வன்கூவர் நகரம்


நடேசன்

எனது வீட்டில் உள்ள லாபிரடோர் சின்டியும் கனேடியக் கரடிகளும், வன்கூவர் துறைமுகத்தைச் சுற்றியுள்ள கற்பாறைகளில் குடும்பங்களாக குளிர்காய்ந்துகொண்டிருந்த சீல்களும் உறவினர்களாக இருக்கவேண்டும் என்ற கணிப்பு, கனடாவிற்கு போன பின்பே மிருக வைத்தியனாகிய எனக்குத் தெரிந்தது .

வன்கூவரின் துறைமுகம் சார்ந்த பகுதிகளை ஒரு மோட்டார் வள்ளத்தில் சுற்றிப்பார்த்தபோது, அங்கே கடலுக்குள் பெரிய கப்பல்கள் தரித்து நின்றதை அவதானித்தேன். கரையோரப் பாறைகளில் அமைதியாக கூட்டம் கூட்டமாகச் சீல்கள் படுத்து உறங்கின . அந்தச் சீல்களைப் பார்த்தபோது அவற்றில் எனது வீட்டில் வளரும் லாபிரடோரின் முகச்சாடை கொஞ்சம் இருந்தது என்பது மட்டும் எனது கணிப்பு. எனது வழிகாட்டி அந்தச் சீல்கள் நாய்களின் குடும்பத்தைச் சேர்ந்தவையென்றான்.

கனிபோர்மியா (Caniformia) என்ற குடும்பத்திலிருந்து நாய்கள், கரடிகள், ஓநாய்கள் முதலான பிராணிகள் யாவும் 47 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டன. சின்னத்தம்பி வாத்தியாரின் பிள்ளைகள் கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி எனப்பிரிந்து குடிபெயர்ந்தது போன்றது அந்த பிராணிகளின் பிரிவு. இயற்கையில் பரிணாம வளர்ச்சி எப்படியானது..? என்பதை இந்த உதாரணத்தால் புரிந்து கொள்ளமுடியும். இந்தக் குடும்பத்தின் முக்கியமான இயல்பு தீவிரமான மோப்ப சக்திதான். மனிதர்கள் சூழலைக் கண்ணால் அறிந்துகொள்வதுபோல் இவை நாசியால் நுகர்ந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன.

மூன்று நாட்கள் வான்கூவர் நகரின் மத்தியில் தங்கினோம் . ஒரு விதத்தில் அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரை ஒத்த பசுபிக் கடலருகே உள்ள துறைமுக நகரம் .

உலகத்தில் வாழ்வதற்குச் சிறந்த நகரங்கள் என்ற கணிப்பில் மெல்பன் – சிட்னியோடு போட்டி போடும் நகரமென அறிவேன். ஆனால், மெல்பன் – சிட்னிபோன்று பந்திப்பாயை உதறி விரித்து கால் ஏக்கர் காணியில் கத்தரிக்காய் வைக்கமுடியும் என்பது போலில்லாதது, முக்கியமான இடங்களில் மாத்திரம் உயரமான கட்டிடங்கள் அமைத்து மக்கள் அடர்த்தியாகக் குடியேறுகிறார்கள். இதன் மூலம் அந்த கடற்கரைப் பிரதேசங்களில் தேவையற்று மக்கள் தொடர்ந்து பரவுவதும் அதன் பின்பு அங்கெல்லாம் பாடசாலை, பாதைகள் என நகரவாக்கம் நடப்பதும் குறையும் . இயற்கை வளங்களான காடழிந்து, தண்ணீர் , காற்று அசுத்தமாவதும் தடுக்கப்படும்.

