
பதிவுத்திருமணத்தை சனிக்கிழமை மதவாச்சியில் நடத்துவதென்று நிச்சயம் செய்தபடியால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றேன். யாழ்தேவியில் கூட்டம் அதிகமில்லாதபடியால் மூலை ஆசனம் கிடைத்தது. கண்ணை மூடிக்கொண்டு சித்திராவை நினைத்தேன். மனதை நினைவுகள் சுகமாக வருடின. யாழ்தேவி வவனியாவில் நின்றபோது சிறிது கூட்டம் ஏறினாலும் எனது கனவுகள் கலைக்கப்படவில்லை.
ஏழு மணியளவில் சிறிது பசியெடுத்ததும் எனது கனவுகளை நிறுத்திவிட்டு நாளை நடப்பதை யோசிப்பது என முடிவு செய்தேன். அம்மாவையாவது மதவாச்சிக்கு கூட்டிக் கொண்டு வர வேணும். அப்பு வர மறுக்கலாம். இதைவிட எனக்கு மச்சாள் முறையான பார்வதியிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். மச்சாள் என்றாலும் அக்கா என்று தான் கூப்பிடுவேன். அவருக்கும் எனக்கும் எட்டு வயது வித்தியாசம். எனக்குப் பன்னிரண்டு வயதாக இருக்கும் போது பார்வதி அக்காவுக்கு திருமணம் பேசினார்கள். சொந்த மச்சான். கொழும்பில் கடை முதலாளி. ஆனால் ஆள் அட்டைக்கரி. அத்துடன் ஆரம்பப் பாடசாலைக்கு மேல் போனதில்லை. பார்வதி அக்கா உயர்தர வகுப்பு படித்தவர் அல்லாவிட்டாலும்; கல்கியையும் ஜெயகாந்தனையும் விமர்சிக்கும் அளவு அறிவு உள்ளவள். சொல்லப்போனால் இலக்கியத்தில் பார்வதி அக்காவே எனக்கு ஒரு விதத்தில் குருமாதிரி என்று கூடச்சொல்லலாம்.
இன்றும் அந்த சம்பவம் பசுமையாக இருக்கிறது. நான் பார்வதி அக்காவின் தம்பி ரமணனுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தேன்.
வீட்டுக்குப் பின்னால் குப்பை அள்ளிக் கொண்டிருந்த அக்கா என்னை ‘டேய் தம்பி’ என அழைத்தாள்.
‘என்னக்கா’, என பின்பக்கம் சென்றேன். முகத்தில் கவலையின் ரேகை படர்ந்திருந்தது.
‘உனக்கு விசேஷம் தெரியுமா?’
‘என்ன’, என்றேன் ஆவலுடன்.
‘எனக்கு கல்யாணம் பேசி இருக்கு. யார் தெரியுமா?’
‘யாரு’
‘மணியத்தார். உனக்குத் தெரியாது. அட்டைகரி நிறம். சொந்தம்தான் ஆனால் எட்டாம்; வகுப்போடை கொழும்பில் கடை வைத்திருக்கிறார்.’
‘சரி அக்கா. குணம் எப்படி? மேலும் உன்னில் அவருக்கு விருப்பமா?’ என பெரிய மனித தோரணையில் கேட்டேன்.
‘டேய் குணம் யாருக்குத் தெரியும்.? அவர்கள் சீதனம் வேண்டாம். எல்லாச் செலவும் தாங்கள் செய்வதாக கூறியிருக்கிறார்கள்.’
‘குடிவெறி எப்படி?’
‘அந்தப்பழக்கம் இல்லை என்றுதான் கேள்விப்பட்டேன்’.
‘அக்கா பிறகென்ன. நீ விரும்பும் குதிரையை விட உன்னை விரும்பும் கழுதை மேலானது என சொல்வார்களே’.
‘அதுசரி, அவர்கள் தெற்கத்தையார்’
‘அதென்ன தெற்கத்தையர்?’
