

( சிறுகதை )
நடேசன்
ஒரு எழுத்தாளனாக இருப்பவன் தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கவும் மற்றவர்கள் கதைகளைக் கேட்கவும் வேண்டும். ஒரு விதத்தில் பூக்களை வாங்கி மாலையாக்கும் பூக்காரியின் தொழில் போன்றதுதான் கதையாக்கமும்.
அப்படியான ஒரு கதையை உங்களிடம் சொல்லப் போகிறேன்.
கடந்த வருடம் அவுஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்குத் தனியாகச் சென்றேன். ஹோட்டலில் தங்கி, ஏன் தேவையில்லாமல் அதிக பணத்தை செலவழிக்கவேண்டும் என நினைத்து சென்னையில் உள்ள என் நண்பனிடம் பேசியபோது, அவன், தனது நண்பனது மாடிக்கட்டிடம் ஒன்றுள்ளது. அதை ஒழுங்கு பண்ணுவதாகக் கூறினான்.
நான் ஹோட்டலில் தங்குவதற்கு செலவிடும் பணத்திலும் குறைவானது என்பதால் ஒப்புக்கொண்டேன். சென்னை நகரின் புரசைவாக்கத்தில் ஒரு மாடிக்கட்டிடம். மூன்றாவது மாடியில் ஒரு, இரு அறைகள்கொண்ட அபார்ட்மென்டை ஒரு வார காலத்திற்கு எனது நண்பன் எனக்காகப் பதிவு செய்திருந்தான். போய்ச் சேர்ந்ததும் மண்டை வறண்டது. தனிமை வாட்டியது. சுற்றிவர நல்ல சாப்பாட்டுக்கடைகள் இல்லை. எதற்கும் ஓட்டோவில் செல்லவேண்டும். ஏன் ஓத்துக்கொண்டேன் என என்னை நொந்து கொண்டேன்.
அங்கிருந்த இரண்டாம் நாள், எனது ஒரு கனடிய நண்பன் முகநூல் மெசஞ்சர் ஊடாக ‘எங்கே நிற்கிறாய்? ‘ என்று கேட்டு தகவல் வந்தது. சென்னையென்றதும் தொலைபேசியில் ராமேஸ்வரத்தில் இருந்து வருகிறேன். எனக்குத் தங்க ஒரு இடம் வேண்டும் என்ற போது மிகவும் சந்தோசமாக அவனை வரவேற்றேன். என் தனிமையைக் கொல்ல ஒருவன் கிடைத்திருக்கிறான்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் படித்த காலத்திலே தெரிந்தவன். அத்துடன் சமீபத்தில் அவன் இலங்கை சென்றபோது அங்கு நோய் வந்து சில காலம் வைத்தியசாலையில் இருந்தான். அக்காலத்தில் தொலைபேசியில் அவனுடன் ஆறுதல் வார்த்தைகள் பேசியிருக்கின்றேன்.
பேச்சுத்துணையுடன் சிறுவயது நட்பு என்பதால் அவன் வருகை உற்சாகமளித்தது. அவனுக்கு அடுத்த பக்கமும் ஒன்று உண்டு. இந்தியாவில் ஈழ விடுதலை இயக்கங்கள் இருந்தபோது இடதுசாரி இயக்கத்திலிருந்தவன், எண்பதில் சிதைந்த இயக்கத்திலிருந்து சிதறியோடிய ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாக அலைந்து இறுதியில் கனடாவில் குடும்பத்தோடு போய் குடியேறிவிட்டான்.
அவனைப்பற்றிய விடயங்கள் இவை மட்டுமே முன்பு தெரிந்தவை. இப்பொழுது இராமேஸ்வரம் சென்று வருகிறான் என்றதும் இடதுசாரி சோசலிச , மார்க்சிய வாதங்களைக் கைவிட்டு சாதாரண மனிதர்கள்போல் இந்தப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் பாவிப்பதற்காக புண்ணியங்களை சேகரிக்கத், தலயாத்திரை செய்பவனாக மாறிவிட்டான் என்று மட்டும் புரிந்துகொண்டேன்.
