
நடேசன்
குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென்ற காரணத்தால் நான் எனது மனைவியுடன் இலக்கிய விடயங்கள் பேசுவதில்லை. ஆனால், தொடர்ந்தும் நான் எதனையாவது படித்துவிட்டு, சிரித்தபடியே இருந்தால் “ என்னவென்று…? “ கேட்பாள். அவ்வாறுதான் ஒரு தருணம் மீண்டும் வந்தது, நௌஸாத் எழுதிய தீரதம் படித்துவிட்டும் சிரித்தேன். ‘என்ன விடயம்..? என்று கேட்டபோது, நௌஸாத்தின் கபடப் பறவைகள் கதையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். இருவரும் சிரித்தோம்.
இந்தக் கதையில் வரும் ஒரு எழுத்தாளன், தனது புத்தகங்களைத்தான் தனது பொக்கிஷமாகச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறான். ஆனால், அவனது குடும்பத்தினர் அதற்குள் பணமேதாவது இருக்கிறதா…? எனத் தேடுகிறார்கள். இறந்தவனது நாற்பதாம் நாள் செலவைச் செய்வதற்கு அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது.
அந்த எழுத்தாளன் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவனது ஆவி வெளியே வந்து வீட்டில் நடப்பதைப் பார்க்கிறது. அவனது நண்பர்கள் மூவர் குந்தியிருந்து இறந்த எழுத்தாளனுக்கு தாங்கள் கதை, கவிதை, என எழுதிக் கொடுத்ததாகவும் பேசிக்கொள்கின்றனர். அதில் ஒருவர், தனது சிபார்சிலேதான் அந்த எழுத்தாளனுக்கு கலாபூஷணம் பட்டம் கிடைத்ததாகவும் பேசிக்கொள்கிறார்.
குடும்பத்தினர் பணத்திற்காக அவனது அறையைத் தேடுகின்றனர். அவன் எழுதியவற்றை ஒழுங்காக வாசிக்க முடியவில்லை என்றும் ஆதங்கப்படுகின்றனர். தனது புத்தகங்களை “ எல்லோருக்கும் ஓசியில் கொடுத்து விட்டு ஒன்றே ஒன்று மிஞ்சியிருந்தது. அது அவனது சாகித்திய விருது பெற்ற கபடப்பறவைகள் கவிதைத் தொகுதி. அதன் மீது அவனது பேரக்குழந்தையொன்று பீ மூத்திரமடித்து நக்கரைத்துக்கொண்டிருந்தது( கால்களை மடித்து பூமியில் பிட்டம் பதிய நடத்தல்..அல்லது இழுபட்டுச் செல்லுதல்) இதற்கு மேலும் என்னால் இதுகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
என் உயிர்ப்பறவை பறந்தபின் வீட்டில் வாழும் கபடப்பறவைகளின் நடத்தைகளைக் கண்டு சகியாமல் வீரெனப்பறந்து என் புதைகுழிக்குள் புகுந்தேன்– என்னை மௌத் ஆக்கியதற்கு மிக்க நன்றி இறைவனே . என்று துதிசெய்து கொண்டு நெடும்தூக்கத்தில் ஆழ்ந்தேன்” என நௌஸாத் அக்கதையை முடிக்கிறார்.
உண்மையில் மற்றவர்களை எள்ளிநகையாடி ஹாஸ்யமாக்குவது நகைச்சுவையல்ல. ஆனால், அதனை எவராலும் செய்யமுடியும். புதுமைப்பித்தனிலிருந்து அ.முத்துலிங்கத்தின் எழுத்துகள் வரையில் பார்த்திருக்கிறேன்.
தமிழ்த் திரையுலகம் இதற்குச் சிகரம் வைத்ததுபோல் கறுப்பானவர்கள்- கட்டையானவர்கள்- சறுக்கி விழுந்தவர்கள் முதலானோரை நகைச்சுவை பாத்திரமாக்கியது. கவுண்டமணி – செந்தில் அளித்த நகைச்சுவை இதில் மோசமான முன் உதாரணங்கள். உண்மையான நகைச்சுவை ஒருவன் தன்னைத்தானே நகைச்சுவையாக்க வேண்டும். இதையே நௌஸாத் அழகாக செய்திருக்கிறார்.
நான் வாசித்தவர்களில் எஸ். பொ. மற்றும் எஸ். எல் .எம் ஹனிபா போன்றவர்கள் வார்த்தைகளைத் தேர்ந்த சிற்பி, பெண்ணின் சிலையில் மூக்கையோ உதடுகளையோ உளிவைத்து செதுக்குவதுபோல் எழுத்துகளில் புனைவை வைத்துச் செதுக்கும் வித்தகர்கள். நௌஸாத் அப்படியல்ல. இவர் தமிழ் மொழியில் மிகவும் வித்தியாசமாக கதை புனைகிறார். கட்டிடக் கலைஞர் புதிதாக வடிவங்களை சித்திரிப்பது போன்று , ஐரோப்பாவில் அப்படிக் கதை சொல்பவராக காஃகாவைச் சொல்வார்கள்.
முதலாவது கதையில் ஒய்த்தா மாமா, சிறுவர்களின் குஞ்சாமணியை அறுத்தெறிபவர்’ என்ற பந்தியிலிருந்து மிகவும் அழகாகச் சுன்னத்துக்கல்யாணத்திற்கு அழைத்து செல்கிறார். அதேபோல் கள்ளக்கோழியையும் பேத்தியையும் சந்தேகிக்கும் பேரனின் கதை .
மறிக்கிடா, என்ற சிறுகதை மு. தளையசிங்கத்தின் தொழுகை மற்றும் ஜி. நாகராஜனது சிறுகதைகளுடன் ஒப்பீடு செய்யத்தக்கதாயினது அல்லது அவற்றைவிட வீரியமானது .
ஒவ்வொரு கதையும் முத்தானவை. இங்கே ஞானம் ஆசிரியரது முகவுரைபோல் இக் கதைகளைப் பற்றி நான் எழுதுவது நேரவிரயம். கதை ஒன்றை எப்படித் தொடங்கி வாசகரை உள்ளே அழைத்துப்போவது என்பது ஒரு கலை. பல எழுத்தாளர்கள் ரப்பராக இழுப்பார்கள். அரைவாசியில் போய் என்ன அறுப்படா எழுதியிருக்கிறான் என எம்மை அறியாமலே ரப்பரை அறுத்துவிட்டு திரும்பி விடுவோம்.
நௌஸாத், ஒவ்வொரு கதையின் முடிவிலும் முரண்பாட்டையோ அல்லது புதிய அனுபவத்தையோ தந்து நமக்கு இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை ( Logical exhaustion) என்ற உணர்வோடு முடித்திருக்கிறார்.
சினிமா – முகநூல் – சீரியல் எனப் பல ஊடகங்கள் இருக்கும் இக்காலத்தில் நாம் கதை சொல்லுகிறோம். வாசிக்கும்போது வாசகரைப் பங்குபற்ற வைக்கும் திறன் காட்சி ஊடகங்களுக்கு குறைவு . எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி போல் தங்களைக் கற்பனை பண்ணும் ரசிகர்கள் இன்னமும் இருக்கலாம் . ஆனால், கதை சொல்லிகளால் கதைகளில் வாசகர்களைப் பங்கு பற்றச்செய்து பயணிக்க வைக்க இலகுவாக முடியும். இதைச் செய்யும் போது கதைகளில் தொய்வேற்படாது கொண்டுவரும் திறமையே இக்காலத்தில் முக்கியமானது. அது நௌஸாத்திடம் அதிகமாக உள்ளது
இலங்கையின் ஒரு சிறந்த நாவலாசிரியரை இவரது கொல்வதெழுதல் நாவலைப் படித்த பின்பு இனம் கண்டுகொண்டேன் . தற்போது தீரதத்தில் அவர் சிறந்த சிறுகதையாசிரியராகவும் தெரிந்துகொண்டேன். இந்தத் தொகுப்பில் மிகவும் குறைந்த சிறிய கதைகளே உள்ளன ஆனால், அவை எல்லாம் வித்தியாசமானவை.
மிக அருகில் சென்று மணந்தால் மட்டுமே பெண் கூந்தலில் போட்ட ஷாம்பு மணக்கும். அப்படியிருக்க பாண்டிய மன்னன் மனைவியின் கூந்தலுக்கு மட்டுமல்ல உமாதேவியரின் கூந்தலுக்கும் இயற்கையில் மணமில்லை என்று சாதித்த நக்கீரன் பரம்பரையில் வந்த நான் சொல்ல ஒன்றிருக்கிறது:
எனக்கே தீரதம் என்றால் அர்த்தம் தெரியாது.! படித்தபின் ஊகிக்க முடிகிறது . இது என்ன சாமான் என்று நினைத்தபடி பார்த்துவிட்டு பலகாலம் படிக்கவில்லை. நானாக இருந்தால் இந்நூலுக்கு கபடப் பறவைகள் என வைத்திருப்பேன் .
சிறுகதை எழுதத் தொடங்குபவர்கள் வாசிக்கவேண்டிய கதைகள் தீரதத்தில் இடம்பெற்றுள்ளன. அவ்வளவுதான்.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்