

இராஜேஸ் பாலா
டாக்டர் நடேசன் எழுதிய ‘ வண்ணாத்திக்குளம் நாவலைப்படித்ததும், நீண்ட காலமாகத் தொடரும் அனல் வெயிலிலிருந்து காப்பாற்ற குளிர்ந்த நீர்வீழ்ச்சி தலையிற் கொட்டிய புத்துணர்வு வந்தது.
இங்கு குறிப்பிடப்பட்ட அனற் காற்று லண்டனில் கொதிக்கும் வெயிலை முன்படுத்தி எழுதப்பட்டதல்ல.
கடந்த சில வருடங்களாக இலக்கியம் என்ற பெயரிலும், ஊடகக் கருத்துக்கள் என்ற பெயரிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் விடயங்களைப் பற்றிய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த அனல் வெயில் உவமேயம்.
இன்றைய புலம் பெயர்ந்த பல இலக்கியங்களைப் படிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தைப் படைக்கும் எழுத்தாளனின் சிந்தனை நேர்மை,சமுதாயக்கடமை,எதிர்காலச் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள், அரசியற் தெளிவு என்பன இருக்கின்றனவா என்ற எதிர்பார்ப்புக்கள் தவிர்க்கமுடியாதவை.
இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்தது.
இலக்கியப்படைப்புக்கள் மூலம் அப்படைப்பு பரிணமித்த காலகட்டத்தில், அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கலை கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்,பண்பாடு எப்படியிருந்தன என்பன பற்றி அடுத்த தலைமுறை அறிந்து கொள்கிறது. அவை மட்டுமல்லாது, சொந்த உறவுகளுக்குள்ளும், அவர்களின் வாழ்க்கையோடு தொடர்புள்ள மற்ற வித்தியாசமான மொழிகலாச்சாரங்களைக் கொண்ட மக்களுக்கிடையிலுமிருந்த தொடர்புகளையும் உறவுகளையும் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.
தமிழர்கள் மட்டுமல்லாது எந்த இன மக்களினதும் கடந்த கால வாழ்க்கைமுறைகள் அந்தக் கலாச்சாரத்தச் சேர்ந்த எழுத்தாளனால், சிற்பியால், கவிஞனால் அவர்களின் படைப்புக்கள் மூலம் நித்தியமாக்கப்படுகின்றன.
எழுத்தாளர் நடேசன் தனது சிறு நாவலின் மூலம் இலங்கைத் தமிழரின் வாழ்க்கையில் ‘ தமிழர் விடுதலை’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடயங்களையும் அதனாற் சாதாரண சிங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத மாற்றங்களையும் மிகவும் யதார்த்தமாகச் சொல்கிறார்.
புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதுவரையும் பல நாவல்களைப்படைத்திருக்கிறார்கள். ஏன் புலம் பெயர்ந்தார்கள்? என்ன அடிப்படையில் அந்த புலம் பெயர்வு நடந்தது என்றெல்லாம் பல கோணங்களிற் பல படைப்புக்கள் வந்திருக்கின்றன.
பெரும்பாலானவர்கள் , தாங்கள் பிறந்த நாட்டைவிட்டு நாடோடியாக ஓட வேண்டியதை மிகவும் துன்பநிகழ்ச்சியாக எழுதியிருக்கிறார்கள்.
ஒரு சிலரின் எழுத்தில் தன்னை ஓடப்பண்ணிய காரணங்கள் இன்னும் ஒருதரம் வராத ஒரு சூழ்நிலை வரவேண்டும் என்ற நப்பாசை தெரிகிறது. ஒரு சிலர் , தங்களை நாட்டை விட்டோடக்காரணமாகவிருந்த சிங்களப்பேரினவாததைப் பழிவாங்கவேண்டும் என்று தங்கள் எழுத்துக்கள் மூலம் குமுறுவார்கள்.
நடேசனின் எழுத்தில் எந்தவிதமான பழிவாங்கல் குமுறல்களோ அல்லது தன்னைப்பற்றிய தனிப்பட்ட பொருமல்களோ கிடையாது.