‘அது உனக்குத்தெரியாது. பெரிய கதை. அந்தக்காலத்தில் வடக்கு பக்கத்தில் உள்ள பெண்ணை சோனகர் ஒருவர் முடித்து அதன்பின் தெற்குப் பக்கத்தில் இருந்ததால் நாங்கள் தெற்கு பக்கத்தில் வசிப்பவர்கள் எல்லோரையும் சோனகர் என்று கூறுவோம்.’
‘இதை நீ பெரிதாக நினைக்கிறாயா?’
‘எனக்கு இது பெரிய விடயம் இல்லை. ஆனாலும் யாருக்கும் சொல்லி ஆற வேண்டும் என்று நினைத்தேன்.’
‘அப்ப கல்யாணத்துக்கு ஓம் சொல்லு’.
‘சரி’
இந்த உரையாடல் என் மனதில் இன்றும் பசுமையாக வருகிறது. என்னை மதித்து என்னோடு முதன்முதல் பேசிய ஆள் பார்வதி அக்காதான். எனக்கு ஒரு கெப்புறு, பார்வதி அக்காவின் கல்யாணம் நடந்ததற்கு நான் தான் காரணம் என்று. இதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு.
பார்வதி அக்காவிற்கு கல்யாணம் நடக்க நிச்சயித்த முதல்நாள் அக்காவின் தங்கச்சி கலாவுக்கு வயித்தாலே அடியும் சத்தியும். நயினாதீவு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டார்கள். முதல் நாள் இரவு அவளோடு மாமி இருந்தாள். கல்யாணத்தன்று பார்வதி அக்காவின் தம்பி ரமணன் அல்லது நான் நிற்க வேண்டும். ரமணன் மாப்பிள்ளை தோழன் ஆனபடியால் அன்று இரவு கலாவுக்கு நர்ஸாக நான் மாற வேண்டியிருந்தது.
அந்தக்கல்யாணம் நான் பார்க்க இருந்த முதல் கல்யாணம். எனக்கு நினைவு தெரிந்த பின் நடக்கும் முதல் கல்யாணம். பல கற்பனைகள் என் மனதில் இருந்தன. கல்யாண வீட்டில் கட்டிய பலூன்களை உடைக்கவும், வண்ண வண்ண கலர் காகிதங்களை இழுக்கவும் வேண்டும். எனக்கு பிடித்தமான சினிமா ரெக்கோட்டுகளை போடும்படி கேட்கவேண்டும் என ஏராளமான திட்டங்கள் வைத்திருந்தேன். எல்லா திட்டங்களையும் சுக்கு நூறாக்கிய கலாவை அன்று இரவு திட்டியபடியே இருந்தேன். கலாவுக்கு ‘அவியல்’ என பட்டப்பெயர் உண்டு. அதை ஆயிரம் தடவையாவது சொல்லி இருப்பேன். ஏழு வயதானாலும் வாய்க்காரியானவள். அன்று இரவு வயித்தால் அடித்ததால் ஒன்றும் பேசாமல் திருதிருவென முழித்ததை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.
இந்த காரணத்தால் அக்காவுக்கு என்னிடம் வாரப்பாடு. தன் கல்யாணம் நடக்க நான் தான் காரணம் எனப் பலதடவை சொல்லி இருக்கிறாள்.
இப்படி பழைய நினைவுகளை இரைமீட்டிக் கொண்டு இருந்த போது கொக்குவில் ஸ்ரேஷன் வந்துவிட்டது. இறங்கியபோது எனக்காக தம்பி ரவி காத்துக்கொண்டு இருந்தான். அம்மா கஷ்டப்படுத்தி அனுப்பியிருக்க வேண்டும். ஒரு முறை பல்கலைக்கழக புகுமுக வகுப்பு பரீட்சை எடுத்து சித்தியடையவில்லை. மீண்டும் எடுக்கும்படி வற்புறுத்தினால் தரப்படுத்தலையும் மாவட்ட அடிப்படை தேர்வையும் கடந்து தான் பல்கலைக்கழகம் போகமுடியாது என்றும் வெளிநாடு போவதாக சொல்லிக்கொண்டு படு பிஸியாக ஊர் சுத்துவான். நான் பல்கலைக்கழகம் போனது இந்த தடைகளை கடந்து தானே என்றால் அது ஐந்து வருடத்துக்கு முன் என்பது அவன் பதில்.
