
காலம் காலமாக காதல் சோடிகள் காதலுக்காக உயிர்விடுவது காவியங்களாகியிருக்கிறது. அத்தகைய மரணங்களை ரோமியோ – ஜூலியட்டிலிருந்து அவதானிக்க முடிகிறது.
அவை பல நூறு கிலோமீட்டர்கள் ஆழ்கடலையும் நதிகளையும் தாண்டி வந்து, தாம் பிறந்த இடத்தில் முட்டையிட்டுவிட்டு அடுத்தநாள் இறக்கின்றன. இதுவரையும் சமனை உணவுத்தட்டிலும் சான்விச்சிலும் வைத்து உண்ட எனக்குச் சமனின் வாழ்க்கை வட்டம் புதுமையாக இருந்தது.
அலாஸ்காவில் உள்ள நதி, குளம், குட்டை போன்ற நன்னீர்த் தேக்கங்களில் முட்டையிலிருந்து வெளிவந்த சமன் மீன்கள், பல உருமாற்றங்களுடாக இளம் மீனாகப் பசுபிக் சமுத்திரத்தில் ( 2—4 வருடங்கள் ) வாழ்ந்து பருவமடைந்ததும், இனப்பெருக்கத்திற்காக தாங்கள் பிறந்த ஆறு, குளங்களுக்கு எதிர் நீச்சலடித்து வரும். அப்படி வந்தவை தங்களது முட்டைகளுக்குப் பாதுகாப்பான இடத்தில் முட்டையிடும். அதனருகே ஆண் மீன் விந்துகளைப் பீச்சிய பின் அடுத்த நாட்களில் இறந்துவிடும். இப்படி இறக்கும் சமன் மீன்கள் அங்குள்ள கரடிகள் பறவைகளுக்கு விருந்தாகும். மற்றவை அந்த இடங்களில் சேதன உரமாகும்.
நாங்கள் அலாஸ்கா சென்ற கடந்த செப்டம்பர் மாதத்தில் முட்டையிட வந்த பசுபிக் சமன் மீன்கள் ஏரிகளை நிறைத்திருந்தன. (அட்லாண்டிக் சமன் பல தடவை முட்டை இடும்)
பனி மலைகள் நிறைந்த பிரதேசமாக, முன்னர் படங்களில் பார்த்து ரசித்த அந்த இடத்தில் கால் பதிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நாங்கள் போவதற்கு சில நாட்கள் முன்பாக அலாஸ்காவின் காடுகளில் தீ பரவியதாக அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். அங்கு சென்ற போது புவி வெப்பமடைவதை மிகவும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இப்படியே போனால் அலாஸ்காவில் ஒரு போகம் கோதுமை விளைந்தாலும் ஆச்சரியமில்லை.
சில பறவைகள் இணைபிரிந்தால் மரணிக்கின்றன. நான் நேபாளம் சென்றபோதும் ஒருவகை நீர்ப் பறவைகள் ( Ruddy Shelducks அப்படியானவை என அறிந்தேன் . இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் மனிதருக்கு முன்பே உயிரினங்கள் சோடியாக இணைந்திருந்ததை அறிவோம். ஒரு காலத்தில் மனிதர்களிலும் ஆண் – பெண் இருபாலர்களும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் இயல்பு (serial monogamy) இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆதாம் – ஏவாளுக்கு முன்பே வாழ்வின் இருபாலருக்கும் பாதுகாப்புக் கூறாக, பரிணாம வளர்ச்சியில் இந்த இயல்பு உருவாகியிருக்கலாம் .
ஆனால், பசுபிக் சமன் மீன்கள் காதலுக்காக உயிரையே இழக்கின்றன என்ற செய்தியை அறிந்திருக்கிறீர்களா..?
குறூஸ் லைனர் கப்பலில் செல்லும்போது கரையோரமாக உள்ள அலஸ்காவின் மூன்று நகரங்களில் கப்பல் ஒவ்வொரு நாட்கள் தரித்திருக்கும். குறூஸ் லைனர் பயணம் இதுவே எமக்கு முதலானபடியால் – ஆவலுடன் எதிர்பார்த்த பயணம்.
