
நானும் சித்ராவும் மதவாச்சி வைத்தியசாலைக்கு புதிதாக இடமாற்றமாகி வந்திருந்த கண்ணனை சந்தித்தோம். கண்ணன் என்னுடன் பேராதனை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவன்.
மதவாச்சியில் உள்ள வைத்தியசாலை சிறியது. ஒரு வைத்தியரை மட்டும் கொண்டுள்ளது. பெரிய நோய்கள் வந்தால் வவனியாவோ அநுராதபுரமோ தான் செல்ல வேண்டி இருக்கும். பல வருடங்களுக்குப் பின்பு சந்தித்தபடியால் ஏராளமான விஷயங்களை பேசினோம். சித்திரா எங்கள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள். பெரும் பாலும் தமிழில் இருந்ததால் அவளுக்குப் புரியவில்லை.
வீடு திரும்பும் வழியில் ‘உங்களுக்கு யாழ்ப்பாணத்து நண்பர் கிடைத்து விட்டார் இல்லையா? ‘ என்றாள்.
‘உனக்கு எரிச்சல் போல’ என சிறிது சீண்டினேன்.
‘அப்படியானால் நான் பதவியா போகிறேன். ‘
‘உன்னை சீண்ட கூறினேன். பிளீஸ் ‘
அடுத்த வார விடுமுறைக்கு கண்ணனை வீட்டுக்கு அழைத்து உபசரித்தோம். கண்ணனிடம் ஒரு விஷயம் எனக்கு பிடிக்காது. அவன் அசைவம் சாப்பிடுவதில்லை.
மதவாச்சி போன்ற காடுகள் சூழ்ந்து இருக்கும் பிரதேசத்தில் விதம் விதமான மிருக மாமிசங்கள் சாப்பிடும் வசதி உண்டு. யாரோ சட்டவிரோத மானையோ மரையையோ வெடி வைத்து கொன்றால் அந்த இறைச்சியை பரிசோதித்து அத்தாட்சி பத்திரம் கொடுக்கும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. இறைச்சியை என்னிடம் கொண்டு வரும் பொலிசார் அதில் ஒரு பகுதியை என்னிடம் தருவார்கள். இந்த பழக்கம் பல காலமாக நடக்கிறது. ஆரம்பத்தில் மனதை உறுத்தினாலும் பின்னால் பழகி விட்டது
இப்படித்தான் ஒரு நாள் இரவு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ்கான்ஸ்டபிள் கதவை தட்டினான். வந்தவன் கையில் ஒரு கலன் பிளாஸ்டிக் பாத்திரமும் கையில் ஒரு பொட்டலமும் இருந்தது. அவரது முகத்தில் சாராய வாடை கப்பென அடித்தது.
‘என்ன இந்த நேரத்தில் ‘ என சிறிது எரிச்சலுடன் கேட்டேன்.
‘ஐயாவுக்கு மான் இறைச்சியும் கொஞ்சம் கசிப்பும் உள்ளது. நீங்கள் ஒரு சேட்டிபிக்கெட் தரவேணும் ‘ என்றான். அவனுடைய வார்த்தைகள் தடுமாறிக்கொண்டு வெளியே வந்தன.
பேசிப் பிரயோசனமில்லை என உணர்ந்து உள்ளே அழைத்தேன் அவன் இருக்கையில் அமர்ந்தபிறகு ‘என்ன நடந்தது’ என விசாரித்தேன்.
‘எங்களுக்கு மானை சுட்டதாக தகவல் வந்தது. நாங்கள் இருவர் காட்டுக்குள் சென்றோம். அங்கு மானைச் சுட்டவர்கள் கசிப்பு காச்சி கொண்டிருந்தார்கள். எம்மை கண்டவுடன் ஓடி விட்டார்கள். எப்படி கசிப்பை அரைவாசியில் விடுவது என மனங்கேளாமல் நாங்கள் அதை காய்ச்சி முடித்து மான் இறைச்சியையும் பொலிஸ் ஸ்ரேசனுக்கு கொண்டு வந்தோம். ஆளுக்கு பிரித்தெடுத்து பின்பு உங்களிடம் அத்தாட்சி பத்திரம் வாங்க வேண்டும். வரும் போது நான் உங்களுக்கும் உதவும் என இதை கொண்டு வந்தேன். ‘ என கான்ஸ்ரபிள் கூறினான்.
‘இறைச்சிக்கு நான் அத்தாட்சிப்பத்திரம் தாறேன் ஆனால் கசிப்பை கொண்டு போங்கள் ‘ என நாகரிகமாக மறுத்தேன்.
பல மாதகாலமாக யாழ்ப்பாணம் போகாதபடியால் வீட்டு ஞாபகம் வந்தது. மேலும் அம்மாவுக்கு அடிக்கடி வரும் தொய்வும் நினைவுக்கு வந்தது.
சித்திராவிடம் ‘நீ இந்த வார விடுமுறைக்கு பதவியா செல் நான் யாழ்ப்பாணம் போகிறேன் ‘ என்றேன்.
அவள் ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவளது மனநிலையும் என்னை போல் இருக்கலாம். அத்துடன் ருக்மனை பற்றிய எந்தத் தகவலும் வராத நிலையில் பெற்றோருடன் பேசுவதால் ஆறுதல் ஏற்படலாம் என நினைத்தேன்.
வெள்ளிக்கிழமை வீடு சென்ற என்னை கண்டவுடன் அம்மாவுக்கு நல்ல சந்தோஷம்.
சாப்பிடும்போது, ‘இப்ப அங்கு எப்படி அரசியல் நிலை இருக்கு’ என்றார்.
‘நல்லா இல்லை. ஆனால் நாங்கள் என்ன செய்யமுடியும். ‘
‘இங்கேயும் பெடியள் பலரை துரோகிகள் என சுட்டுக்கொல்கிறார்கள். இன்றும் கூட கொழும்புத்துறைச் சந்தியில் ஒருவரை கொலை செய்து தந்திக்கம்பத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கும் அவன் மேல் திருட்டுக்குற்றம் மட்டும் சுமத்தப்பட்டிருக்கிறது. நான் இவன் தம்பி ரவியை ஜேர்மனிக்கு அனுப்பபோகிறேன். இங்கு இருந்தால் இவனும் இயக்கம் என்ற போகக்கூடும்.’ என்று வழக்கத்துக்கு மாறாக அப்பு இப்படிப் பேசினார்.
‘நல்ல விஷயம் தான்.’ அவனும் வெளிநாடு போவதுதான் அவனுக்கும் பாதுகாப்பு என்று நானும் நினைத்திருந்தேன்.
‘நீ ஏன் வெளிநாடு போகக் கூடாது’?
‘எல்லோரும் வெளிநாட்டுக்கு போமுடியுமா? மேலும் நான் மதவாச்சியில் சந்தோஷமாகஇருக்கிறேன்.’
‘சரி, கலவரம் ஏதாவது வந்தால் சிங்களபொடிச்சியோடு எங்க போவாய்? ‘
‘கலவரம் ஏதாவது வரும் என ஏன் யோசிக்கிறீர்கள் ‘.?
‘சரி ஏதோ சொல்லிப்போட்டேன் ‘. எனகூறிவிட்டு சுருட்டை பற்ற வைத்துக் கொண்டு படலையோரமாக சென்றார்.
வராந்தாவில் பாயை போட்டுக்கொண்டு நிலா வெளிச்சத்தை பார்த்துக்கொண்டு படுத்தேன். அப்புவை எதிர்த்து பேசினாலும் அப்புவின் கூற்றில் உண்மை இருபபதாக நினைத்தேன்.
மதவாச்சி பால் சேகரிப்பு நிலையத்தில் வேலை செய்யும் மார்ட்டின் சில்வா தொடர்;ச்சியாக கொட்டியா(புலி) என்ற பிரசாரத்தை என்மேல் கட்டவிழ்த்து கொண்டிருந்தார். பெரும்பாலானவர்கள் நம்பாவிட்டாலும் ஒரு சிலருக்கு அந்த கதைகள் காதில் ஏறியது. வடபகுதியில் தொடர்ச்சியாக நடந்த கொலைகளும் தாக்குதல்களும் சகல தமிழர்களும் புலியாக இருக்கலாம் என்று சிங்களவர்கள் அனைவரையும் நினைக்க வைக்கும் நிலைக்குத் தள்ளியது.
யூலை இருபத்திநாலாம்; திகதி திருநெல்வேலியில் குண்டு வெடிப்பு நடந்தது என கேள்விப்பட்டவுடன் சித்ராவை பதவியாவுக்கு செல்ல சொல்லி விட்டு மதவாச்சியில் கண்ணனுடன் தங்கினேன். கெப்பத்திகொல்லாவையில் நெல்லியடியைச் சேர்ந்த எண்ணெய் லாரியைச் சிங்கள காடையர்கள் அதில் நாலு தமிழர்களுடன் சேர்த்தே எரித்தார்கள். இவர்களின் சடலத்தை அதே ஊரை சேர்ந்த கண்ணனே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலையையும் எனக்கு விபரித்தான். கொழும்பில் கறுப்பு யூலை அரங்கேற்றப்பட்டது.
அநுராதபுரத்தில் கடைகள், வீடுகள் கொழுத்தப்பட்டு பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
இவர்கள்ளில் பலர் எனக்கு பழக்கமானவர்கள்.மதவாச்சி பகுதியில் எதுவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனாலும் இரவு நேரத்தில் எங்களுக்கு பழக்கமான சிங்கள நண்பர்களின் வீடுகளில் தங்கினோம். ஓர் இரவு எமக்கு பழக்கமான விஜசிங்க என்ற சிங்கள குடும்பத்pனருடன் நாம் தங்கினோம். இருவரும் ஆசிரியர்கள். நான்கு பெண்குழந்தைகள் உண்டு.
இவர்களின் வீட்டில் உணவுண்டு விட்டு பத்து மணியளவில் படுக்க போனோம். இந்த தம்பதிகள் தங்கள் படுக்கையறையை எமக்கு தந்து விட்டு அந்த அறையின் முன் படுத்தார்கள். நடுநிசியில் எனது காலில் யாரோ தட்டி எழுப்பியது போலத்தோன்றியது திடுக்கிட்டு எழுந்தேன்.
படுக்கைக்கு அருகில் திருமதி விஜயசிங்கா டாச்லைட்டுடன் ஒரு கழல் துப்பாக்கியுடனும் நின்றார். எனது நெஞ்சில் தண்ணியில்லை. பயம் வாயை அடைத்தது.
திருமதி விஜயசிங்;க ரகசிய குரலில் முதலில் பேசினார். ‘தயவு செய்து இந்த துப்பாக்கியையும் லைட்டையும் வைத்துக்கொள்ளுங்கள். இந்த துப்பாக்கியில் ஒரு சன்னம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது நடந்தால் எங்களுக்கு என்ன செய்ய முடியும் ? ‘ என கூறி எனது கையில் துப்பாக்கியையும், கண்ணனின் கையில் லைட்டையும் திணித்தார்.
‘உனக்குத் துப்பாக்கி சுடதெரியும் என அவருக்கு தெரிந்திருக்கு’ என்றான் கண்ணன்.
இருவரும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆனால் விடியும் வரை உறங்கவில்லை.
காலை எழுந்ததும் தேநீரை கொடுத்து விட்டு ‘முடிந்தால் எங்கு சென்றாவது உயிர் தப்புங்கள். இந்த நாடு உருப்படாது’. என்றார் விஜயசிங்க.
கண்ணனின் விடுதிக்குச் சென்று பல விடயங்களை ஆலோசித்தோம். கொழும்பிலும் மற்றும் இலங்கையின் தென்பகுதியில் நடந்த அனர்த்தங்கள் பத்திரிகையிலும் வானொலியிலும் வந்தன. மதவாச்சி போன்ற இடங்களில் எமக்கு எந்த தீங்கும் நடக்கவில்லை என்றாலும், இருபுறமும் எரியும் இந்த தீவின் எதிர்காலம் இருளாகவே தெரிந்தது.
நாட்டின் நிலைமையை சாதாரணமான எங்களால் தீர்மானிக்க முடியாதவிடத்தில் வெளிநாட்டுக்கு செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
‘நாங்கள் எங்கே போகலாம். விசா ஏதும் இல்லாமல் கனடாவுக்கு போகலாம் என்று சொல்கிறார்கள்’ என்று நான் சொன்னேன்.
‘நான் எப்படியும் மேல் படிப்பு படிக்க இங்கிலாந்து போக இருக்கிறேன். ஆனால் இவ்வளவு அவசரமாக அங்கு போக முடியும் என்று நான் நினைக்கவில்லை. ‘ என்று கண்ணன் தன்தளத்தை விளக்கினான்.
இருவரும் கொழும்பு போவதற்கு தீர்மானித்தோம். கலவரம் நடந்து ஒரு கிழமை கூட ஆகவில்லை. எந்த வாகனமும் ஓடவில்லை. மேலும் தென்னிலங்கையில் இருந்து தமிழ் அகதிகள் வடக்கும், கிழக்கும் சென்று கொண்டிருந்தார்கள்.
எமக்கு துணையாக இரு சிங்கள நண்பர்கள் கொழும்புக்கு வர சம்மதித்து அவரில் ஒருவர் தனது காரையும் கொண்டுவர முடிவு செய்தார்.
காரில் கொழும்பு நோக்கி செல்லும் போது நடந்த அழிவுகளை பார்க்க முடிந்தது. நீர்கொழும்பு பகுதியில் ஜாஎல பகுதிகளில் எரிந்த தமிழ்க்கடைகளில் இருந்து இன்னும் புகை வந்து கொண்டிருந்தது.
நீர்கொழும்பில் சிங்கள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி இங்கிருந்து ‘உப்பாலி ரவல்ஸ்’ மூலமாக கனடாவுக்கான விமான சீட்டுகளை ஒழுங்கு பண்ணிவிட்டு மீண்டும் மதவாச்சி திரும்பினோம்.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்