
வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் அவர்கள் பதவியேற்று யாழ நகருக்கு வந்த போது பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவருக்கு மாலை அணிவித்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மேலே கூறப்பட்டவை ஒரு சில சம்பவங்களே ஆனால் வெறும் ஐயப்பாட்டிலும், கோபதாபங்களிலும் கூட பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இப்படியான குற்றச் சாட்டுக்களின் பேரில் 3000க்கு மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் வடமாகாணம் முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். பிள்ளை தமக்கெதிரான இயக்கத்திலிருந்தால் தந்தை கைது செய்யப்படுவார். தந்தை இல்லாவிடில் தாய் கைதாகி பெண்களுக்கான சிறையிலடைக்கப்படுவார்.
.
………………………. ஆகிய இயக்க உறுப்பினர் சிலரும் கைதாகி சிறையிலிருந்தனர். சாவகச்சேரிப்பகுதியில் மூன்று பெரிய சிறை முகாம்கள் அச்சமயத்தில் இருந்ததாக அறிந்தேன். நான் இருந்த சாள்ஸ் சிறைமுகாம், பொஸ்கோ சிறை முகாம், பெண்களுக்கான தனி சிறை முகாம். இப்பெண்கள் சிறையில் மாற்று இயக்க உறுப்பினர்களின் தாய்மார், சகோதரிகள், மனைவிமார், சிறு பிள்ளைகள் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.
சாள்ஸ் முகாமில் நான் இருந்த போது பொறுப்பாளர் சாள்ஸ் பல தடவை என்னை அடித்தார். அவர் ஒரு மனோவியாதி பிடித்தவர் போன்றோ அல்லது வெறி பிடித்தவர் போன்றோ தான் செயல்படுவார். யாராவது கைதியைப் பிடித்து அடித்துக் கொண்டிருப்பது தான் அவரின் வேலை. தூஷண வார்த்தைகளைத் தவிர அவருக்கு வேறு பேச்சே தெரியாது. பத்து அடி நீளம் பன்னிரண்டு அடி அகலமான சிறிய அறை ஒன்றுக்குள் இருநூறு கைதிகளை வைத்து சுமார் பத்து மணித்தியாலங்கள் அடைத்துவைப்பார். ஒவ்வொரு நாளும் பத்து பத்து கைதிகளைத் தெரிந்தெடுத்து மாறுகால் மாறுகையை ஒன்றாகப் பிணைத்து விலங்கு பூட்டுவார். அப்படி விலங்கிடப்பட்ட கைதிகள் நடந்து திரிய விடப்படுவார்கள். அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு நடந்து திரிவதைப்பார்த்து சிரித்து மகிழ்வார். கைதிகளை அடித்துத் துன்புறுத்திக் கொண்டு சிரித்து கேலி பண்ணுவார்.
“டேய் பு.மக்களே உங்கள் அம்மாமாரை இந்திய ஆமிமாருக்கு விட்டனீங்களாடா?|” எனக் கேட்டு அடிப்பார். ஒரு நாளைக்கு பத்துப் பேருக்காவது மண்டை உடைக்காவிட்டால் தனக்குத் தூக்கம் வராது எனக்கூறி கைதிகளின் மண்டையை ரீப்பர் சிலாகையால் அடித்து மண்டையை உடைப்பார். இப்படியான வெறிபிடித்த பொறுப்பாளர் ஒருவரின் கீழ் தான் சாவகச் சேரியில் நான் கைதியாக இருந்தேன்.
ஒரு நாள் எல்லாக் கைதிகளும் வரிசையாக நிறுத்தப்பட்டோம். சிறிது நேரத்தில் விசாரணைக்குப் பொறுப்பாளராக இருந்த சலீம் எனும் புலி ஒருவர் தனது மெய்க்காப்பாளர்கள் சகிதம் எம்மைப் பார்வையிட்டார்.
“உங்களைச் சந்திக்க ………… பிரமுகர் ஒருவர் வருகிறார். அவர் சொல்வதுபோல் நீங்கள் நடந்துகொண்டால் உங்களுக்கும் நல்லது, எமக்கும் வேலைகள் எளிதாக இருக்கும்” என்றார்.
முகுந்தன் என்ற அந்த ………… உறுப்பினர் கையிலும், காலிலும் விலங்கிடப்பட்ட நிலையில் ஆயுதம் தாங்கிய புலிகள் காவலாக வர அழைத்துவரப்பட்டார். அவர் பலமாகத் தாக்கப்பட்டிருந்ததுடன் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார். அவர் சகல கைதிகளுக்கும் முன் நிறுத்தப்பட்டு சொற்பொழிவாற்ற விடப்பட்டார்.
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இனி வேறு இயக்கங்கள் எதுவும் இயங்க முடியாது எனவே புலிகளுடன் ஒத்துழைக்கும்படியும் அப்போதுதான் உங்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் சொன்னார். ஆயுதங்கள் இருந்தால் ஒப்படைக்கும்படியும், ஆயுதங்கள் புதைத்து வைத்திருந்த இடங்கள் தெரிந்தால் காட்டிக்கொடுக்கும் படியும் கூறினார். இவரின் பேச்சுக்களில் புலிகளின் மிரட்டல்களுக்காகத்தான் செயற்படுகிறார் என்பதை சொல்லாமல் சொன்னார். அதன் பின் இயக்கங்களில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்தவர்களை அடையாளம் காட்டும்படி ஒரு அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
முகுந்தன் தான் கைதிகளை அடையாளம் காட்டினார். தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கைதிகளை அடையாளம் காட்டவில்லை எனக் கருதிய புலிப்பொறுப்பாளர் சலீம் முகுந்தனை சகல கைதிகளுக்கும் முன்பாக வைத்து பொல்லினால் தாக்கினார். அந்த பொல்லு முறிந்ததும் அருகிலிருந்த கதிரையினால் தூக்கி அடித்தார். முகுந்தனின் தலையிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதன் பின் முகுந்தன் பல கைதிகளை அடையாளம் காட்டினார். அதில் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தனியாக அடைக்கப்பட்டார்கள். முகுந்தன் எங்கு கொண்டு செல்லப்பட்டாரோ தெரியாது.
சிறையில் இருக்கும் போது எமக்கு வெளி உலகில் என்ன நடக்கிறதென்பதே தெரியாது. நாள் தேதி எதுவுமே தெரியாது.
இன்று சிவராத்திரி எல்லாக் கைதிகளும் நித்திரை கொள்ளாமல் இருக்க வேண்டுமென பணிக்கப்பட்டனர். இரவானதும் கைதிகள் எல்லோரும் கணக்கெடுக்கப்பட்டனர். பின்னர் புலிகளின் இயக்கப்பாடல்களை ஒலிபரப்பினார்கள். அதன் பின் ஒவ்வொரு கைதிகளாக கூப்பிட்டு சினிமாப் பாடல்களைப் பாடும்படி கேட்டார்கள். பாடமுடியாதவர்களையும் வெட்கப்பட்டவர்களையும் அன்று இரவு முழுவதும் முட்டுக்காலில் இருத்தினார்கள்.
விரைவில் உங்களையெல்லாம் விடுதலை செய்யப் போகிறோம் என அங்கு காவலிற்கு நி;ற்கும் புலிகள் கைதிகள் மத்தியில் அடிக்கடி கூறிவந்தார்கள். ஒரு நாள் இரவு இருநூறு கைதிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டது. உங்களை நாளை விடுதலை செய்யப்போகிறோம், அதனால் யாழ் நகரத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கூறி இருவரிருவராக கால்களை சங்கிலியால் பிணைத்து அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரத்தில் வெளியில் கனரக வாகனங்கள் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. மறுநாளும், அதற்கு மறுநாளும் இவ்விதமாக மொத்தம் அறுநூறு பேர் விடுதலை என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டார்கள். அடுத்த நாள் எனது பெயரும் வாசிக்கப்பட்டது. மனம் பெரிதும் மகிழ்வுற்றது. விடுதலை. அது எவ்வளவு இன்பமானது என்பது அந்த நேரத்தில்தான் தெரிந்தது.
என்னுடன் அறுபது வயது வயோதிபர் ஒருவர் பிணைக்கப்பட்டார். அவரின் வலது பக்கக் காலும், எனது இடதுபக்கக் காலும் சங்கிலியால் ஒன்றாக பிணைக்கப்பட்டு இரும்புப் பூட்டு போடப்பட்டது. அன்று பெயர் வாசிக்கப்பட்ட இருநூறு கைதிகளும் இருவர் இருவராக அழைத்துச் செல்லப்பட்டு முகாமின் முன் பக்கம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று லொறிகளில் ஏற்றப்பட்டோம். சுற்றிலும் மூடி அடைக்கப்பட்ட லொறி ஒவ்வொன்றிலும் சுமார் 65 கைதிகள் வீதம் ஏற்றப்பட்டோம். பின் கதவும் மூடப்பட்டது.
காற்றுவர சிறு துவாரம் கூட இல்லாத நிலையில் பிரயாணம் ஆரம்பமாகியது. காற்று வர வழி இல்லாத படியினால் உள்ளே புழுக்கமாக இருந்தது. கைதிகள் மிக மிக நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்ததால் ஒரே வியர்வையாக இருந்தது. தாகம் எடுத்தது. சுமார் 45 நிமிடங்களின் பின் சற்று நேரம் வாகனம் தரித்து நின்று பின்னர் புறப்பட்டது. இவ்விடம் ஆனையிறவு இராணுவத் தடை முகாம் என பின்னர் அறிந்து கொண்டேன்.
இக்காலக்கட்டத்தில் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கும் அந்நியோன்னியமான உறவு இருந்தது என்பதால் அவர்கள் எம்மை ஆனையிறவு ஊடாக கொண்டு போவது சுலபமாக இருந்தது. மேலும் இரு மணித்தியாலங்களின் பின் வாகனம் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டது. கண்ணைப்பறிக்கும் வெளிச்சம் எம்மீது பட்டது. சுற்றிவர மின்வெளிச்சம் பாச்சப்பட்டிருந்தது. பெரிய மைதானமொன்றில் இறக்கப்பட்டோம். அருகில் இரு பெரிய பழைய கட்டிடங்கள் இருந்தன. களஞ்சிய அறையாக பாவிக்கப்பட்டு கைவிடப்பட்ட கட்டிடமாக அவை எனக்கு தெரிந்தது. விடுதலை எனக் கூறி ஏன் இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என் எண்ணினேன்.
பல புலிகள் அங்குமிங்கும் நடமாடினார்கள். ஆனால் கையில் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை. எம்மை ஒரு கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கு பலர் படுத்துக்கிடந்தார்கள். ஒரே துர்நாற்றம் வீசியது. எம்மையும் படுக்கும்படி கூறினார்கள். இருவர் இருவராக பிணைக்கப்பட்டிருந்ததால் பெரிய சிரமப்பட்டு இடம் தேடி படுத்துக் கொண்டோம். என்னுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த பெரியவர் அழுதுகொண்டிருந்தார். இவர் லொறியில் வரும் போது மூர்ச்சையுற்றார். இப் புதிய முகாமுக்கு வந்ததும் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தோம்.
புதிய முகாமின் இச்சூழலைப் பார்க்க எனது மனதில் பயம் சூழ்ந்தது. மரண பயம். தூக்கம் வரவில்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்