து மருத்துவம் செய்வதாக சொல்லி இலட்சங்களைப் பறிக்கின்ற மருத்துவ ‘வல்லுநர்கள்’பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். கடைசியாக வந்த ஒரு செய்தி: வடக்கில் ஒரு மருத்துவர், ஐநூறு பேர்களின் சிறுநீரகங்களை அபகரித்து,அந்நியர்களுக்குப் பொருத்தி பெரிய மனிதர்களின் உதவியோடு நூறு கோடி ரூபாய் சேர்த்துக்கொண்ட செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
டாக்டர் நடேசன் என்ற இந்த மருத்துவர் விலங்குகளுக்கு மருத்துவம் செய்யும் ஓர் அற்புத மனிதர். இந்த தொகுப்பின் முதல் கட்டுரைக்குள்- கதைக்குள் நுழைகின்றபோதே இவரது பேருணர்வை நாம் எதிர் கொள்கிறோம்.ஆங்கிலேயர்களால் அபகரித்துக் கொள்ளப்பட்ட தேசம் ஆஸ்திரேலியா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தத்தேசத்தில் உரிமையோடு வாழ்ந்த பூர்வீகக் குடிகளைக் கொன்று ஓரத்தில் ஒதுக்கிவிட்டவரகள் ஆங்கிலேயர்கள். டாக்டர் நடேசன் எழுதுகிறார்: இந்தத் தேசம், அந்த ஆதிவாசிகளுக்குத்தான் சொந்தமென்றில்லை: இலட்சக்கணக்கான ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களுக்குத்தான் சொந்தம்.இந்த உணர்வோடு டாக்டர் நடேசன் தான் புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் குடியேறியுள்ள பொசங்களைப் பார்க்கிறார்(பெரும்பாலும் இவை ஒரு வகையான அணிலாக இருக்கலாம். அக்கறையோடு அந்தப் பொசங்களை எடுத்துக்கொண்டு போய் மரத்தில் விட்டு வருகிறார். அடுத்து இவர் பார்க்கும்போது அந்த மரத்தில் இவை இல்லை ( வேறொரு வீட்டில் இவை குடியேறி இருக்கலாம்.இவரது மனித நேயம் இப்படித்தான் உயிர்நேயமாகப் பரிணாமம் கொண்டிருக்கிறது.)
தன் மருத்துவமனையில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் மருத்துவம் செய்கிறார். மனிதர்களுக்கு மட்டும்தான் நீரழிவு, புற்றுநோய், எயிட்ஸ் வரும் என்பதில்லை.நாய்களுக்கும் பூனைகளுக்கும்கூட இந்த நோய்கள் வருகின்றன.அக்கறையோடு மருத்தவம் பார்த்தாலும் சிலசமயம் நோய் குணமாகாதபோது கருணைக்கொலை செய்யவேண்டியிருக்கிறது.
மனிதர்கள் ‘மகத்தான’ உயிர்கள். கருணைக்கொலை செய்வதை சட்டம் ஒப்புக்கொள்ள முடியாது(ஆயிரக்கணக்கில் மனிதர் வறுமையில் சாகலாம். விபத்துக்களில் சாகலாம். ஆனால் ததாமே விரும்பினாலும் கருணைக்கொலைக்கு அரசு அனுமதிக்க முடியாது.அரசாங்கத்தின் ‘கருணையை’ ஒரு வேளை பாராட்ட வள்ளலார் வரவேண்டும்.) டாக்டர் நடேசன் வேறுவழியில்லாமல் கருணைக்கொலை செய்கிறார். கண்ணில் இரண்டு சொட்டு தண்ணீர்த் துளியோடு,
கோவிலில் வளர்க்கப்படும் மயில்களுக்கிடையே சண்டை. ஒரு பெண்மயிலுக்காக ஆண் மயில்களுக்கிடையில் சண்டை. காயப்பட்ட ஆண்மயிலுக்கு நடேசன் மருத்துவம் செய்கிறார். மருத்துவம் பயன்படவில்லை . வேறு வழியில்லை சமணமுனிவர் போல் தனித்திருந்து அந்த மயில் சாகிறது.
இப்படி நிறைய அனுபவங்களை மருத்துவர் நடேசன் இந்தக் கட்டுரையில் பதிவு செய்கிறார். வீட்டு விலங்குகளை விருப்பத்தோடு வளர்க்கும் மனிதர்களிலும் சிலர் விநோதமானவர்கள். குழந்தைகள் இல்லையென்றால் சிலர் வீட்டில் நாய்களை வளர்க்கிறார்கள் பூனைகளை வளர்க்கிறார்கள்.
