
திருமணப்பதிவு காலை பத்துமணியளவில் நடந்தது. வீட்டின் முன்பக்கத்தில் மாமரத்தின் கீழ் மேஜை வைக்கப்பட்டு மஞ்சள் துணி விரிக்கப்பட்டிருந்தது. சுற்றி பல கதிரைகள் வரிசையில் போடப்பட்டிருந்தன. சித்ரா வேலை பார்க்கும் பதவியா மகா வித்தியாலயத்தின் கதிரைகள் என நினைக்கிறேன். ருக்மனின் நண்பர்கள், சித்ராவின் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ருக்மனின் நண்பர்கள் ஜேவிபி கட்சியின் பதவியா பிரதேச உறுப்பினர்கள் என நினைத்தேன்.
சில மாதங்களுக்கு முன்னர் சிறிபுர பகுதியில் பண்ணையில் கோழிகள் இறப்பதாக எனக்கு தகவல் வந்தது. நான் பண்ணைக்குச் சென்று இறந்த கோழிகளை வெட்டிப்பார்த்து மற்றைய கோழிகளுக்கு தடுப்பூசி போட்டேன். பண்ணையில் மூன்று இளைஞர்களும், மூன்று பெண்களுமாக ஆறு பேர் இருந்தார்கள். ஒருவரும் அதிகம் பேசவில்லை. இளைஞர்கள் எல்லோரும் தாடி வைத்திருந்தார்கள். பேசிய சிங்களத்தில் இருந்து கண்டியை சேர்ந்தவர்கள் என அறிந்து கொண்டேன். என்னுடன் வந்த சமரசிங்க ‘சேர், இவர்கள் சேகுவேராகாரர்’ என்று கூறியது நினைவுக்கு வந்தது.
பல இளைஞர்கள் ஜேவிபியில் சேர்ந்தும் குடும்பங்களை விட்டு விலகுவதும் மட்டுமல்லாமல் வேறு இடங்களுக்குச் சென்று அரசியல் வேலைகளில் ஈடுபடுவதும் வழக்கமாகும். இதை விட நகரங்களைச் சேர்ந்தவர்கள் கிராமத்திற்கும், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நகரத்திற்கும் செல்வார்கள். மாசேதுங்கின் வழி வந்த இந்த சிந்தனை அக்காலத்தில் பல நாடுகளில் இருந்தது. கம்போடியாவில் ‘இயர் சீரோ’ என்பது இதனது தீவிரமான வெளிப்பாடாகும்.
திருமணப் பதிவின் பின் சிறிய விருந்தொன்றில் பாடசாலை அதிபர் வாழ்த்துரை வழங்கினார். அவருக்கும் மற்றையோருக்கும் எனது உடைந்த சிங்களத்தில் நன்றி கூறினேன்.
வந்தவர்கள் போனவுடன் சித்ராவை அழைத்துகொண்டு வவனியாவுக்கு கொரவப்பொத்தான வழியாகச் சென்றேன். இந்தவழி வவனியாவுக்கு சமீபமானதாக காட்டை ஊடறுத்துக் கொண்டு செல்கிறது. காட்டு யானைகள் ரோட்டை கடப்பதும் உண்டு. இதற்கு எதிர்மாறாக மதவாச்சி வழியாகசெல்லும் கண்டி ரோடு அகலமானது. ஆனால் ராணுவமுகாம் உண்டு. இது யானையை விட அபாயமானது. தமிழ் பிரதேசங்களில் ராணுவம் பொலிசுக்கு எதிராக ஏதாவது தாக்குதல் நடத்தினால் இராணுவத்தினர் ‘உருக்’கொண்டு வண்டிகளில் வரும் தமிழர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவார்கள்.
வவனியாவில் சித்ராவின் தாய்தந்தையருக்கும் ருக்மனுக்கும் புதுத்துணிகள் வாங்கிவிட்டு தேன்சுரபி என்னும் தேநீர்க்கடையில் குளிர்பானம் அருந்தினோம்.
கடையின் உரிமையாளர் எனது உறவினர். இதனால் சித்ராவை அறிமுகப்படுத்தினேன். எனது விவாகப்பதிவை கூறியபோது துக்கம் விசாரிப்பது போல் கேட்டார். சித்ரா பக்கத்தில் இருந்ததால் நாகரிகம் கருதி எதுவும் விமர்சனமாக சொல்ல இடம் தராமல் விரைவாக விடைபெற்றேன்.
வயல் சார்ந்த பிரதேசங்களில் மாலை நேரத்தில் பறக்கும் சிறு பூச்சிகள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துன்புறுத்துவது தெரிந்து மிக வேகமாக பதவியா சென்றாலும் மாலை ஏழு மணியாகி விட்டது.
தாய்தந்தையர் உணவுடன் காத்துக்கொண்டு இருந்தனர். குளித்து விட்டு சாப்பாட்டுக்கு செல்லும் போது சாப்பாட்டு மேசையில் பெட்ரோமக்ஸ் ஒளிபரப்பியது. அந்த வெளிச்சத்தில் இரண்டு போத்தல்கள் இருந்தன. ஒன்று மென்டிஸ் விசேட சாராயம் மற்றது கசிப்பு எனும் வடிசாராயம்.
‘இன்று நல்ல நாள். ஏன் கசிப்பு குடிக்கிறீர்கள்? ‘ என சித்ராவின் தந்தையை சீண்டினேன்.
‘இது கசிப்பில்லை. தங்கொட்டுவயில் இருந்து வரவழைக்கப் பட்டது’.
‘தாத்தேயின் நண்பர் அனுப்பியது’ என்றாள் சித்ரா.
‘அப்ப நானும் குடிக்கட்டா’ என்றேன்.
‘தங்கொட்டுவக்கு பவர் அதிகம் . உங்களுக்கு ஒத்து வருமோ தெரியாது’ என சிரித்தபோது தந்தையாரின் தங்கப்பல் தெரிந்தது.
‘ உங்களுக்கு தங்கப்பல் உள்ளது இன்றுதான் கவனிக்கிறேன். ‘
‘தாத்தே தங்கொட்டுவ குடித்தால் மட்டுமே தங்கப்பல் தெரியச் சிரிப்பார் ‘ என கூறி ருக்மனும் காமினியும் கலந்து கொண்டனர்.
‘மாத்தையா உங்களது வயதாக இருக்கும் போது ஐம்பத்தியெட்டாம்; ஆண்டு இனக்கலவரம் வந்தது. நாங்கள் வேலை இல்லாமல் ஊர் சுற்றியகாலத்தில் ஒரு நாள் சேதி வந்தது. ‘
யாழ்ப்பாணத்தில் சிங்களவரை கொலை செய்து விட்டார்கள். மதவாச்சியில் உள்ள சிங்களவரையும் கொலை செய்துவிட்டார்கள். பதவியாவில் உள்ள சிங்களவரையும் கொல்ல வவனியாவில் இருந்து பஸ் லொரிகளில் வந்து கொண்டிருக்கிறார்கள். இதை கேள்விப்பட்ட நானும் எமது கிராமத்து இளைஞர்களும் தமிழர்களை எதிர்;த்து அடிப்பதற்காக வவனியாவை நோக்கி சென்றோம். வழியில் இராணுவத்தினர் எம்மை நோக்கி தடுத்து திரும்பிப் போகும்படி கூறினார்கள். நாங்கள் மறுத்தோம். இராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கியபோது எனது பல்லு போனது. இவ்வாறு வதந்தியை நம்பியதற்காக நான் இப்பவும் வெட்கப்படுகிறேன்.’ இப்படி தாத்தே ஒரு வரலாறு சொன்னார். அவருடைய தங்கப்பல்லுக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறு இருக்குமென நான் கற்பனை செய்ததே இல்லை.
‘ இலங்கையில் பல மரணங்களுக்கும் அழிவுகளுக்கும் இப்படி வதந்திகள் காரணமாக இருந்திருக்கிறது’ என கூறியபடி உணவை உண்ண தொடங்கினேன்.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்