புலம் பெயர்ந்த கனடாவின் சூழ் நிலை அவனை அப்படி மாற்றிவிட்டதா?
ஏதாவது குடும்ப பிரச்சினையின் காரணமாக ஆண்டவனிடம் சரணடைந்து விட்டானா?
எதற்கும் வரட்டும். அவனது மனமாற்றங்களையும் அதனது காரணங்களையும் அறிவதற்கு ஆவலாக இருந்தேன்.
அதிகாலை நேரத்தில் படுக்கையில் இருந்து நான் எழுவதற்கு முன்பாக கதவு தட்டப்பட்டது. அதிகமான மூட்டை முடிச்சுகளில்லை. முதுகுப் பை மட்டுமே வைத்திருந்தான் ; கறுத்து மெலிந்திருந்தான். அத்துடன் தாடி மீசையுடனிருந்தான். அறுபது வயதுக்கு மேலானவன் என்பதால் அவை நரைத்திருந்தது. மற்றவர்கள்போல் கறுப்படிக்காது இயற்கையாக இருந்து, சாமியாரது தோற்றத்தைக் கொடுத்தது. நல்லவேளையாக காவியுடையில்லை. நானும் சாமியாருடன் இதுவரை ஒன்றாக அபாட்மெண்டில் இருந்ததில்லை.
கதவைத் திறந்தபோது உள்ளே வந்தவனிடம், ‘காவி உடை அணிந்திருந்தால் பத்து ரூபாய் கொடுத்து கதவை அடைத்திருப்பேன் ‘ என்றபோது, ‘ நான் சாகப்பிழைத்து வந்துள்ளேன். உனக்கு நக்கலாக இருக்கிறது ‘ என்றான்.
இரயிலில் வந்தவன், படுக்கவேண்டும் என அடுத்த அறையைக் காட்டிவிட்டேன். நான் மட்டும் காலையில் வெளியே சென்று உணவருந்திவிட்டு அவனுக்கும் உணவு வாங்கிவந்து வைத்துவிட்டு, எனது வேலையைப் பார்க்கச் சென்று விட்டேன். அவனிடமும் அபாட்மென்டின் திறப்பு இருந்தது.
மாலையில் நான் வந்தபோது ‘மது வாங்க போகிறேன்’ என்றான். அப்பொழுது எனக்கு பியர் மட்டும் போதுமென்றேன். அத்துடன் இன்னமும் சாமியாராகவில்லை மது அருந்துகிறான் என்பது ஆறுதலாக இருந்தது. அதே நேரத்தில் மது, மாது, கஞ்சா பழக்கங்கள் உள்ள ஆசாமியார்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் வந்துபோகத் தவறவில்லை.
மீண்டும் மாலையில் அபாட்மெண்ட வந்தபோது உணவுப்பொட்டலத்துடன் வந்தான்.
‘ என்ன ராமேஸ்வரம் போய் வருகிறாய்? பக்திப் பழமாகி விட்டாயா? சர்வதேசத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று மற்றவர்களுக்கு கம்யூனிசம் படிப்பித்துக்கொண்டு திரிந்தாய்? ‘
‘தம்பி உனக்குப் புரியவில்லை. வாழ்க்கையின் இடுக்குகளுக்குச் சென்று நசிபடும்போது அதன் வேதனை புரியும். நீ அதிஸ்டசாலி. வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிவிட்டாய். ‘என்று வேதாந்தமாக பேசிவிட்டு மது போத்தலை எடுத்து குலுக்கி மூடியைத் திருகினான் .
‘ வாழ்க்கையில் அல்லல் படுவோருக்காகவே அக்காலத்தில் சமத்துவம் பேசினாய். இப்பொழுது பக்திமானாகியதற்கும் அதே காரணம் சொல்கிறாய்! அதை விடு. நான் நினைத்தேன். குடலில் ஒப்பரேசன் முடிந்தபின் குடிக்கிறதை விட்டு விட்டாய் என்று ‘
‘நான் விட்டாலும், அது விடாது.’
‘ அது சரி, உனது ராமேஸ்வரம் பயணம் எப்படி ? எதற்காகப் போனாய்? அதைச்சொல்?’
‘ அது பெரிய தொடர்கதை ‘ என்றபடி மதுக்கிளாசை வாயில் வைத்தான்.
நானும் போத்தலில் இருந்த கிங் ஃபிசரை ஊற்றினேன்.
‘ வீட்டில் கொஞ்சம் பிரச்சினை.’ நான் அம்மாவோடு இருந்தேன் அம்மா இறக்கும் பொழுது ஒரு விடயம் என்னிடம் கேட்டார். அதில் இருந்து எனது பிரச்சினை தொடங்கியது.
நாங்கள் ஆறு ஆண்கள். நான் பாடசாலையில் படிக்கும் காலத்தில் அப்பு இறந்துவிட்டார். அம்மா, மாமாவின் உதவியுடன் எங்களை வளர்த்தார். அதில் கடைசித்தம்பி சொல்வழி எதுவும் கேட்காமல் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். அதன்பின்பு 2009 இல் இறந்துவிட்டான் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது. காலம் , இறந்த இடம் எதுவும் தெரியவில்லை. அம்மா எல்லாம் மறந்துவிட்டு இருந்துவிட்டார். ஆனால், கடந்த வருடம் சித்தப்பா முறையான ஒருவர், “ அவன் முல்லைத்தீவில் யுத்த நடவடிக்கைகளின்போது ஆமியால் சுடுபட்டு இறந்தபோது , அவனை ஒரு வீட்டில் புதைத்ததாகவும் அந்த வீடு பல வருடங்கள் ஆமிக்காரர் குடியிருந்து விட்டு, இப்பொழுது உரிமையாளருக்குக் கையளித்துள்ளதாகச் சொல்லியிருக்கிறார்.
அந்த விடயம் தெரிந்ததும் அம்மா மனம் குழம்பி விட்டார். அவனை அப்படி அனாதையாக அந்தக் கடற்க்கரை மண்ணில் விட ஏலாது. அவனது ஆன்மா சாந்தியடைவதற்கு எச்சத்தை எடுத்து எரிக்கவேண்டும். அதை ராமேஸ்வரத்தில் கரைக்க வேண்டும் என்று தொடர்ந்து புலம்பிய படியிருந்தார். அம்மாவைப் பொறுத்தவரை அவனே கடைசிப்பிள்ளை . நாலாவது தம்பிக்கு ஐந்து வருடங்கள் பின்பாகப் பிறந்தவன். அது மட்டுமல்ல , அவனது பிரசவத்திற்கு அம்மா ஆஸ்பத்திரிக்குப் போய் இருந்தபோது, அப்பு இதய நோயால் சில நாட்களில் இறந்து விட்டார். அம்மாவுக்கு அவனில் அதிக பாசம். அதனால் கடைசி வரையும் பொத்தி பொத்தி வைத்திருந்தா.
அவன் இயக்கத்துக்குப் போனதும், அம்மா நடைப்பிணமாக அவனது இறப்பை எதிர்பார்த்து காத்திருந்தா. ஒரு விதத்தில் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாத காத்திருப்பே அம்மாவைப் பல வருடங்கள் உயிருடன் வைத்திருந்தது. எங்கள் ஐந்து பேரைப் பற்றியும் எப்பொழுதும் நினைக்காமலிருந்தாலும் அவனது பெயர் கேட்டால், உடனே எழுந்து விடுவா. நான் இலங்கைக்குப் போய் கொழும்பிலிருந்த சித்தப்பாவோடு அந்த வீட்டை அடைந்தோம். நான்கு அறைகள் கொண்ட ஓட்டு வீடு. முன்பகுதி ஆமியால் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. பின்பக்கத்தில் வேலியில்லை. அடர்ந்த ஆளுயரப் புதர்கள். அந்த புதர்களைக் கடந்து போனால் கடற்கரைக்குப் போகமுடியும்.
“ இந்த வீடு இயக்கத்தின் சிறைக்கூடமாகப் பாவிக்கப்பட்டது. அதற்குப் பொறுப்பாகத் தம்பியிருந்தவன். வீட்டின் உரிமையாளரும் உங்கட கனடாவில்தான். “ என்றார் சித்தப்பா கதையோடு.
“ இவன் சண்டையில் ஈடுபடவில்லையா? “
“ கண்ணில் குண்டு பட்டதால் போரில் பல காலமாக ஈடுபடவில்லை. “
சித்தப்பா காட்டிய இடத்தில் அலரி முளைத்திருந்தது. அந்த இடத்தை கிண்டினால் அரை அடிக்குக் கீழ் வள்ளங்களுக்குப் பாவித்த மோட்டார் கருவிகள், பொலித்தீன் கடதாசிகளுள் கிறீஸ் பூசப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு இடத்தில் ஒரு உரப்பை நிரம்பப் பல கடிதங்கள் வந்தன. இந்த வீட்டின் காணி என நினைத்த இடங்களை மூன்று நாட்களாகக் கிண்டி முடித்துக் களைத்துப் போனேன். மூச்சு வாங்கியது. எல்லாத்தையும் விட்டு கனடாவிற்குப் போய் விடுவோம் என்று நினைத்தபோது, அம்மா உயிரோடிருந்தால் பிரச்சினையைச் சொல்லிப் புரிய வைக்க முடியும். இப்பொழுது உயிருடனில்லை என்ற நினைவு நெஞ்சில் பாரமாக அழுத்தியது.
நீ சொன்னால் நம்பமாட்டாய். கவலையை மறக்க இரவு நல்லாத் தண்ணியடித்துப் போட்டு சித்தப்பாவோடு அந்த வீட்டிலே படுத்திருந்தேன். பேக்கனவு – நினைச்சுப் பார்க்க முடியாது. பெரும் அழுகுரல் சத்தங்கள், உயிர் போறது மாதிரி அவலமான ஓலங்கள் கேட்டது. நான் எழுந்து பார்க்கிறேன். அண்ட வெயாரோடு பலர் சுவரோடு சாய்ந்தபடி நிற்கிறாங்கள். எவனுக்கும் தலையில் மயிரில்லை. முற்றாக வழிக்கப்பட்டிருந்தது. அவங்களது உடலெல்லாம் காயங்கள் கண்டிய இரத்தத்தால் கறுப்பாக இருந்தது. எனது தம்பி அவங்களை பின்னிய வயறால் அடிக்கிறான். அவங்களெல்லாம் கையெடுத்து கெஞ்சிறாங்க. என்னால் பார்க்க முடியவில்லை .
அப்ப நான் அவனிட்டப் போய், “ நீ ஒரு மனுசனா? நான் குடித்த மிச்சப்பாலை குடிச்சுத்தானே வளர்ந்தனி. கொஞ்சமாவது இரக்கமில்லையா? அதுகும் என்ர இரத்தமாக இருந்து இப்படி மனுசரை துன்புறுத்துகிறாய்? உன்னை என் தம்பி என்று சொல்லமாட்டன் “ எனச்சொல்லி அடிக்கப்போனன்.
அப்போது அவன் பாயும் புலிபோல் சிலிர்த்துக்கொண்டு ‘நான் எப்ப வீட்டைவிட்டு வந்தேனோ எனக்கு உறவு எதுவும் இல்லை. எனது பெயர் அர்ச்சுனன்- கடமை மட்டுமே உள்ளது. அந்தக் கடமையைச் நான் செய்கிறேன். அதற்கு இடையூறாக நீ வந்தால் உன்னைச் சுடுவேன்’ ‘ என்று துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி வரவும், பின்கதவால் பாய்ந்து பற்றைச் செடிகளைக் கடந்து ஓடத் , தொடர்ந்தும் துரத்தினான். எனக்கு முன்னால் விரிந்த நீலக் கடல் முடிவற்று தெரிந்தது. கடலில் பாய்வது என்ற நோக்கத்துடன் நான் கடலை நோக்கி ஓடுகிறேன். கடற்கரை மணலில் கால் புதைய வேகமாக ஓட , கடல் என்னை விட்டு விலகி பின்னால் போனது. அந்த இடத்தில் தரையில் பெரிய கற்பாறைகள் தெரிந்தன. மீன்களெல்லாம் சிறிதும் பெரிதுமாக கடலைத்தேடி வாயைத் திறந்தபடி காற்றை யாசித்தன. நண்டுகள் ஒளிந்து கொள்ளப் அவசரமாக பாறைகளின் இடுக்குகளைத் தேடின. ஒரு ஆமை மட்டும் அமைதியாக என்னை பார்த்தபடி மெதுவாக ஊர்ந்தது.
எவ்வளவு தூரம் ஓடவேண்டும் என்று தெரியாமல் ஓட, வேகமாக அவனும் பின்னால் வந்தான். எதிர்பாராது அவன் என்னை நெருங்கியபோது, என்னை நோக்கி ஆள் உயர அலையாக வந்து, கடல் முகத்தில் அடித்தபோது விழித்துக்கொண்டேன்.
போத்தலில் உள்ள தண்ணீரைக் குடித்து விட்டு , நித்திரை கொள்ளாது புரண்டு படுத்தபடியிருந்தேன் .
அதிகாலையாகிவிட்டது.
தேநீருடன் வந்த சித்தப்பாவிடம் இந்தக்கனவைச் சொல்லவும், “ அவன் இயக்கத்தில் இருந்தான். இயக்கத்தின் கட்டளையை செய்திருப்பான். நீ அவன் இறந்த பின்பு நல்லவனா கெட்டவனா என்று பார்ப்பது தவறு. அவன் உனது தம்பி உனது அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாய். “ என்றார்.
அடுத்து கக்கூஸ் அருகே கிண்டினேன். அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. என்ன செய்வதெனத் தெரியவில்லை. எதற்கும் ஒருக்கா பார்ப்போம் எனக் கக்கூசின் பின் குழியில் உள்ள சிமெந்து மூடியை உடைத்தேன். அங்கு ஒரு சிதைந்த எலும்புக்கூடு இருந்தது. பாவிக்காத மணல்ப் பிரதேசத்தில் உள்ள கக்கூசானதால் குழி சுத்தமாக இருந்தது. வெறும் கையால் எலும்புகளை விறகு மாதிரி பொறுக்கி சாக்கில் போட்டு வெளியே எடுத்து பார்த்தபோது எந்த அடையாளமுமில்லை. எனக்குச் சந்தேகமாக இருந்தது.
சித்தப்பாவின் முகத்தைப்பார்ததேன்.
சித்தப்பா சொன்னார் “ நிச்சயமாக ஜீவனாகத்தான் இருக்கவேண்டும். எனக்கு சந்தேகமே இல்லை. ஆமிக்காரன் கொன்று போட்டு அவசரத்தில் புதைக்காது கக்கூசுக்குழியில் போட்டிருக்கிறான். போர்க்காலத்தில் இரண்டு பகுதியும் கிடங்குகள் கிண்டி மினக்கிட விரும்பாத நேரத்தில் இது நடக்கும். வன்னியில் பல கக்கூசுகள் இதற்குப் பயன் பட்டிருக்கு. “ என்றார் .
அன்றிரவு எலும்புகளை சாக்கில் பத்திரமாகக் கட்டி வீட்டுக்குள் வைத்து விட்டு, சாப்பிட்டு படுத்தால் வயிறு பயங்கரமாக நோ. தாங்க முடியாமல் இரவு நேரம் முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்குப் போனால் , அவங்கள் அப்பண்டிசைட்டாக இருக்கலாம். உடனே ஓப்பரேசன் செய்யவேண்டுமென யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் அவங்கள் இரத்தத்தை எடுத்துப் பார்த்துவிட்டு சொல்லுவோம் என்றார்கள். பின்பு ஸ்கான் பண்ணி அப்பண்டிசைட்டில்லை, ஏதோ குடலில் கட்டி அல்லது புண்ணென்றார்கள். என்னை படுக்கையில் ஒரு கிழமை இருக்கவேண்டும் . அதன் பின்பு மீண்டும் ஸ்கான் எடுத்து தேவையானால் ஒப்பரேசன் செய்வதாக சொன்னார்கள். நான் கொழும்புக்குப் போய் ஓப்பரேசன் செய்கிறேன் என்றால் விடாமல் மறித்தார்கள்.
இரண்டு நாட்கள் இருந்து விட்டு , நான் மாட்டேன் என கொழும்பிற்கு வந்து பிறைவேட் ஆஸ்பத்திரிக்குப்போனபோது அவர்கள் ஒப்பரேசன் செய்தார்கள். எனது சிறுகுடலில் ஒரு பகுதியை அகற்றினார்கள். பணத்திற்கு நான் என் நண்பனிடம் கேட்டு அதை ஒழுங்கு பண்ணி எல்லாம் முடிய இரண்டு கிழமையாகிவிட்டது.
மீண்டும் முல்லைத்தீவுக்குச் சென்று ஆக்களுக்கோ ஆமிக்கோ தெரியக்கூடாது என்பதால், அந்த எலும்புகளை தென்னமட்டை , பனை ஓலை , மற்றும் கிடைத்த விறகுகள் போட்டு இரவில் எரித்தேன். அன்றைக்குப் பார்த்து பெரிய மழை. நீ சொன்னா நம்பமாட்டாய். காம் ஃபயர் எரித்துக் குளிர் காய்வதுபோல் நெருப்பை பக்கத்தில் இருந்து எரித்தேன்.
அதன் சாம்பலை எடுத்துக்கொண்டு வரும்போது வாகனம் வவுனியாவில் பழுதாகிவிட்டது. மேக்கானிக்கை கூப்பிட்டு அதைத் திருத்திக் கொண்டிருக்கும்போது, எனக்கு நெஞ்சில் நோ. உடனே வவனியா வைத்தியசாலை சென்று அங்கு டொக்டரிடம் செக் பண்ணிவிட்டே கொழும்புக்கு வந்தேன். ‘
‘ உந்த எலும்பில் ஏதோ இருக்கிறது? உனது தம்பியினது தானா என்பது ஒரு கேள்வி? அவன் எப்படியிருந்தான்? அவனில் ஏதாவது குறையிருக்கலாமா?’
‘இதெல்லாம் நான் யோசிக்காமலில்லை. நான் அதை நம்பிறன். அவன் எனது தம்பியானாலும் ஏதோ கெடுதியான விடயங்களில் ஈடுபட்டிருக்கலாம் . எனது பக்கத்தில் குறையில்லையா? வீட்டை விட்டுப் படிக்காது வெளியேறினேன். அம்மாவிற்கு நான் மட்டுமல்ல, ஆறு மகன்களும் எதுவும் செய்யவில்லை. அம்மா எங்களை வளர்த்து விட்ட பின்பு நாங்கள் எங்கள் பாட்டில் வேறு திசையில் சென்றோம். நான் மூத்தவனாக ஒரு இயக்கத்தில் போய்ச் சேர்ந்ததால் மற்றவர்களை ஒழுங்காக வளர்க்க முடியவில்லை என்பது அம்மாவின் முறைப்பாடு. இப்பொழுது கடைசி ஆசைபோல் கேட்டதை நான் நிறைவேற்றவேண்டும்.’
இப்பொழுது அவனது மதுப்போத்தல் காலியாகிவிட்டது.
‘ இலங்கையில் பல தடங்கல்கள் இருந்தன. இராமேஸ்வரத்தில் இருக்கவில்லையா ‘ எனக்கேட்டேன்.
‘ அதுதான் எனக்குப் புதினமாக இருந்தது. எதுவும் தடங்கல் நன்றாக நடந்தது. நான் ஐயரை பிடித்தெல்லாம் எதுவும் செய்யவில்லை. துணிப்பையில் கட்டியிருந்த சாம்பலை இடுப்பளவு தண்ணீரில் கரைத்தேன் . உடை மாற்றிவிட்டு கோயிலுக்குப் போனேன். கோயிலுக்கு வெளியே ஒரு காவியுடுத்த சாமியார் என்னிடம் சிலோனா என்று கேட்டார். நான் அதற்கு ஓமென்றபோது “தம்பி இரு, உங்கள் நாட்டில் பல நல்லவர்களும் கெட்டவர்களும் ஆவியாகத் திரிகிறார்கள். அவர்களுக்குச் சாந்தி செய்யவேண்டும் “ என்றார்.
“கெட்டவர்களுக்குமா? “ என்றேன்
“முக்கியமாக அவர்களுக்கே முதலில் செய்யவேண்டும். நல்ல ஆவி நமக்கு எதுவும் கெடுதல் செய்யாது. கெட்ட ஆவி மற்றவர்களிடம் புகுந்து அவர்களை இயக்கும். அது உங்கள் சமூகத்திற்கு நல்லதல்ல. தொடர்ச்சியாகத் தீமையைக் கொண்டு வரும். போர் மட்டும்தான் முடிந்துவிட்டது. கெட்டவை இன்னமும் நீங்கவில்லை. நல்ல மணத்தை விட துர்மணம் அதிக கனமானது. நம்மில் படிந்துவிடும்.
இராமேஸ்வரத்திலிருந்து உங்களுரில் அநேக ஆவிகள் சுற்றித் திரிவதை என்னால் பார்க்க முடிகிறது . அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்துவிட்ட பின்பு, அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன், உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. மறுபிறப்படைய வழக்கமாக ஒரு வருடகாலமாகும் . இந்த மறுபிறப்பிற்காகவே திதி செய்கிறோம் . ஆனால், நீங்கள் பலருக்குச் செய்யவில்லை. அதனால் அவை ஆத்மாக்களாகவே சுற்றித்திரியும் . எண்ணிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத அளவு உங்கள் ஊரில் உள்ளன. இதில் கெட்ட ஆத்மாக்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் மறைமுகமாகக் கெடுதலை செய்யும் . தற்போது உங்களூரில் போரில்லை என்பது உண்மை, ஆனால், அமைதியில்லை. கெட்ட ஆத்மாக்களின் தீவினை இன்னமும் பலமாக உள்ளது. அவைகளே ஆபத்தானவை.
நமது முன்னோர்கள் இதை இதிகாசத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். பாரதப்போர் முடிந்தபின், இறந்தவர்களுக்குக் கடமை செய்ய பாண்டவர்கள் முன்வந்தார்கள். அப்பொழுது பீஷ்மருக்கு முதல் பிண்டம் வைப்பதற்குத் தர்மர் முன்வந்தபோது, அதைத் தடுத்த கிருஷ்ணர் தர்மனிடம், இல்லை சகுனிக்கே முதல் அவி வைக்கவேண்டும் அதுவே பாரத தேசத்திற்கு நல்லது என கூறினார்.
மிகவும் மனம் குழம்பிய தர்மன், “என் பாட்டனுக்கு பிதிர்க் கடன் செய்யாது சூழ்ச்சியே வடிவமாக குரு வம்சத்தை அழித்து, பாரதத்தின் எண்ணற்ற பெண்களை அமங்கலமாக்கிய பாலைவனத்து நரிக்கா நான் அவி வைப்பது? கண்ணா, உனக்கு என்ன வந்து விட்டது? இது என்ன விளையாட்டா? அதற்கு இது நேரமா? ஏன் எங்களை குழப்புகிறாய்? “என்றார்
“ குழம்பாதே தர்மா. அதோ பார், உனது தம்பி, சகாதேவனது சகலத்தையும் புரிந்தவன் அவன் முகத்தைப்பார். அவன் நான் சொன்னதைப் புரிந்து கொண்டான்.’
தருமன் சகாதேவனைப் பார்த்தபோது, அவன் சிரித்தபடியே நின்றான்.
அண்ணா, கிருஷ்ணனைக் கேட்டு நட. நமக்காக மட்டுமல்ல, பாரத வர்ஸ்சத்தின் எதிர்காலத்திற்காகவும் கூறுகிறார்.
“ நீயும் போதாதற்கு என்னைக் குழப்புகிறாய், தம்பி. “
“ தர்மா நீதியின் புத்திரனே, இங்கே குழப்பமெதுவும் இல்லை. சகுனி கெட்டவன். அதனாலே அவனுக்கு பிண்டம் அளித்தால் அவன் இந்த பாரத வர்ஸ்சத்தை விட்டு நீங்கிவிடுவான். அல்லாதபோது அவனது ஆவி பலரிடம் புகுந்து தொடர்ந்து இந்த நாட்டுக்குக் கெடுதியை உருவாக்கும். பிதாமகர் பீஷ்மர் விரும்பும்வரை குரு வம்சத்தை காக்க உயிரோடு வாழ்ந்தவர். உன்னிடம் குரு வம்சம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவரே போரின் இறுதியில் விரும்பி இறந்தவர். அவருக்கு பிண்டம் கொடுக்காதுவிடினும் அவர் உனது நன்மைக்காகவே இந்த நாட்டைச் சுற்றி வருவார். ஆனால் சகுனி அப்படியா? “
“கண்ணா என்னை மன்னித்துக்கொள். உனது வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல் விட்டேனே. நீ சொன்னபடி முதல் அவியை சகுனிக்கே வைக்கிறேன் “ என்றார்
“மிக்க நன்றி ஐயா. நான் என்னால் முடிந்ததை எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் செய்து விட்டேன்” என்று சொல்லி அந்த காவி உடைச் சாமியாரிடம் ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு ரயிலேறினேன். “
‘ நீ இதை நம்புகிறாயா?’ ‘
‘ நான் நம்புகிறேனோ இல்லையோ , நான் செய்து முடித்த விடயத்தை அந்த சாமியார் எல்லோரும் செய்ய வேண்டிய விடயமாகச் சொன்னது, அந்த இடத்தில் எனக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது. இதை உயிரோடு அம்மா இருந்து , இதைச் சொல்லும்போது அவவின் முகத்தில் என்னால் ஒரு நிறைவைப் பாரக்க முடியும். ‘
‘ மச்சான் எனக்கு நீ கிருஷ்ணன் போல் தெரிகிறாய். என்ன சங்கு சக்கரமில்லை ‘
‘ நக்கலடிக்கிறாய். உன்ர அபார்ட்மென்ட் என்றும் பார்க்கமாட்டேன். உதை வாங்கப்போகிறாய்’ என்று சொன்னவாறு போதையில் எழுந்தான்.
‘ இல்லை மச்சான், இதுவரையில் புரியாத உண்மையை உணர்த்தினாய். இலங்கைத் தமிழ் அரசியலில் போர் முடிந்து பத்து வருடங்களாகியும் இன்னமும் நமது அரசியல்வாதிகள் ஏன் இவ்வளவு தரமற்று நடக்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தை எனக்குப் புரிய வைத்தாய். குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணன் உபதேசித்ததுபோல் இந்த புரசைவாக்கம் அபார்ட்மண்டில் நீ ஒரு பெரிய உண்மையைப் போதித்தாய் . நீ வாழ்க . அதற்காகத்தான் உன்னைக் கிருஷ்ணன் என்கிறேன். இதிலே நக்கலெதுவுமில்லை. நம்பு நண்பா. ‘
‘ மச்சான் குடல் ஒப்பரேசன் செய்த பிறகு பசி கூடிவிட்டது . ஆனால், நீ எனக்குச் சொல்லாமல் நன்றியை இராமேஸ்வரம் போய் அந்த சாமியாருக்கு நன்றி சொல்லவேண்டும் ‘என சொல்லிக்கொண்டு உணவுப்பார்சலைப் பிரித்தான்.
நன்றி நடு இணையம்
–0—
மறுமொழியொன்றை இடுங்கள்