( 2009ல் எழுதி அஸ்திரேலியா உதயம் பத்திரிகையில் வெளியாகியது)
நடேசன்
இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தமிழர் பலருக்கு அதிர்ச்சியையும் துக்கத்தையும் கொடுப்பவையாக இருப்பவை. இதன்காரணத்தால் இப்படி விளைவுகளுக்கு யார் மேலாவது பழியை போடவேண்டும் என தேடும் போது பலருக்கு இலங்கையில் தற்போது அரசியல் நடத்தும் மகிந்த இராஜபக்ச அரசாங்கம் கண்முன்பு தெரியும். அதேபோல் சிலர் விடுதலைப்புலிகளின் அரசியல் விவேகமற்ற இராணுவ ரீதியான போக்கு இதற்கு பொறுப்பு என சொல்வார்கள்.
கடந்த முப்பது வருட அழிவுகளுக்கும் உயிர் சேதத்திற்கும் யாராவது பொறுப்பு ஏற்கவேண்டும். யாரிடம் கேட்பது? எத்தனை அவலங்கள் ? எத்தனை துயரங்கள்?

தாய்மார் இறந்த பிள்ளைகளுக்காக வடித்த கண்ணீர் எத்தனை நந்திகடல்களை
உருவாக்கும்!
உயிர்தப்பியவர்களில் எத்தனை பேர் உடல் உறுப்புகளை இழந்து ஊனமுற்றவர்கள்?
மன நிலை பாதிக்கப்பட்டு நடைப்பிணங்களாக திரிபவர்கள் எந்தக்கணக்கில் சேர்க்க முடியும்?
எந்த இலட்சியம்; கோட்பாடு தனிநாடு கோரிக்கை என்பன இந்த மக்களின் இழப்புகளுக்கு சமமாகுமா?
இப்படி மொத்தமான கோட்பாடுகளின் வெற்றிக்காக ஒரு தனிமனிதனின் வாழ்வைப பலியாக்குவதே என்வரையில் தர்மம் ஆகாது.
ஹிட்லரின் கொன்சன்ரேசன் முகாமில் இருந்த ஒரு யூத முதியவர் நான் சந்தித்த்போது தான் ஒரு சோற்றுப் பருக்கைக்காக அக்காலத்தில் கவிதை பாடினார் எனக் கூறினார்;.
திரு ஆனந்த சங்கரியை லண்டனில் சந்தித்த போது ” கிழக்கு மாகாணத்தில் 60 வீதமான மக்கள் இஸ்லாமியர்களும் சிங்கள மக்களும் உள்ளபோது எப்படி தமிழ் ஈழக்கோரிக்கையில் கிழக்கு மாகாணத்தை உள்ளடக்க முடிந்தது?? ” என கேட்டபோது ” கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பாராளமன்ற உறுப்பினர் மட்டும் அக்காலத்தில் ஆதரித்தார். மற்றவர்கள் மீது இது ஒரு விதத்தில் திணிக்கப்பட்டது” ” என மிகவும்
நேர்மையாக பதில் கூறினார்.
இதேமாதிரி கேள்வியை மெல்பேனில் சம்பந்தரிடம் கேட்டபோது ” 1948 ல் தமிழர்கள் கிழக்குமாகாணத்தில் அதிகமாக இருந்தார்கள்.” ” எனப் பதில் வந்தது.
அப்போது நான் கூறினேன் “ஜனநாயக ரீதியில் தமிழ் ஈழம் காண்பதற்கு கிழக்கு மாகாண மயானங்களில் தான் சர்வஜன வாக்கெடுப்பு எடுக்கவேண்டும்” ” என்றேன்.
எனது பதிலிலில் எரிச்சல் அடைந்த சம்பந்தர் “நீர் சிங்களவர் மாதிரி பேசுகிறீர் “ “என்றார்.
“நான் உண்மையை சொல்கிறேன்” என்றேன்
சம்பந்தர் இதன் பின்பு என்னுடன் பேசவில்லை.
அதன் பின்பு சம்பந்தர் போன்ற அரசியல் வாதிகள் தவறுகளை விட்டதும் மட்டுமல்ல
எக்காலத்திலும் திருந்தமாட்டாத அரசியல்வாதிகள் என முடிவு எடுத்தேன்.
இப்படியான அரசியல் வாதிகளால் உருவாக்கப்பட்ட இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற மரண சாசனத்தை கையில் எடுத்த அடுத்த தலைமுறை தமிழர்களுக்கான இளைஞர்களில் பலரின் இறப்பை பக்கத்தில் இருந்து பார்க்கும் ஆபாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த மரண சாசனத்தின் கடைசி அத்தியாயம் சமிபத்தில் போர்க்களத்தில் நிறைவேறியுள்ளது. இந்த மரணசாசனம் கேட்ட கடைசிப் பலி, விடுதலைப்புலித் தலைவர்கள்
இப்படியான மரணசாசனம் யாழ்பாணமண்ணில் எழுதப்பட்டது . இதை பெரும்பாலானவர்கள் அங்கீகரித்தார்கள் என்பது உண்மை. இதே நேரத்தில் கிழக்கு மாகாண மக்கள், வன்னிப்பிரதேச மக்கள் தமிழ் பேசியோர் என்பதால் கயிற்றில் கட்டி இழுத்து செல்லப்பட்டார்கள் என்பது 77 தேர்தலில் கிடைத்த வாக்குகளை வைத்து கணிக்க முடியும்.. இதே வேளையில் குடாநாட்டு மக்களிலும் பார்க்க கிழக்கு வன்னி மக்கள் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை அறிய, நான் எந்த புள்ளிவிவரமும்
கொடுக்கத்தேவையில்லை.
யாழ்ப்பாணமண்ணின் மைந்தர்கள் ஏன் இந்த மரணசாசனத்தை மனதார ஏற்றுக்கொண்டார்கள்
என்பதை அறிய இவர்கள் மனங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
மிகக்குறைந்த நிலவளம் உள்ள பிதேசத்தில், தங்கள் மனிதவளம் மட்டுமே முதலாக உள்ள 70 வீதமான வெள்ளாளர் மத்திய வகுப்பு மக்கள் வசித்த பிரதேசம். இவர்கள் இதே வேளையில் தங்களுக்கு கீழே குடிமைகளாக வைத்திருந்த தாழ்த்தப்பட்ட
வகுப்பு மக்கள் 60 ம் ஆண்டுகளில் நடந்த சாதிப்போரட்டம், பின்பு 70 களில் கள்ளுத்தவறணை ஒழிப்பு என்பனவற்றால் வெளியேறுகிறார்கள். இதற்கு இலங்கையை ஆண்ட இடதுசாரி அரசாங்கங்கள் உதவி செய்கின்றன. யாழ்பாணத் தமிழர்களுக்கு இது வெறுப்பை ஏற்றுகிறது. 77ம் ஆண்டு வரையும் தமிழரசு தமிழ் காங்கிரசில் 30 வீதமாக இருந்த சிறுபான்மைத்தமிழரில் எவரும் பிரதிநிதிகளான இருக்கவில்லை.
77 ல் இலங்கை அரசாங்கங்கம் இவர்களுக்கு இருந்த ஒரு வளமான கல்வியையும் பறித்துக்கொள்கிறது. நிலை குலைந்த இந்த சமுதாயத்துக்கு நாங்கள் ஆண்ட பரம்பரை என்ற கோசம் மனத்துக்கு ஆறுதல் அளிக்கிறது. ஒரு புதுத்தென்பு உருவாக்கிறது
யாழ்ப்பாணத்தை 350 வருடங்கள் ஆண்டது இந்தியாவில் இருந்து வந்த தெலுங்கு நாயக்கர்கள்ளே: நாங்கள் அல்ல. மேலும் கிழக்கு மகாணம் எக்காலத்திலும் கண்டி மன்னரிடம் அல்லவா இருந்தது உண்மைகளை பார்க்க மறுக்கிறது.
தமிழ் கூட்ணியினரின் இந்த ஆண்டபரம்பரை கோசம் வெறும் தேர்தல் கோசம் என அறியாத இளம் தலைமுறையினர் காசி ஆனந்தன் போன்ற மூன்றாம் தர அரசியல் வாதிகளுக் இரத்ததிலகம் இடுகிறார்கள்.
இப்படியான சமூகத்திடம் இருந்து இவ்வளவு அதிகமாக வன்முறை எங்கிருந்து வந்தது?
சிறிய கூட்டில் 12 எலிகளை வளர்த்து வரும்போது அந்த எலிகளுக்கு 6 கருவாட்டுத்துண்டுகளை மட்டும் ஒவ்வொரு நாளும் கொடுத்து வரும்போது அந்த எலிகளுக்கு எப்படியான மனமாற்றம் நடக்கும் என்பது நம்மால் ஊகிக்க முடியும்தானே
மேலும் சாதி வன்முறை, பாடசாலையில் வன்முறை, குடும்பத்தில் வன்முறை, என இருந்த சமூகத்தால் சக மனிதர்களோடு ஜனநாயகமான கருத்தாடல் நடத்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியவில்லை. வன்முறையை பெருமளவில் சார்ந்து இருக்கவேண்டிஇருந்தது.
புலம் பெயர்ந்த நாடுகளில் கூட ஜனநாயக ரீதியான கருத்தாடல் செய்யமுடியாத சமுகமாக உள்ளதை காணக்கூடிதாக உள்ளது இரண்டு வார்த்தைக்கு மேல் கதைத்தால்
தூசணவார்த்தையில் இறங்குபவர்கள் பலரை நான் பார்த்துள்ளேன்.
இதேவேளையில் யாழ்ப்பாண மனே நிலை தனிப்பட்ட ரீதியல் முன்னேற்றத்துக்கு வாய்ப்பாக உள்ளது. போட்டி போடும் மனோ நிலை முதலாளித்துவ பொருளாதாரத்தின் வரப்பிரசாதம். புலம் பெயரும்போது இந்த இயல்பு வாய்பாக இருக்கிறது. இதேவேளையில்
மக்கள் சமுகமாக பின்தள்ளிவிடுகிறது.
யாழ்பாணமண்ணில் புகையிலையும் வெங்காயமும் நன்றாக வளர்ந்தன.ஆனால் ஜனநாயகம், மனிதநேயம் வளரமறுத்து தறுக்கணித்து விட்டதால் ஏற்பட்ட விளைவு
தான் ஒரு சமுகத்தையே இன்று அகதிமுகாமில் தள்ளியள்ளது.
இந்த மக்களை முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல பாதுகாப்பாக எடுக்க புலம் பெயர்ந்தவர்கள் உதவவேண்டும். இது நீங்கள் பாவமன்னிப்பு பெற உதவும்.. எந்த சமுகம் இந்க மரணசாசனத்தை அங்கீகரித்ததோ எந்த சமுகம் வன்முறையை உரம் போட்டுவளத்ததோ அவரகளே தற்போதைய மேற்கு நாடுகளில் வாழ்பவர்கள்.உங்கள் பாவங்களை கழுவ கிடைத்த கடைசி சந்தர்ப்பம்.
மறுமொழியொன்றை இடுங்கள்