ரொக்கி மலை எக்ஸ்பிரஸ்-கனடா

எங்களது பஸ்பயணம் பல முக்கிய மலைசார் நகரங்களில் தரித்து இறுதியில் Banff என்ற நகரில் (அட்பேட்டா மாநிலம்) முடியும். அங்கிருந்து இரண்டு பகல் ரொக்கி மலை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து மீண்டும் வான்கூவர் சேருவது எமது திட்டம். இந்த மேற்குப் பகுதி பற்றி கனடிய பயணத்தில் எழுதுவதற்கு அதிகமில்லை.

வட அமெரிக்காவில், அலாஸ்காவில் இருந்து தென் அமெரிக்காவின் அண்டாட்டிக் முனைவரை செல்லும் இந்த கண்டங்களின் மோதலால் வட அமெரிக்காவில் ரொக்கி மலையும் தென் அமெரிக்காவின் அன்டீஸ் மலைத்தொடரும் உருவாகியது. அந்த ரொக்கியின் அழகான பகுதிகள் மலைக்கு மேற்குப்புறத்தில் உள்ளது . அதுவே பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேட்டா என நாங்கள் பயணிக்கும் பரந்த அழகான புவியியல் பரப்பாகும்.

பிரேசர் நதியின் (Fraser River ) கிளை நதியான தொம்சன் நதியருகே அரை நாள் பயணமாக சென்றபோது, சுற்றியிருந்த மலைச்சிகரங்களில் கோடையிலும் பனி படர்ந்திருந்தது.

இந்த பஸ் பயணம் பல சிறிய நகரங்களுடாக ரொக்கி மலையின் மீது தொடர்ந்தது. கனடிய பாதைகள் வாகனங்கள் செல்வதற்கு சிறப்பானவை. சுற்றி ஓடும் நதிகள் மலைகளை நெக்லஸ் ஒட்டியாணம் போன்று நீலம் வெள்ளை பச்சை என பல்வேறு நிறங்களில் தழுவிச் செல்கின்றது.
மலையின் கற்பாறைகளில் கனிப்பொருட்கள் கரைந்து அந்த நதி நீருக்கு நகைகளில் பதித்த கற்களைப்போல் வண்ணமயமான காட்சியைக் கொடுக்கிறது . அந்த நீரில் சூரிய ஒளி படரும்போது எமது கண்களை அவை நம்மிடமிருந்து வெளியே எடுத்துவிடுகின்றன .

எமது பாதையில் பிரேசர் நதி பல இடங்களில் பல பெயர்களில் செல்கிறது. மலைச் சிகரங்களில் கோடையில் உருகாத பனியிருந்தாலும் இடையே பனிப்படலம் உருகி, அருவிகளாகிப் பின்னர் வாவிகளாகவும் சிறிய நீரோடைகள்போன்றும் கண்களைப் பறிக்கும் காட்சிகள் ஊசியிலைக்காடுகளை ஊடறுத்துக் கொண்டு சென்றன. அந்த நிலத்திற்குரிய கரடிகள், மான்கள், ஆடுகள் நாம் பயணித்த பாதைகளை பல இடங்களில் கடந்தன.

விக்ரோரியா நகரத்தில் பஸ்ஸில் தொடங்கிய பயணம், அல்பேட்டா மாநிலத்தில் உள்ள பான்வ் (Banff) என்ற இடத்திலிருந்து ரொக்கி மவுண்டின் எக்ஸ்பிரஸ் என்ற உல்லாச ரயிலில் இரண்டு பகல்பொழுது தொடர்கிறது. குகைகள், ஆறுகள், பாலங்கள், வயல்கள் கடந்து வான்கூவர் வந்து சேர்ந்தது.

இந்த ரயில் பயணத்தில் ராஜ உபசாரம் நடக்கும். வைன் அருந்தியபடி சாப்பாட்டை இருந்த இடத்திலிருந்தே ஒருவரால் எவ்வளவு உண்ணமுடியுமோ அவ்வளவு தாராளமாகக் கிடைக்கும் . சிங்கப்பூர் விமானத்தில், விமானத்தில் பிசினஸ் வகுப்பில் நடக்கும் விருந்தோம்பலை விட பலமடங்கு அதிகம். கண்களை நிறைத்தபடி கண்ணாடி யன்னலுடாக மலைக்காட்சிகளை பார்த்து ரசித்தவாறு வயிறு நிரம்ப விழுங்க முடியும்.
இந்தப்பயணத்தில், காட்சிகளானவற்றில் எழுதுவதற்கு வார்த்தைகள் அதிகமில்லை எனக் குறிப்பிடும்படியான சம்பவங்களாக இருந்தவற்றையும் இங்கு தருகிறேன்.

ரொக்கி மவுண்டனில் ஒரு வாவியிலிருந்து எடுத்ததாக ஒரு பெண் காட்டிய இரண்டு கற்களைப் பார்த்தேன். அதில் கடல் வாழ் ஊரிகளின் எச்சங்கள் இருந்தன. தீவில் பிறந்து கடற்கரையில் வளர்ந்த என்னைத் தவிர மற்றவர்களுக்கு அது புரியவில்லை. ரொக்கி மலைப்பகுதி கடலுக்குக் கீழ் இருந்ததற்கான ஆதாரமாக அவை காட்டப்பட்டது

இறுதியாக பஸ் நின்ற பான்வ் (Banff) நகரம், குளிர்காலத்தில் முக்கிய பனி விளையாட்டு பிரதேசமாகும். அங்குள்ள நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சென்றபோது, அங்கு ஒருவர் இந்தியர்போன்ற தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம் பேசியபோது, பாகிஸ்தான் என்றார். உடனே மன்னிப்புக் கேட்டேன். பாகிஸ்தானியரை இந்தியர் என்பதோ இந்தியரை பாகிஸ்தானியர் என்பதோ அவமானப்படுத்தும் விடயமாகக் கருதப்படும் . இலங்கையரான நம்மை எல்லோரும் ‘இந்தியா? ‘ என்றால் நாம் புன்முறுவலோடு ‘இலங்கை’ என்போம். நமக்கு அப்படிச் சொன்னவர்கள் மன்னிப்பு கேட்கமாட்டார் . மேலும் இந்தியாவிலிருந்தே வந்தீர்கள் என்று வரலாற்றுப்பாடம் நடத்துவார்கள்.

