நடேசன்

மிருக வைத்தியராக நாற்பது வருடங்கள் வாழ்ந்து இளைப்பாறிய எனக்கு, வியப்புறும் விடயம் நான் பார்த்த மிருகங்களிடம் கண்ட வாழ்வதற்கான ஆசையே. அதை தீவிரமாக, அவற்றின் நடத்தைகள் மூலம் காணமுடிந்தது. வைத்தியராக என்னிடம் வந்தபோது அறிந்ததுடன், என் வீட்டில் வளர்ந்தவற்றிலும் அதை அவதானிக்க முடிந்தது.
பல செல்லப்பிராணிகளையும் அவற்றின் உரிமையாளர்களை பற்றியும் எனது வாழும் சுவடுகள் நூலில் எழுதியுள்ளேன்.
பூனைகள் நோயுற்றதும் தங்களைத் தேற்றிக்கொள்ள ஏதாவது ஒதுக்கமான தனிமையான இடத்தை நாடும். நாய்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக நடந்து கொள்ளும் – பொதுவாக அவை மனிதர்கள் அருகே வந்து விடும்.
இப்பொழுது எனது விட்டில் வளரும் சிண்டியை பற்றி எழுதவேண்டும். கொரோனா காலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபோது , எங்களுடன் இணை பிரியாது வீட்டுக்குள் ஒரு சக உயிராக நடமாடுவதுடன் மட்டுமல்லாமல் , உடற்பயிற்சியாளராகவும் நடந்து கொண்டது. உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு பயிற்சியாளர்கள் வேலை செய்யாத காலமிது.
ஒவ்வொரு நாளும் மாலையில் நாங்கள் மூன்று கிலோ மீட்டார்கள் நடப்பதற்கான காரணியாக இருந்தது. குளிர்காலம், காற்று, மழை, கொரோனா என்பன எதுவும் எங்களுக்கு இடையூறாக இருக்கவில்லை. இரத்தத்தில் சீனி உள்ள எனக்கு மட்டுமல்ல, செயற்கை இடுப்பைக் கொண்ட என் மனைவிக்கும் இந்த நடைப் பயணத்தின் மூலம் சிண்டி மருத்துவராக இருக்கிறது. நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் எனக்கு இரத்தத்தில் சீனி குறையும். மனைவிக்குக் காலில் வரும் விறைப்புக் குறைந்துவிடும்.
எமது செல்லப்பிராணி சிண்டி, நான் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து வீடு வாங்கிய பின்னர், நான் எனது வீட்டிற்குக் கொண்டு வந்த எங்களது மூன்றாவது நாய்.
சாண்டி எங்களது முதலாவது நாய் . அதுவும் லாபிரடோர் இனத்தினை சேர்ந்தது. நான்குமாத கால வயதில் வேறு ஒரு வீட்டில் அது வளர்ந்தபோது அந்தக் குடும்பம் பிரிந்தது. அவர்களால் வளர்க்க முடியாத நிலை வந்தபோது, நான் வேலை செய்த மிருக வைத்திய சாலையில் ஒப்படைத்ததும், நான் அதைப் பொறுப்பெடுத்தேன். அதன் பெயரில் மாற்றம் உண்டாக்கி அதைக் குழப்ப விரும்பாது அதன் பழைய பெயரான சாண்டியாகவே எங்கள் வீட்டிலும் தொடர்ந்து வளர்ந்தது.
சாண்டியைக் கொண்டு வந்தகாலத்தில் நாங்கள் வாழ்க்கையின் புலம்பெயர்ந்த வாழ்வில் நூறு கிலோமீட்டரில் ஓடும் காரின் சக்கரங்களில், சிறுவன் ஒருவன் ஒட்டிய சுவிங்கம்போல் ஓடிக்கொண்டிருந்தோம். வளரும் ரீன்ஏஜ் பருவத்தில் எமக்கு இரண்டு பிள்ளைகள்,
சொந்தமாகத் தொழில், அதை விட உதயம் என்ற இரு மொழி மாதப் பத்திரிகையையும் அஸ்திரேலியாவில் நடத்திக்கொண்டு, எனது எழுத்துப்பணியுடன் எனது நாட்களைச் செலவழித்தபோது, ஓய்வு நேரமென்பது கறுப்புப்பூனையை இருட்டில் தேடுவதுபோல் நழுவிவிடும்
பெரும்பாலான நாட்கள் சாண்டியை நடக்கக் கொண்டு செல்வது சாத்தியமில்லை. அதனுடன் நான் நேரம் செலவழிப்பதும் குறைவு . தானாக குப்பைமேட்டில் வளர்ந்த கருவேப்பிலைபோல் வீட்டில் வளர்ந்தது. ஆனால், பிள்ளைகள் மாமா, மாமி, என வீடு பம்பலாகப் பலர் இருந்தபடியால் அதற்கு எனது தேவை இருக்கவில்லை. இறுதிவரையும் எங்கள் கட்டிலுக்கருகே நிலத்தில் படுத்திருந்தது . கடைசிக்காலத்தில் அதனது குறட்டைச் சத்தம் புலி உறுமலாக இருந்தது.
தனது பிள்ளைகளை மற்றவர்கள்போல் ஏழு நாளும் வீட்டிலிருந்து பார்க்கவில்லை என்று எனது மனைவி சில நேரங்களில் சொல்வதைக் கேட்டுள்ளேன். மனிதர்கள் வாழ்க்கை வேகமாக ஓடும்போது செய்யாத பல விடயங்களைப் பற்றி பிற்காலத்தில் சிந்திப்பதுண்டு. எங்களைப்போல், அறுபத்தைந்து வயதைத் தாண்டியவர்களுக்கு நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றைத் திருப்தியாகச் செய்யவில்லை என நினைக்கத் தோன்றும். அதில் குற்ற உணர்வு கூட ஏற்படும் . அதே நேரத்தில் திருப்தியாகச் செய்த விடயங்களை நினைக்கத் தோன்றாது.
நாங்கள் ஓடியோடி வேலை செய்தோம் என்ற மனக்குறைக்கும் மத்தியில் சாண்டியும் 14 வருடங்கள் வீட்டில் வளர்ந்து கனிந்த வயதில் புற்றுநோயினால் இறந்தது.
பிள்ளைகளும் படித்து, குடும்பமாகி தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். பிள்ளைகள் விடயத்தில் தவறவிட்டதை கையிலிருந்து கடலில் நழுவிய மீன்குஞ்சு மாதிரி மீண்டும் பிடிக்கமுடியாது.
தற்போது எம்முடன் இருக்கும் சிண்டி என்ற பெயருள்ள நாய் குட்டிப்பருவத்தில் வந்தபோது, அதன் வயது இரண்டே மாதங்கள்தான். அதன் தந்தை கறுப்பு – தாய் பொன்னிற லாபிரடோர். பறவை வேட்டைக்காகத் தலைமுறையாக வளர்க்கப்பட்ட பரம்பரையில் இருந்து வந்தது. சிண்டி எங்கள் வீடு வந்து சேர்ந்த காலத்தில் எமது இரண்டு பிள்ளைகளும் கூண்டைவிட்டுப் பறந்த காலம். நாங்கள் இருவரும் வேலைகளைக் குறைந்து அதனைப் பகுதி நேரமாக்கிய காலம் குடும்பத்தில் ஒற்றைப்பிள்ளைபோல் சிண்டி வளர்ந்தது.
சிண்டியைப் பொறுத்தவரை மற்றைய நாய்களுடன் விளையாடுவது அதற்கு இஷ்டமில்லை. எங்களருகாமையே அதனது தேவை. அதனது தேவைகளும் குறைவு. காலை மாலை உணவுடன் கட்டாயமான நடைப்பயிற்சி. அத்துடன் எங்களது அருகாமை அதற்குக் கிடைக்கிறது. சத்தத்திற்குப் பயந்த சுபாவம் உள்ள நாயாக வளர்ந்துவிட்டது. பெண்களையும் சில ஆண்களையும் மட்டும் நெருங்கும்.
குழந்தைகளையும் நாடிச் செல்லாது. சிறிய நாய்களையும் குரைக்கிற நாய்களையும் அதற்குப்பிடிக்காது. வீட்டு வாசலில் யாராவது வந்தால் மட்டுமே குரைக்கும்.
பறவைகளை ஓரளவு பொறுத்துக்கொள்ளும் ஆனால் பூனைகளைத் தனது எதிரியாக நினைத்துப் பாயும். எல்லாவற்றையும்விட எரிச்சலூட்டும் ஒரே ஒரு பிரச்சினை வெளியே போகும்போது காற்றில் ஏதாவது பறந்தால் அதைப் பிடிப்பதற்காகவே பாயும். துப்பாக்கியால் சுடப்பட்டு, நீர் நிலைகளில் வீழ்ந்த பறவைகளை நீரில் மூழ்கிக் கொண்டு வருவதற்காகத் தலைமுறையாகப் பழக்கப்பட்டதால் , அந்த இயல்பு இன்னமும் அதனது மூளையில் உள்ளது. மற்றும்படி அது தானும் தன்பாடும்.