ரவியின் சைக்கிளில் ஏறி அவனது பாரில் இருந்து கொண்டு ‘என்ன செய்கிறாய்’ என்றேன்.
‘குதிரை ஓடுகிறேன்.’
‘என்னடா குதிரை.’
‘எனது நண்பனுக்காக SSC எடுக்கிறேன். ஐந்து கிரெடிட்டிற்கு மேல் எடுத்தால் நாலாயிரம் ரூபாய் தருவான். இதை வைத்துக் கொண்டு வெளிநாடு போவேன்.’
‘பிடிபட்டால் என்ன செய்வாய்?’
‘பிடிபட மாட்டேன்.’
‘அப்புவிற்கு தெரியுமா? தெரிந்தால் உதைபடுவாய்,’
‘நாலாயிரம் ரூபாய்க்காக உதைபடலாம்’, என்றான் யதார்த்தமாக.
‘உதை ஒருபுறம். நீ அரசாங்கத்தை ஏமாற்றுகிறாய்.’
‘அரசாங்கம் முழு இனத்தையும் ஏமாற்றுகிறது. ஏன் உங்களை ஏமாற்றவில்லையா? உன்னிலும் குறைந்த மார்க் வாங்கியவர்கள் மருத்துவம் படிக்க போனபோது நீ மிருக வைத்தியம் படித்தாயே? அது உன்னை ஏமாற்றிய விடயம் இல்லையா?’
‘சரி, சரி அதை விடு. நீ உன்னை ஏமாற்றுகிறாய்.’
‘இல்லை நான் ரிஸ்க் எடுத்து உதவி செய்கிறேன்.’
‘அப்படியா? உனது ஐந்து கிரடிட்டுக்களை வைத்து அவன் என்ன செய்யப்போகிறான்.?’
‘பாங்கில் வேலை எடுப்பான்.’
‘அப்ப பாங்க் நல்லாத்தான் வரும்.’ எனக் கூறியபடி சைக்கிளை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றேன்.
அம்மாவின் கொஞ்சும் படலம் முடிந்து சாப்பாட்டிற்கு முன்பு குளிப்பதற்கு கிணற்றுக்கு சென்றேன்.
இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆனதால் தண்ணீர் குளிராக இருந்தது. இரயில் பயணத்தில் வேர்த்த உடலுக்கு அந்தநீர் இதமாக இருந்தது. ஒவ்வொரு வாளி தண்ணீரும் தலையில் இருந்து பின் தோளில் தழுவி உடலில் விழும்போது அழகிய பெண்ணின் அரவணைப்புக்கு சமனாக இருந்தது. இரயில் பிரயாணத்தின் பின் குளிப்பது மசாஜ் செய்வது போன்ற அநுபவம். இது யாழ்ப்பாணத்துக்கு மட்டும் பிரத்தியேகமான வசதியாகும். வேறு எங்கும் நான் இவ்வளவு கிணறுகளை கண்டதில்லை.
சாப்பாட்டுக்கு புட்டுடன் நண்டுக்குழம்பு இருந்தது. அம்மாவுக்கு தெரியும் நண்டு எனக்கு விருப்பமானது என்று. அமாவாசைக் காலம் நண்டு சாப்பிடுவதற்கு நல்ல சதையுடன் சினையுடனும் இருக்கும். அந்த சினையை உடைத்து புட்டுடன் கலந்து சாப்பிடுவேன். இன்று நண்டுக்கறியும் முருங்கக்காய் வதக்கலும் எனக்கு பிடித்தமாகையால் வயிறு நிரம்ப ஒரு பிடி பிடித்தேன். நண்டுக்கோதை துப்பியபடி ‘அம்மா நான் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும் ‘ என்றேன்.