நான் நினைத்ததுபோல் கப்பலுக்குள் ஒரு கிழமை அடைந்திருப்பது என் மனைவிக்கு இலகுவாக இருக்கவில்லை. தடிப்பான இரண்டு புத்தகங்களும் தொலைக்காட்சியும் எனக்கு இலகுவாக நேரத்தைப் போக்க உதவியது. ஆனால் எனது மனைவிக்கு ஆரம்ப நாட்கள் அங்கு கடினமாகக் கழிந்தது.
150 வருடங்களுக்கு முன்பாக ரஸ்ஷியாவின் பகுதியாக அலாஸ்கா இருந்தது. தொடர்ச்சியாகப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் கடினம் என்று கருதிய ரஸ்ஷியா அதனை 7.2 மில்லியன் டொலருக்கு (2Cents /kM) அமெரிக்காவிற்கு விற்றது.
சமீபத்தில் கிறீன்லாந்தையும் வாங்குவதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி தயாராக இருந்தாரெனச் செய்திகள் தெரிவித்தன.
வன்கூவரில் இருந்த அலாஸ்காவிற்குப் பயணக் கப்பலில் 2000 இற்கு மேற்பட்டவர்களோடு போய் வருவதற்கு ஏழு நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அலாஸ்கா அமெரிக்காவின் , முக்கால் மில்லியனுக்கு குறைவான மக்கள் வாழும் பெரிய மாநிலம். குளிர்காலத்தில் துறைமுகங்கள் , பனிப்பாறைகளால் அடைத்திருக்கும். கோடை காலத்தில் மட்டுமே கப்பல்கள் போய் வரமுடியும் . அக்காலத்தில் ஒரு மில்லியன் உல்லாசப்பயணிகள் செல்வார்கள். இதனால் வான்கூவர் குறூஸ் லைனர் கப்பல்களுக்கு முக்கிய துறைமுகமாகும்.
ஜுனியோ (Juneau) அலாஸ்காவின் தலைநகர்.
ஏற்கனவே துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன . அங்கு இறங்கியவுடன் திட்டமிட்டபடி பனிக்கட்டி உருகுவதால் தோன்றிய ஒரு வாவியில்(
Mendenhall Glacier) சிறிய படகொன்றில் புறப்பட்டு, திமிங்கிலங்களை பார்க்கச் சென்றோம் . நாங்கள் அங்கு சென்றவேளையில் திமிங்கிலங்களைப் பார்க்க முடிந்தது. அத்துடன் சில கரடிகளையும் காணமுடிந்தது. 25 பிரயாணிகள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரப்பயணம். அந்த வாவியைச் சுற்றி மலைகள். குளிர் காலத்தில் நீக்கமற மென்னீல உறைபனியால் நிறைந்திருக்கும்.
GlacierBay
எங்கள் கப்பல் போகும்போது அலாஸ்காவின் பாதுகாக்கப்பட்ட 2000 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தின் அருகே பல மணிநேரம் தரித்து நின்றது. இதுவரை கவிதைகளில் பூ மலரும் ஓசை என்பதுபோல் பனி உடையும் சந்தமென்பது புனைவுதான். அதை நினைத்தபோது, நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பனி உடையும் ஒலி தீபாவளி வெடி மாதிரி கேட்டது .
நிலப்பிரதேசத்தில் துருவ மிருகங்களான துருவக்கரடிகள் , நரிகள் , ஓநாய்கள் போன்று காடுகளில் குளிருக்கு இசைவாக்கமடைந்த மிருகங்கள் வாழும் . எங்களைப்பொறுத்தவரை எல்லாப் பக்கமும் பனியாகத் தெரிந்தது . பலரது கூற்றுப்படி இந்தப் பிரதேசங்களில் நிரந்தர உறைபனியின் தடிப்பு புவி வெப்பமடைவதால் வேகமாக குறைந்து வருகிறது.