நாம் அன்று சந்தித்த பாகிஸ்தானியருக்கு 75 வயதிருக்கும்.

“தனியாகவா வந்தீர்களா? “ எனக்கேட்டேன் .

“ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் இங்கு வருவேன். வந்து ஒரு கிழமை இங்கு தங்கி குளித்துவிட்டுப்போவேன். ஒரு வருடத்திற்கு உடல் நன்றாக இருக்கும் “ என்றார் அவர்.

இந்துக்கல்லூரி விடுதியில் வேலணையிலிருந்து வந்த மணவன் ஒருவன் இருந்தான். ஒரு கிழமைக்கு குளிக்காதிருப்பான். அவனுக்குக் குளிக்காத மேதை எனப் பட்டமளித்தோம். அந்த பாகிஸ்தானியர் அங்கு வந்து தங்கியிருந்து ஒரு கிழமை கந்தகத் தண்ணீரில் குளிப்பவர் என்றபோது அந்தப் பழைய மாணவனை நினைத்தேன்

கோடை காலத்திலும் பலர் அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். இங்குள்ள தேசியப்பூங்காவில் பல கந்தக ஊற்றுக்கள் உள்ளன. இவற்றில் குளித்து உடல் நலம்பெறப் பலர் வருகிறார்கள்
மாலையில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதால் நானும் மனைவியும் பஸ் எடுத்து புறப்பட்டு கந்தக நீச்சல் குளம் போனோம் . கனடாவில் பஸ் – ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. இரண்டு டொலரில் அந்த நீச்சல் குளம் சென்றோம் . மிகவும் வசதியானது. பணம் கொடுத்துப் போனால் எவ்வளவு நேரமும் நிற்கலாம். கந்தகம் கலந்த சூடான நீர் குளமாகக் கட்டப்பட்டுள்ளது. பலர் மணிக்கணக்கில் அங்கிருந்தார்கள்.

நாங்களும் இரண்டு மணித்தியாலங்கள் அந்த தடாகத்திலிருந்து விட்டு மீண்டும் எங்கள் இடத்திற்கு புறப்படவும் மழை வந்தது. தொப்பலாக நனைந்தோம்.
என்னை கனடாவில் அதிசயிக்க வைத்தது கரடிகளே. கரடிகளின் உருவமல்ல அவை அந்த குளிரான பிரதேசத்திற்கு எப்படி பரிணாமமடைந்துள்ளன என்பதே அந்த அதிசயிப்பு . கருப்பு கரடிகள் அதிகமாக கனடாவிலும் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன. அதிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒன்றரை இலட்சம் கறுப்பு கரடிகள் உள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவை தனிநாடு கேட்கலாம்.

பாதையில் பயணித்தபோது எங்களால் நான்கு தடவைகள் அவற்றைக் காணமுடிந்தது. ஆனால் ஒரு தடவை மட்டுமே படமெடுக்கமுடிந்தது. நாய்களிலும் பார்க்க அதிக மோப்ப சக்தியுள்ளன . அத்துடன் வேகமாக ஓடக்கூடியவை. அதிகமாக உள்ளதால் கருப்பு கரடிக்கு குறிப்பிட்ட பிரதேசமில்லை. இலங்கையில் யானைகள் இந்தியாவில் புலிகள்போல் மனிதர்கள் மத்தியில் வந்து விடும் . சின்ன மிருகமில்லை 80-300 கிலோவிலிருக்கும். அதிக எதிரிகளில்லை 30 வருடங்கள் சீவிக்கும் . 80 வீதமான உணவு இலை கிழங்கு என்றாலும் சமன் மீனை விரும்பிச் சாப்பிடும்.

எனக்குப் புதுமையாக இருந்தது- கரடிகள் நவம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம்வரை பிறந்த குழந்தைபோல் தனது குகைகளுக்குள் தூங்கும். எவரும் தொந்தரவுசெய்யமுடியாத குகைகள் மலையுச்சியில் உள்ளது .
அப்படி தூங்குவதற்கு முன்பாக உணவைச் சாப்பிட்டு தனது உடலில் சேகரித்துக்கொள்ளும். அக்காலத்தில் மலம் சலம் விடுவதே இல்லை. இக்காலத்தைக் குகை வாழ்வுக் காலமென்கிறார்கள்- Denning time. அக்காலத்தில் 30 வீதம் உடல் நிறை குறையும். ஜூன் மாதத்தில் உடலுறவு கொண்டாலும் மேலும் சில மாதங்கள் அந்த முட்டை வளரத் தொடங்காது தாமதிக்கும். 220 நாட்கள் அதில் கருத்தங்கும். சின்னக் குட்டிகளை இரண்டு வருடங்கள் பாதுகாக்கும்.

பிறவுன் கரடியை எங்கும் பார்க்க முடியவில்லை. கடைசியாக வன்கூவரில் பார்த்தேன் . வழிதவறியவையாக சரணாலயத்தில் வளர்கின்றன. மிருகக் காட்சி சாலைகளில் மிருகங்களை பார்ப்பது எனக்கு எப்பொழுதும் கஷ்டமான விடயம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: