
சமரன்
1990 இன் ஆரம்பம், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. காட்டுக்குள் இருந்த கொடிய மிருகங்கள் மெல்ல மெல்ல நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கிய காலம். மனித நேயம் மீண்டும் மழுங்கடிக்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் தமக்கு விழப்போகும் அடிமை விலங்கைப்பற்றி உணரமுடியாத வட-கிழக்கு மக்களும் யாழ்ப்பாண பத்திரிகைகளும் புலிகளின் வரவை ஒரு வகையில் வரவேற்றனர்.
இந்நிலையில்தான் மாகாண அரசை ஆதரித்த தமிழ் மக்கள் மீது புலிகளின் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடங்கின. மாற்று இயக்கத்தினருக்கு தலைவரால் பொது மன்னிப்பு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிடம் சரணடையும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம் தெருத் தெருவாக அறிவிக்கப்பட்டது. எங்கும் பரவலாகப் பலர் கைது செய்யப்படுவதாக அறியக்கூடியதாக இருந்தது.
கைது செய்யப்படுபவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதோ அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதோ யாருக்குமே தெரியாது. கைது செய்யப்படுபவர்களை பெற்றோரோ அல்லது உறவினர்களோ பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழீழமெங்கும் கொலைகாரப் புலிகளின் கொடிய ஆட்சி ஆரம்பமாகியது. 1990 ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் புலிகள் வந்து தேடிக்கொண்டு போவதாக வீட்டில் சொன்னார்கள். மனம் துணுக்குற்றது. என்னவாக இருக்கும் என சந்தேகித்தபடியே அருகில் அமைந்திருந்த புலிகளின் குகை(முகாம்) நோக்கி சென்றேன்.
முன் காப்பரணில் சீருடையில் இருந்த சிறுவன் ஒருவன் என்னை யாரென விசாரித்தான். நான் மிகமிகப் பணிவாக வந்த காரணத்தை சொன்னேன். உடனே என்னை ஒரு திருடனைப் போல் பார்த்து என் உடல் எல்லாம் தடவிப்பார்த்து சோதித்து திருப்திப்பட்டவராக உள்ளே செல்ல அனுமதித்தார். அது ஒருவழிப்பாதை என்பதும், இந்த வழியால் உள்ளே போனவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்பதையும் முன்னர் நான் அறிந்திருந்ததால் மரணபயத்துடனேயே உள்ளே சென்றேன். அங்கே முகாம் பொறுப்பாளர் முன் போய் பவ்யமாக நின்றேன். அவர் எனது பெயர் முகவரி ஆகியவற்றை விசாரித்துவிட்டு
‘உன்னை அழைக்கும்படி மேலிடத்திலிருந்து எமக்கு உத்தரவு வந்துள்ளது, அவர்கள் வந்துதான் உன்னை விசாரிப்பார்கள். அதுவரை இங்கு இரு எனக் கூறி ஒரு அறையினுள் விட்டுப் பூட்டினர். நேரம் இரவு பத்து மணி, அறை ஒரே இருட்டாக இருந்தது. சுமார் இரண்டு மணிநேரம் அப்படியே நின்றேன். பின்னர் சுவர் ஓரமாக உட்கார்ந்தேன். யோசித்துக்கொண்டேயிருந்து அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் காலை எட்டு மணிபோல் அறை திறக்கப்பட்டது. காலைக் கடன் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டேன். பின் மீண்டும் அறைக்குள் அடைக்கப்பட்டேன். நண்பகல் மதியச் சாப்பாடு தந்தார்கள். சாப்பிடவில்லை. சாப்பிடச் சொல்லி ஏசினார்கள். சிறிது சாப்பிட்டேன். இரவு ஒன்பது மணிபோல் பாலும், வாழைப்பழமும் தந்தார்கள். சாப்பிட்டேன். சாப்பாடு கொண்டு வந்த சீருடைச் சிறுவனிடம் “அண்ணே என்னை எப்போ விடுவார்கள்” எனக் கேட்டேன். தெரியாது எனச் சொல்லிவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். பொழுது புலர்ந்தது. கதவு திறந்தது. காலைக் கடனை முடிப்பதற்கு அனுமதித்தார்கள். அந்த நேரத்தில் முகாம் பொறுப்பாளரைக் கண்டேன், என்னை எப்போ விடுவீர்கள்? ” என அழுதுகொண்டே கேட்டேன், ”
“தலைமைக் காரியாலயத்திலிருந்து இன்று இரவு ஆட்கள் வந்து உன்னை விசாரித்து பிரச்சனை இல்லை என்றால் உடன் விடுதலை செய்வார்கள் ” என்றார். மனதுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது.
அன்றும் வழமைபோல் மதிய உணவும், இரவு உணவும் தரப்பட்டது. இரவு விசாரணைக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தூக்கம் வராமல் விழித்திருந்தேன்.
நடுநிசி பன்னிரண்டு மணி இருக்கும் கதவு திறக்கப்பட்டு அறைக்கு வெளியே அழைக்கப்பட்டேன். கறுத்த தடித்த புலி ஒருவர் நின்றார். எனது பெயர் ஊர் எல்லாம் விசாரித்தார்…………. உடன் என்ன தொடர்பு எனக் கேட்டார். தொடர்பு ஏதுவுமே இல்லை என மறுத்தேன். மீண்டும் மீண்டும் அதையே கேட்டார். நான் இல்லை, இல்லை என மறுத்தேன்.
“டேய், சுத்துறியா? “(என்னை மடையனாக்குகின்றாயா?) எனக்கேட்டு அடிக்க வந்தார்.
” “அண்ணே அடிக்காதீர்கள். எனக்கு இயக்கங்களுடன் தொடர்புகள் இல்லை. எனக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்|” எனச் சொல்லி அழுதேன்.
“டேய்……………(கெட்டவார்த்தை) எல்லோரும் இப்படித்தானடா சுத்துகிறீர்கள். நீ ……………. க்கு றெக்கி(உளவு சொன்னது) கொடுத்து வந்தது எமக்கு தெரியும். பொய் சொல்லாதே|” “எனக் கூறினார். பின்னர் அங்கு நின்ற வேறு புலியைக் கூப்பிட்டு “இவனின் சேட்டைக் கழற்றி கண்ணைக் கட்டு” என்றார். அவ்விதமே செய்யப்பட்டேன். கைக்கு விலங்கிடப்பட்டேன்.
சிறிது நேரம் புலிகள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். என்னை இழுத்துச் சென்று ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் எங்கு செல்கிறது என்பது தெரியாமல் வாகனத்தின் அடியில் குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த நான் ஏதேதோ பயங்கர கற்பனையில் பயணப்பட்டுக்கொண்டிருந்தேன். இடைவழியில் வாகனம் நிறுத்தப்பட்டது. என்னை அழைத்துச் சென்றவர் வேறு யாருடனோ கதைப்பது கேட்டது. ” வானுக்குள் நல்ல கிடாய்” எனப் புதிய குரல் கேட்க “இதை சுடலையில் தட்டப்போகிறேன்” என என்னை அழைத்துச் சென்றவர் சொல்வது கேட்டது.
எனக்கு மரண பயம் பிடித்துக் கொண்டது. தட்டப் போகிறேன் என்றால் அவர்கள் பாஷையில் சுடப்போகிறேன் என்று அர்த்தம். எனக்கு உடலெல்லாம் வியர்த்தது. சிறிது நேரத்தில் ஒன்றுமே தெரியாத நிலைக்கு நான் வந்துவிட்டேன். வாகனம் எவ்வளவு நேரம் ஓடியது என்பதோ, எங்கு போகிறதென்பதோ எனக்கு எதுவும் தெரியவில்லை. வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கப்படும் பொதுதான் சுய உணர்வு வந்தது.
நான் இப்போது ஒரு கும்மிருட்டான இடத்தில் நின்றிருந்தேன். அடர்த்தியான சோலை போன்ற உயர்ந்து வளர்ந்த மரங்கள் இருபத்தைந்து யார் தொலைவில் ஒரு பெரிய மாடி வீடு இருந்தது. அங்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அது ஒரு முகாம் என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அங்கிருந்த புலிகள் தூக்கக் கலக்கத்துடன் இருந்தார்கள். என்னை அழைத்து வந்தவர் அங்கிருந்த முகாம் பொறுப்பாளர் நசீர் என்பவரிடம் என்னை ஒப்படைத்தார்.
இரு படிவங்களை நசீரிடம் கொடுத்து “பிரச்சனை இல்லை. அடிக்க வேண்டாம்” என மெதுவாக கூறியது என் காதில் விழுந்தது. இது எனக்கு மன ஆறுதலைக் கொடுத்தது.
மேல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஓர் அறைக்குள் தள்ளிவிடப்பட்டேன். லைற் எரிந்து கொண்டிருந்தது. அறைக்குள் சுமார் இருபது பேர் வரை இருந்தார்கள். எல்லோரும் மிரண்டுபோய் இருந்தார்கள். யாருமே எதுவுமே கதைக்கவில்லை. நான் ஓர் ஓரமாக உட்கார்ந்தேன். ஓரிருவர் படுத்திருந்தார்கள். மற்றவர்களுக்கு படுக்க இடமில்லை. நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. பக்கத்திலிருந்த கைதியிடம் பேச்சுக் கொடுக்கலாமென்றால் அவன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான். எங்கோ தொலைவில் கோவில் மணி ஓசை கேட்டது. எனது பக்கத்துக் கைதி தூக்கம் கலைந்து எழுந்தார்.
“அண்ணே எப்போது எம்மை விடுவார்கள்” என கேட்டேன். அவர் கதைக்க வேண்டாம் எனவும் சைகை செய்து காட்டினார். நான் மௌனமானேன்.
கைது செய்யப்பட்ட நாலாவது நாள் பொழுது புலர்ந்தது. காலை ஒன்பது மணிபோல் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டு வெளியே எல்லோரும் அழைக்கப்பட்டோம். முகம் கழுவுவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டோம். எம்மை சூழ பல புலிகள் துப்பாக்கிகளுடன் காவல் நின்றார்கள். இப்போதும் கைவிலங்கு அகற்றப்படவில்லை. அங்கிருந்த எல்லா கைதிகளுக்கும் கைவிலங்கு போடப்பட்டிருந்தது. முகாமின் முன் முற்றத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டோம். அங்கு எல்லாமாக நாற்பது கைதிகள் இருந்தார்கள். எல்லோரும் முதல் நாள் இரவு அங்கு கொண்டுவரப்பட்டவர்கள் தான். நசீர் என்ற புலிகளின் முகாம் பொறுப்பாளர் வந்து ஒரு மேசையின் முன் அமர்ந்து கைதிகளை ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் தொடங்கினார். எனது முறைவந்தது. எனது பெயர், முகவரி, தொழல் எல்லாம் கேட்டார்.
“டேய் உன்னை எதற்காக பிடித்தார்கள்” என கேட்டார்.
“தெரியாது” “என்றேன்.
“நீ சும்மா இருந்தால் ஏனடா பிடிக்கிறார்கள். நீ எல்லாம் ஏனடா தமிழனாய் பிறந்தாய்” என கூறி பெரிய ரீப்பை சட்டத்தால் அடித்தார்.
“நீ சுத்துறாய்.(பொய் சொல்கின்றாய்) புலிப்படையை சாதாரணமாகவா நினைக்கிறாய், நீ சும்மா இருக்க உன்னை பிடிப்பதற்கு புலிப்படை ஒன்றும் முட்டாள்களல்ல” ,எனக் கூறி மீண்டும் அடித்து முன்னைய அறையில் அடைத்தார்.
அன்று பகல் முழுவதும் ஒரு நேர சாப்பாடு மட்டுமே தரப்பட்டது. இரவு சுமார் முப்பது கைதிகளைத் தெரிவு செய்து இரண்டிரண்டு பேராக இணைத்து விலங்கிட்டார்கள். கண்கள் கட்டப்பட்டது. நான் முதன் முதல் முகாமுக்குப் போகும்போது அணிந்திருந்த நீட்டுக்காற்சட்டையுடன் மட்டுமே நின்றேன். எனது சேட் எங்கென்றே தெரியவில்லை. எம்மைப் பிடித்து இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் புறப்பட்டது. சிறிய வாகனமொன்றில் முப்பது கைதிகளும் ஏற்றப்பட்டிருந்தோம். மிருகங்களைக் கூட அப்படி அடைத்து கொண்டு செல்ல முடியாது. நாம் மிருகங்களிலும் கேவலமாக புலிப்படைக் கொடியவர்களால் அழைத்துச் செல்லப்பட்டோம்.
சுமார் நாற்பதைந்து நிமிடம் வாகனம் ஓடி நின்றதும் எல்லோரும் இறக்கப்பட்டோம். கண்கட்டப்பட்டிருந்ததாலும் இருவரிருவராக விலங்கிடப்பட்டிருந்ததாலும் ஒழுங்காக இறங்க முடியவில்லை. அவர்கள் கூட்டிச் சென்ற பாதையால் நடக்கவும் முடியவில்லை. நான் இருதடவை விழுந்தேன். கண் கட்டுக்களை கழற்றிவிட்டார்கள். ஒரு பழைய காலத்து பெரிய வீட்டின் பின் பக்கத்தில் நின்றோம். நிலத்தில் தலை குனிந்தபடி இருக்கும்படி பணிக்கப்பட்டோம்.
நசீர் தலைமையில்தான் நாம் இந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தோம். சாள்ஸ் என்ற முகாம் பொறுப்பாளர் அங்கு நின்றார். அவர் உதவியாளர் டிஸ்கோ என்பவரும் உடனிருந்தார். சுமார் இருபத்தைந்து புலிகள் ஆயுதபாணிகளாக நின்றார்கள். கைதிகள் ஒவ்வொருவராக அழைத்து குற்றப்பத்திரத்திலுள்ளவற்றை படித்து ஏளனமாகப் பார்த்து தூஷண வார்த்தைகளால் திட்டினார்கள். இப்படியாக ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து கேலி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுது விடிந்துவிட்டது.
விடிந்ததும் நாம் இருக்கும் இடத்தின் சூழல் தெரியத் தொடங்கியது. சுமார் மூன்று ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணியில் பழைய காலத்து மாடிவீடு ஒன்று இருந்தது. காணியின் பின் கோடியில் ஒரு பெரிய ஓலைக் கொட்டிலும் மத்திமப் பகுதியில் ஒரு சிறு ஓலைக் கொட்டிலும் காணப்பட்டது. எங்கோ பாடசாலை ஒன்றிலிருந்து எடுத்து வரப்பட்ட மேசைகளும் கதிரைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. காணியின் ஒரு கோடியில் மலம் கழிப்பதற்கு பாரிய கிடங்குகள் வெட்டப்பட்டு அவற்றின் மேல் தென்னங்குற்றிகள் போடப்பட்டிருந்தன. ஒரு பெரிய பாழடைந்த கிணறும் இருந்தது.
இப்புதிய சூழலில் எனது சிறை வாழ்க்கை ஆரம்பமாகியது. அங்கு சுமார் ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கைதிகள் ஒருவரோடு ஒருவர் கதைக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு இருந்தது. அப்படி இருந்தும் எம்மை கண்காணிக்கும் புலிகள் கவனிக்காத நேரத்தில் எமது கவலைகளை பரிமாறிக் கொள்வோம். நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம் முன்னாள் சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் நவரத்தினத்தின் சாவகச்சேரியிலுள்ள வீடு என்பது பின்னர் தெரியவந்தது. அவ்வீட்டைச் சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட புலிகள் ஆயுதபாணிகளாக இரவு பகல் காவலிலீடுபடுத்தப்பட்டிருந்தனர். இங்கு எமது விலங்குகள் அகற்றப்பட்டன.
மறுமொழியொன்றை இடுங்கள்