
சாவகச்சேரி சாள்ஸ் முகாமுக்கு வந்த அடுத்த நாள் என்னிடம் இருந்த உடமைகள் எல்லாம் புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டன. நான் கைது செய்யப்படும் போது என்னிடம் 1 பவுண் மோதிரம் ஒன்றும் பணமாக ரூபா எண்ணாயிரத்து முன்னூறும் இருந்தது. அத்துடன் எனது தேசிய அடையாள அட்டையும் இருந்தது. இவை எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்முகாமில் இருந்த சுமார் ஆயிரம் கைதிகளில் பலருக்கு பொக்கிளிப்பான் நோய் கண்டிருந்தது. அவர்களை முகாமின் பின் கோடியில் அமைந்திருந்த ஓலைக் கொட்டிலில் காவல் வைப்பார்கள். அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் பலருக்கு வாந்தி பேதி நோய் ஏற்பட்டது. அவர்களுக்கு எவ்வித வைத்தியமும் இல்லை. மலசலம் கழிப்பதற்கு போதிய இடவசதி இல்லாததுடன் தண்ணி வசதியும் இல்லாததால் கைதிகளுக்கு சொறி, சிரங்கு, வாந்தி, பேதி என்பன இலகுவில் பரவ ஆரம்பித்தது. கைதிகள் நோயினால் பெரிதும் துன்புற்றார்கள்.
காலையில் முகம் கழுவ அனுமதிப்பார்கள். அதே நேரத்தில் மலமும் கழித்து முடித்துவிட வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்கிடையில் எல்லா கைதிகளும் இந்த வேலைகளை முடித்துவிட வேண்டும். சுமார் ஆயிரம் கைதிகள் காலைக்கடன் முடிப்பதற்கு போதிய வசதி இல்லாத நிலையில் 1 மணி நேரத்தில் இது எப்படி சாத்தியமாகும். செய்ய முடியாதவர்கள் அடுத்த நாள் தான் செய்ய வேண்டும்.
காலை எட்டுமணிக்கு தேனீர் தருவார்கள். கைதிகளில் சிலர் தான் சமையல் செய்வார்கள். காலை பத்து மணிபோல் கௌபி சாப்பிடத் தருவார்கள். பின் மதியச் சாப்பாட்டுக்கும் இரவுச் சாப்பாட்டுக்கும் பதிலாக மாலை நாலு அல்லது ஐந்து மணிபோல் சோறும் பருப்பு கறியும் தருவார்கள். கைதிகள் சாப்பிடுவதற்காக வாங்கும் சோறு சிறிதும் கொட்டக் கூடாது. அப்படி யாராவது குப்பையில் கொட்டியது கண்டுபிடிக்கப்பட்டால் கொட்டியவர் உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். அப்படி ஒத்துக் கொண்டால் அவருக்கு மூன்று நாட்களுக்கு சாப்பாடு இல்லை. ஒருவரும் ஒத்துக்கொள்ளவில்லையாயின் மறுநாள் ஒருவருக்கும் சாப்பாடு இருக்காது.
இங்கு விசாரணை என்ற பெயரில் ஏதேதோ நடக்கும். ஆரம்ப விசாரணை என்பார்கள். பூர்வாங்க விசாரணை என்பார்கள். ஒரு கைதி பற்றி தனிப்பட்ட முழுவிபரங்களும் எடுக்கப்படும். அத்துடன் அவர் பெற்றார், சகோதரர்கள் அனைவரினதும் விபரங்களும் பெறப்படும். குறிப்பிட்ட கைதியின் மீது குற்றப்பத்திரம் ஒன்று வைத்திருப்பார்கள். ஆனால் அதை சொல்லமாட்டார்கள். நீ என்ன காரணத்துக்காக பிடிக்கப்பட்டாய் என கைதிகளையே கேட்பார்கள். சொல்லத் தெரியாத அப்பாவிக் கைதிகள் முழிப்பார்கள். விழும் அடி. விசாரணை செய்யும் போது கைதியின் கண்ணை கட்டி விடுவார்கள். எப்போ அடிவிழும் என கைதிக்கு தெரியாது. அடிவிழும் போது கைதி துடிப்பார்.
சில கைதிகளை விசாரிக்கும் போது அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை நானும் அறியக் கூடியதாக இருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் யாழ் மாவட்ட சபை உறுப்பினரும், 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டவருமான நடேசு என்பவர் எம்முடன் கைதியாக இருந்தார். அவர் மீது புலிகள் கூறும் குற்றம் என்னவெனில் வட்டுக்கோட்டைப் பகுதியில் தலைமறைவாக இயங்கி பல பொதுமக்களை கொலை செய்து வந்த தும்பன் என்ற புலியை இந்திய அமைதிப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்காக விருந்து வைத்துக் கொண்டாடினார் என்பதாகும். ஆனால் தான் அப்படி விருந்தொன்றும் வைக்கவில்லை என அவர் மறுத்தார்.
இன்னுமொரு கைதி ஸ்கந்தவரோதயா கல்லூரியின் உயர்தர மாணவன். இவரின் வீட்டில் இவர் துப்பாக்கியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று புலிகளால் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் உள்ள துப்பாக்கி எங்கே? அதை மறைத்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் சம்பவம் பற்றி குறிப்பிட்ட கைதி அழுதபடி எனக்கு சொன்னார். துப்பாக்கியுடன் புகைப்படம் எடுக்கவேண்டுமென்ற ஆசையினால் ஒரு இயக்க நண்பரின் துப்பாக்கியை வாங்கி புகைப்படத்திற்கு நின்றாராம். அந்த புகைப்படம் புலிகளிடம் சிக்கியதால் தான் இப்போ சிறையிலிருக்கிறாராம்.
ஆனைக்கோட்டைச் சந்தியில் ஒரு அமைதியான குடும்பஸ்தருக்கு மூன்று வீடுகள் சொந்தமாக இருந்தது. அதில் இரு வீடுகளை அமைதிப்படையினர் பொறுப்பேற்று முகாமிட்டிருந்தனர். அவ்வீடுகளுக்குரிய மாதாந்த வாடகைப்பணத்தை இவர் பெற்று வந்துள்ளார். அந்த முகாமின் ஒரு பகுதியில் ……………. முகாமும் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்திய அமைதிப்படை வெளியேறிய போது முகாம் கைவிடப்பட்டது. அங்கு இருந்த காப்பரண்களுக்குப் பாவிக்கப்பட்ட கல், மண், இரும்புகள் போன்றவற்றை உழவு இயந்திரம் ஒன்றின் மூலம் வீட்டு உரிமையாளர் அகற்றியுள்ளார். சில நாட்களின் பின் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் …………
முகாமிலிருந்து ஆயுதங்கள் கடத்தி புதைத்து வைப்பதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
பண்டத்தரிப்பு சந்தியில் சிகை அலங்காரம் செய்யும் கடை வைத்திருந்த ஏழைத் தொழிலாளி ஒருவரும் எம்முடன் சிறையிலிருந்தார். இவரின் கடை பண்டத்தரிப்பு முகாமுக்கு மிக அருகில் இருந்தது. இவரிடம் சிகை அலங்காரம் செய்வதற்கு ……….. உறுப்பினர்கள் செல்வது வழக்கம். அந்த வகையால் அவர்களுடன் இவர் பழகிவந்திருக்கிறார். முகாம் கைவிடப்பட்டதும் புலிகளினால் கைது செய்யப்பட்டு ………..க்கு துப்பு கொடுத்து வந்ததாகவும் அவர்களுக்கு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
…………….. இயக்கம் காரைநகர் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியபோது குருநகர் தொடர்மாடியில் இலங்கை இராணுவம் முகாமிட்டிருந்தது. இராணுவத்தை முகாமுக்குள் முடக்கும் நோக்கத்துடன் முகாமைச் சுற்றி கண்ணி வெடிகளை ……..வெடித்துக்கொண்டிருந்த சமயம் பேணாட் என்னும் பொது மகன் ஒருவர் கண்ணிவெடியில் அகப்பட்டு காலில் காயப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்று சில வருடங்களின் பின் புலிகளின் காட்டுத் தர்பாரின் போது பேணாட் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலினால் காயம் பட்டதாகப் பொய் கூறிவிட்டார். உண்மைச் சம்பவத்தை சொன்னால் தன்னையும் ஒரு …………….உறுப்பினர் என தீர்மானித்து சுட்டுக்கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் பொய் கூறிவிட்டார். ஆனால் உண்மையில் விபத்து நடந்தது எப்படி என்பதை அறிந்திருந்த புலிகள் அவரை சுட்டுக் கொன்று விட்டார்கள். இது பற்றி அவரின் மனைவிக்கு சமீபத்தில் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கங்களுடன் எவ்வித தொடர்புமில்லாத அப்பாவி பயத்தின் காரணமாக சிறிதோர் பொய் சொன்ன ஒரே காரணத்துக்காக புலிகளினால் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டுவிட்டார்.
குருநகர் கடற் தொழிலாளருக்கு தொழிற்சங்கம் ஒன்று அமைப்பது சம்பந்தமாக ……………. இயக்கத்துடன் தொழிற்சங்க தொடர்புகளை மேற்கொண்டு வந்த கடற்தொழிலாளி ஒருவரும் சிறையில் வாடுகிறார். இவர் கொஞ்சம் வசதி படைத்தவர். இவரின் சொத்துக்கள் அனைத்தும் புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. ……………….. இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தொழிற்சங்கம் அமைக்க முயன்றதாகவும் மேற்படி நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் பிரதேச முகாமையாளர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் இந்திய உளவுப் பிரிவான ரோ வை சேர்ந்தவர் என குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் புலிகளினால் சீர்குலைக்கப்பட்ட வங்கிச் சேவைகளை சீராக செயல்பட வைப்பதற்காக இந்திய அமைதிப்படை உயர் அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து வந்ததே இவர் செய்த குற்றமாகும்.
வேலணை சந்தியில் சிறு தையற்கடை வைத்திருந்த இஸ்லாமிய சகோதரர் ஒருவரும் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இவரின் கடை அமைதிப்படை, …………… முகாம்கள் அமைந்திருந்த பகுதியிலேயே இருந்தது. அவர்களின் தையல் வேலைகளை இவர் செய்து வந்திருக்கின்றார். …………… விற்கு சீருடை தைத்துக் கொடுத்ததாகவும் தகவல்களை கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தார்.
யாழ் போதனா வைத்திய சாலையில் சவக்கிடங்கில் வேலை செய்து வந்த ஆறு சிற்றூழியர்களை புலிகள் கைது செய்திருந்தார்கள். இந்திய அமைதிப்படையினால் கொல்லப்படும் புலிகளின் பிணங்களை வைத்தியசாலைச் சவக்கிடங்கில் வைத்திருக்கும் போது அவற்றைத் தாம் கடத்திச் செல்வதற்கு ஒத்துழைக்காத காரணத்துக்காக மேற்படி அறுவரும் கைது செய்யப்பட்டார்கள்.
வேலணை காட்டுப் பகுதியில் கிராம அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வந்த நாதன் என்பவர் கிராம அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்களை …………… இயக்க மேற்படி பகுதி அமைப்பாளர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இக்கலந்துரையாடல்களின் போது புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை அத்தாட்சிப் படுத்தி நீ …………. ஆதரவாளன். பல புலிகளைக் காட்டிக் கொடுத்தாய் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
புலிகளினால் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின், உதவியாளர் நெல்லிநாதன் வயது சுமார் 65 பருத்த சரீரம் கொண்ட இவர் கடுமையான நோயாளியும் கூட. யாழ் மாவட்ட ……… நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளராக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இவர் மூலம் பல தகவல்களைப் பெறமுடியும் என புலிகள் நம்பியிருந்தனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்