நம்மால் இதைப் புரிந்து கொள்ளமுடியும். குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதில் சிரமங்கள் அதிகம், பணச்செலவும் அதிகம் என்பதற்காக லோரா தன் வீட்டில் மூன்று நாய்களையும் இரண்டு பூனைகளையும் அன்போடு வளர்த்து வருகிறார். இந்த நூலில்; இப்படி ஒரு பதிவு. இன்னொரு பதிவு, பருவகாலத்தில் சில இளம் பெண்களில் ஏற்படும் விநோதமான ஒரு மனக்கோளாறு பற்றியது. பள்ளிக்கு செல்வதில் விருப்பமில்லாமல் தன் அறையில் எலிகளோடுவிளையாடிக்கொண்டிருக்கிறள் ஒரு பெண்.
மேலும் ஒரு பதிவில் மணிக்கயிற்றை விழுங்கிவிட்ட நாய்க்குட்டி வயிற்றுவலியால் துடிக்கிறது. என்ன காரணம் என்று டாக்டருக்கு புலப்படவில்லை. சில நுட்பமான பரிசோதனைகளுக்குப் பிறகு அறுவைச்சிகிச்சை செய்து மணிக்கயிற்றை வெளியே எடுக்கிறார்.நாயின் வருகையை எதிர்பார்த்து- நாயின் சொந்தக்கார் தன் அன்பான நாயை வரவேற்க- தன் வீட்டில் இருபத்தைந்து நண்பர்களைக் கூட்டி வைத்திருக்கிறார்.
இன்னும் ஒரு சுவையான அனுபவம். வீட்டின் எல்லைக்குள்ளிருந்து சுதந்திரமாகத் தெருவுக்குச் சென்ற ஒரு நாய் வாகனத்தில் அடிபட்டு உடம்புக்கு வெளியே குடல் சரிய செத்துக் கிடக்கிறது. நாயின் சொந்தக்காரருக்குக் குடல் சரிந்து கிடக்கும் அந்த நாயைப் பார்க்க முடியவில்லை. டாக்டர் நடேசனை தொலைப்பேசியில் அழைத்து செய்தி சொல்கிறார்.நடேசன் அந்த நாயின் உடம்புக்குள் அந்தக் குடலைப் பொதித்து பக்குவமாக தைத்து நாயின் சொந்தக்காரர் வீட்டு வளாகத்தில் குழிதோண்டச் செய்து நாயை அடக்கம் செய்கிறார்.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனிவகையான இயற்கைச்சூழல். அந்தச் சூழலுக்கு ஒத்த முறையில் சில தனிவகையான நோய்கள். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரைச் சிலபகுதிகளில் மனிதர்களுக்கு ஆஸ்த்மாவும் ஓவ்வாமையும் நேருகின்றன. வீட்டு விலங்குகளுக்கு இவ்வகையான நோய்கள் கூடுதலாக வருகின்றன.இப்படி டாக்டர் நடேசன் சொல்கிறார்.
வீட்டு விலங்குகளின் குணங்கள், அவற்றிற்கு வரும் நோய்கள் நோய்களைக் குணப்படுத்தும் முறைகள்-; இந்த விலங்குகள் வளர்க்கும் மனிதர்களின் தனிக் குணங்கள்-; இப்படி நாம் எவ்வளவோ தெரிந்து கொள்கிறோம். நமக்கு வியப்பாக இருக்கிறது.
கடைசியாக, ஒரு பதிவு. ஈயத்திற்குப் பெயர் பெற்றது ஆஸ்திரேலியா . தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ஈயக்கழிவுகள் ஆங்காங்கே மணல் வெளியில் புதைக்கப்படுகின்றன. இறைச்சியைத் தின்ற பிறகு எலும்புகளை மணலில் புதைத்த நாய், திரும்பவும் வந்து மணலைக் கிளறி எலும்புகளைக் கடித்து தின்னும்பொழுது ஈயக்கழிவுகள் நாயின் குடலுக்குள் சென்று கடுமையான நோயை உண்டாகின்றன. நவீன நாகரீகம் இன்னும் என்னனென செய்யும். நாய்கள் மட்டுமா என்ன மனிதர்களுக்கும் இதே கதிதான்.
ஈழத்திலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் விலங்கு மருத்துவம் செய்யும் டாக்டர் நடேசன் அவர்களின் இந்தத் தொகுப்பு எஸ் பொ முதலியவர்கள் சுட்டிக்காட்டியபடி தமிழுக்கு ஒரு புதுவரவு என்பதில் ஐயமில்லை .
ஈழத்தமிழிலக்கியந்தான் இருபத்தோராம் நூற்றாண்டுக்கான தமிழிலக்கியமாக இருக்க முடியும் என்று எஸ் பொ உரிமை கொண்டாடுகிறார். சொந்த மண்ணையும் மரபையும் மீட்கும் முறையில் புயலோடு போராடுகிற ஈழதமிழர். புதிய அனுபவங்களையும் தமிழையும் இலக்கியத்தையும் புத்துருவாக்கம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. டாக்டர் நடேசன் அவர்களும் இத்தகைய பேறு பெற்றவர்
இவரை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்
தமிழ் நேயம் 24 வி ஆர் வி நகர்
ஞானாம்பிகை ஆலை (அஞ்சல்)
கோயம்புத்தூர் 641029
மறுமொழியொன்றை இடுங்கள்