மெல்பேனில் ஒரு ” வேங்கைச்செல்வன் “

சபேசன் அண்ணை – எங்கள் எல்லோராலும் அழைக்கப்பட்ட அந்தப் பெருமனிதனின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கிறது. தம்பி என்று எப்போதுமே இளையவர்களுடன் பழகும் அந்தப் புன்முறுவல் என்றும் எங்கள் நினைவுகளில் தொடர்ந்திருக்கும்.

விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் காட்டிய அவரது அளவற்ற பற்றுதல் அபாரமானது. அவருடன் இணைந்து நின்ற செயற்பாட்டாளர்களுடன் அதேயளவு நெருக்கமான மதிப்பை எப்போதும் அவர் வைத்திருந்தார்.

குறிப்பாக நிர்வாக ரீதியாக அவருக்கு வேறுபாடான எண்ணங்கள் இருந்தாலும் கட்டமைப்பு என்று வரும்போது எதனையும் ஏற்ககூடியவராக அதன் வழி செயற்படுபவராக “நான் பெரிது நீ பெரிது என்று எண்ணாமல் நாடு பெரிது” என்பதை வாழ்ந்து காட்டியவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார்.

சின்ன விடயங்களுக்கும் திசைமாறிச் செல்லும் சின்னத்தனங்கள் நிறைந்த மனிதர்கள் மத்தியில் அவர் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்.

தனது வேறுபட்ட அரசியல் கருத்துடையவர்களுடன் கூட, தனிப்பட்ட நட்பை பேணிய அவர் தமிழ்த்தேசியம் தொடர்பாக உறுதியாக இருந்தார். அத்தகைய மாறுபட்டவர்களின் தந்திர வியூகமான புத்தக வெளியீடுகளுக்கு செல்லும்போதும் “தம்பி இன்று ஒரு புத்தக வெளியீட்டுக்கு போகின்றேன்” என தெரியப்படுத்திவிட்டே செல்வார். அவரது ஆளுமையை பொறுத்தவரை அத்தகைய பண்பு அவரை எப்போதும் உயர்வாகவே அனைவர் மனத்திலும் நிலைநிறுத்தியிருந்தது. ஆனாலும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு மத்தியில் இருக்கவேண்டிய கட்டுப்பாடுகளை தானாகவே பின்பற்றுபவராக அவர் வாழ்ந்து காட்டினார்.

அப்படி பரந்த தளத்தில் செயற்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டாலும், தமிழ்த்தேசியம் சார் தளத்தில் தனது கருத்துக்களை இறுக்கமாக முன்வைப்பவராக அவர் இருந்தார். அதில் சமரசங்களுக்கு இடம் கொடுக்க அவர் விரும்பவில்லை.

குறிப்பாக பொதுத்தளம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்கு என்றே ஒரு தனி ஊடகத்தை நடத்தியது மட்டுமன்றி சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்பட்ட “உதயம்” பெற்ற ஊடகமாக செயற்பட்ட விதத்தை நன்கு தெரிந்துவைத்திருந்தார். அதிலும் இலக்கியவாதிகள் என்ற பெயரில் சிலரை முகப்பில் நிறுத்தி, பின்னனியில் சிறிலங்கா தூதரகத்தின் நிகழ்ச்சி நிரலே இருந்தது என்பது அவருக்கும் வெள்ளிடைமலை. இதனை சபேசன் அண்ணையே வெளிக்கொண்டுவந்திருந்தார்.

அதனை ஆய்வுநோக்கில், விபரங்களை சேகரித்து அதுபற்றிய அரசியல் விழிப்புணர்வை செயற்பாட்டாளர்களிடம் ஏற்படுத்துவதில் கவனமாக இருந்தார். “உதயம்” ஒரு கட்டத்தில் நிற்க, இன்னொரு “எதிரொலி” வரும் என்றார்.

அவரது தீர்க்கதரிசனம் சரியாகவே இருந்தது.

அரசியல் சார்பற்ற ஊடகம் என சொல்லிக்கொண்டே சிறிலங்கா அரசின் முகவர்களாக செயற்பட்டமையும் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் போராட்டம் பெருத்த பின்னடைவை சந்தித்தபின்னர், அதன் “இலக்கியவட்டம்” எப்படி சுருக்கம் கொண்டது என்பதும் நிதர்சனமான உண்மை.

அப்படி உதயமான அந்த பத்திரிகையும் தனது காட்டிக்கொடுப்புகளில் வெற்றியீட்டியதாக நினைத்து, அதன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. போருக்கு பிந்திய சூழலில் அதற்கு புதுமுகம் தேவைப்பட்டது போலும்.

