
மன்னார் ரோட்டும், யாழ்ப்பாண ரோட்டும்; மதவாச்சியில் ஒன்றாக சந்தித்து கண்டி ரோட்டாக மாறுகிறது. இந்த சந்தியின் இடைவெளியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தைச் சுற்றி கடைத்தெரு உண்டு. இரண்டு உணவுக் கடைகள் இஸ்லாமியரால் நடத்தப்படுகிறது. தமிழர்கள் அரசாங்க வேலை பார்த்து விட்டு வார இறுதியில் காணாமல் போய் விடுவார்கள். மீண்டும் திங்கட் கிழமையில் உயிர்த்தெழுவது போல் தோன்றுவார்கள்.
மன்னார் வீதியில் சிறிதாக ஒரு வீட்டை வாடகைக்கு நாங்கள் எடுத்துக்கொண்டோம். விடுதியை விட்டு சென்றது என் நண்பர்களுக்கு பிரிவு துயரத்தை விட பொருளாதாரத்திலும் பாதித்தது. விடுதியில் குணதாசவும் நானும் மட்டுந் தான் ஒழுங்காக சமையலுக்கு பணம் கொடுப்பவர்கள். விடுதியில் எவரும் சாப்பிடலாம். முக்கியமாக ஜே.வி.பி அங்கத்தவர்கள் வந்து சாப்பிடுவார்கள். கறி இல்லாதபோது தேங்காயைத் துருவி சோற்றில் போட்டு சாப்பிடுவார்கள். இவர்களுடைய எளிமையான வாழ்க்கையும் தன்னலம் கருதாத செயல்களும்; அவர்களில் எனக்கிருந்த மதிப்பை உயர்த்தியுள்ளது.
எண்பதில் அநுராதபுர மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பெருமளவு வெளிநாட்டுப் பணம் ஒதுக்கப்பட்டது. இதனால் அரசாங்க அதிகாரிகளும், பாராளுமன்ற அங்கத்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு அபிவிருத்தி பணியில் ஈடுபட்டனர். நான் வேலை பார்த்த மதவாச்சி அநுராதபுர மாவட்டத்தில் இருந்தாலும் எதிர்காட்சியை சேர்ந்தவரே பாராளுமன்ற அங்கத்தவராகையால் ஐக்கியதேசிய கட்சி மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்தியது. அப்பொழுது மைத்திரிபால சேனநாயக்க மதவாச்சித் தொகுதியின் பாராளுமன்ற அங்கத்தவராக விளங்கினார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர். எதிர்க்கட்சி ஆட்சிபீடம் ஏறிய காலங்களில் அவர் முக்கிய அமைச்சராக பணிபுரிந்துள்ளார். யாழ்ப்பாணத்திலே படித்ததனால் நன்றாக தமிழ் பேசக்கூடியவரும் அத்துடன் அவர் தமிழ் பெண் ரஞ்சி என்பவரை மணம் முடித்திருந்தார்.
குறைந்த அளவு பணமே ஒதுக்கப்பட்டதனால் மதவாச்சிப் பகுதியை அபிவிருத்தி செய்ய என்னைப் போன்ற அரசாங்க அதிகாரிகள் கோதாவில் இறங்க வேண்டி இருந்தது. எனது பகுதியில் பசுக்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து பால் சேகரிப்பு நிலையத்துக்கு அனுமதி கேட்டபோது அதற்கு பணம் ஒதுக்கப்பட்டது. இப்படியான நடவடிக்கைளிலும் ஈடுபட்டதாலும் யாழ்ப்பாணம் செல்லும் வழக்கம் முற்றாக நின்றது.
சிங்கள கிராம மக்களின் வீடுகளுக்கு செல்லும்போது அவர்கள் என்னிடம் பல கேள்விகளை கேட்டார்கள். மதவாச்சி தமிழர் பிரதேசத்துக்கு அடுத்ததாக இருப்பதால், இவர்கள் யாழ்ப்பாண விடயங்களை உன்னிப்பாக கவனித்தனர்.
‘யாழ்ப்பாணத்தவர்களுக்கு ஏன் தனி நாடு? உங்களுக்கு என்ன குறை? ‘
‘தமிழ் ஈழத்தில் நீங்கள் எல்லாம் எங்கு வேலை செய்வீர்கள்? ‘
‘கொழும்பு தமிழரின் எதிர்காலம் என்ன? ‘
‘மலையக தமிழர் எதிர்காலம் என்ன? ‘
‘தமிழ் ஈழத்தின் எல்லை எது? ‘
‘மதவாச்சிக்கு புலி வருமா? ‘
இப்படியான கேள்வி கேட்டவர்கள் சாதாரண பாமர சிங்கள விவசாயிகள். இவர்களுக்கு பதில் சொல்ல என்னால் முடியவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தரப்படுத்தல் பற்றி சொல்லி இவர்களுக்கு புரிய வைக்க முடியாது. கொழும்பு கண்டி போன்ற நகரங்களில் வாழும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த சிங்களவருக்குப் புரியலாம். ஆனால் மதவாச்சியில் வாழும் சிங்களமக்கள்; பல்கலைக்கழக அனுமதியை பற்றிக் கவலைபடுவதில்லை.
1958ம் ஆண்டில் நடந்த கலவரங்களிலும்; தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்பொழுது தமிழ் ஈழம் கேட்கிறோம் என தமிழர் கோஷம் எழுப்பவில்லை. இக்கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பிலும், மலையகத்திலும் வசித்த தமிழர்கள். இவர்கள் தனிநாடு கிடைத்தாலும் சிங்களவர் மத்தியிலேயே வசிக்க வேணடும்.
தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களை அரசாங்கம் குடியேற்றம் செய்தார்கள் என்று எப்படி பதவியா, மதவாச்சி மக்களிடம் கூறமுடியும்? கனகராயன் குளத்திலும், அக்கராயன் குளத்திலும் தமிழர்களுக்கு அரசாங்கம் காணி கொடுக்கவில்லையா? மேலும் பதவியாவில் வந்து குடியேற எத்தனை தமிழர்கள் தயாராக இருந்தார்கள்?
தமிழ் அரசியல் வாதிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பது மட்டுமல்ல தாங்கள் வைத்த திட்டத்துக்கு எந்த அத்திவாரமும் இல்லாமல் இறங்கி விட்டார்கள். இவர்களது செயல் ஓடும் வண்டியில் கண்டக்டர் எம்மை அடித்து விட்டாலோ திட்டிவிட்டாலோ வாக்குவாதத்தில் ஈடுபட்டு வண்டியில் இருந்து குதிப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தையே குதிக்கச்சொல்கிற குடும்பத்தலைவரின் பொறுப்பற்ற செயலைப் போன்றது எனவும் விளங்கிக் கொண்டேன்.
சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழரின் பிரச்சனையில் நூறு பங்கில் ஒன்று கூட தெரிவதில்லை. தமிழர் பிரச்சனை இரு பக்கத்து அரசியல்வாதிகளின் பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது.
1983ம் ஆண்டு ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணத்தில் பல தமிழர்கள் துரோகிகள் என கொல்லப்பட்டார்கள். இதே வேளையில் சிங்களபகுதிகளில் ராணுவ நடவடிக்கை தங்களை நோக்கி திரும்புவதாக காமினி மூலம் அறிந்தேன்.
மதவாச்சியில் பால் சேகரிப்பு நிலையம் திறந்தவுடன் அதற்கு முகாமையாளராக ஆளும் கட்சியின் சிபார்சின் பேரில் மார்ட்டின் சில்வா நியமிக்கப்பட்டார். பால் சேகரிப்பு நிலையத்தை நிர்வகிப்பதில் அவரிடம் திறமை குறைவாக இருந்தாலும் பாலில் ஊழல் செய்வதில் அவரது திறமை சீக்கிரமாகத் தெரிந்தது.
இலங்கையில் சேகரிக்கப்படும் பாலில் பெரும்பகுதி வெண்ணையாக மாற்றப்படுவதால் கொழுப்பின் அளவைப் பார்த்தே பால் விலை நிர்ணயிக்கப்படும். சாதாரணமாகப் பாலில் மூன்று சதவீதம் கொழுப்பு உள்ள பாலே கிடைக்கும.; ஆனால் வரண்ட பிரதேசத்திலுள்ள மாடுகளில் கொழுப்பு ஐந்துசத வீதமாக இருக்கும். பாலின் கொழுப்பை அளந்து விவசாயிகளுக்குப் பணம்; கொடுப்பது வழக்கம். மாட்டின் சில்வா பாலை மதிப்பிடுவதாக கூறி விட்டு பாலில் கொழுப்பு மூன்று சதவீதம் என கூறிக் காசைக் கொடுத்து விட்டு மிகுதியை தனது பையில் போடுவார். இந்தக் கலவை பற்றிப் பலருக்குத் தெரிந்தாலும் இதை நிரூபிக்க முடியவில்லை. பாலின் கொழுப்பின் அளவை சோதிக்கும் உபகரணம் சாதாரண விவசாயிகளிடம் கிடையாது. இதனால் மார்ட்டின் சில்வாவின் காட்டிலே தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தது.
இந்த விடயத்தை அவரிடம் நான் பேசிய போது அதனை அவர் மறுத்ததுடன் மிகவும் கோபம் அடைந்தார். இனிப் பேசி பிரயோசனம் இல்லை என நினைத்து காரியத்தில் இறங்கினேன்.
அநுராதபுரம் பால் சேகரிப்பு நிலையத்தில் இந்த உபகரணத்தை வாங்கிக் கொண்டு சில விவசாயிகளின் பாலை ஒரு மாதமாகப் பரிசோதித்து அட்டவணை இட்டேன். இந்த விடயத்தில் ருக்மனின் உதவி கிடைத்தது. ஜே.வி.பிக்கு அநுதாபமுள்ள விவசாயிகள் இந்த விடயத்தை இரகசியமாக வைத்துக் கொண்டார்கள்.
ஒரு மாத காலத்தின் பின் இந்த அட்டவணையை மார்டின் சில்வாவிடம் காட்டி இதற்கு மேலும் நேர்மையாக நடக்காவிட்டால் மேலிடத்துக்கு புகார் செய்வேன் என்ற போது மார்டின் சில்வா மன்னிப்பு கேட்டு தான் இனி இப்படியாக நடக்கவில்லை என உறுதி கூறினார்.
இத்துடன் இப்பிரச்சனை முடிந்து விட்டது என நான் நினைத்தேன். ஆனால் மாhட்;டின் சில்வா கடைசி ஆயுதமாக நான் புலி இயக்கத்தை சேர்ந்தவன் என்று பலரிடம் கூறி வைத்தார். இந்தப் பிரசாரம் என்னைப் பாதித்திருக்க கூடும் ஆனால் நான் சிங்களப் பெண் ஒருத்தியை திருமணஞ் செய்து வாழ்வதால் மார்ட்டின் செய்த பிரசாரம் அதிக அளவு நம்புதிறன் கொண்டதாக இருக்கவில்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்