சந்தர்ப்ப சூழ்நிலையால் புலம் பெயரும் ஒருத்தனின் மன நிலையையும் அந்த சூழ்நிலை எப்படி வளர்ந்தது என்பது பற்றியும் ஒரு தனி மனித நோக்கில் எழுதியிருக்கிறார். அந்த எழுத்தின் வலிமை என்னவென்றால் தமிழ் இனத்தின் விடுதலைக்காக என்று சொல்லிக்கொண்டு பத்திரிகைகளிற் கொட்டப்படும் வண்டிக்கணக்கான இலட்சக்கணக்கான சிங்கள இனத்துவேச குப்பைகளைத் தாண்டிக்கொண்டு இவரின் நாவல் இலங்கையிலுள்ள அத்தனை மக்களுக்கும் விடுதலை வேண்டும் என்பதை இலங்கைவாழ் பல்லின மக்களின் வாழ்க்கை மூலம் காட்டுகிறார்.
சூரியா என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மத்திய வர்க்கத்து மிருவைத்தியருக்கும் சித்திரா என்ற சிங்கள ஏழை ஆசிரியைக்கும் உண்டான காதலும் அவர்கள் திருமணம் செய்து கொண்டதும் மட்டும் இந்த நாவலின் கருத்தல்ல. இளம் காதலர்களைப் பின்னணியாக வைத்துக்கொண்டு இலங்கையில்- முக்கியமாக யாழ்ப்பாணத்திலும் பதவியா போன்ற சிங்கள ஏழைமக்கள் வாழும் குடியேற்ற இடங்களிலும் நடந்த வாழ்க்கை மாற்றங்களை மூன்றாம் மனிதனாகச் சொல்லிக் கொண்டு போகிறார்.
தனது சுயசரிதத்தை எழுதுவதுபோல் இந்த நாவலை எழுதியிருந்தாலும் சிங்கள- தமிழ் இளம் தலைமுறைகள் எப்படி இலங்கை அரசியற் போக்கை மாற்ற நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பதற்கு என்னென்ன அரசியல் போக்குகள் காரணிகளாகவிருக்கின்றன என்று தனது அளந்தெடுத்த மட்டுமட்டான வார்த்தைகள் மூலம் தெளிவாகச் சொல்லிக் கொண்டுபோகிறார்.
நாவலின் சுருக்கம்:
இருபத்தந்து வயதுள்ள சூர்யா என்ற யாழ்ப்பாணத்து ( நைனாதீவைச்சேர்ந்தவர்) மிருகவைத்தியர் ஒருவர் மதவாச்சிக்கருகிலுள்ள பதவியாக்( வண்ணாத்திக்குளம்) குடியேற்றப்பகுதிக்கு உத்தியோகம் பார்க்கப்போகிறார். சிங்களச் சினேகிதனின் அழகிய தங்கையில் காதல் வருகிறது. தாய் தகப்பனுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அவர்கள் தங்களின் மகனின் சந்தோசத்துக்காக எதையும் விட்டுக்கொடுப்பார்கள் என்று புரிந்து கொண்டவர்.
தனது உத்தியோக நிமித்தமாக,அதிகாலையில் மதவாச்சிச் சந்தியில் றெயினிலிருந்து இறங்குவதுடன் நாவல் தொடங்குகிறது. அந்த நிமிடத்திலிருந்து அரசியற் சூழ்நிலைகளின் மாற்றத்தால் விமானம் ஏறும் வரை அவருடன் வாசகர்களாகிய நாங்களும் பதவியா, வன்னி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், நைனாதீவு என்று பல இடங்களுக்குப் போய்ப் பல மனிதர்களைச்சந்திக்கிறோம். இவர் நாவலில் வரும் அத்தனை மனிதர்களும் இரத்தமும் தசையுமுள்ள நடமாடும் மனிதர்கள், ஒரு கற்பனாவாதி எழுத்தாளினின் செயற்கைப் பாத்திரங்களல்லர்.
நாவல் ஆசிரியர் தனது நாவலில் தனது பாத்திரங்கஎப்படிக் காண்கிறார் என்பதற்கு இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய பிரபல எழுத்தாளர் டி.எஸ். பி. ஜெயராஜ் பின்வருமாறு சொல்கிறார்.
”சமகால அரசியல் சூழலில், ஆதிக்கம் செலுத்துகின்ற அரசியல் போக்குகளும் நெறிகளும் எத்திசையிற் சென்றாலும்,சாதாரணமக்களிடம் அவர்கள் எந்த இனமாகவிருந்தாலும்சரி, அடிப்படை மனித நேயமும் உத்தம குணங்களுமே நிறைந்திருப்பதை நடேசன் நன்குணர்ந்திருப்பதுடன் நன்றாக உணர்த்தியுமுள்ளார்”
நாவல் ஆசிரியர், தமிழ், சிங்கள இளம் தலைமுறையினர் இன்றைய அரசியற் பிரச்சினகளை எப்படிப்பார்க்கிறார்கள் என்பதைப் பின்வரும் சம்பாசணைகள் மூலம் தொடுகிறார்.
”நாட்டைப்பிரிக்க முடியும் என்றோ,நாட்டைப்பிரித்தால் தமிழர் பிரச்சினை தீரும் என்றோ நான் நினைக்கவில்லை. ஆனால் பண்டார, இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வந்த சிங்களக்கட்சிகள்தான் இன்றைய அவலங்கள் முழுவற்கும் பொறுபேற்க வேண்டும்” என்று தனது கதாநாயன் வார்த்தைகள் மூலம் தனது கருத்தைச்சொல்கிறார் ஆசிரியர் .
ஆனால், 40ம் ஆண்டுகளிற் தமிழ்த் தலைவர்கள் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லவில்லை. நாவலின் ஒரு இடத்தில் இந்தியத்தமிழர்களைப் இலங்கைப் பிரஜாவுரிமையற்றவர்களாக்கியதால் அவர்கள் இலங்கைச் சிங்களத் தொழிலாளர்களுடன் சேர்ந்து அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவது தவிர்க்கப்பட்டது என்று மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் ஜி.ஜி. பொன்னம்பலம் சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் சிறுபான்மைத் தமிழருக்கு 50க்கு 50 வீதம் பாராளுமன்றப்பிரதி நிதித்துவம் கேட்டதுதான் சிங்கள இனம் தமிழர்களை’ வைக்கவேண்டிய இடத்தில்’ வைக்கவேண்டும் என்ற சிங்கள தேசிய( இனவெறி?) உணர்வைக்கொண்டு வந்தது என்பதையும் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்குச் சொல்லவேண்டும்.
இந்த நாவல் 1980-83 காலப்பகுதியில் நடந்ததாக ஆசிரியர் சொல்கிறார்.
அந்தக்கால கட்டத்தில், 1977ம் ஆண்டு இனக்கலவரத்தையடுத்து இலங்கையில் தமிழர்களுக்கிடையிலும் சிங்களவகளுக்கிடையிலும் இருந்த உறவில் பெரியதொரு இடைவெளி பிறந்தது. ஆனாலும் இந்த நாவலின் கதாநாயகன் சிங்களப்பகுதிக்குப் போனபோது இவர் ஒரு தமிழன் என்பதால் அந்த ஊர் மக்கள் இன விரோதத்துடன் நடத்தவில்லை என்பதைக் கதையோட்டத்துடன் சொல்கிறார். அதற்குக்காரணம் அவரும் தன்னை ஒரு இலங்கைப்பிரஜையாகப் பார்த்துத்து அவரது உறவைத்தனுடன் வேலைசெய்யும் சகாக்களுடன் தொடர்கிறார். அவர்களிற் சிலர் ஜே.வி.பியினராகவிருந்ததையும் அவருடன் தொடர்பாகவிருந்ததால் தனக்கும் பிரச்சினை வரக் கூடிய கட்டமிருந்தது என்று அக்காலகட்டத்தில் சிங்கள இளைஞர்களை அரசாங்கம் எப்படிக்கண்காணித்தது என்று எழுதிகிறார்.
தமிழ்ப் பகுதிகளில் 1980ம் ண்டு முற்பகுதியிலேயே ‘ ஈழம் கேட்டுப் போராடும் பெடியன்கள்’ எப்படிச் சமுதாயத் துரோகிகளைக்கொலை செய்து மற்றவர்களுக்குப் பாடம் புகட்டும் தோரணையில் கொலைசெய்யப்பட்ட துரோகிகளைக் கம்பத்தில் கட்டிவைத்தார்கள் என்று சில சம்பவங்களை ஆங்காங்கே விபரிக்கிறார்.
25 ண்டுகளுக்குப்பின்னும் தமிழ்ப்பகுதியில்’ துரோகிகளின்(??) மரணங்கள் இன்னும் தொடர்கிறது என்பது எங்கள் விடுதலைப் போராட்டத்தின் ‘வளர்ச்சியைப்படம்’ பிடித்துக்காட்டுகிறது.
இலங்கை அரசியல் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் லஞ்சத்தில் வாழ்கிறது என்பதைப்பல இடங்களில் எடுத்துக்காட்டுகிறார்.
விவசாய வளர்ச்சிக்கு வசதியற்ற நிலப்பரப்பில் வாழும் யாழ்ப்பாணத்து மக்கள் தங்கள் வாழ்க்கைக்குக் கல்வியை நம்பியிருப்பவர்கள். அந்தக் கல்வியின் மேம்பாட்டுக்குப் பிரச்சினை வந்தபோது ( தரப்படுத்தப்படல்) அவர்களின் வாழ்க்கையின் நடக்கும் அரசியல் பொருளாதார மாற்றங்கள் எப்படி இலங்கை அரசியலையே மாற்றிவிடப் பண்ணியது என்பது இவர் நாவலைப் படிக்கும் இளம் தலைமுறையினர் தெளிவாகப் புரிந்து கொள்வர்.
தங்கள் வாழ்க்கையை ஓட்ட நாங்கள் எப்போதும் எங்கேயோ இடம் பெயர்ந்தவர்களாக்விருக்கிறோம் . முதலில் கொழும்பிலும் இப்போது அயல்நாடுகளுக்கும் அலைகிறோம், என்பதை உருக்கத்துடன் இவர் நாவல் பிரதிபலைக்கிறது
மக்களின் பிரச்சினைக்கு அரசியல்வாதிகள் ஒருநாளும் ஒன்றும் செய்யப்போவதில்லை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக்ச் சாதாரண தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் சொல்கிறார்.
”..எந்தக்காலத்திலும் நான் அரசியல்வாதிகளச் சந்தித்ததோ பேசியதோ,கிடையாது.பேராதனைப்பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களிடம் பேசிய அரசியல் மட்டும்தான்.யாழ்ப்பாணத்தில்லரசியற் கூட்டங்களுக்குச் சிறுவயதில் சென்றபோது அவர்கள் பேச்சுக்களைக்கேட்டு இருக்கிறேன். வயது வந்ததும் அந்தப் பேச்சுக்களின் போலித்தனங்கள், சந்தர்ப்பவாதங்களும் புரிந்தபின் நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை.னால் என்னால் அரசியலை வெறுக்க முடியவில்லை.இதைவிட மிகவும் கவனமாக உள்நாட்டு வெளிநாட்டு அரசியலைக்கவனித்து வந்தேன். என்னோடு படித்த சிலருக்கு இலங்கை எந்த வருடம் சுதந்திரம் அடைந்தது என்றுகூட சரியாகத் தெரியாது”(பக்கம் 54).
இவரது நாவல் என்ன சொல்கிறது? சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லியிருக்கிறாரா என்று சில விமர்சகர்கள் வினவலாம்.
அரசியலால் பிரிக்கமுடியாத மனித உறவின் பிணைப்புக்களையும் அந்த உறவுகளுக்கு வரும் சோதனைகளையும் இவர் தனது நாவல்மூலம் சொல்ல வருகிறார். சொல்ல வந்ததை நேர்மையாகக் கோர்த்திருக்கிறார். ஒரு கலைஞன் தனது அனுபங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தன்னால் முடிந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு நாவலாசிரியன் தனது உள்ளத்துக் கற்பனையை, உள்ளார்ந்த உண்மையை வார்த்தைகளால் வண்ணம் சேர்க்கிறான். மனசுத்தியற்ற படைப்பாளியால் நல்ல படைப்புக்களப் படைக்க முடியாது.
அந்தப்படைப்பாளியின் ஆதிமூல உறவுகள், அனுபவங்கள், படிப்பு, என்பன அவனது படைப்பில் முக்கிய இடத்தைப்பெறுகிறது. நடேசனின் மனித நேயம் பற்றிய கோட்பாடுகள் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் சூடுகின்றன.
சாதாரண மக்களைப் பிரித்துவைக்கும் இனவாத அரசியல், சீதனம் என்ற பெயரில் மனிதர்களை விலைபேசுதல் என்ற குரூரமான ஆசைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதநேயமுள்ள குடுமபப் பின்னணியிலில் பிறந்து வளர்ந்த அதிர்ஷ்டசாலியிவர்.அதை இவரின் கதாநாயகன் மூலம் நாங்கள் தெரிந்து கொள்கிறோம். கதாநாயகனின் தகப்பன் மூலம் இவரின் இந்த அருமையான நாவலுக்கு விதையிட்ட மூலஸ்தானத்தை நாங்களும் தரிசிக்கிறோம் அது அவரின் பெற்றோர்கள்.
”…. படிச்ச முட்டாள், நான் மற்ற தகப்பன் மாதிரி சீதனம் வேண்டுமென்றோ குறைந்த பட்சமாக நாங்கள் பார்த்துப்பேசிய பெண்ணைத்தான் நீ மணக்க வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை எதிர்காலத்தில் நீ நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” (பக்கம்78) இப்படித் தகப்பனுக்குப் பிறந்த மகனாற்தான் சூரியா போன்ற கதாநாயகர்களைப் படைக்கமுடியும்.
அந்தக் கதாநாயகன், அரசியல் என்றபெயரில் சாதாரண தமிழர்கள் பகடைக்காய்களாவது பற்றித் துக்கப்படுகிறான்.
தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதங்கள் எடுப்பதாலும், ஆயுதங்கள் எடுத்தவர்கள் தங்களுக்குல் பிரிவுபட்டு அடித்துக் கொள்வதால் நடக்கும் மனித அழிவுகள் பற்றியும் துக்கப்படுகிறான்.
”… தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக்கட்சியும ;ஒருவரை ஒருத்தர் எதிர்த்தபோது அதிக ஆள் சேதமில்லை.ஒருவரது கூட்டத்திற்கு கல்லெறிந்து குழப்புவது, துரோகிகள் என்று வாயால் திட்டுவதும்தான். ஆனால் ஆயுதங்களை ஏந்தியவர்கள் பிளவுபடும்போது நிலமை மோசமடையும்” (பக்கம் 90).
”… ” எனக்குத் தெரிந்தவரை இலங்கையில் எல்லோரும் மனிதத் தன்மையைஇழந்து கொண்டிருக்கிறார்கள்” (பக்கம் 102) இப்படித் தனது ஆதங்த்தைப் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.
1983ம் ஆண்டுக்கலவரத்தின் பின் பிறந்த நாட்டைவிட்டு அந்நியனாய் வெளியேறுபோது அவர்படும் துக்கத்தைப் பல புலம் பெய்ர்ந்த தமிழர்கள் அனுபவித்திருப்பார்கள்.
இப்படி அல்லற் படும் தமிழரின் கதி என்ன என்ற கேள்விக்கு அவரின் ஒரு கூற்றை முன்வைக்கலாம்.
”தமிழ் அரசியல்வாதிகள் அவசர்ப்பட்டு விட்டார்கள் என்பது மட்டுமல்ல தாங்கள் வைத்த திட்டத்திற்கு எந்த அத்திவாரமும் இல்லாமல் இறங்கிவிட்டார்கள். இவர்களது செயல், ஓடும் வண்டியில் கண்டக்டர் எம்மை அடித்து விட்டாலோ திட்டிவிட்டாலோ வாக்குவாததில் ஈடுபட்டு வண்டியில் இருந்து குதிப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தையே குதிக்கச் செய்கிற குடும்பத்தலைவரின் பொறுப்பற்ற செயலைப்போன்றது என்றும் விளங்கிக் கொண்டேன்” (பக்கம் 128)
அரசியல்வாதிகள் மக்களைத் தங்களின் சுய இலாபத்திற்குப் பணயம் வைத்துக் கொடுமைகளைச் செய்யும்போது அதைத் தட்டிக்கேட்பது மனித நேயத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை மனிதர்களினதும் கடமை என நினைக்கிறேன். அத மிகவும் திறமையாகத் தனது நாவல் மூலம் செய்திருக்கிறார்
”வண்ணாத்திகுளம்” என்ற நாவலைப் படைத்த ஆசிரியர் டாக்டர் நடேசன். ந்ல்லதொரு நாவல் வெளிவந்திருக்கிறது. தமிழ் வாசகர்கள் பெருமைப்படவேண்டிய விடயம். படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஒரு நல்ல படைப்பு ”வண்ணாத்திக்குளம்”.
வண்ணாத்திக்குளம்’PDF தேவையானவர்கள் தொடர்பு கொள்க
மறுமொழியொன்றை இடுங்கள்