போர் முடிந்து பத்து ஆண்டுகளை கடந்த பின்னர் – விடுதலைப் புலிகள் இல்லாத வெளியில் – தாங்கள் என்ன சாதித்தோம் என்பதை இந்த சதிகாரர்கள் சொல்லப்போவதில்லை. மீளவும் இலக்கியவட்டம் என்றும் புத்தகவெளியீடு என்றும் புகுந்துகொள்வார்கள். அங்கும் சபேசன் அண்ணை சொல்வது போன்று, தற்போதைய சிறிலங்கா அரசின் இனவழிப்பு தொடர்பாக ஒரு சிறு கருத்தும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அங்கு அடிவருடிகளை உருவாக்கும் அரசியலே பகிர்ந்துகொள்ளப்படும்.

சொற்களுக்குள்ளே, சொற்களின் நளினத்திற்குள்ளே அரசியலை கண்டுபிடிக்கும் சபேசன் அண்ணைக்கும் அது புரியாமல் இல்லை.

இப்படிப்பட்ட சிறுமைத்தனங்களையும் தாண்டியே அவர்களுக்குமான விடுதலையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதாக சபேசன் அண்ணை அந்த விடயங்களை பார்த்தார்.

நட்புகளினால் உருகிப்போன அவர், இனத்திற்கு நச்சுகள் விதைக்கும் அவர்கள் அரசியலையும் அவர் புரிந்துகொண்டிருந்தார். அதனை எப்போதும் உரியவர்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

அதற்கு அப்பால் தமிழ்மொழியில் எப்போதுமே இலக்கண முழுமை இருக்கவேண்டும் என்பதிலும் நல்ல தமிழ்ச்சொற்களை பயன்படுத்தவேண்டும் என்பதிலும் கவனம் எடுத்துக் கொண்டிருப்பார்.

உதாரணமாக நாம் தமிழர் இயக்கத்தின் மண்டியிடாத மானம் வீழ்ந்துவிடாத வீரம் என்ற மகுடவாக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதுபற்றிய தனது விசனத்தை அவர் பதிவுசெய்திருந்தமை இப்போது நினைவில் இருக்கின்றது. “தம்பி வீரம் என்றால் வீழக்கூடாது. அது என்ன வீழ்ந்துவிடாத வீரம். மானம் என்றால் மண்டியிடக்கூடாது. அது என்ன மண்டியிடாத மானம்” என அவரது பார்வை இருந்தது. அதனை அவர் நேரடியாக சீமான் அவர்களை சந்தித்தபோதும் சொல்லியிருந்தார். இதுதான் சபேசன் அண்ணை.

வானொலியில் அவரது அரசியல் கட்டுரைகள் அவரது குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவரது தனித்துவமான பாணியில் முன்வைப்பதும், பொதுவிடயம் சார்ந்த கட்டுரை எனில் அதன் இறுதியில் உசாத்துணைக்காக பின்வரும் நூல்களில் இருந்து விடயங்களை பெற்றுக்கொண்டோம் எனவும் சொல்லும்போது அவரது ஆய்வுக்கான தேடலின் சுமையும் வரலாற்றின் பதிவுகளின் போது அவற்றின் முக்கியத்துவமும் விளங்கும்.

இதனைவிட 2009 இல் அடுத்தடுத்து கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திய இவர், அதன் பின்னர், Boycott Sri Lanka Campaign மற்றும் 2015 நவம்பரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறான போக்கை கண்டித்து, அதன் பேச்சாளர் வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வை கூட மெல்பேர்ணில் ஒழுங்குபடுத்தியிருந்தார். இறுதிவரை விக்ரோரியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாக தொடர்பாளராக public officer அவர் செயற்பட்டிருந்தார்.

இன்னமும், சிறப்பான தகவற்பெட்டகமாக அரசியல் ஆய்வாளராக அரசியல் கருத்துருவாக்கியாக அவரால் செயற்பட்டிருக்கமுடியும். ஆனாலும் பேரழிவின் பின்புலத்தில் இயல்பாகவே எழும் அந்த சோகச்சுமைக்குள் இருந்து மீளமுடியாதவராக அவரின் இறுதிக்காலங்கள் அமைந்தமை இன்னும் துயரமானவை தான்.

ஒருவரின் சத்திய இலட்சியத்திற்காக பயணித்த காலங்களே எப்போதும் வழிகாட்டியாக இருக்கும். அதுவே அனைவருக்கும் வழிகாட்டி நிற்கும். அந்த வகையில் தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் அண்ணையின் அந்த உன்னதமான நினைவுகள் அனுபவங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி தான்.

– வேங்கைச்செல்வன் –

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: