
காலை நேரத்துடன் எழுந்து விட்டேன் என்று சொல்வதை விட நித்திரை கொள்ளவில்லை என்பதே பொருத்தமானது. அம்மா தந்த கோப்பியைக் குடித்து விட்டு கொக்குவில் ஸ்ரேசனில் ரயில் ஏறி விட்டேன்.
மதவாச்சி ரயில் நிலையத்தில் எனக்காக காமினி மோட்டார் சைக்கிளில் எதிர்பார்த்துக் கொண்டுஇருந்தான். இருவருமாக விடுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து பதவியா சென்றோம். மனதில் பல நினைவுகள் ஆக்கிரமித்தபடியால் காமினியிடம் சைக்கிள் ஓட்டும் பொறுப்பை விட்டு விட்டேன்.
கெப்பிற்றிகொல்லாவ வரை எதுவும் பேசவில்லை.
எனது மௌனம் காமினிக்குப் பொறுக்கவில்லை.
‘வீட்டில் என்ன நடந்தது?’
நான் வீட்டில் நடந்த விடயத்தையும் ஆமிக்காரர் கோயில் எரித்த விடயத்தையும் கூறினேன்.
‘ஆமிக்காரர் இவ்வளவு கீழ்த்தரமானவர்களாகப் போய் விட்டார்கள். வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டால் நூறு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மறப்பதில்லை. தற்போது கூட அநுராதபுரத்தில், பொலநறுவையில் தென் இந்திய அரசர்களால் விகாரைகள் இடித்து நொறுக்கப்பட்டன எனக் கூறி இனக் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்.’
‘நீ சொல்வது உண்மை. இந்தியாவில் நானூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையைச் சொல்லி தற்போதும் அரசியல் நடத்துகிறார்கள். பாமர மக்களின் மதப்பற்றை இலகுவாக வெறியாக மாற்றலாம். எமது அரசியல் வாதிகள் இதில் கைதேர்ந்தவர்கள். எனக்குத் தெரிந்தவரை இலங்கையில் எல்லோரும் படிப்படியாக மனிதத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள்;.’
‘அப்படி மொத்தமாகச் சொல்லக்கூடாது.’
‘எனக்கு பாலைவனத்தில் பயணம் செய்வது போன்று இருக்கிறது.’
‘நாளைக்கு ரிஜிஸ்ரேசன். எனவே சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்று கூறியபடி சித்ராவின் வீட்டுக்கு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.
சித்ராவின் குடும்பத்தவர் பலரும் நின்றனர். எல்லோரினது முகத்திலும் சந்தோஷம் தெளிவாகத் தெரிந்தது. சித்ராவின் கன்னத்தில் ஒரு குழி உண்டு. அது அவள் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் போது மட்டும் வெளித்தெரியும். அந்த குழியைக் கண்டதும் என் மனதில் உள்ள சோக நினைவுகள் கரைந்து விட்டன. சித்ரா எனது கையைப் பிடிக்கும் போது அந்தரத்தில் மிதப்பது போல இருந்தது. உடையலங்காரம் எதுவும் விசேடமாக இல்லை. மேலே சட்டையும் கீழே பூப் போட்ட துணியால் தன்னை சுற்றியிருந்தாள். அவளை புகழ் பெற்ற சிகிரியா சுவரோவியமாகக் காட்டியது.
வாயால் பதில் சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லாததால் அவளது கையை அழுத்திப் பிடித்து விட்டு பிரிந்து கொண்டேன்.
தாயார் வழக்கம் போல் யாழ்ப்பாணத்துப் புதினங்களை விசாரித்தபோது நான் எதுவும் கூறவில்லை. சில விடயங்களை தணிக்கை செய்வது சில காலங்களில் நல்லது. இல்லாவிட்டால் தேவை இல்லாமல் கவலைப்படுவார்கள். மேலும் அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்று அவர்களுக்காக நாங்களும் கவலைப்படவேண்டும்.
சித்ராவின் தகப்பனார் நாளைக்கு ரிஜிஸ்டார், வைபவத்துக்கு காலை பத்து மணிக்கு வருவதாக கூறினார்.
நண்பன் ஒருவனை பார்த்து விட்டு வருவதாக சொல்லி கொண்டு ருக்மனும் காமினியும் சென்றுவிட்டார்கள்.
‘சித்ரா மோட்டார் சைக்கிளில் ஏறு’ சைக்கிளில் ஏறியவள் வழக்கத்திலும் பார்க்க இறுக்கமாக இடையை பிடித்தபடி ‘எங்கே போகிறோம்’ என்றாள்.
‘இப்படி கட்டிப் பிடித்தால் எங்கேயும் என்னால் போக முடியாது. ஏனென்றால் என்னால் சைக்கிள் ஓட்ட முடியாது.’
‘அப்ப சரி பிடிக்கவேயில்லை’ என்றபடி இறங்குவதாக பாவனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் அக்சிலேட்டரை அழுத்தினேன். வேறு வழியில்லாமல் என்னை மீண்டும் அணைத்து பிடித்தாள்.
