வண்ணாத்திக்குளம்;தீவுப்பகுதி



சித்ராவுடன் யாழ்ப்பாணம் செல்ல தீர்மானித்தபோது நாங்கள் மோட்டார் சைக்கிளில் செல்வது நல்லது என முடிவு செய்தோம். தாயாரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ரயிலில் செல்வது நல்லது என மகளின் காதில் சொல்லப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் போனால் எல்லா இடங்களுக்கும்; போகமுடியும். அத்துடன் இரண்டு நாள்கள் சென்று திரும்ப வேறு வழியில்லை என வாதிட்டபோது தாயும், மகளும் ஏற்றுக் கொண்டார்கள்.

வெள்ளிக்கிழமை காலையில் மதவாச்சியில் இருந்து புறப்பட்டால் மூன்றரை மணி சொச்சத்தில் யாழ்;ப்பாணம் சென்று விடலாம் என நினைத்துப் புறப்பட்டோம். வவனியாவுக்கு வடக்கே சித்ரா பயணம் செய்யாதபடியால் பல இடங்களையும் காட்டி விளக்கிக் கொண்டு வந்தேன். ஓமந்தையில் குறுக்கே மாடு திடீரென வந்ததால் சைக்கிளில் திடீரென பிரேக் போட வேண்டியிருந்தது. சைக்கிள் அடுத்த பக்கம் திரும்பி நின்றது. திரும்பிய வேகம் பயங்கரமானது.

‘இது தான் அம்மா ரயிலில் போக சொன்னா. நீங்கள் கேட்க வில்லை. ‘ எனப் பொறுத்த இடத்தில் வழக்குரைத்தாள் சித்ரா.

‘ உங்கள் அம்மாவுக்கு ஓமந்தையில் மாடு வரும் என்பது எப்படித் தெரியும்;. ‘?

என் கழுத்தில் செல்லமாக இலேசாக ஒரு அடி விழுந்தது. ‘

இப்படி ஊடல்களுடனும், உரசல்களுடனும் மாங்குளம் வந்த போது ‘இதுதான் ரூபவாகினியின் உப அஞ்சல் நிலையம் ‘ என்றேன்.

வண்டியை முறிகண்டியில் நிறுத்தினேன். ‘இது பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயில். எந்த வாகனமும் இங்கு நிற்காமல் போனதில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இங்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.’

‘அப்ப நான் கணதெய்யோவுக்கு தேங்காய் உடைக்கப் போகிறேன். ‘ என கூறிவிட்டு தேங்காய் கடையை நோக்கி ஓடினாள்.

முறிகண்டியில் உள்ள தேனீர் கடைகளில் கிடைக்கும் வடை மிகவும் ருசியாக இருக்கும். என்பதால் நான் தேநீர்கடைக்கு சென்று ஓடரை கொடுத்து விட்டு காத்திருந்தேன்.

தேங்காயை உடைத்து விட்டு வந்தவள் என்னிடம் ‘முறிகண்டிப் பிள்ளையாரிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா’?

‘ உனக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா? அதுதான் இங்கு நிறுத்தினேன் ‘.

‘இது பொய். உண்மையை சொல்லுங்கோ? ‘

‘ நம்பிக்கை இல்லை. ஆனால் சிறிது பயம் இருக்கு என ஏற்றுக்கொள்கிறேன். அம்மா சிறுவயதில் கூறிய கதை இப்பவும் மனதில் ஒட்டி இருக்கு’.

‘எனக்கு சொல்லுங்கோ’.

‘எனக்கு பெரியப்பா முறையான ஒருவர் சிங்கப்பூர் சென்று வேலை பார்த்திருந்தார். விடுமுறையில் இலங்கைக்கு வரும் போது கொழும்பில் ஒரு புதிய காரை வாங்கிக்கொண்டு நேராக யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். முறிகண்டியில் நிறுத்தவில்லை. கிளிநோச்சியில் கார் மரத்தில் மோதி அவர் இறந்து விட்டார். இந்தக்கதை பொய்யோ உண்மையோ தெரியாது. ஆனால் இந்தக் கதை மூலம் முறிகண்டி மகத்துவத்தை அம்மா உயர்த்தியுள்ளார். பெரியப்பா நித்திரை மயக்கத்தில் காரை மோதியிருக்கலாம் என எனது சுயபுத்தி சிந்தித்தாலும் அம்மாவை நினைத்து முறிகண்டியில் வாகனத்தை நிறுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். இதோ நசிந்து கிடக்கும் எலுமிச்சம் பழங்களைப்பார். இவர்கள் எல்லாம் புதுவாகனக்காரர்கள் தேங்காயை உடைத்து விட்டு எலுமிச்சம் பழத்தை நசித்து விட்டு நிம்மதியாக வாகனத்தை ஓட்டிகொண்டு போவார்கள்.

‘உங்கள் செய்கைகள் ஒவ்வொன்றிலும் ஒரு உபகதை உண்டு. ‘ எனக் கூறிய அவள் என்னுடன் முறிகண்டி வடையைச் சுவைத்தாள்.

ஆனையிறவு ராணுவ முகாமை கடந்தபோது சித்ரா, ‘நாங்கள் எத்தனை ராணுவ முகாம்களை கடந்து வந்துள்ளோம்? ‘ எனக் கேட்டாள்.

‘வழி நெடுக இருக்கு, வா. காட்டுகிறேன். மதவாச்சியில் இருந்து கொழும்பு போகும் போது எந்த ராணுவ முகாமும் கண்ணில் படாது. மதவாச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் நூற்றிஐந்து மைல் பிரதேசத்தில் ஆறு ராணுவ முகாம்கள் உண்டு. ‘ என கூறியபடி கொடிகாமம் சாவகச்சேரியை கடந்தோம். யாழ்ப்பாண எல்லைக்கு வந்தபோது ‘யாழ்ப்பாணம் வரவேற்கிறது’ என்ற போர்ட்டை பார்த்து விட்டு ‘என்னையும் வரவேற்கிறதா? என இடுப்பில் கிள்ளினாள்.

‘எங்கள் வீட்டை போனபின் அது உனக்கு தெரியவரும். அதுவரை பொறுத்திரு’.

‘உங்கள் வீட்டில் யாருக்கு சிங்களம் தெரியும் ‘

‘என் அப்புவுக்கு மட்டும் தெரியும். ‘

‘மற்றவர்களோடு எப்படி பேசுவது? ‘

‘இந்த நாட்டின் நிலையில் எந்த மொழியும் பேசாமல் இருப்பதுதான் நல்லது. அமைதி ஏற்படும். மொழிகள் மக்களை பிரித்தன. சமயங்கள் மக்களை அழித்தன’.

‘நீங்களும் ருக்மன்; அண்ணா மாதிரி பேசுகிறீர்கள். ‘

மாலை ஏழு மணியளவில் வீட்டை அடைந்தோம்.

மகனையும் மருமகளையும் கட்டிப்பிடித்து கொஞ்சிவிட்டு ‘பிள்ளைகள் வெயிலில் காய்ஞ்சு இருக்கினம் ‘ என அம்மா கவலைப்பட்டாள்.

தம்பி ரவி மசுங்கிய படி வந்தான். ஆங்கிலத்தில் அறிமுகப் படுத்தினேன்.

‘குளித்துப்போட்டு சாப்பிட வாருங்கள் ‘ என அம்மா அறிவித்தாள்.

சித்ராவின் கையில் இருந்த தோல்பையை வாங்கியபடி அறையுள் அழைத்துச்சென்றேன்.

‘அம்மா உங்களை மாதிரி இருக்கிறார் ‘ என சித்ரா என் காதுக்குள் கிசுகிசுத்தாள்.

‘நான் அம்மா மாதிரி என்று சொல்லு’ என சாரத்தை மாற்றிக் கொண்டு ‘குளிக்க வா’ என்றேன்.

‘எங்கே’

‘உங்கள் மாதிரி குளத்தில் குளிக்கமுடியாது. வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கிணற்றில் தான் குளிக்கமுடியும் ‘ எனச் சொன்னவாறு கிணற்றடிக்கு அழைத்தேன்.

கிணற்றை எட்டிப்பார்த்து விட்டு ‘ஐயோ கிணறு ஆழமாக இருக்கிறது. நான் எப்படி தண்ணீர் அள்ளுவது’ என அவள் தயங்கினாள்.

‘தா, நான் அள்ளித்தருகிறேன் ‘ என்ற கூறி தண்ணீர் அள்ளத் துவங்கினேன். இருவரும் கிணற்றுத் தண்ணீரை அள்ளி மாறிமாறி குளித்தோம்.

‘சித்ரா உனக்கு சோப்பு போடவா’ என்றேன்.

‘எனக்கு நான் போடுவேன். ‘

‘இதற்குத்தான் கிடுகுவேலி போட்டிருக்கு’.

‘தம்பி கெதியா வா சாப்பாடு ஆறுது. ‘ என் அம்மா குரல் தந்தார்.

அன்று சாப்பாடு விசேடமாக இருந்தது. காக்கைதீவில் இருந்து ரவி வாங்கி வந்த இறாலைத் தண்ணீரில் பலமணி நேரம் ஊறவிட்டு குழம்புக்கறி சமைத்தது என அறிந்தேன். சாப்பாடு முடிந்த நேரத்தில் அப்பு வந்தார்.

சித்ரா எழும்பி அப்புவின் கால்களில் விழுந்தாள்.

அப்புவும் எதிர்பார்க்கவில்லை. சிங்களத்தில் ஓர் இரு வார்த்தைதான் பேசினார். நான் எதிர்பார்த்தபடி விசனித்த பார்வை இல்லை. அசம்பாவிதம் நடக்காதது மிகுந்த ஆறுதலைத் தந்தது.

விடிந்தவுடன் பல உறவுக்காரர்கள் வந்து விசாரித்து பல்வேறு பரிசுப்பொருள்களைத் தந்தார்கள். பலருக்கு சிங்களப் பெண்ணை பிடிக்காவிட்டாலும் நாகரீகத்தின் காரணமாக எதுவும் கூறவில்லை. மனித மனத்தில் ஒருவரை ஒருவர் அறியாமல் வெறுப்பையும் துவேஷத்தையும் வளர்த்துக் கொள்வார்கள். இனத் துவேஷத்தின் அடிப்படை அறியாமை என்பதை எழுபத்தேழாம் ஆண்டு இனக்கலவரத்தின் போது அறிந்து கொண்டேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோது நாங்கள் இருந்த ‘மார்ஸ்’ மாணவர் விடுதியில் சிங்கள, தமிழ் மாணவர்கள் கலந்து இருந்தார்கள். எழுபத்தேழாம் ஆண்டின் கலவர உச்சநிலையில் பேராதனை சந்தியில் இருந்த தமிழ்க்கடைகள் சிங்களக் காடையரால் தீக்கிரையாக்கப்பட்டன. சில தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மற்றையோர் அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இந்த நிலையில் மற்ற மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருந்தன. ஆனாலும் எங்கள் விடுதியில் நாங்கள் தொடர்ந்து இருந்தோம். விடுதியில் உள்ள சமையல்காரர் ஒருவரின் உதவியுடன் அருகே உள்ள கிராமத்தில் இருந்து சிங்கள குண்டர்கள் அன்று இரவு எமது விடுதியைத் தாக்க திட்டமிட்டிருப்பதாக அறிந்தோம். இதை எமது விடுதியில் உள்ள சிங்கள மாணவர்களிடம் கூறியபோது அவர்கள் உடனடியாக படுக்கை கட்டில்களின் கால்களை உடைத்து எடுத்து வைத்துக்கொண்டு எமக்கு பாதுகாப்பாக பதில் தாக்குதலில் ஈடுபட தயார் நிலையில் இருந்தார்கள். எங்களையும் தங்களுடன் சேர்ந்து தாக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். மாணவர்களுடைய தயார் நிலையை கேள்விப்பட்ட குண்டர்கள் முயற்சியைக் கைவிட்டார்கள். சிங்கள மாணவர்கள் எம்மை தமிழர்களாக பார்க்காமல் தங்களின் நண்பர்களாகவே பார்த்தார்கள். அத்துடன் ஒரு சிங்கள நண்பன் ‘உங்களைப்போல் எல்லா தமிழரும் இருந்தால் தமிழர் பிரச்சனைக்கே இடமில்லை’ என அந்தச் சந்தர்ப்பத்திலே சொன்னான். ஆவனைப் பொறுத்தவரை தனக்கு தெரிந்த, அறிமுகமான தமிழர்கள் நல்லவர்கள். அறிமுகம் அற்ற தமிழர்கள் கெட்டவர்கள் என்பதாகும்.

எங்களைப் பார்க்க வந்த ஓர் உறவினர் மட்டும் நகைச்சவை உணர்வோடு ‘உனக்கு என்ன சீதனம் கிடைத்தது’ எனக் கேட்டார் புன்புறுவலுடன்.

‘நீங்கள் வந்து எனது சீதனக்காணியை பதவியாவில் பார்த்துக் கொள்ளுங்கள் ‘ என்று கதையளந்த போது ‘ஆளை விட்டால் போதும் ‘ என்றார்.

அம்மா வழி பெரியம்மா எழுவைதீவிலும் அப்பு வழி மாமி நயினாதீவிலும் இருப்பதால் அங்கு செல்ல மதியம் போல் வெளிக்கிட்டோம்.

பண்ணை பாலத்தால் செல்லும் போது கருகிய நிலையில் வக்கிரமான மனிதமனங்களுக்கு சாட்சி சொல்வது போல தெரிந்த யாழ்ப்பாண நூலகத்தின் அருகில் சென்றோம்.

‘நான் இந்த நூலகத்தில் பல நாட்கள் செலவழித்து இருக்கிறேன். இங்கிருந்த சிறுகதை, நாவல்கள் ஏராளமாக படித்திருக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் செய்து விட்டார்கள்’ எனக் கூறினேன்.

‘ருக்மன்; அண்ணா சொன்னார். மந்திரி காமினி திசநாயக்காவின் கட்டளைப்படிதான் இந்த நூலகம் எரிக்கப்பட்டதாம்.’

‘நானும் நம்புகிறேன். ‘

பண்ணை பாலத்தின் இருபக்கமும் உள்ள கடல்நீரை மாலை சூரியன் தங்கக் குழம்பாக்கி விட்டிருந்தது. பாலத்தின் இரு பக்கத்திலும் இருந்த களங்கட்டி வலை கட்டி மீன் பிடிக்கும் முறை பற்றி ஒரு சிற்றுரை நிகழ்த்தினேன். இத்துடன் பரவைக்கடல் மீன்களின் ருசிக்கு எதுவும் நிகரில்லை என்பதையும் சொல்லி வைத்தேன்.

ஊர்காவல் துறையில் உறவினர் ஒருவரின் கடையில் மோட்டார் சைக்கிளை வைத்துவிட்டு எழுவைதீவுக்கு செல்லும் மாலை நேர மோட்டார் படகில் ஏறினோம். மோட்டார் படகின் மணமும் அலைகளும் கடல் பயணத்துக்கு பழக்கமில்லாத சித்திராவினால் தாங்க முடியவில்லை. வாந்தி எடுக்க முயன்றாள்.

‘நீ வாந்தி எடுத்தால் பிள்ளைத்தாச்சி என எல்லோரும் நினைப்பார்கள். ‘ என சிரித்தேன்.

‘சட் அப் ‘ என முறைத்தாள். அச்செயலில் கோபம் இருக்கவில்லை. அவளுடைய இயலாமை தெரிந்தது.

‘ சரி, சரி மேல்தட்டுக்கு வா. அப்போது சத்தி வராது. ‘

‘எனக்குப் பயமாக இருக்கிறது’.

‘இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். என்னை நம்பி’ என அவளது கையைப் பிடித்துக் கொண்டு மோட்டார் வள்ளத்தின் மேற்பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.

கடற்காற்று வாந்தியை நிறுத்தியது’அதோ முழுக்க பனைமரங்களாகத் தெரிவதுதான் எழுவை தீவு’ என்றேன்.

இறங்குதறை பனைமரவளைகளை பயன்படுத்தி செய்யப்பட்டிருந்தது. இடைக்கிடை ஓரிரு தடிகள் இல்லாததால் கீழே கடல் தெரிந்தது. கவனமாகவா’ எனக்கூறிக் கொண்டு கையை பிடித்து இறக்கினேன்.

தீவுப்பகுதியில் சிறிய தீவாகவும், பொருளாதார வளம் அற்றதாகவும் இருந்ததால்; எழுவைதீவை அரசு கவனிப்பதில்லை. இறங்கு துறை திருத்தாமல் இருந்தாலும் மக்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. அரசாங்கமும் கடவுளைப்போல் அதிக தூரத்தில் இருப்பதால் சாதாரண மக்களுக்கு இப்படி விடயங்களை விதியென ஏற்றுக்;கொள்வார்கள்.

‘சித்ரா, ருஸ்சோ என்ற பிரான்ஸ் அறிஞர் பிரான்ஸ்சில் இருந்து நாடு கடத்தப்பட்டு பின்பு நாடு திரும்பியபோது மண்ணில் விழுந்து முத்தமிட்டாராம். அது போல செய்யவேண்டும் போல இருக்கிறது’

‘என்னை பக்கத்தில் வைத்து விட்டு மண்ணை முத்த மிட்டால் உங்களை பைத்தியகாரன் என்று தான் கூறுவார்கள். ‘

‘சரி எனது காலணிகளை கழட்டுகிறேன். குறைந்தளவு என்கால்கள் மட்டுமாவது மண்ணை தடவட்டும் ‘ என்று கூறிவிட்டு காலணிகளை கழற்றி பையில் போட்டேன்.

‘காலில் ஏதாவது முள்ளு குத்தினால் தான் தெரியும். ‘

அரை மணித்தியால நடையில் பெரியம்மாவின் வீட்டை அடைந்தோம். வாசலில் இருந்த இரு யானை சிலைகள் எங்களை மௌனமாக வரவேற்றன.

‘இது தான் நான் பிறந்து வளர்ந்த வீடு’ என சொல்லும் போதே பெரியம்மா வெளியே வந்தார்.

பெரியம்மாவின் கண்களில் கண்ணீர் வந்தது. பெரியம்மாவின் பிள்ளைகளும் நாங்களும்; ஒன்றாகவே சிறு வயதில் வளர்ந்தோம். அவர்கள் எல்லோரும் வெளிநாடு சென்று விட்டார்கள்.

‘எங்கே பெரியப்பா?’.

‘நீ வருவதால் தனிப்பனை கள்ளு எடுத்து வர சென்று விட்டார்.’ பெரியப்பாவுக்கு விருந்தோம்பல் கள்ளில் தொடங்கி கள்ளில் முடியும்.

சித்ராவுக்கு மொழி புரியாவிட்டாலும் விருந்தோம்பல் அவளை திக்கு முக்காடச்செய்து விட்டது.

கள்ளும் மீனும் வயிற்றில் குழப்பம் விளைவிக்க தொடங்கி விட்டதால் முற்றத்தில் பனை ஓலை பாயில் நித்திரை கொள்ள முடிவு செய்த போது சித்ரா ‘இங்கு பாம்பு இருக்கா? ‘ என்றாள்.

‘ஒருமுறை பெரியம்மா படுத்துவிட்டு காலை எழுந்து பாயை சுருட்டும்போது நல்ல பாம்பு வந்து விழுந்தது. ‘

‘எனக்குப் பயமாக இருக்கு’

‘வேறு வழி இல்லை. என்னைக் கட்டி பிடி. ‘

‘கள்ளு மணக்குது. ‘

‘பேட் லக் ‘.

காலை எழுந்து குளித்து விட்டு நயினாதீவுக்குப் புறப்பட்டோம்.

நயினாதீவின் இறங்குதுறையில் நாகபூசணி அம்மன் கோயில் இருந்தது.

‘இது தான் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் ,’என்று கூறினேன்.

‘நான் சிறுவயதில் வந்திருக்கிறேன். ‘

‘நீ எனக்கு சொல்லவில்லை’.

‘நீங்கள் கேட்கவில்லையே’.

கோயில் உள்ளே சென்று அம்மனை தரிசித்து விட்டு வரும்வரை கோயில் வாசலில் உள்ள கருங்கல்லில் இருந்து கொண்டு கோபுரத்தை அண்ணாந்து பார்த்தேன். புதுக்க வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. சிறுவனாக இருந்த காலத்தில் ஓடிப்பிடித்து விளையாடிய இடங்களை மீண்டும் மனதில் அசை போட்டுக்கொண்டேன்.

கால்மணி நேர நடைக்கு பின் விகாரைக்கு சென்றோம்.

சித்ரா புத்த சாதுவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றாள். நான் சிறுவனாக இருந்த போது இருந்த புத்த பிக்கு இன்னும் இருந்தார். முகத்தில் வயது தெரிந்தது. ஊர்மக்களின் மதிப்பை பெற்றவர். மரியாதையுடன் புன்புறுவல் செய்து விடை பெற்றேன்.

இந்த நயினாதீவுதான் மணிமேகலை வந்த மணிபல்லவதீவு என நம்பப்படுகின்றது. ‘கோமுகி’ என்கிற குளம் இருந்த இடத்தை ஊரவர்கள் காட்டுகிறார்கள். அங்கே கிடைத்த அமுதசுரபி என்கிற அட்சய பாத்திரத்தின் மூலமே மக்களின் பசிப்பிணியை மணிமேகலை போக்கினாள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட மணிமேகலை என்ற காப்பியம் புத்த சமய கோட்பாடுகளைப் பரப்பும் நூலாகவும் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழர்கள் பலரும் புத்தசமயத்தை சேர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள். புத்தசமயத்துடன் தொடர்புடைய இடப்பெயர்கள் பல யாழ்ப்பாணக் குடா நாட்டில் உண்டு. இவை அனைத்தையும் சிங்கள ஆட்சியின் பரம்பல் என சில வரலாற்று ஆசிரியர்களும் அபிப்பிராயம் பேசுகிறார்கள். பௌத்த மதம் தமிழருடைய வாழ்க்கை முறைக்கு மாறானது அல்ல. அவளுக்கு விளங்கியதோ, இல்லையோ நான் உரத்த சிந்தனையில் ஈடுபட்டவாறு மாமி வீட்டினை அடைந்தேன்.

மாமி வீட்டில் சிறிது நேரம் இருந்து விட்டு உடனடியாக திரும்பினோம். மாலை நேரத்தில் காற்று பலமாக இருந்தது. ஏழுகடல் சந்திக்கும் இடத்தில் கடல் அலை பலமாக எழுந்து மோட்டார் வள்ளத்தை ஒரு அரக்கன் சின்ன குழந்தையை தூக்குவது போல தூக்கி சுழற்றியது. சித்திராவுக்கு வாந்தி உண்மையில் வந்து விட்டது. யாழ்ப்பாணத்தில் உண்மையில் நான் சூறாவளிப்பயணத்தை மேற் கொண்டிருந்தேன் என்று கூறுவதுதான் பொருந்தும். அதனை முடித்துக் கொண்டு மதவாச்சி வந்து சேர்ந்தோம்.

தொடரும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: