மன்றாட்டம்
ஓ கடவுளே
உடலின் பிரயர்த்தனம்
உயிரைக் கெஞ்சிப் பற்றிக்கொள்வது.
இந்த மனமோ
தாங்கொணா வேதனையை விடச்
சாகலாமெனத் துடிக்கிறது.
பரந்த பூமியில்
தர்மம் நீதி நியாயங்கள் யாவும்
கண்களை மூடிக் கொண்டன.
உலகம் முழுக்கப்
பெயரை ஒட்டிக் கொண்ட
மனித உரிமை அமைப்புக்களோ
செவிகளைப் பொத்திக் கொண்டனர்.
மக்களென்று எஞ்சியவர்கள்
வாய்களைப் பொத்திக் கொண்டனர்.
யாவருமாக
கேள்வியற்று வதைக்கும்
பூரண சுதந்திரத்தை
தாரை வார்த்து விட்டதன் பின்னால்
ஆண்டவரே,
மன்றாடுகிறோம்
கதியற்ற
சித்திரவதைக் கைதிகள் நாம்
எமக்கு மரணத்தைத் தாரும்.
இந்தப் புத்தகத்தை வாசித்து மூடுகையில் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிடாத ஒரு சராசரி மனிதனின் மனதில் எங்கள் சமுதாயத்தில் மனிதாபிமானம் எவ்வளவு இழிநிலை எய்திவிட்டது என்பதை எண்ணிய வேதனைதான் எஞ்சியிருக்கும். ஏனெனில் உலகின் வரலாற்றில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத குரூரமான சித்திரவதைகளை நாம் நமது சுதந்திரப்போராட்டம் என்று மகுடம் சூட்டிப் பூஜித்த ஷஷபுனிதமான கோயிலின்|| மூலஸ்தானத்திலேயே தரிசிக்கும் துர்பாக்கியம் பெற்றவர்களாகிவிட்டோம். ஷஷநாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல||, என்று விடுதலைப் புலிகள் தங்கள் கோஷத்தில் பொறித்துக் கொண்டாலும், பயங்கர நோய்களின் விளைவுகளை அறிந்து கொள்ள விஞ்ஞான கூடங்களில் பரிசோதனைக்காக வளர்க்கும் விலங்குகளைப் போலப் பாவித்து மனிதனின் தேகத்தில் தங்கள் கற்பனையில் உதிக்கும் வினோதமான சித்திரவதைகளையெல்லாம் நடத்தி எது மனிதனுக்கு அதிக வேதனையைத் தரக்கூடிய சித்திரவதையெனக் கண்டு பிடிக்கத் துடிக்கும் அவர்களின் வெறியும் ஒவ்வொரு அணுவும் துடிதுடிக்கும் உச்ச வேதனையின் ஈனக்குரலையும், இரத்தத்தையும், கன்றிய கதைகளில் கிளம்பும் துர்நாற்றத்தையும் ரசிக்கின்ற குரூர ரசனையும் இவர்களைப் பீடித்துள்ள மனநோய் எத்தனை உச்சத்தை எய்தியுள்ளது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இது எமக்கும் நரமாமிசம் புசிப்போரின் சந்ததித் தொடர்பு எங்கேனும் இருந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
டாக்டர் சிவகுமாரனைப் போன்ற பெரிய மருத்துவர்கள் குடாநாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்தவர்களைப் பரிசோதித்து அவர்களின் உடல்நிலை குடாநாட்டினுள் சிகிச்சை பெற்று மாற்ற முடியாததுதானாவென புலிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களை வளங்கித் தம் சேவையை நல்கும் போது இங்கு வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள் எப்படிப் பராமரிக்கப்பட்டார்கள் என்பதை மருத்துவ உலகம் அறிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது.
சிவத்தம்பி போன்ற பேராசிரியர்கள் புலிகளின் முத்தமிழ் விழாக்களுக்குத் தலைமை தாங்கும்போது இந்த வதை முகாம்களில் தமிழ் எப்படி வாழ்கிறது என்பதை தமிழுலகம் புரிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது.
இருப்பினும் இப்போது கூட இந்த வதைகளுக்கு வக்காலத்து வாங்க சில புலி ஆதரவாளர்கள் தயங்காமல் முன்வருவார்கள். அவர்கள் படித்தவர்கள் பெரியவர்கள் என்ற பட்டங்களைத் தாங்கியவர்களாயும் இருப்பார்கள். இவர்கள் முதலில் இப் புத்தகத்தை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்ய முற்படுவார்கள். ஆனால் அதையும் மீறி இது வெளிப்படுமானால் ஷஷஇவை அனைத்தும் சுத்தப் பொய்|| என்று தமது வளமையான பாணியில் மறுப்பார்கள். ஆனால் அது அவர்களின் அடிவருடிகளான சிலரைத் தவிர சிந்திக்கக் கூடிய அனைவரையும் திருப்திப்படுத்தாது என்பது சில புத்திசாலிகளுக்குப் புரியும். அதனால் அவர்கள் சில வேறு வழிகளைக் கையாளுவார்கள். இப்படி வதைப்பட்ட அத்தனை பேரும் காட்டிக் கொடுத்த துரோகிகள்தானென்று அடித்துச் சொல்லுவார்கள். இத்தனைக்கும் அவர்கள் தாம் குற்றம் சாட்டும் ஒருவரது பெயரைக்கூட அறிந்திருக்க மாட்டார்கள். எனினும் தாம் கண்ணால் கண்டது போல அடித்துச் சொல்லுவார்கள். ஏனெனில் கேள்வி கேட்கக் கூடிய அளவுக்கு இவர்களின் வக்காலத்தை செவிமடுப்பவர்களும் இவ்வதைகளுக்குள்ளாகியவர்கள் பற்றி முகமறியாதவர்காளகவே இருப்பார்களென்பது அவர்களின் எண்ணமாக இருக்கும்.
இருந்தும் எல்லா இடமும் இதே பதிலைச் சொல்லிச் சமாளிக்க இயலாதபோது இவர்கள் சில நுட்பங்களைக் கையாழுவார்கள். அதிலொன்று பிழையை ஒத்துக் கொள்வது. ஆனால் பிழையை அதற்குரிய பரிமாணத்தில் பார்க்காமல் மிகவும் சிறிய ஒரு விடயமாக்கி ஷஷஅவர்களும் சின்னப் பிழைகள் விட்டிருக்கிறார்கள் தான்|| என்னும் தட்டிக் கழிக்கும் பாணியில் ஒத்துக்கொள்வது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் ஷஷஇதுகளையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது|| என்ற கருத்தைத் தொனிக்கும். மற்றொரு வழி உடனே இந்த கதையை ஒதுக்கிவிட்டு மற்றவர்களும் இப்படிச் செய்திருக்கிறார்கள்தானே என்று குற்றம் சாட்டப் புறப்படுவது. கணிதத்தில் ஒரு கணியத்தை இல்லாதாக்க வேண்டுமானால் அக்கணியத்தை இன்னொன்றுக்குச் சமன் என சமன்படுத்திவிடுவது, பின் இரண்டையும் ஒரு புறத்தில் எடுத்து ஒன்றிலிருந்து மற்றதைக் கழித்தால் விடை பூச்சியமாகிப் போய்விடும். அப்படி ஒரு பிழையை இல்லாது ஒழிப்பதற்கு இன்னொரு பிழையைக் காட்டி அதனுடன் இதை சமன்செய்து கொண்டால் பிழையே பிழையில்லாததாகிவிடும் மாயாஜாலம் இது.
எப்படியிருந்தாலும் இப்புத்தகத்தின் தாக்கத்தையிட்டு இவர்கள் இப்படிப் பயப்படும் அச்சமொன்றே இதில் உள்ள உண்மையின் கனம் எத்தகையது என்பதைத் தெரிவிக்கப் போதுமானது, இன்னும் புலிகள் வதை முகாம்களில் கூறுவது போலவே உலகின் நான்காவது படையை தோற்கடித்த லேசுப்பட்டவர்களல்லாதவர்களாக இருக்கலாம். இப்புத்தகத்தை தனது தார்மீகக் கடமையாகக் கருதி எழுதியவர் ஒரு தனிமனிதனாக இருக்கலாம். இவர்கள் எம்மை ஒரு புழுப்போல் நடத்தலாம்.
ஆங்கிலத்தில்…………………………… என்ற ஒரு வாக்கிய முண்டு. (முதுகெலும்பில்லாத புழுக்கூட இறுதியில் திரும்பும்). இம்சையின் தாங்கமுடியாத கட்டத்தில் மௌனமாக சாவதைவிட தனது இறுதி எதிர்ப்பைக் காட்டவே செய்யும். தனிமனிதனாக இருந்தாலும், ஒரு அற்பனாக இருந்தாலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஏதாவது ஒரு எதிர்ப்பைக் காட்டத்தான் செய்வான். அந்தவகையில் இந்தப் புத்தகம் அபாயத்தின் மத்தியிலும் துணிந்து வெளிவரும் எதிர்ப்பின் சின்னமாக விளங்குகிறது.
இப்புத்தகம் புலிகளின் வதைகளைப்பற்றி தான் அனுபவித்த அனுபவத்தைக் கூறும் ஒருவரின் எந்த மிகைப்படுத்தலுமற்ற உண்மைகளின் பதிவு. ஆனால் இதன் அர்த்தம் புலிகளின் இவ்வாறான கொடுமைகளைச் செய்கிறார்கள் என்று அம்பலப்படுத்துவதென்பது அரசையோ மற்றய அமைப்புக்களையோ நியாயப்படுத்தும் அல்லது வக்காலத்து வளங்கும் நோக்கிலானது அல்ல. அதே வேளை தமிழ் மக்கள் பூரண உரிமைகளும் பெற்ற சமுதாயமுமல்ல. உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற சமுதாயம். இங்கு இப் போராட்டத்தை தவறான வழியில் இட்டுச் சென்று சிதைப்பதில் புலிகளின் தவறுகள் காரணமாயிருந்தாலும் இப் போராட்டத்திற்கே மூலகாரணமான உரிமைகள் மறக்கப்பட்டுள்ள, நசுக்கப்படுகின்ற நிலமைக்கு காரணமான ஆட்சியாளர்களது தவறுகள் மறுக்கப்பட முடியாதவை. இந்தப்பக்கத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களும் எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடியவையுமல்ல. மக்களின் நலத்தின் மீது அக்கறை கொள்ளாது தம் சொந்த நலன்களுக்காகச் செயற்படும் போக்கு எதுவரை தொடருமோ அதுவரை இம் மனித உரிமை மீறல்கள் தொடரத்தான் செய்யும்.
கொலைகாரப் புலிகளினால் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, துணுக்காய் காட்டில் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, புலிகளின் இக் கொடுமைகளை உலகத்திற்கு குறிப்பாக அவர்களை உத்தமர்களாக, விடுதலை வீரர்களாகக் கருதும் அப்பாவித் தமிழர்களுக்கு அறியத் தர வேண்டும் என பல தடவைகள் எண்ணினேன். இதை என் கடமையாகவும் கருதினேன். புலிகளின் கொடுஞ் சிறையிலிருந்து தப்பி வந்தபின் யாழ்நகரில் தலைமறைவாக இருந்தேன். புலிகளின் கண்ணுக்குள் மண்ணைத்தூவி விட்டு தமிழீழத்திலிருந்து தப்பி கொழும்பு வந்து சேர்ந்தேன். என் உடலில் ஏற்பட்ட காய வடுக்கள் மறைந்து போனாலும் போகலாம், ஆனால் காயம் பட்ட என் நெஞ்சுக்கு ஆறுதலாகவும், மனித நேயம் பேணப்பட நான் செய்யும் சிறு பணியாகவும் கண்ணீருடன் இதை எழுதுகிறேன்.
-சமரன்-
மறுமொழியொன்றை இடுங்கள்