வக்கியூம் கிளீனர், புல்வெட்டும் இயந்திரத்தின் சந்தங்கள் அதற்குப் பிடிக்காது. இரவில் எங்களது தும்மல், இருமல் சத்தம் அதைத் திடுக்கிட்டு எழுந்து குதிக்கப் பண்ணும். அதற்காகவே இரவில் தும்மல் – இருமலை நான் அடக்கி மெதுவாகத் தும்முவேன். எட்டு வருட காலமாகிவிட்டாலும் அதனது இந்த இயல்புகளில் மாற்றமில்லை.
அதனது பயந்த சுபாவத்திற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. எங்களது பழைய வீட்டின் அருகே ஜெல்ஸ் பூங்கா உள்ளது. கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நீளமான பூங்கா. அத்துடன் அதன் அருகில் அரை கிலோமீட்டர் காட்டுப்பகுதி உள்ளது. ஒற்றையடி பாதையூடாக சங்கீதத்தைக் கேட்டபடி நான் நடந்தபோது, சிண்டி என்னைப் பின் தொடரும். யூகலிப்ரஸ் மரங்களின் நறுமணத்தை சுவாசித்தபடி நடக்கக் கூடிய எவருமற்ற ஏகாந்தமான பிரதேசம். எப்போதாவது ஓரிருவர் நாயுடனோ அல்லது சைக்கிளிலோ அந்தக் காட்டுப் பகுதிக்குள் வருவார்கள். வெய்யில் காலத்தில் மாலை வேளையில் அப்பகுதியில் ஊர்ந்து திரியும் ரைகர் பாம்புகளுக்காக மட்டும் அவதானமாக நடப்பேன்.
மழைத்தூறல் கொண்ட குளிர்காலத்தில் சிண்டியுடன் அங்கே நடந்து கொண்டிருந்த ஒருநாள் , எங்கள் எதிரில் ஒருவர் தனது சைக்கிளைத் தள்ளியபடி ஹெல்மெட் மற்றும் மழைக்கோட்டுடன் வந்து கொண்டிருந்தார். என்னை விளித்து “ உங்கள் நாய், ஓகேயா “ என்று அவர் கேட்ட போது, நான் “ கவலைப்படவேண்டாம் “ என்றவுடன் அவர் எம்மைக் கடந்தார். அதன் பின்பு சில நிமிடங்கள் நான் நடந்து கொண்டிருந்து விட்டுத் திரும்பியபோது சிண்டியைக் காணவில்லை.
அந்தக் காட்டுப்பகுதியில் அரைமணி நேரம் பதற்றத்துடன் அதனைத் தேடிக் களைத்து விட்டேன். அங்கலாய்ப்புடன் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, சிண்டி வீட்டில் நிற்பதாக மனைவி சொன்னார்.
நான் வீடு திரும்பியபோது, அங்கு சிண்டி என்னை வாசலில் எதிர்கொண்டு வாலையாட்டியபடி நின்றது. கிட்டத்தட்ட இரு கிலோமீட்டர் தூரத்திற்கு பல வாகனப் போக்குவரத்துகள் கொண்ட வீதிகளைக் கடந்து வீடு வந்து சேர்ந்துள்ளது. தலைக்கவசமும் மழைக்கோட்டுமணிந்த அந்த மனிதனிடமிருந்து தன்னை நான் பாதுகாப்பேன் என்ற நம்பிக்கையற்று வளரும் இடத்தில் பாதுகாப்பு உள்ளதாக அது நினைத்துள்ளது.
சமீபத்தில் அந்த வீட்டை விற்று விட்டு தற்காலிகமாக வசித்த வீட்டில் சில திருத்தங்கள் செய்ய நினைத்திருந்தோம். நான்கு இளைஞர்கள் வந்து தாங்கள் செய்வதாகச் சொல்லியதுடன் கூரையில் ஏறி அங்கிருந்த உடைந்த ஓடுகளைக் காண்பித்தபோது, திருத்த வேண்டிய வேலைதானே… இவர்களுக்கு நாம் கொடுக்கும் பணம் பயனுள்ளது என்ற எண்ணத்தில் வேலைகளை ஒப்படைத்தோம்.
வண்ணப்பூச்சு வேலையும் செய்வதாகச் சொன்னார்கள். அதற்கும் பணம் கொடுத்தோம். இறுதியில் பார்த்தால், நாம் கொடுத்த பணத்திற்கு கால்வாசி வேலையும் நடக்கவில்லை. வந்தவர்களுக்கு அந்த வேலை தெரியாது. பின்னர் பெயின்டிங் தெரியாத பர்மிய அகதிகளைக் கொண்டு வந்தனர். இறுதியில் நீங்கள் செய்த வேலை போதும் என அவர்களை அனுப்பிட்டேன்.
அவர்கள் மீது கோபம் வரவில்லை. எந்த அறிமுகமும் அற்றவர்களிடம் நன்கு விசாரிக்காது வேலையைக் கொடுத்தது எனது தவறு என என்னை நானே நொந்துகொண்டேன்.
சிலநாட்களில் வீட்டுக்கு வெளியே சென்று திரும்பிவந்து போது வீட்டின் பின்பகுதிக்குச் செல்லும் கதவு திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். எங்களது சிண்டியைக் காணவில்லை. யாரோ வந்து கதவைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு பார்த்தபோது ஏற்கனவே அங்கு வந்து வேலை செய்தவர்கள் விட்டுச் சென்ற சில உபகரணங்களையும் காணவில்லை. அந்த அறுவான்கள் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு கதவையும் திறந்துவிட்டுப் போய்விட்டார்கள் எனத் திட்டியவாறு நானும் மனைவியும் சிண்டியைத் தேடினோம்.
இவ்வாறு தப்பித்தவறி வெளியேறிய நாய், பூனைகளை காண்பவர்கள் அவற்றை அருகில் உள்ள மிருக வைத்தியசாலைகளில் ஒப்படைப்பார்கள். அத்தகைய வைத்தியசாலைகளுக்கு போன் செய்தோம்.
கிட்டதட்ட மூன்று மணிநேரத் தேடலின் இறுதியில் பக்கத்து வீட்டில் வசித்த இந்தியக் குடும்பத்துப் பெண்ணிடம் கேட்டபோது, “ இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் தங்கள் வீட்டிற்கு வந்து , வாசலருகே சில நிமிடங்கள் நின்று விட்டுப் போனது “ என்றாள். அந்த பெண் மீது கோபம் வந்தது. ஆஸ்திரேலியர்களென்றால் நிச்சயமாக தங்கள் வீடுகளில் வைத்திருப்பார்கள். அல்லது மிருக வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்திருப்பார்கள்.
அந்தப்பெண்ணை மனதில் திட்டியபடி தொடர்ச்சியாக தேடினோம். எங்களது வீட்டிலிருந்து ஆறாவது வீடு ஆஸ்திரேலியர் ஒருவரது. அவர்களது நாய் மிகவும் சிறியது. அந்த வீட்டை கடக்கும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் அது வீட்டுக்குள் இருந்து சிண்டியைப் பார்த்துக் குரைக்கும்.
வழமையாக நாங்கள் நடக்கும்போது சிண்டியை அழைத்துச் செல்லும் பாதையில் இருக்கும் அந்த வீட்டின் முன்பகுதி புதராக இருந்தது. அங்கிருந்த பற்றையின் அடியிலிருந்த எங்கள் சிண்டி, எங்களைக் கண்டதும் பாய்ந்து வந்தது. வீடு வந்ததும் அது நிறையத் தண்ணீர் குடித்ததிலிருந்து அந்த புதரின் கீழ் மூன்று மணி நேரம் தஞ்சமடைந்திருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
காலையிலும் மாலையிலும் கொடுக்கும் உணவைவிட ஏதும் என்னிடமிருந்து கிடைக்காது என்பதால் எனது மனைவி சியாமளாவிடம் சென்று பக்கத்தில் நின்று ஏதும் பெற்றுக்கொள்ளும். இதனாலும் அதன் உடல் பருத்துவிட்டது. நிறையைக் குறைக்க விசேட உணவு கொடுக்கத் தொடங்கினோம் ஆரம்பத்தில் பிடிக்காதபோதும் பழகிவிட்டது. பசி வந்தால் தனது முகத்தை எங்கள் மீது உராய்ந்து மேலும் பெற்றுக்கொள்ளும்.
கொரோனா தொற்று இருந்த காலத்தில் இரவு நேரத்தில் அதனை நடைக்கு அழைத்துச் செல்வதால், வெளியே அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. அத்துடன் எங்கள் வீட்டருகே உள்ள மைதானத்தில் வாரிலாமல் (LeashFree Park) நாய்கள் ஓடித்திரிய முடியும் . சிண்டி இல்லாவிட்டால் இந்தக் குளிர்கால இரவுகளில் ஒருமணி நேரம் நிச்சயமாக வெளியே நடக்கமாட்டோம் . தொலைக்காட்சிக்கு முன்பாக அமர்ந்து ஏதாவது பார்த்துக்கொண்டோ அல்லது முகநூலில் நோண்டியபடியோ இருப்பேன். அவ்வாறின்றி மூன்று கிலோமீட்டர்கள் நடந்ததாக எனது தொலைபேசியில் உள்ள அப்ஸ் காட்டும்போது, யாருக்கு நான் நன்றி சொல்வது..?
நாய் வளர்க்கும்போது அதன் உணவுக்குப் பணம் செலவாகும். வெளிநாடுகள் போகும்போது அதற்காக விசேட இடம் பார்க்கவேண்டும். வீட்டில் கொட்டும் அதன் மயிரை தொடர்ந்து வக்கியூம் செய்யவேண்டும். இப்படியாக வரும் சங்கடங்களுக்கு மத்தியில் இந்தக் கொரோனாவால் வீடடங்கிய காலத்தில் ஏற்படும் நன்மைகள், ரீன்ஏஜ் பருவத்தில் காதலை அனுபவித்தமைக்கு ஒப்பானது. இதனை அனுபவிக்காதவர்களுக்குச் சொன்னாலும் புரியாது.
பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குப் பிணக்குகள் – ஊடல்கள் இருந்தபோதும், வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளால் அவர்கள் பேசுவதும் அதன் பின்பு பிணக்குகள் தீர்ந்ததையும் கண்டுள்ளேன். வளர்ப்பு பிராணிகளால் ஏற்படும் மன அமைதி மற்றும் உடற்பயிற்சியாலான நன்மைகளை விட வேறு பல நன்மைகளுமுண்டு.
வயதானவர்கள் பலர் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்காக ஓய்வில்லங்களுக்குச் செல்லாது தொடர்ச்சியாக வீடுகளிருப்பார்கள். இவர்களை ஓய்விடங்களில் பராமரிப்பதிலும் பார்க்கச் சொந்தவீடுகளில் பராமரிப்பது நாட்டுக்கு நல்லது என்பதை இதுவரையில் வெளியான ஆய்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்துகொள்ளாதவர்களுக்கு கொரோனா தொற்று அந்த உண்மையைத் தெளிவாகக் காட்டிவிட்டது.
சமகாலத்தில் இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் எங்கும் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வில்லங்களில் இருந்தவர்களே.
செல்லப்பிராணிகளை வளர்க்காதவர்கள் ஆஸ்திரேலியாவில் வருடத்திற்கு 11 முறை வைத்தியரிடம் செல்பவர்கள். வளர்ப்பவர்கள் வருடத்திற்கு 9 தடவை வைத்தியரிடம் செல்வார்கள் என ஆய்வு கூறுகிறது. வளர்ப்புப்பிராணிகள் நாட்டின் சுகாதார செலவில் சேமிப்பு ஏற்படுத்துவதை இந்த ஆய்வு நமக்குக் காட்டுகிறது
மிருகங்களோடு சேர்ந்து வளரும் குழந்தைகள் மனிதாபிமானம் மற்றும் காருண்ணியத்தோடு வளர்வார்கள் என்று பல இடங்களிலும் படித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் பொறுமை சகிப்புத்தன்மையை என்னிடம் ஏற்படுத்துகின்றன.
மனிதவாழ்வில் பரிணாமத்தில் பல்லாயிரம் வருடங்களாக இந்த வளர்ப்புப் பிராணிகள் பங்கெடுத்துவருகின்றன. தற்கால மதங்கள் நம்மிடம் வந்து சேர்வதற்கு முன்பாக வளர்ப்புப் பிராணிகள் வந்து குடும்பத்தோடு ஒன்றாகி விட்டன . வேட்டையாடும் காலத்திலே நாய்களும், விவசாயத்தில் தானியங்களைச் சேர்த்துவைத்த காலத்திலிருந்து பூனைகளும் மனிதர்களுடன் வளர்கின்றன.
நமக்கு ஆரம்பப் பாடசாலையில் எம்முடன் படித்த நண்பர்களின் நினைவுகள் நம்மோடு இருப்பது போன்று, இந்த நாய் பூனைகள் மனித குலத்தோடு தொடர்ந்து வருகின்றன. எமது எதிர்காலமும் அவர்களோடே.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்