‘என்ன?’
‘நண்டுக்கறியும், முருங்கக்காயும் நன்றாக இருக்கு.’
‘அதைவிடு. விஷயத்தைச் சொல்லு.’
‘நான் ரெஜிஸ்டர் பண்ண இருக்கிறேன். பின்பு கல்யாணத்தை வசதி போல் செய்யலாம்’.
‘எனக்கு சொல்லாதே. அப்புவிடம் சொல்லு.’
அப்பு வெளியே இருந்தபடி ‘ என்ன சொல்லுறது.? அவன் நினைத்தபடி செய்கிறான். செய்யட்டும்’ என்றார் சுருட்டுப் புகையை விட்டபடி.
அவரோடு வாதம் செய்ய விரும்பாதபடியால் நண்டு கோதை சூப்பி விட்டு முருங்கக்காயை சப்பி துப்பினேன்.
சாப்பிட்டதும் சிறிது நேரம் யோசித்தேன். பின்னர் அப்புவிடம் சென்று, ‘அப்பு’ என அழைத்தேன்.
‘ம்ம்’ என மீண்டும் புகை விட்டார்.
‘நாளை ரெஜிஸ்ரேசன் மதவாச்சியில். நீங்களும் அம்மாவும் வரமுடியுமா?’
அப்பு திடுக்கிட்டபடி, ‘என்ன’ அவர் குரலிலே இலேசான நடுக்கம் இருந்தது.
‘மதவாச்சிக்கு நாங்கள் எப்படி வருவது?’
‘இந்த விஷயத்தை கொஞ்சம் ஆறுதலாக கேளுங்கோவன் ‘ என்றார் அம்மா.
‘நீங்கள் பத்திரமாக வந்து மதவாச்சியில் நிற்கலாம். என்னால் அதற்கு உத்தரவாதம் தரமுடியும் யாழ்ப்பாணத்தில் சித்திராவின் தாய்தந்தையருக்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது. அதுவும் இப்படியான தேர்தல் காலங்களில்.’
அம்மாவும், அப்புவும் மௌனமாக இருந்தார்கள்.
இவ்வளவு நேரமும் அறைக்குள் இருந்த ரவி, ‘அண்ணை சொல்வதிலும் பொயின்ஸ் இருக்கு’ என்றான்.
‘உன்னை கேட்கவில்லை. உன்ர பொயின்சும் நீயும்.’ என அம்மா எரிந்து விழுந்தாள்.
நான் சிறிது நேரத்தில் ‘பார்வதி அக்கா வீட்டை போய் வாறன்’ என ரவியின் சைக்கிளை எடுத்தேன்.
‘இப்ப இந்த நேரத்தில்’ – அம்மா.
‘நீங்கள் படுங்கள். நான் வருகிறேன்.’
பார்வதி அக்காவின் படலையை திறந்து கொண்டு போன போது ‘யார்’ எனக் குரல் கேட்டது.
‘நான் தான்’
‘என்ன இப்ப வாறாய்?, எப்ப வந்தனி மதவாச்சியிலிருந்து.’
‘இப்பதான்.’
பார்வதி அக்கா குடும்பகாரி. நாலு பிள்ளைகள். இரண்டு ஆண்கள். இரண்டு பெண்கள். அக்காதான் இங்கு குடும்பத்தைப்; பார்க்கிறது. கணவர் கொழும்பில்.
‘அக்கா குருமான்கள் எல்லாம் நித்திரை போலும். சத்தத்தை காணவில்லை?.’
‘எல்லாம் படுத்து விட்டது. நானும் படுக்கத் தயார்.’
‘இப்பதானே பத்து மணி’
‘நாலுக்கும் சாப்பாடு சமைச்சு போடவே உடம்பு களைக்கிறது.
மேலும் உன்னைப் பற்றி விஷேசம் கேள்விப்பட்டேன். உண்மையா?’
‘என்ன விஷேசம்?’
‘உனக்கும் ஒரு சிங்கள பெட்டைக்கும் கல்யாணம் என்டுதான்.’
‘யார் சொன்னது?’
‘மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே’ என்றார் நமுட்டுச்சிரிப்புடன்.
அதே நேரம் அக்காவின் குட்டிப்பூனை விசேடமான குரலில் கத்தியது.
‘என்னக்கா, குட்டி இப்படி கத்துகிறது?’
‘அதை விடு. இது சினைக்காலம். குட்;டி மாப்பிள்ளை தேடுது.’
‘குட்டிக்கு எத்தனை வயது.’
‘எட்டு மாதம் ஆகிறது’
‘ அக்கா எனக்கு இருபத்தைந்து வயதாகிறது,’ என சிரித்தேன்.
‘பூனைகளையும் நாய்களையும் வைத்தியம் பார்த்து பார்த்து இப்ப அதுதான் உனக்கு கதையாக போச்சுது.’
‘அதுதானே எனக்கு சாப்பாடு போடுகிறது.’
‘சரி பெட்டைக்கு என்ன பெயர்?’
‘சித்ரா. ஒரு மாதத்தின் பெயர்.’
‘எப்படி வடிவா? என்றவள் மீண்டும் ‘வடிவில்லாவிட்டால் நீ எப்படி விழுவாய்.? மாமா என்னவாம். குதிப்பாரே. எப்படி சமாளிக்கப் போகிறாய்?’
‘யாழ்ப்பாணத்தில் குடித்தனம் நடத்தமுடியாது என அப்பு சொல்கிறார். ஆனால் அவருக்கு தெரியவில்லை யாழ்ப்பாணத்தில் இருந்த சனம் எல்லாம் வெளிநாடுதான் போகிறது. நான் தமிழ் பெட்டையை முடித்தாலும் இங்கே சீவிக்கலாம் என்று நினைக்கவில்லை. இங்கு வேலை வெட்டி இல்லாமல் கிடக்கிற காலமா இது. எதற்கும் அப்புவுக்கு எடுத்து சொல்லு. நான் நாளைக்கு பதவியாவில் ரிஜிஸ்டர் பண்ணுகிறேன். நேரம் காலம் சரியா வந்தா பின்பு முறைப்படி கல்யாணம் செய்யலாம்.’
‘ஏன் அவசரப்படுகிறாய்.?’
‘எனக்கு அவசரமில்லை. அவளுடன் மதவாச்சியில் பேசிப் பழகுவதைச் சில பேர் அசிங்கமாக பேச இடம் கொடுக்கக் கூடாது என்று தான். மேலும் சிக்கல் உள்ள விஷயத்தை பின் போட்டால் மேலும் சிக்கலாகும் என்பது என் கருத்து.’
‘யாழ்ப்பாணத்தில் இருந்து யாரையாவது எதிர் பார்க்கிறாயா?’
‘இல்லை. இந்த சூழலில் நான் எதிர்பார்க்கவில்லை. நீதான் எடுத்து சொல்ல வேண்டும்.’
‘நான் சொல்லிப் பார்க்கிறேன். உனக்கு ஏதாவது காசு தேவையா?’
‘நீ கேட்டதே எனக்கு பத்து லட்சம் தந்தது மாதிரி. நான் கிளம்புகிறேன்’ என வெளியேறினேன்.
நான் சைக்கிளை தள்ளியபடி கேற்றால் வரும் போது என்னுடன் அக்காவும் வந்தாள். அப்போது கொக்குவில் ஸ்ரேசன் ரோட்டில் வேகமாக பல வாகனங்கள் சென்றன. இதன் பின்னால் ஏராளமான சைக்கிள்களும் வந்தன.
ஒருவரிடம் ