
நான் இக்காட்டுக்குள் அமைந்திருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டாம் நாள் கைதிகளின் கால்களுக்கு தனித்தனியாக விலங்குகள் போடப்பட்டது. அதாவது இரும்புச் சங்கிலியால் இரு கால்களும் பிணைக்கப்பட்டு மின்சார ………….. ஒட்டு மூலம் ஒட்டப்பட்டது. ஒவ்வொரு கைதிக்கும் தனித்தனி இலக்கம் கொடுக்கப்பட்டது. கைதிகள் நூறு நூறு ஆட்களாக பிரிக்கப்பட்டன. …. பிரிவில் நூறு கைதிகள் …….. பிரிவில் நூறு கைதிகள் என்ற ரீதியில் வகைப்படுத்தப்பட்டன.
சிறையில் எனது இலக்கம் ………. 18 ஆகும். அங்கிருந்த சகல கைதிகளுக்கும் தனித்தனியே விலங்கிடவும், இலக்கம் கொடுக்கவும் ஐந்து நாட்கள் சென்றது. இவ்வேலை எல்லாம் பூர்த்தியானதும், ஓர் இரவு முன்னர் நான் குறிப்பிட்ட விசாரணைப் பொறுப்பாளர் சலீம் என்பவர் சகல கைதிகளையும் மைதானத்தில் கூட்டி ஒரு பெரிய சொற்பொழிவு ஆற்றினார். அதன் சாரத்தை கீழே தருகிறேன்.
“இங்கிருக்கும் நீங்கள் எல்லோரும் தமிழீழ விடுதலைக்கு துரோகம் செய்ததாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வேலை செய்ததாலும், சமூக விரோதிகளாக கருதப்பட்டதாலும் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள். உங்களில் எவனாவது நான் தமிழீழ விடுதலைக்கு துரோகம் செய்யவில்லை என கூற முடியுமா? எங்கள் தலைவர் உங்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு அளித்துள்ளார். ஆனால் நீங்கள் உண்மை சொன்னால் தான் உங்களுக்கு தலைவரின் பொது மன்னிப்புக் கிடைக்கும். டேய், பு.மக்களே உங்களுக்கு எமது பலம் தெரியவில்லை. உலகின் மூன்றாவது பெரிய வல்லரசான இந்தியாவையே ஓட ஓட விரட்டிய எம்மை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. உலகத்தில் எந்த மூலைக்கு நீங்கள் ஓடினாலும் ஒளிந்தாலும் உங்களை சும்மா விடமாட்டோம். அமிர்தலிங்கத்திற்கு நடந்தது தெரியும்தானே. கொழும்பில் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்ட பலரும் இங்கு கைதிகளாக இருக்கறீர்கள்.
விசாரணையின் போது ஒளித்த ஆயுதங்களை காட்டித்தாருங்கள். உங்களிடமிருந்து பறித்த ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் எமக்குத் தந்த ஆயுதங்கள் எல்லாம் எம்மிடம் போதிய அளவு இருக்கிறது. நூறு வருடத்திற்கு தொடர்ந்து யுத்தம் செய்வோம். இங்கு தண்ணீர் வசதி இல்லை எனவே குடிக்க மட்டும் தண்ணீர் தரப்படும். இப்போதைக்கு முகம் கழுவ தண்ணீர் தர முடியாத நிலை உணவு மூன்று நேரம் தர முயல்கிறோம். ஆனால் சமைக்க நேரம் காணாத படியாலும் பரிமாறுவதில் உள்ள சிரமங்களாலும் உங்களுக்கு இரண்டு நேர உணவு மட்டுமே தருவோம். மேலும் நீங்கள் யாராவது புலிகளை சுட்டிருந்தாலும் உண்மை சொன்னால் உங்களை விடுதலை செய்வேன். எனக்கு தேவை உண்மை. உண்மை சொன்னால் உங்களுக்கு விடுதலை “.
சலீம் பேசி முடித்ததும் எல்லோரும் அவரவர் இடத்திற்கு அனுப்பப்பட்டோம். கைதிகள் வரிசையாக சென்று கொண்டு இருக்கும் போது ஒரு கைதி கழுத்தில் செப மாலை அணிந்திருந்ததைக் கண்ட சலீம் “டேய் வேசை மகனே அறடா செபமாலையை இங்கு நான் தானடா கடவுள், எனக்குத் தேவை உண்மை. செபமாலையாடா உனக்கு விடுதலை தரப்போகிறது. அம்மாமாரை, அக்காமாரை இந்தியன் ஆமிக்கு விட்ட உனக்கு எல்லாம் ஒரு செபமாலை” எனப் பேசினான்.
முகாம் பொறுப்பாளர் தினேஸ் என்பவருக்கு உதவியாளராக கேடி என்பவன் இருந்தான். அவன் மகா முரடன். படு முட்டாள். அரக்கனைப்போல் காட்சியளிப்பான் பள்ளி சென்று படித்திருப்பானோ தெரியாது.
“டேய் பரதேசிகளே ஆயிரம் தண்டனை இருக்கிறது. அவ்வளவும் இப்போ செய்வீர்கள்” ” எனக்கூறி ஒவ்வொன்றாக செய்யச் சொல்லி பணிப்பான். எந்நேரமும் பெரிய பொல்லுடன் கைதிகளைச் சுற்றி சுற்றித் திரிவான். ஒவ்வொரு நாளும் கைதிகளுக்கு அடித்தே இரண்டு மூன்று பொல்லுகளை முறித்துவிடுவான்.
ஒரு நாள் ஒரு இஸ்லாமிய கைதிக்கு அடித்த அடியில் அவருக்கு மலமே போய்விட்டது. கைதிகளை ஆயிரம் தடவை தோப்புக்கரணம் போடும்படி செய்வான். எந்நேரமும் கைதிகளை கையினால் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கும்படி சொல்வான். மோட்டார் சைக்கிளை கைதிகள் இருக்கும் இடத்தில் ஓட்டி வந்து கைதிளுடன் மோதுவான்.
கைதிகள் இருக்கும் களஞ்சிய அறையின் நிலத்தில் 2 அடி ………. அடி சதுரங்களாக தீந்தையினால் கோடு கீறப்பட்டு ஒவ்வொரு சதுரத்திற்கும் ஒவ்வொரு இலக்கம் எழுதப்பட்டிருந்தது. அந்த சதுரத்திற்குள் ஒழுங்காக இருக்காத கைதிகள் கேடி என்னும் அந்த அரக்கனினால் பலமாக தாக்கப்படுவார்கள்.
ஒரு நாள் காலை எழுந்தவுடன் முகாம் பரப்பரபடைந்தது. புலிகள் எல்லோரும் ஓடித்திரிந்தார்கள். சகல கைதிகளையும் அவரவர் இருக்கவேண்டிய இடத்தில் இருத்தினார்கள். முகாமில் ஊசி விழுந்தால் கேட்கக் கூடிய அளவுக்கு அமைதி நிலவியது. காலை உணவு தரும் நேரமும் தாண்டிவிட்டது. உணவு வழங்கப்படவில்லை. தலைவர் கைதிகளை பார்க்க வரப்போகிறார். அதனால் எல்லோரும் ஒழுங்காக இருங்கள் என புலிகள் கூறினார்கள். மதிய உணவு வழங்கும் நேரமும் வந்துவிட்டது. தலைவர் இன்னும் வரவில்லை. எல்லோருக்கும் பசி. மதிய உணவும் வழங்கப்படவில்லை. இரவு பத்துமணிக்கும் தலைவர் வரவில்லை. பின்னர் கைதிகளை கணக்கெடுத்துவிட்டு படுக்கவிட்டார்கள். அன்று கைதிகளுக்கு ஒரு நேர உணவு கூட வழங்கப்படவில்லை. நேரம் இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டிவிட்டது.
சாவகச்சேரி முகாம் ஒன்றுக்கு பொறுப்பாளராக இருந்த பொஸ்கோ என்பவன் என்னை அழைத்து பேசிக்கொண்டிருந்தான். அந்த நேரம் ஆறு வாகனங்கள் வருவது தெரிந்தது. சாமான் வைத்திருந்த குடிசைக்குள் என்னை வைத்து பூட்டிவிட்டார்கள். ஓலைத்தட்டியில் துவாரத்தின் வழியாக வெளியே பார்த்தேன். வாகனங்கள் நிறுத்தப்பட்டு எல்லோரும் ஒரு உசார் நிலையில் இறங்கி தம்மை நிலைப்படுத்திக் கொண்டார்கள். புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா வாகனத்தில் இருந்து இறங்கினார். மாத்தையாவின் முன்னால் சலீம் கைகட்டி மரியாதையாக நின்றார்.
“விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டதா? ஏன் எனக்கு ஒரு குறிப்பும் வரவில்லை?|| என மாத்தையா கேட்டார். தான் இரு நாட்கள் மன்னார் போய் வந்தபடியால் இன்னும் விசாரணை ஆரம்பிக்கவில்லை என சலீம் கூறினார். உடனே மாத்தையா ” மன்னாருக்கு ஏனடா போனனி ? அவளோடு படுக்கவா போனனி. பத்து நாளைக்குள் விசாரணை எல்லாம் முடித்து அறிக்கை எனது கைக்கு வரவேண்டும் அல்லது உன்னைத் தொலைத்துவிடுவேன் “என மற்ற புலிகளுக்கு முன் கோபமாக கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
பின்னர் வாகனத்தில் ஏறி முட்கம்பிகளுக்கு வெளிப்புறமாக முகாமைச் சுற்றி வந்தார். சலீமைக் கூப்பிட்டு “அந்த வேசை மக்களைக் கொண்டு இன்னும் காடு வெட்டு “என சலீமுக்கு உத்தரவிட்டு விட்டு தனது பரிவாரங்களுடன் புறப்பட்டு போய்விட்டார்.
மாத்தையா வந்து போன மறுநாள் கைதிகளுக்கு விசாரணை ஆரம்பமாகியது. விசாரணைக்காக தனியாக பந்தல் போடப்பட்டிருந்தது. விசாரணைப் பந்தல் ஏறத்தாள பதின்ஐந்து அடி அகலம் முப்பது அடி நீளம் கொண்டது. ஒரே சமயத்தில் முப்பது கைதிகளை விசாரணை செய்வார்கள். நாள் ஒன்றுக்கு அறுபது கைதிகள் வீதம் விசாரிக்கப்பட்டார்கள். விசாரணை மேற்கொள்ளும் புலிகள் எல்லோரும் சிறு வயதினர் 18 வயதிற்கு குறைவானவர்கள். இவர்களை மேற்பார்வை செய்ய தீபன் என்ற புலியும் மஞ்சு என்ற புலியும் இருந்தார்கள். விசாரணையின் போது அடிப்பதற்காக முரட்டுத் தோற்றம் கொண்ட பத்துப் புலிகள் வயர், கம்பி, பொல்லு, பச்சை மட்டை ஆகியவற்றுடன் விசாரணைக் கொட்டடியில் நிற்பார்கள்.
இதற்குள் ஒரு நாள் புலிகளின் புலன் விசாரணைப் பரிவுத் தலைவர் பொட்டம்மான் என்பவர் முகாமைப் பார்வையிட வந்தார். ஆனால் முகாமுக்குள் வரவில்லை. முட்கம்பி வேலிக்கு அப்பால் முகாமைச் சுற்றி பார்த்துவிட்டு போய்விட்டர். இவர் வாரத்தில் இரு தடவை இவ்வித விஜயம் மேற்கொள்வது வழக்கம். இவர் வரும் நாட்களிலும் முகாம் உசார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இவரும் தன் பாதுகாப்பு பரிவாரங்களுடன் தான் வந்து போவார்.
புலிகளின் விசாரணை ஒரு ஒழுங்கு படுத்தப்பட்டதாக இருந்ததில்லை. ஒரு திட்டத்துடன் விசாரணையை ஆரம்பிப்பார்கள். பின் இடை நிறுத்துவார்கள். கைதிகளின் அறிக்கை ஊரில் இருந்து வரவேண்டும் என்பார்கள் ஊரில் இருந்து வரும் கடிதங்களை பெரிதாக எடுத்து அதை உண்மையாக்க குறிப்பிட்ட கைதியை சித்திரவதை செய்வார்கள். புலித்தலைவர் பொது மன்னிப்பு என அறிவித்தார் என்பார்கள் ஆனால் மன்னிப்பு என்றால் என்ன என புலிகள் எவருமே அறிந்து கொள்ளவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தண்டனைக்கு உள்ளானார்கள்.
இங்கு வேடிக்கை என்னவென்றால் புலித் தலைவர் பொது மன்னிப்பு அளித்தது யாருக்கு? குற்றவாளிகளுக்குத் தான் மன்னிப்புத் தேவை. ஆனால் இங்கிருந்த கைதிகள் தமிழுக்கு எதிராக, தமிழருக்கு எதிராக தமிழர் தம் விடுதலைக்கு எதிராக ஒரு குற்றமும் செய்யவில்லை. புலிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள் என்பதே இவர்கள் செய்த குற்றம்.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்