
இரவு ஒன்பது மணிக்கு ரூபவாகினியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்தேன். சித்ராவுக்கு செய்திகளில் விருப்பமில்லை. அரசியல்வாதிகளின் முகங்களை சுத்திசுத்தி காட்டுவார்கள். அவர்களை சுற்றியே உலகம் சுழல்வதாக கூறி மக்களை நம்பப்பண்ணும் ஒரு வேலை என்பது அவளது வாதம்.
குசினிப்பக்கத்தில் பாத்திரங்களை கழுவிக்கொண்டு நின்றவள் பின் கதவால் யாரோ வருவது கண்டு ரி.வி இருந்த கூடத்தை நோக்கி வந்தாள்.
பின்கதவு வழியாக ருக்மன்; உள்ளே நுழைந்தான்.
‘என்ன பின்பக்கத்தால் கள்ளன் மாதிரி வருகிறாய் ‘ என்றாள் சித்ரா.
‘நான் காலிக்கு போகிறேன் சொல்லிவிட்டு போக வந்தேன் ‘.
‘ஏன் ‘
ஜனதா விமுக்தி பெரமுனையைத் தடை செய்யபோகிறார்கள். அதற்கு முன்பே முக்கியமானவர்களை கண்காணிக்கவும், தேவை என்றால் கைது செய்யவும் உத்தரவு வந்திருப்பதாக பொலிசில் உள்ள நண்பர்கள் மூலம் தகவல் வந்தது. இதைவிட நாட்டில் பாரிய கலவரம் நடக்கலாம். இந்தக் கலவரத்தினைக் காரணம் காட்டி எங்களைக் கொல்லுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தலைமை பிராந்தியத்துக்கு தகவல் வந்துள்ளது. எங்களை வேறு இடத்துக்கு செல்லும்படி உத்தரவு வந்துள்ளது. பதவியாவில் என்னை எல்லோருக்கும் தெரியும். இன்று இரவே அநுராதபுரம் சென்று மற்றத்தோழர்களுடன் நாளை காலிக்கு செல்கிறோம்.
‘வீட்டில் சொல்லி விட்டாயா? ‘
‘சொல்ல நேரமில்லை. நீதான் சொல்ல வேணும். ‘
‘அண்ணா உனது முடிவை மாற்றமாட்டாயா’
ருக்மன்; முடிவு மாறபோவதில்லை என தெரிந்ததும் ருக்மனை பார்த்து ‘ஏதாவது காசு தேவையா’ என்றேன்.
‘காசு இருக்கு. ‘
அறைக்குள் போய் வந்த சித்ரா சில நோட்டுகளை அவனுடைய சேட்டுப்பைக்குள் திணித்தாள்.
சித்ரா கதிரையில் பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். நான் ரி.வி யை அணைத்து விட்டு சித்திரா அருகில் சென்றேன்.
நான் பக்கத்தில் சென்றதும் கண்ணீர் அருவியாக கொட்டியது.
‘என் அண்ணா ஓடி ஒளிந்து தலைமறைவாக வாழும் போது எப்படி நிம்மதியாக இருக்க முடியும். ‘ என்றாள் சித்திரா.
‘ருக்மனின் நிலையில் இந்த முடிவு சரி’ என நான் நினைக்கிறேன்.
‘நீங்களும் இப்படி சொல்லுகிறிர்களே’ என கூறி என் தோளில் சாய்ந்தாள்.
அவளது வாய் அப்படி கூறினாலும் ருக்மன்; தலைமறைவாக வாழ்வதில் அவளுக்கு சந்தோஷம் என்பது எனக்குத் தெரிந்தது.
எனது வேலை முடிந்தது. ஐந்து மணியளவில் பஸ்சில் இருவரும் பதவியா சென்றோம். சிறிபுர செல்வதற்கு ஏழுமணியாகி விட்டது. தாய் எங்களை கண்டதும் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.
‘என்ன திடீரென வந்து விட்டீர்கள் ‘ என்று தாய் கேட்டாh.;
‘உங்களைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அதுதான் வந்தோம்.’ என்றாள் சித்திரா.
பொய்யுரைத்தது அவளுடைய முகத்தில் எனக்குத் தெரிந்தது. தாய் மகளை சந்தேகிக்கவில்லை.
‘உள்ளே வாருங்கள் ‘ என என்னிடம் கூறிவிட்டு ‘தந்தை வந்து விடுவார் ‘ என கூறியபோதே சித்ராவின் தந்தை வந்துவிட்டார்.
இவர்களிடம் எப்படி ருக்மன்; தலைமறைவாகியதை சொல்வது. ஏற்கனவே சித்ரா என்னிடம் இந்த விடயத்தை கூறும்படி கேட்டிருந்தாள். சாப்பாடு முடிந்தவுடன் சொல்லுவது என முடிவு செய்திருந்தேன்.
நாங்கள் சாப்பிடும் போதே சித்ராவின் தந்தையார் ‘சித்ரா, ருக்மனை கண்டாயா? பல நாட்களாக வீட்டுப்பக்கம் வரவில்லை’. என்றார்.
சித்ரா என் முகத்தை ஏறிட்டாள்.
‘உங்களிடம் ஒரு விடயம் பேசவேண்டும்.கதிரையில் உட்காருங்கள் ‘ என்றேன்.
‘உங்களுக்குத் தெரியும் தானே? நாட்டு நிலைமை நல்லா இல்லை. இதனால் ஜனதா விமுக்தி பெரமுனையை மீண்டும் தடை செய்யப் போவதாக பேசுகிறார்கள். இந்த நிலையில் தடை செய்யும் போது பிரதேசப் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படுவார்கள். இதனால் ருக்மன்; இங்கில்லாமல் காலிப்பக்கம் சில நாள் தங்கி இருப்பதற்காக சென்று விட்டான். உடனே பஸ் ஏற இருப்பதால் எங்களிடம் இந்த விஷயத்தை சொல்லும் படி கூறினான். ‘ என மூச்ச விடாமல் கூறினேன்.
சித்ராவின் தாயார் சாப்பாடு விடயத்தில் கவனம் செலுத்தியபடி குசினியில் நின்றதால் இந்த விஷயம் அவருக்குக் கேட்கவில்லை.
‘ருக்மனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைதானே? ‘
‘பிரச்சனை இல்லை, ஆனால் முன்னெச்சரிக்கையாக இப்படி செய்திருக்கிறான். ‘
‘ஆரம்பத்திலேயே சொன்னேன.; இந்த வேலைகளில் ஈடுபடாதே என்று, கேட்டால் தானே.’
‘வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரைக் கேட்டு நடப்பது அந்தகாலம். ‘
‘அந்தக்காலத்தில் தாத்தா மட்டும் கேட்டு நடந்தாரா? ‘ என கூறி முகத்தை திருப்பினாள் சித்ரா.
பலமுறை ருக்மன்; தகப்பனை போல் தன்னிஷ்டமாக நடப்பது என சித்ரா என்னிடம் கூறி இருக்கிறாள். பொறுத்த இடத்தில் சுட்டிக் காட்டுவதில் பெண்களுக்கு மிஞ்ச யாரும் இல்லை என்று நினைத்தேன். சாப்பாடு எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டாலும் ஒரு இயந்திரத் தன்மை தெரிந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்