
கைதிகள் எல்லோரையும் தனித் தனியாக பக்கவாட்டிலும் நேராகவும் புகைப்படம் எடுத்தார்கள்.
பெயர் என்ன, இயக்கம், கைதி இலக்கம் என்பவற்றை அட்டையில் எழுதி கழுத்தில் தொங்கவிட்டு புகைப்படம் எடுத்தார்கள். அதே நிலையில் வீடியோ படமும் எடுத்தார்கள். ஒரு கைதியை வீடியோ படம் எடுக்கும் போது அவர் பெயர், இயக்கம், தீய பழக்கங்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள்.
விசாரணையின் பின் பல கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிந்தேன். முதன் முதலாக மரண தண்டனை அளிக்கப்பட்ட கைதி ………. ஐச் சேர்ந்த டக்ளஸ் எனும் நபர் ஆவார். இரண்டாவதாக மன்னார் பகுதியில் இயங்கிய ரெலோ இயக்க உறுப்பினர் பாலி என்பவரும் மரணதண்டனை விதிக்கப்பட்டார்கள். மரணதண்டனை, கைதிகளுக்கு முன் நிறைவேற்றப்படுவது இல்லை. வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சயனட் பூசிய கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்கள்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தனியாக பிரிக்கப்பட்டு அவர்களின் கால் விலங்குகளுக்கு மீண்டும் மின் ஒட்டு மூலம் ஒட்டப்பட்டன. கைகளுக்கும் விலங்குகள் போடப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
வேறு சில கைதிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர்களுக்கும் மேற் சொன்ன விதம் விலங்கிடப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
சில கைதிகளுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஒரு சிலர் மட்டுமே விடுதலை ஆனார்கள். பலர் இலங்கை இராணுவத்துடன் புலிகள் புரியும் அர்த்தமற்ற யுத்தத்திற்கு காப்பரண்கள் அமைக்க அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கும் ஷெல் அடிக்கும் பலி ஆனார்கள். தமிழருக்கு புலிகள் தீர்ப்பளிக்க இராணுவத்தினர் தண்டனை வழங்குவதும் தமிழீழ விடுதலைக்கு மிக மிக அவசியமானதே. எனக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கோப்பாய் முகாம் ஒன்றுக்கு மாற்றப்பட்டேன். அங்கு முகாமில் சுத்திகரிப்பு வேலைகள் செய்ய பணிக்கப்பட்டேன்.
ஒரு நாள் இலங்கை ஆகாயப்படையினர் நாம் இருந்த முகாமுக்கு விமானக் குண்டு போட்டார்கள். புலிகள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிவிட்டார்கள். அடைத்து வைத்திருந்த கைதிகளில் பலர் கொல்லப்பட்டார்கள். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் சிறையில் இருந்து தப்பி வெளியே வந்தேன். வெளியே வந்த பின்தான் தெரிந்தது தமிழீழமே புலிகளின் சிறைக் கூடமாக மாறியிருந்தது. தமிழீழத்தில் உள்ள மக்கள் எல்லோரும் புலிகளின் கைதிகள் என்றும் உணர்ந்தேன்.
வஞ்சகப் புலிகளினால் தமிழ்க் கைதிகள் படும் இன்னல்களில் எனக்குத் தெரிந்தவற்றை மட்டும் இங்கு எழுதி உள்ளேன். இதைவிட அட்டூழியங்களும் சித்திரவதைகளும் புலிகளினால் வேறு வேறு இடங்களில் செய்யப்பட்டது. உலகிலேயே மனித உரிமையை சிறிதேனும் அறியாத ஓர் அமைப்பு என்றால் அது புலிகள் இயக்கம் தான் என்பதை உலகமே அறிய வேண்டும்.
சர்வதேச மன்னிப்புச்சபையும் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைத்து உலக அமைப்புக்களும் இம்மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க வேண்டும். அத்துடன் கொலைகாரப் புலிகளினது கொடிய சிறையில் வாழும் தமிழ் மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
சித்திரவதை முற்றுக்கு வந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்