
புல்மோட்டை கடற்கரை அண்டிய பிரதேசம். இங்கு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். இதற்குப் பக்கத்து சிறு கிராமமான தென்னமரவடி தமிழ்க் கிராமம். இவ்விரு கிராமங்களும் ஆரம்பத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவை. இந்த இரு கிராமங்களையும் சமீபத்தில் அநுராதபுர மாவட்டத்தோடு இணைத்து விட்டார்கள். இதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையில் இருந்த பூகோளத் தொடர்ச்சியை அறுத்துக் கொள்ளலாம். இவ்வாறு இடையில் சிங்கள கிராமங்கள் புகுத்தப்படவதால் தமிழருடைய தொடர்ச்சியாக வாழும் பூகோள அமைப்பு உருவாகும் வாய்ப்பினை மறுக்கலாம் என்பது சிங்கள அரசியல்வாதிகளின் கணிப்பு. இந்த இரு கிராமங்களும் எனது மிருக வைத்தியப் பகுதியை சேர்ந்தவை.
புல்மோட்டையில் இல்மனைட் மண் எடுக்கப்பட்டு இரசாயன பொருட்கள் பிர்pத்தெடுக்கப்படும். இவ்வாறு எடுக்கப்படும் இரசாயனம் அதி உயர் வெப்பநிலையைத் தாங்க கூடியவை. விமானங்களின் மேற்பகுதியில் பூசப்படும். இந்த இரசாயனப்பொருளுக்கு உலக சந்தையில் அதிகமதிப்பீடு இருந்தது.
இந்தப் பகுதியில் இலகுவாக புல்லு வளராது எனவே மாடுகள் வளர்ப்பது கடினம். ஆனால் சிறுபற்றை காடுகள் உள்ளது. கானிமுகம்மது ஆட்டுப்பண்ணை வைக்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தார். இவரது ஆட்டுப்பண்ணைக்கான நிலத்தை நான் பார்த்து அங்கீகரிக்க வேண்டியிருந்தது.
புல்மோட்டை சென்றால் அடுத்த நாள்தான் திரும்பிவரலாம். இதனால் அங்கு செல்ல வேண்டிய பயணம் தள்ளிப்போனது. கடைசியாக ஒருநாள் புல்மோட்டைப் பயணத்தை மேற்கொண்டேன்.
நானும் எனது உதவியாளரான விக்கிரமசிங்காவும் மோட்டார் சைக்கிளில் சென்றோம். அவருடன் பயணித்ததிலே பல சௌகரியங்கள் இருந்தன. சமரசிங்க, பலகாலம் பிரம்மசாரியாக இருந்து சமீபத்தில் தான் திருமணமானவர். தனது பழைய பெண் சிநேகிதிகளின் தொடர்புகளை மிகவும் விரிவாகவும் ரசமாகவும் கூறிக்கொண்டு வந்தார்.
போகும் வழியில் பதவியாவுக்கு முன்பாகக் காட்டுப்பிரதேசம். சாலை ஓரத்து பாரிய மரங்கள் தெருவையே பந்தல் போட்டது போல் நிழல் விரித்து வளர்ந்திருந்தன. சில இடங்களில் மட்டும் சூரியவெளிச்சம் தார் சாலையில் ஊடுருவியது. இயற்கையின் செழிப்பும், சமரசிங்காவின் பேச்சும் கண்ணுக்கும், காதுக்கும் இதமாக இருந்தன.
திடீரென ஓர் மூதாட்டி மரங்களுக்கிடையே இருந்து எமது பாதையின் குறுக்கே வந்தாள். சைக்கிளை நிறுத்த முயன்று வெற்றி கண்டாலும், சைக்கிளை கண்ட பயத்தாலோ அல்லது உடல் தளர்ச்சியால் பாதையில் விழுந்து விட்டார்.
பாதை ஓரத்தில் நிறுத்திவிட்டு மூதாட்டியை பரிசோதித்தோம். மூச்சுப் பேச்சில்லை. விழுந்த போது கால் மடங்கி முறிந்திருந்தது.
‘நாங்கள்போய் விடுவோம். இல்லாவிடில் எமது தலையில் பிரச்சனை வரும்’ என்றார் சமரசிங்;கா.
‘அது நியாயமில்லை ஆடுமாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் நாங்கள் ஒரு மூதாட்டியை விட்டுச்செல்ல முடியாது. ‘
‘நாங்கள் என்ன செய்முடியும்.? ‘
‘கொஞ்சம் பொறு. ஏதாவது வாகனம் வரும். ‘
சொல்லி வைத்தாற் போல் ஐந்து நிமிடத்தில் நீர்ப்பாசன திணைக்களத்து வாகனம் ஒன்று வந்தது. வாகனத்தில் மூதாட்டியை ஏற்றி விட்டு பின்னால் தொடர்ந்து சென்றோம். பதவியா வைத்தியசாலையில் மூதாட்டியை அனுமதித்து பதவியா பொலிசாரிடம் சம்பவத்தை அறிவித்து விட்டு புல்மோட்டைக்கு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
புல்மோட்டையை அடைந்த போது இரவாகி விட்டது தெரிந்தவர்கள் எவரும் இல்லாததால், இல்மனைட் மணல் திணைக்களத்தில் விருந்தினர் விடுதியில் தங்கினோம். விருந்தினர் விடுதியில் கட்டில் நன்றாக இருந்தாலும் நித்திரை வரவில்லை. மூதாட்டியின் விபத்து மனத்தை விட்டு போகவில்லை. இதைவிட சமரசிங்;காவின் குறட்டை படு பயங்கரமாக இருந்தது. புலி உறுமுவதைத்தான் கேட்கவில்லை. ஆனால் இப்படி இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
விடிந்ததும் கானிமுகம்மதுவை சந்தித்து ஆடு வளர்க்க விருக்கும் பகுதியை காட்டும் படி கேட்டோம். கானிமுகம்மது காட்டிய இடத்தில் புல்லும் இல்லை. தழையும் இல்லை. வெறும் மணல் பிரதேசம். அரசாங்கத்திடம் இருந்து நிலம் பெறுவதற்கு இந்த விளையாட்டு எனப் புரிந்து கொண்டோம். ஊடனடியாகப் பதில் சொல்லாமல் ‘மதவாச்சி போய் கடிதம் எழுதுகிறேன் ‘ என கூறினேன்;.
அரசாங்கத்திடம் இருந்து நியாயமற்ற காரணத்தால் நிலம் பெற முயன்றது மட்டுமல்லாமல் எனது நேரத்தையும் வீணடித்து விட்டதுடன் ஒரு மூதாட்டியின் விபத்துக்கும் மறைமுக காரணமாக இருந்ததையிட்டு அவரைத் திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனாலும் என் கோபத்தினை அடக்கி பொறுப்புள்ள அரச ஊழியனாக நடந்தேன். சிங்ள அரசியல் தலைவர்களின் பதவி ஆசைகளின் விபரீதத்தினால், இந்து சமுத்திரத்தின் ‘சொர்க்கத்துளி ‘அழிந்து கொண்டிருக்கிறது. எல்லாம் மண்கொள்ளை! இந்த அவலத்திலே பிடுங்கியது ஆதாயம் என்ற கானிமுகம்மதுகளும் முளைத்துக் கொண்டிருப்பது எனக்கு எரிச்சலை தந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்