
அநுராதபுரத்தில் இருந்து பஸ்ஸில் வருவதற்கு, இரவு பத்து மணியாகி விட்டது. அன்று வார விடுமுறை தினம். இதனால் குணதாசா நண்பர் ஒருவருடன் மதுபானத்தால் இரத்த நாடிகளை சூடாக்கி கொண்டிருந்தார். காமினியும் ருக்மனும் அவருக்குப் பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
என்னைப் பார்த்ததும் குணதாச ‘எப்படி உங்கள் தேர்தல் கடமைகள் சுமுகமாக முடிந்ததா’ என நகைச்சவை கலந்த போதையில் கேட்டார்.
‘தேர்தல் எல்லாம் நன்றாக நடந்தது. ஆனால் எனக்குத்தான் நேரம் சரியில்லை’.
‘அப்படி என்ன நடந்தது’ என காமினி அவசரமாக கேட்டான்;.
‘அமைச்சர் மகிந்தசோமாவுடன் பிரச்சனையாகி விட்டது.’
‘மகிந்தசோமா பெரிய சண்டியர் அல்லவா’ என்றார் குணதாச.
நடந்தது இதுதான்.
கெக்கிராவையில் இருந்து பத்து மைல்களுக்கப்பால் உள்ள சிறு கிராமத்தில் எனக்கு சிரேஸ்ட தேர்தல் அலுவலராக நியமனம் கிடைத்தது. தார்ரோட்டு வசதியில்லாத இந்த விவசாய கிராமம் ஒரு பெரிய குளத்தின் மறுபக்கத்தில் இருந்தது.
தேர்தலுக்கு முதல் நாள் மாலையே அநுராதபுரத்தில் இருந்து இரண்டு உதவியாளர்கள், ஒரு பொலிசார், ஒரு கே.கே.எஸ் (கே.கே.எஸ் என்பது காரியாலய கம்கவே சேவக) மற்றும் ஜீப்பின் சாரதியுடன் புறப்பட்டு இருள் சூழ்வதற்கு முன்பாக கிராமத்தில் உள்ள பாடசாலையை அடைந்தோம்.
கிராமசேவகர் எங்களுக்கு உணவும் படுக்கை வசதியும் அந்த பாடசாலையிலே செய்து கொடுத்தார். மின்சார வசதி இல்லாத காரணத்தால் இரண்டு அரிக்கன் விளக்குகள் தரப்பட்டன. வந்தவர்களில் பொலிசாக வந்தவரை தவிர்ந்த மற்றையோர் நடுத்தர வயதானவர்கள். பொலிசாக வந்த வணசிங்கவுக்கு இருபத்தைந்து வயது இருக்கும்.
உணவு உண்டபின் படுக்கையில் சாய்ந்தபடி அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன்.
‘மாத்தையா’ என்றபடி வணசிங்க எதிரே வந்தமர்ந்தார்.
‘ வணசிங்கவுக்கு எந்த ஊர்?’ என்றேன்.
‘ இரத்தினபுர’.
‘ எவ்வளவு காலம் பொலிஸ் சேவையில் சேர்ந்து. ?’
‘ இரண்டு வருடம் தான். நீங்கள் யாழ்ப்பாணமா?’
‘ நான் நாக தீப’
பெரும்பாலானவர்களுக்கு என் தாயின் ஊரான எழுவைதீவை சொல்வதில்லை. ஏனென்றால் இந்த ஊர் இலங்கையில் எந்தப்பகுதி என காண்பிக்க பூகோளப் பாடம் எடுக்க வேண்டும். மேலும் சிங்களவர்களுக்கு தந்தையின் ஊரான நயினாதீவை நாகதீப என சொல்லும் போது இலகுவாக புரிந்து கொள்வார்கள். அதைவிட இனம் புரியாத வாஞ்சையுடன் உரையாடுவார்கள். பௌத்தர்கள் நாகதீப என்றழைக்கப்படும் நயினாதீவுக்கு வருவதை ஒருவித சமயக் கடமையாகக் கருதுவது போலத் தோன்றும்.
‘அப்படியா மாத்தையா. நானும் சிறுவயதில் அங்குள்ள பண்சலாவுக்கு போயிருக்கிறேன்.’
‘சரி வணசிங்க நாளைக்கு நடக்கும் சர்வஜன வாக்கெடுப்பு சுமுகமாக நடக்குமா?’
‘தேவையில்லாத வேலை ஜே ஆர் ஜெயவர்த்தன மாத்தையாவுக்கு இல்லையா?’
நான் புரிந்து கொண்டேன் வணசிங்க எதிர்கட்சியின் ஆதரவாளர் என்பதை. இளம் வயதானதால் வெளிப்படையாக பேசினார்.
‘நாளை ஏதாவது பிரச்சனை இல்லாமல் தேர்தல் நடக்க வேண்டும். அதைப்பற்றித்தான் எனக்குக் கவலை. ஜே.ஆரை பற்றியில்லை.’ எனக் கூறிவிட்டு என் உரையாடலை நிறுத்திக் கொண்டேன்.
வணசிங்க ‘இரவு வணக்கம்’ சொல்லி விட்டு போனதும் விளக்கை அணைத்து விட்டு நித்திரைக்குச் சென்றேன்.
காலைப்பொழுதில் குளத்தில் எல்லோரும் ஒன்றாக குளித்தோம். குளிர்ந்த நீரில் தாமரை, அல்லி மலர்களுக்கு இடையே அமிழ்ந்து குளித்தது புது அநுபவம். என்னையும் வணசிங்கவையும் தவிர்ந்த மற்றவர்கள் அநுராதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இப்படியான நீராடலுக்கு பழக்கப்பட்டவர்கள். குழந்தைகளும் ஒரு சில கிராமத்தவர்களும் எங்களை வேடிக்கையாக பார்த்தார்கள்.
குளித்து முடிந்த எங்களுக்கு, தாமரை இலையில் கிரிபத் பால்சோறு கிடைத்தது. இது கிராமசேவகரின் எற்பாடு என்பதை தெரிந்து கொண்டோம்.
காலை ஒன்பது மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. வணசிங்க வாசலில் நின்றார். காலையில் மெதுவாக வாக்களிப்பு நடந்தது. ஆண்கள் தான் பெரும்பாலும் காலையில் வாக்களித்தனர். பிற்பகல் நேரத்தில் பெண்கள் கூட்டமாக வந்து வாக்களித்தார்கள். சமையல் சாப்பாடு எல்லாம் முடித்து விட்டு வந்திருக்கிறார்கள் போலும்.
மாலை நாலு மணியளவில் வாக்களிப்பு நிலையத்தின் வாசலில் கூட்டம் கூடி பலமான சத்தம் அங்கிருந்து வந்தது.
வணசிங்கவை அழைத்து,’ ஏன் அங்கு கூட்டம் கூடுகிறது?’ என விசாரித்தேன்.
‘இந்தப்பகுதி பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த சோமா மாத்தையா வந்துள்ளார்.’
‘ எதற்கும் கூட்டம் கூட வேண்டாம் என சொல்லு’ என கூறி விட்டு, பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தேன். சிரேஸ்ட தேர்தல் அதிகாரியானபடியால் நடப்பதை மேற்பார்வை செய்வது மட்டுமே எனது வேலையாகும்.
என் எதிரே ஒருவர் வந்து நின்று சிங்களத்தில் அதிகார தொனியுடன் ‘நீர் தானா இங்கு பெரியவர்?’ எனக் கேட்டார்.
நிமிர்ந்து பார்த்தேன். மகிந்தசோமா நின்றார். அவரை அநுராதபுரம் கச்சேரியில் நான் பார்த்திருக்கிறேன்.
‘வாக்காளர் கூண்டுக்குள் ஒரு பத்திரிகை போடவும், மக்களுக்கு புள்ளி போடுவதற்கு இலகுவாக இருக்கும்’ என்றார்.
ஏதாவது பிழை பிடிக்க முயல்கிறார் என நினைத்தபடி, ‘மன்னிக்கவும். தேர்தல் சட்டப்படி வாக்களிக்கும் கூண்டுக்குள் எதுவும் இருக்கக் கூடாது என சட்டம் கூறுகிறது’ என்றேன்.
‘நீ எனக்கு கூறுகிறாயா?’ என கூறி விட்டு என் கையை உயர்த்தி வைத்திருந்து, பின்பு கீழே விட்டார்.
எனக்கு உடம்பில் நடுக்கம் பிடித்தாலும் , நின்ற இடத்திலிருந்து அசையவில்லை. சிறிது நேரம் நின்று விட்டு, ஏதோ சொல்லியபடி வெளியே சென்றார்.
வணசிங்க உள்ளே ஓடிவந்து ‘இப்படித்தான் செய்யவேண்டும்.. நான் கூட்டத்தை கலைந்து போகும்படி கூறியபோது என்னை முறைத்து பார்த்து உனக்கு நான் யார் என காட்டுகிறேன் என்று என்னிடம் கூறிவிட்டுத்தான் உள்ளே வந்தார்.’
‘எனக்கு ஏதோ நல்லகாலம் இருந்திருக்கு’ என்றேன்.
ஐந்து மணிக்கு வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து ஜீப்பில் எடுத்து வந்து அநுராதபுரம் கச்சேரியில் பொறுப்பு கொடுத்து விட்டு, அநுராதபுர மாவட்ட அதிபரான திசநாயக்காவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தேன்.
‘இது என்ன’? என்றார் மாவட்ட அதிபர்.
‘அமைச்சர் மகிந்தசோமா என்னை அடிக்க முயன்றது சம்பந்தமான புகார் கடிதம்.’
விபரத்தை கேட்டு அறிந்து விட்டு ‘நான் உங்கள் நிலையில் இருந்தால், அதை பொருட்படுத்த மாட்டேன். மேலும் மகிந்தசோமா பல அரசாங்க ஊழியர்களை அடித்திருக்கிறார்..’
‘ உங்களிடம் புகார் செய்துள்ளேன்.. இதைப்பற்றி நடவடிக்கை எடுப்பது உங்களைப் பொறுத்த விஷயம்’ என கூறிவிட்டு மதவாச்சிக்கு பஸ் ஏறினேன்.
குணதாச கதையை கேட்டுவிட்டு, ‘இம்மாதத்தின் கதாநாயகர் நீங்கள் தான்’ ஒரு கிளாஸில் சாராயத்தை ஊற்றி என்னிடம் தந்தார்.
இதைத்தான் சொல்வது அக்ஸிடென்டல் ஹிரோ என நினைத்தவாறு கிளாஸில் உள்ளதை ஒரே மடக்கில் குடித்தேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்