கனடாவில் வாழ்வதற்குப் பணம் அதிகம் தேவையான நகரமாக வன்கூவர் உள்ளது. இங்கு பணமதிகமிருக்கும் எந்த நாட்டவர்களும் மேக்ன் இளவரசர் ஹரி போன்று வந்து தங்கலாம். பணமிருந்தால் எத்தனை வீடுகளும் வாங்கலாம் . இதனால் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முடியும். சிகரட்போல் கஞ்சா குடிக்கவும் இங்கே பல காலமாக அனுமதியுண்டு. வட அமெரிக்காவின் மேற்குக்கரையில் ஒரு ஆம்ஸ்ரடாம் எனலாம்.நகரின் மத்தியில் நின்றதால் பல விடயங்களுக்கு வசதியாக இருந்தது . நாங்கள் பல அமெரிக்க குடும்பங்களைச் சந்தித்தோம் . சியாட்ரலில் இருந்து வாரவிடுமுறைக்கு வந்து போவார்கள்.
காலை பத்து மணியளவில் எழுந்து மக்டொனால்ட்ஸின் காலை உணவை உண்பதற்காக அங்கே சென்றபோது ஒரு இளைஞனும் அவனது நாயும் அன்னியோன்னியமாகக் கடைவாசலருகே ஆழமான உறக்கத்திலிருந்தார்கள். முக்கிய மாக வாரவிடுமுறைநாளில் பல இடங்களில் கடைகளின் முன்பு உறங்குபவர்களைப் பார்க்க முடிந்தது. கனடாவில் குளிர் குறைந்த இடமென்பது வன்கூவர் என்பது உண்மைதான். டொரண்டோவில் படுத்திருந்தால் பனிக் கட்டியாக உறைந்திருப்பார்கள் .

பசுபிக் சமுத்திரத்தில் இருப்பதால் கனடாவில் பெரியதாகவும் வட அமெரிக்காவிலே மூன்றாவது பெரிய துறைமுகமாகவும் வான்கூவர் விளங்குகிறது . இங்கிருந்து இறக்குமதியான பொருட்கள், கிழக்கு நகரங்களுக்கு ரயிலில் போகின்றன. அதேபோல் மூலப்பொருட்கள் வான்கூவருடாக மற்றைய நாடுகளுக்குச் செல்கின்றன .

வான்கூவரில் நான்கு நாட்கள் சுற்றுலா சென்றபோது, ஏராளமான உல்லாசக்கப்பல்களை கண்டோம். அந்தக்காட்சி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பேருந்துகள் தரித்து நிற்கும் காட்சியை நினைவுபடுத்தியது. அந்தக்கப்பல்கள் இங்கிருந்தே அலாஸ்கா போய் வருகின்றன. மிக இலகுவில் கப்பல் மாறி, வரிசையில் நிற்பதற்கான சாத்தியமும் உண்டு. அமெரிக்காவிற்கான விசா உள்ளதா எனப் பார்த்து அனுப்பிவிடுவார்கள்.

மெல்பனை பூங்காக்களின் நகரமென நினைத்த எனக்கு, வான்கூவரில் நகரத்தின் மையத்தில் காணப்பட்ட பல பூங்காக்கள் அதனையும் பூங்காக்களின் நகரம்தான் எனச்சொல்லத்தோன்றுகிறது. வான்கூவர் மக்களுக்கு தேவைக்கதிகமான பிராணவாயுவும் அங்குள்ள வனங்களில் உருவாக்கப்படுகிறது என நினைத்தேன். அவர்கள் அமேசன் எரிவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை
துறைமுகத்தைச் சுற்றி இயற்கை வனமாக ஸ்ரான்லி பூங்கா உள்ளது . அங்கிருந்தும் நகரத்தைப் பார்க்கமுடியும் .
நாமெல்லாம் கதை சொல்வதற்குக் காகிதத்தில் எழுதுவோம். தென்னமெரிக்கா போனபோது கயிறுகளின் முடிச்சுகளில் இன்கா மக்கள் கதை சொல்வதைப்பார்த்தேன் . அவுஸ்திரேலிய ஆதிகுடிகள் புள்ளிக்கோடுகளால் தங்கள் கதைகளை வரைவார்கள். அதே போன்று, அதற்கு இணையாக கனேடிய ஆதிக்குடிகள் (The Totem Poles) மரக்கம்பங்களில் சித்திர வேலைப்பாடுகளை செதுக்குகிறார்கள். ஒருவிதத்தில் அவை, நமது மகாபாரதம் போன்ற தொன்மைக் கதைகளுக்கு இணையானவை. இதற்கு அவர்கள் பாவிப்பது சிவப்பு சிடர் மரங்களே .

வன்கூவர் மத்தியில் செல்லும் கபிலானோ ஆற்றுக்கு மேலே 230 அடி உயரத்தில் (Capilano Suspension Bridge ) இதன்மேல் இரும்புக்கம்பிகளால் அமைந்த 70 மீட்டர் தூரத்திற்கு ஒரு ஒரு தொங்கு பாலமுள்ளது. தொடர்ச்சியாக ஆடியபடி இருக்கும். இந்தப் பாலத்தில் வருபவர்கள் சிலர், அதன் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு பாதிவழியில் திரும்பிவிடுவாரகள் . பாலத்தைக் கடந்து முடித்தால் ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள் . செயற்கை இடுப்புடன் எனது மனைவி சியாமளா அந்தப்பாலத்தில் நடந்தது சாதனையேதான். இந்தப் பாலத்திலிருந்து குழந்தையைத் தூக்கிப் போட்ட தாய்மார் மற்றும் தவறி விழுந்து மரணமானவர்கள் என துன்பியல் வரலாறும் உண்டு .
என்ன… நின்று நிதானமாக கடக்கமுடியாது! தொடர்ச்சியாகப் பார்வையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள் . அதைக்கடந்து சென்றால் அழகான பல உயரமான மரங்களைக்கொண்ட வனமுள்ளது

வான்கூவரின் நகரின் மத்தியிலே 4200 அடி உயரமான மலை (Grouse Mountain) தென்படுகிறது. குளிர்காலத்தில் பனி விளையாட்டுகளுக்குத் தேவையான பனியும் பெய்யும். நாங்கள் அங்கு சென்ற கோடைக்காலத்திலும் உச்சிக்குப் போனபோது குளிர்ந்தது. இங்கு கிரைண்டேர் Grinder 2001 என்ற பிரவுன் கரடி வசிக்கிறது . அல்பேட்டா மலைப்பிரதேசத்தில் தனித்து விடப்பட்டபோது 4.5 கிலோ நிறையுள்ள குட்டி பின்னர் 300 கிலோவுக்கு உருமாறியது போலிருக்கும்.

மனிதர்கள் ஒரு மாதம் படுக்கையில் கிடந்தால் எலும்பு தசை போன்றவை தளர்ந்துவிடும். ஆனால் கரடிகள் ஆறுமாதம் பனிக்குளிரில் இருக்கும்போது எப்படி எலும்பு, தசையை பராமரிக்கின்றன என்ற கேள்விக்கு கிரைண்டரும் கூலாவும் பதில் தருகின்றன. குளிர் காலத்திற்கான குகையை உருவாக்கி அவைகளுக்கு கொடுத்தபோது அங்கு கெமரா வைக்கப்பட்டது. பகல் நேரத்தில் இந்தக் கரடிக்குட்டிகள் நித்திரையில் நடக்கும் மனிதரைப்போல் எழுந்து நடந்துவிட்டு மீண்டும் படுக்கின்றன. அக்கரடி இதை ஒவ்வொரு நாளும் செய்ததாக கமெராவால் கண்டு பிடிக்கப்பட்டது . கரடிக் குகைக்குள் போய் அறிந்துவர முடியாத விடயத்தை அறிய இந்த இரண்டு குட்டிகளும் உதவின என்றார்கள்.

வனத்தில் பார்க்க முடியாத பிரவுன் கரடியை இந்த மலையில் பார்த்தபோது எனது சின்டியின் உறவினர்களைப் பார்த்தேன் என்று வீட்டில் சொல்லமுடியும்.
—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: