
விடிந்தது நான் இருந்த கட்டிடத்தினுள் சுற்றும் முற்றும் பார்த்தேன், சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை இருந்தார்கள். எம்முடன் சாவகச்சேரியில் கைதிகளாக இருந்து விடுதலை என்று அழைத்துச் செல்லப்பட்ட எல்லோரும் அங்கு இருந்தார்கள்.
எல்லோருமே விடுதலை செய்யப்படவில்லை. பல புதிய கைதிகளும் இருந்தார்கள். பல கைதிகள் அரைக்காற்சட்டை அணிந்திருந்தார்கள். அநேகர் தலை மொட்டை அடிக்கப்பட்டும், கண்ணிமை வழிக்கப்பட்டும் காணப்பட்டார்கள். என்னையும் இப்படித்தான் செய்வார்களோ என்ற பயம் பிடித்துக் கொண்டது.
காலை 7 மணிப்போல் சகல கைதிகளும் மைதானத்திற்கு அழைக்கப்பட்டு வரிசை வரிசையாக நிறுத்தப்பட்டோம். ஒவ்வொரு வரிசையாக மலசலம் கழிக்க அனுப்பப்பட்டோம். இருபது அடி நீளம், இரண்டரை அடி அகலம், பத்து அடி ஆழம் கொண்ட மூன்று மலக்குளிகள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றின் மேல் காட்டுத்தடிகள் போடப்பட்டிருந்தது. எவ்வித மறைப்பும் இல்லை. கைதிகள் மலம் கழிக்கும் போது காவலுக்கு நிற்கும் புலிகள் அசிங்கமாக சொற்பதங்களால் கேலி செய்தார்கள். கைதிகளின் ஆணுறுப்புக்களை அசிங்கமான வர்ணணை செய்தார்கள். ஒரு சமயத்தில் நூறு கைதிகள் மலம்கழிக்க அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு நிமிடத்துக்குள் மலம்கழித்து விட்டு எழுந்து விட வேண்டும். தவறினால் அடி அல்லது கழுவுவதற்கு விடமாட்டார்கள். கழுவுவதற்கு பால்ரின் பேயி ஒன்றுக்குள் மட்டுமே நீர் எடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே மலங்கழிக்க அனுமதி தரப்படும். சுகயீனம் ஏற்பட்டால் அதாவது மலச்சிக்கல், வயிற்றோட்டம் என்றால் மேலும் ஒரு தடவை அனுமதிப்பார்கள்.
மலங்கழித்த பின் மீண்டும் கட்டிடத்திற்குள் விடப்பட்டோம். காலை உணவு பத்து மணிபோல் வழங்கப்பட்டது. ஒரு கைதிக்கு அரை இறாத்தல் பாணும் ஒரு கோப்பை தேனீரும் தரப்பட்டது.
மாலை நாலு மணியாகியும் மதியச் சாப்பாடு தரப்படவில்லை. பசி மயக்கமாக இருந்தது. ஐந்து மணிபோல் சாப்பாடு வந்தது. சாப்பாட்டு தட்டுகள் சிறிதளவே இருந்ததால் எனக்கு சாப்பாடு கிடைக்கும் போது மாலை ஆறுமணியாகிவிட்டது. சோறும் பருப்புக் கறியும் மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு தடவை தரும் சாப்பாடுதான். பசித்தாலும் மீண்டும் கேட்க முடியாது. ஒவ்வொரு நாளும் இதே சாப்பாடுதான். ஒரு நாளைக்கு இரண்டு நேர சாப்பாடு மட்டுமே வழங்கப்படும். அதுவும் அரைகுறையாகவே தரப்பட்டது.
எல்லாக் கைதிகளும் சாப்பிட்டு முடிந்ததும் கைதிகளை கணக்கெடுக்கும் வேலை ஆரம்பமாகியது. காவலுக்கு நின்ற ஒவ்வொரு புலியும் கணக்கெடுத்தார்கள். முகாம் பொறுப்பாளர் தினேஸ் என்பவருக்கு கோபம் வந்துவிட்டது. தனது தூஷண வார்த்தைகளால் ஏசிக்கொண்டு தானே கணக்கெடுக்க ஆரம்பித்தார். முகாமில் இருக்கும் கைதிகளின் தொகைக்கும் அவரின் கணக்கெடுப்புக்குமிடையே வேறுபாடுகள் வந்ததால் மீண்டும் மீண்டும் கணக்கெடுத்தார்.
இப்படியாக சுமார் மூன்று மணி நேரம் கணக்கெடுப்பு நடந்தது. முகாமில் இருந்த இரு கட்டிடங்களிலும் கிட்டத்தட்ட மூவாயிரம் கைதிகள் இருந்தனர். மூவாயிரம் கைதிகளை எண்ணிக்கணக்கெடுக்க மூளைகெட்ட புலிகளுக்கு மூன்று மணிநேரம் பிடித்தது. ஒவ்வொரு நாளும் இதே பல்லவிதான்.
அன்று இரவு படுக்கவிடும் போது இரவு மணி பதினொன்று. கைதிகள் அனைவரும் வெறுந்தரையில் தான் படுக்கவேண்டும். கைதிகளின் உடலில் மேற்சட்டையில்லை. சிலருக்கு சரமும் சிலருக்கு அரைக்காற்சட்டையும் தான். அநேக கைதிகள் பொக்குளிப்பான வருத்தம் கொண்டிருந்தார்கள். அவர்கள் படுப்பதற்கு ஒவ்வொரு சாக்கு வழங்கப்பட்டது. பொக்குளிப்பான் வருத்தக்காரர் சாக்கில் படுப்பதால் உஷ்ணம் கூடி நோய் அதிகரிக்கச் செய்தது.
இரவு படுத்திருக்கும் போது நாம் இருந்த கட்டிடத்திற்குள் மேலும் கைதிகள் வந்து சேர்ந்தார்கள். சாவகச்சேரியில் எம்முடன் சிறையிருந்த மிகுதிக் கைதிகள் தான் அவர்கள் என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது.
மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கே தூக்கத்தால் ஏழுப்பப்பட்டோம். உடனே கைதிகளைக் கணக்கிடும் பணி ஆரம்பமாகியது. காலை ஆறு மணிவரை மீண்டும் மீண்டும் கணக்கெடுத்தார்கள். அதன் பிற்பாடு மலசலங்கழிப்பதற்கு அனுமதித்தார்கள். மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது முகாம் சுற்றாடலை நோட்டம் விட்டேன்.
பாழடைந்த அதாவது தற்போது பாவனையில் இல்லாத இரண்டு களஞ்சிய சாலைகளை மையமாகக் கொண்டு முகாம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. ஒரு களஞ்சிய அறை சுமார் 250 அடி நீளமும், 125 அடி அகலமும் கொண்டதாக விளங்கியது. இரு களஞ்சியங்களிலும் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர்.
களஞ்சியங்களை சுற்றி சுமார் 6 அல்லது 7 ஏக்கர் நிலத்தில் காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டு இருந்தது. முகாமை சுற்றி முட்கம்பி வேலி அடிக்கப்பட்டிருந்தது. அந்த முட்கம்பி வேலியிலிருந்து வெளிப்பக்கம் பன்னிரண்டு அடி தள்ளி மேலும் ஒரு முட்கம்பி வேலி சுற்றி வர அடைக்கப்பட்டிருந்தது. இந்த இரு முட்கம்பி வேலிகளுக்குமிடையில் வளைய வடிவில் முட்கம்பி போடப்பட்டிருந்தது. அத்துடன் இரு வேலிகளுக்குமிடையில் மிதி வெடிகள் பரவலாகப் புதைக்கப்பட்டிருந்தது.
முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் அதாவது வெளிப்புறமாக தான் புலிகள் ஆயுதப்பாணிகளாக இரவு பகல் எந்நேரமும் காவலுக்கு இருந்தார்கள். சுமார் முன்னூறு பேர் கொண்ட தனி இராணுவ அணி ஒன்று காவலுக்காக நியமிக்கப்பட்டிருந்தது. முகாமுக்குள் எந்நேரமும் முப்பது புலிகள் ஆயுதம் இல்லாமல் காவலுக்கு நிற்பார்கள். முகாமுக்கு வெளியே உயரமாக எட்டு காப்பரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் இவ்விரண்டு புலிகள் வீதம் காவலுக்கு நிற்பார்கள். ஒவ்வொரு காப்பரணிலும் பாரிய நவீன துப்பாக்கிகள் முகாமை நோக்கி குறிப்பார்த்தப்படி நிறுத்தப்பட்டிருக்கும். அவற்றைவிட மேலும் பன்னிரண்டு காப்பரண்கள் முகாமைச் சுற்றிவர அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றிலும் ஒவ்வொன்றிலும் இவ்விரண்டு புலிகள் வீதம் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களும் நவீன துப்பாக்கிகளை முகாமை நோக்கி குறிபார்த்த வண்ணம் வைத்திருந்தார்கள்.
முகாமில் இரு களஞ்சிய அறைகளில் இருக்கும் கைதிகள் மலசலம் கழித்தபின் கட்டிடத்துக்குள் விட்டு அடைக்கப்படுவார்கள். அப்படி அடைக்கப்பட்ட பின் வேறு கைதிகள் மலசலம் கழிக்கச் செல்வதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இக்கைதிகள் எங்கு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என எண்ணினேன். சில நாட்களின் பின்னர்தான் அதற்கு விடை கிடைத்தது.
முகாம் அமைந்துள்ள மைதானத்தின் ஒரு பகுதிக்கு கைதிகள் எவரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு பாரிய குழிகள் நிலத்தில் தோன்டப்பட்டு அவற்றிலும் பல கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பங்கர் எனப்படும் அவற்றில் தனித் தனியாகவும், கூட்டமாகவும் கைதிகளைப் போட்டு வைத்திருந்தார்கள். தனி ஒரு கைதியை போடும் பங்கர்; இரண்டரை அடி அகலமும், 5அடி நீளமும், 15 முதல் 20 அடி ஆழமும் கொண்டதாக தோண்டப்பட்டிருந்தது.
கயிற்றின் மூலம் கைதியை இறக்கி விட்டு கயிற்றை மேலே தூக்கி விடுவார்கள். பங்கர் மூடப்படுவதால் காற்று வசதியோ வெளிச்சமோ இருக்காது. தினமும் காலை வேளைகளில் மட்டும் மலம் கழிப்பதற்காக மேலே ஏற்றுவார்கள். சிறுநீர் கழிப்பதற்கு ஆளுக்கு ஒரு போத்தல் வழங்கப்பட்டிருக்கும். சாப்பாட்டு நேரத்துக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்படு;ம்.
இப்படியான பங்கரில் விடப்படும் கைதி நாளாந்தம் படும் சித்திரவதை சொல்லிமாளாது. இரவில் பங்கருக்கு காவல் நிற்கும் புலிகள் மேலே நின்று பங்கருக்குள் இருக்கும் கைதியின் மேல் சிறுநீர் கழிப்பார்கள். தவளைகளைப் பிடித்து வந்து பங்கருக்குள் போடுவார்கள். கற்களால் எறிவார்கள். தண்ணீர் ஊற்றுவார்கள். தூங்குவதற்கு விடமாட்டார்கள். இவற்றுக்கெல்லாம் மேலாக வெங்குணாந்தி எனும் மலைப் பாம்பு வகையைச் சேர்ந்த பெரிய பாம்பு ஒன்றை பங்கருக்குள் போடுவார்கள். இருட்டில் என்ன ஏது என தெரியாத கைதி பெரும் கூச்சலிட்டு கத்துவார்கள். அவர் படும் கஸ்ரத்தைப் பார்த்து மேலே நிற்கும் புலிகள் சிரித்து மகிழ்வார்கள். கொலைகாரப் புலிகள் எம் தமிழ் சகோதரர்களுக்கு செய்யும் இம்சைகளைக் காணும் போது என் ரத்தம் கொதிக்கும்.
இப்படியான பங்கருக்குள் விடப்படும் கைதிகள் புலிகளை பொறுத்தவரை பெரும் குற்றம் செய்தவர்களாக கருதப்படுபவர்கள். இவ்வகை பங்கருக்குள் சுமார் 100 கைதிகள் வரை போடப்பட்டிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது யாழ் மாவட்ட இணைப்பதிகாரியாக கச்சேரியில் இயங்கி வந்த முகுந்தன் என்பவர்.
மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஒருவர்.
யாழ் மாவட்ட சபையின் முன்னால் உறுப்பினரும் நாடாளுமன்ற தேர்தலின் போது யாழ் மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டவருமான நடேசு என்வர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முக்கிய தோழர் ஒருவர்.
ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த யாழ் பிராந்திய முக்கிய உறுப்பினர்கள் மூவர்.
பணத்துக்காக கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் ஐவர்.
கைது செய்யப்பட்டவர்களில் ………….. இயக்க உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட அனைவரும் தனித்தனி பங்கருக்குள் போட்டு அடைக்கப்பட்டனர். ஏனைய இயக்க உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக பெரிய பெரிய பங்கர்களில் போட்டு அடைக்கப்பட்டார்கள். பெரிய பங்கர் எனும்போது முப்பது அடி நீளம் பன்னிரண்டடி அகலமும் பதின்ஐந்து முதல் இருபது அடிவரை ஆழமும் கொண்ட குழியாகும். இப்படியான பங்கர் ஐந்து வெட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு பங்கருக்குள்ளும் முப்பது முப்பது கைதிகள் இறக்கப்பட்டிருந்தார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்