‘சித்ராக்குட்டி’
எதுவித சத்தமும் வரவில்லை.
‘மீண்டும் என்னுடன் கோவமா?’
‘ம்’
‘சரி என்னோடு பேசமாட்டாயா?’
பதவியாக் குளத்தருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். மீண்டும் சித்ராவை சீண்டும் நோக்கத்துடன், ‘நான் சைக்கிளில் வரும்போது இரு குழிகள் கண்டேன். இப்போது நீ சிரித்தால் கன்னத்தில் விழும் குழியை காணவில்லை’ என்றேன்.
‘சரி மற்றது எந்த குழி’
அவளுடைய நாபிக்குழிகளை எனது விரலால் காட்டினேன்.
‘போங்க’ என்று இரு கைகளாலும் தன் இடையை மூடினாள். அவளும்; நானும் எதுவும் பேசவில்லை. மதிய சூரியன் மறைந்து சந்திரன் வரும் வரையும் அங்கிருந்தோம். வார்த்தைகள் பரிமாறப்படாவிட்டாலும் இருவருக்கிடையில் மின்சாரம் உயர் அழுத்தத்தில இருந்து தாழ் அழுத்தத்துக்கு பாய்வது போல் மாறிமாறிப் பாய்ந்து கொண்டிருந்தது. காதல் உணர்வின் அத்திவாரத்தில் மனித உறவுகள் கட்டப்படுகின்றன என ஏதோ புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. காதல் காமத்துக்கு அலங்காரம் செய்கிறது. அங்கே கலைவடிவம் பெறுகிறது. சுரமும் சத்தமும் எவ்வளவு பேதமாக தெரிகிறது. அதே போல் காதலும், காமமும் வேறுபடுகிறது.
இருவரும் வீடு செல்லும்போது மணி ஏழு ஆகிவிட்டது. விசேஷமாக சித்ராவின் வீட்டில் பெற்றோமக்ஸ் விளக்கு விசேஷமாக எரிந்தது. இதனால் ஒளிவெள்ளம் பரவியது. வயல் பிரதேசமாகையால் ஏராளமான பூச்சிகள் பறந்து தங்கள் உயிரை பெற்றோல்மக்ஸ் அருகில் மாய்த்தன. ருக்மனும் காமினியும் பெற்றோருடன் காத்திருந்தனர். சாப்பாடு தயாராக இருந்தது. உணவருந்தும் போது நாம் பல விடயங்களைப் பற்றி பேசினோம்.
நான் அரசியலைப் பற்றி பேச முற்பட்டபோது காமினியும் ருக்மனும் பேச்சை வேறு திசையில் இட்டுச்சென்றனர். இது எனக்கு விசித்திரமாக இருந்தாலும் நான் பொருட்படுத்தவில்லை. சாப்பிட்டு முடிந்தவுடன் வீட்டின் முற்றத்துக்கு வந்தேன். அங்கு கலர் கலராக வண்ணக்கடதாசிகள் தொங்க விடப்பட்டிருந்தன. நானும் சித்ராவும் பதவியா போய் இருந்தபோது காமினியும் ருக்மனும் இந்த அலங்காரம் செய்திருக்க வேண்டும்.
‘காமினி, என்ன முகம் நல்லா இல்லை’ என்னை பின்தொடர்ந்து முற்றத்துக்கு வந்தபோது, அவனிடம் கேட்டேன்.
‘ஒன்றுமில்லை.’
‘யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை இரவு ஆமியும் பொலிசும் சேர்ந்து கொழுத்தி விட்டார்களாம்.’ என கரகரத்த குரலில் ருக்மன்; கூறினான். எனக்கு தலையில் இடி இறங்கியது போல் இருந்தது.
‘யார் சொன்னது.’
‘வவனியாவில் இருந்து வந்த ஜே.வி.பி தோழர்கள் மூலம் எமக்கு செய்தி வந்தது. .’ என்றான்; ருக்மன்;.
எனக்கு அதற்கு மேல் எதுவும் பேசமுடியவில்லை. உடல் முழுவதும் வித்தியாசமான விபரிக்கமுடியாத உணர்வுகள் எழுந்து தொண்டையில் கட்டியாகவும் நெஞ்சில் ஆத்திரமாகவும் வயிற்றில் அருவருப்பாகவும் இருந்தது. இதைதான் சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் மன உணர்வுகள் உடல் உறுப்புகளை பாதிக்கும் என கூறுவதோ.? பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தேன். பலநிமிடநேரம் எதுவும் பேசவில்லை.
‘மிகவும் கீழ்தரமான வேலை’ எனக் கூறி மௌனத்தை கலைத்தான் காமினி.
‘நேற்று இரவு மந்திரிகள் காமினி திசநாயக்க மற்றும் சிறில் மத்தியூ யாழ்ப்பாணம் சென்றார்களாம்’ என்றான் ருக்மன்;.
‘உண்மையாகவா?’
‘ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமே இதற்கு முழப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்’ என்றான் ருக்மன்; ஆத்திரமாக.
‘இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பிரிட்டன் மேல் குண்டுமாரி பொழிந்த ஜெர்மனிய விமானப்படைக்கு ஒக்ஸ்போட், கேம்பிரிஜ் ஆகிய பல்கலைக் கழகங்களின்மீது குண்டு போடக்கூடாது என கட்டளை இடப்பட்டிருந்ததாம். ஹிட்லர் பிறப்பித்த கட்டளை.. அப்படி பார்க்கும் போது காமினி திசநாயக்க ஹிட்லரையும் மிஞ்சி விட்டார்.’
‘யாழ்ப்பாணத்தவர் படிப்பதற்கு யாழ்ப்பாண நூலகம் காரணம் என நினைத்துக்கொண்டு இதை செய்திருக்கிறார்கள்’ என்றான் ருக்மன்;.
‘இது மிகவும் தவறான காரணம். இதை வைத்துத் தான் தரப்படுத்தல் முறையை கொண்டு வந்தார்கள். இதன் விளைவாக விடுதலை இயக்கங்கள் தோன்றின. நன்றாகப் படித்த மாணவர்களுக்கும் ஆயதப் போராட்டத்தில் நம்பிக்கை வந்தது. படிக்காதவர்கள் கூட நான் படித்து என்ன பயன் என கூறிவிட்டு இயக்கங்களில் சேர்ந்து கொள்கிறார்கள்.இப்படி இரண்டு பகுதியாரும் இயக்கங்களில் இணைந்து கொள்கிறார்கள். இரண்டாவது பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆரம்பத்தில் சேர்ந்து இயக்கங்களில் தலைமைப்பதவிகளில் இருக்கிறார்கள். இப்பொழுது நூலக எரிப்பு போன்ற விஷயங்கள் சகலரையும் ஆயுதபோராட்டத்தை நோக்கித் தள்ளி விடுகிறது. இப்படியான சம்பவத்தினால் ஆயுதப் போராட்டம் ஏற்படும்போது அதில் வேகமும் விரோதமும் பழி வாங்கும் தன்மையும் மேலோங்கும். விவேகம் மனிதாபிமானம் இருக்காது. அப்போது அரசாங்கம் மட்டுமல்லாது மொத்தமாக நாடே கீழ் தள்ளப்படும். இதை விட யாழ்ப்பாணத்தினர் படிக்கிறார்கள் என்பது பொய்யான பிரசாரம். கண்டியில் வசிப்பவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினால் அவர்கள் இங்கு படிக்க வேண்டும். எமது மண்ணில் வளமில்லை. கண்டியில் அரை ஏக்கர் நிலத்தில் மிளகு வளர்த்தால் டாக்குத்தர், என்ஜினியரின் வருமானத்தை பெறலாம். நான் பிறந்து வளர்ந்த மண்ணில் பல ஏக்கர் நிலம் எமக்கு சொந்தமாக உண்டு. ஆனால் நல்ல தண்ணீர் இல்லை. எனவே படிக்க வசதி இருப்பவர்கள் படிக்கிறார்கள். இல்லாதவர்கள் தென்னிலங்கைக்கு வியாபாரம் செய்வதற்காக செல்கிறார்கள். இதைவிட இலங்கையில் சகல பொருளாதார நடவடிக்கையையும் கொழும்பை மையமாக வைத்து நடைபெறுவதால் தமிழர் தென்னிலங்கை போகிறார்கள். இது அரசாங்கத்தின் தவறு ‘.
‘ஒன்றுக்கும் பயப்படத்தேவையில்லை. தோழர் விஜேவீரவின் ஆட்சி வந்தால் எல்லாம் சுமுகமாக நடக்கும்’ என்றான் ருக்மன் நம்பிக்கையுடன்.
‘ருக்மன்;, இவ்வளவு இனத்துவேசம் உருவாகிய பின் எவராலும் எதுவும் செய்யமுடியாது. நீயும் விஜேவீரவுடன் சேர்ந்து கனவு காண்கிறாய்’ என்றேன் விரக்தியுடன்.
‘சரி சரி சாப்பிடுவோம்.’ என உள்ளே அழைத்துச்சென்றான் காமினி.
அருமையான சாப்பாடு. ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை. சித்ரா எதுவும் பேசவில்லை. நான் நினைக்கிறேன் அவளுக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும்.
சாப்பாடு முடிந்தபின், ‘நாளைக்கு எல்லோரும் சீக்கிரம் எழும்ப வேண்டும். படுக்க போங்கள்’ என சித்ரா கூறினாள் காமினி சிரித்தபடி ‘தங்கச்சிக்கு அவசரம்’ என கூறிய படி ருக்மனை அழைத்துக்கொண்டு சென்றான்.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்