
முருகபூபதி – மெல்பன் – அவுஸ்திரேலியா
தோழர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் எழுத்துக்களையும் கருத்துக்களையும் அவ்வப்போது படித்து வருகின்றேன். அவருடைய சிந்தனைகளில் மிளிரும் இன நல்லிணக்கம் எவ்வாறு உருவாகுதல் வேண்டும் ,
இஸ்லாமிய மக்கள் குறித்த சந்தேகங்கள் எவ்வாறு களையப்படல்வேண்டும், தேசத்தின் அபிவிருத்தியில் அனைத்து இனமக்களையும் எவ்வாறு இணைத்துக்கொள்ளவேண்டும் முதலான எண்ணங்கள் என்னை பெரிதும் கவர்ந்தவை.
அவரை சந்தித்து உரையாடல்வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் நீண்டகாலம் நீடித்திருந்தது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் ( அமரர் ) அஷ்ரப் அவர்களை, அவர் கொழும்பு சட்டக்கல்லூரியில் படித்த காலம் முதல் நன்கு அறிவேன். அவர் இலக்கியவாதியாகவும் எமக்கு அறிமுகமானவர்.
அவரைத்தொடர்ந்து, இஸ்லாமிய அரசியல் தரப்பில் நான் அறிந்துகொண்ட இலக்கிய நேசர் பஷீர் சேகுதாவூத் அவர்கள்.
கடந்த ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற 49 ஆவது இலக்கியச்சந்திப்பில் அவரும் கலந்துகொண்ட சமயத்தில் பரஸ்பரம் அறிமுகமாகி தோழமை பூண்டோம்.
அச்சந்திப்பில் அவரது எழுத்துக்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கின்றேன்.
மீண்டும் பிறிதொரு சந்தர்ப்பத்தில், நான் வதியும் அவுஸ்திரேலியா மெல்பனுக்கு அவர் வருகை தந்தவேளையில் நண்பரும் எழுத்தாளருமான நடேசனுடன் சென்று சந்தித்து நீண்ட பொழுதுகள் கலந்துரையாடியிருக்கின்றேன்.
இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் குறித்தும், எமது தாயகத்தில் புரையோடியிருக்கும் இன நெருக்கடிகள் தொடர்பாகவும் தெளிவான கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கை பள்ளிவாசல்கள், மற்றும் மத்ரஸாக்கள் மார்க்க போதனைகளுக்கும் அப்பால், இனநல்லிணக்க மையங்களாக மாறல்வேண்டும் என்று அவர் சொன்னபோது, ஏனைய சமயம் சார்ந்த கோயில்கள், தேவலாயங்கள், பெளத்த விகாரைகளுக்கும் அக்கருத்து பொருத்தமானதாக இருப்பதை உணர முடிந்தது.
இலங்கையில் சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் நடுநிலை வகித்து, ஆளும் அரசுகளிடம் தமது மக்களின் நலன்களுக்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி, மக்களின் தேவைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற அவரது சிந்தனையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக இருந்தது.
பழகுவதற்கு எளிய இயல்புகளைக்கொண்டிருக்கும் தோழர் பஷீர் சேகு தாவூத் அவர்களின் தோழமை இனநல்லிணக்கம் குறித்து அர்த்தபூர்வமாக சிந்தித்து செயல்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாகும் என கருதுகின்றேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்