ஸ்கக்வே (Skagway)
இந்த அலாஸ்காவில் பெரிய துறைமுகம் உள்ளது . இதனூடாகவே கனடாவின் பகுதியான யுகூன் பிரதேசத்திலிருந்து கனிமப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அந்தக் கனிமப்பொருட்களைத் தோண்டுவதற்கான இயந்திரங்களின் இறக்குமதியும் நடக்கிறது.
இங்குள்ள யுகூன் மலைப்பகுதி 2888 அடி உயரமானது . அங்கு செல்ல ஒரு ரயில் பாதையுள்ளது . எங்களுக்குக் கிடைத்த ஒரு நாளில் அந்த ரயில் பாதையில் சென்று திரும்பும் 3 மணி நேரத்தில், மலைகள், ஆறுகள் , காடுகள் மலைக்குகைகளைக் காணமுடியும். இந்த பகுதியால் போகும்போது நாம் கண்ட காட்சிகள் அற்புதமானவை. இப்பொழுதும் எனது மனக்கண்ணில் அக்காட்சிகள் விரியும். நாங்கள் அங்கே சென்றபோது கோடை முடிந்து இலையுதிர்காலம் தொடங்கியிருந்தது. இயற்கையின் வண்ணங்கள் ரயில் பாதையின் இருமருங்கும் ராட்சத கன்வசாக விரிந்திருந்தது.
Ketchikan
மேற்கூறிய இரு நகரங்களுக்கும் வெளியே சென்றுவிட்டு கெச்சன் என்ற மூன்றாவது நகரை அடைந்தோம். உலகத்தின் சமன்களின் (மீன்கள் ) தலைநகரமென்பார்கள்.
இந்த நகரத்தைப் பார்ப்பதற்கு வழிகாட்டியாக ஒரு ஃபோட்டோகிராபரை ஒழுங்கு பண்ணியதால் அவர் எம்மை நகரத்தின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றதுடன் போட்டோ எடுக்கும் முறையையும் சொல்லித் தந்தார்.
இங்கு ஏராளமான சமன் மீன்கள் பிடிக்கப்படுவதால் துறைமுகம் முழுவதும் மீன்பிடிக்கப்பல்களால் நிரம்பியிருந்தது.
இங்கும் பல இடங்களில் ஆதிகுடிகளது கதைகள் சீடார் மரக்கம்புகளில் செதுக்கப்பட்டிருந்து. ஆற்றில் சமன் மீன்பிடிப்பதும் சீடார் மரங்களைத் தோணிகளாகப் பயன்படுத்துவதும் அலாஸ்காவின் ஆதிக்குடிகளிடம் பார்க்கமுடிந்தது.
ஏழு நாளில் குறைந்த அளவே நேரம் நிலத்தில் மற்றபடி நேரமெல்லாம் பசிபிக் சமூத்திரத்தில் மிதக்கும் குருஸ் லைனரில்தான்.
குருஸ் லைனரில் மூன்றுவேளை உணவிற்குப்போகும்போது சக பிரயாணிகளை சந்தித்து உரையாடும்போது நெருங்கிப் பழக முடிந்தது. இங்கேயும் பெரும்பாலானவர்கள் கப்பல் பயணங்கள் உல்லாசப்பிரயாணமாக இருப்பதிலும் பார்க்க, தங்கள் கவலைகளை மறக்க பயணம் துணையாக இருப்பதை அறியமுடிந்தது. எமக்கு பலரது நோய்கள் சோகங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. முதியவர்களுக்கு இப்படியான பயணங்கள் தற்காலிகமான நண்பர்களையும் கவனிப்பையும் கொடுக்கிறது.. ஒரு அமரிக்க மூதாட்டி தொடர்சியாக 10 வருடங்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் குருஸ் லைனரில் சுற்றிவிட்டு தனது ஓய்வு விடுதியிலும் பணச்செலவு குறைவாகவும் கவனிப்பு அதிகமாகவும் இருந்ததாக கூறினார்.
அலைமோதும் சமுத்திரங்களில் புயல்களை சமாளித்து நடந்த குருஸ் லைனர்களின் பயணங்களை கோரோனா தலைகீழாக கவிழ்த்துவிட்டது.
—0—

மறுமொழியொன்றை இடுங்கள்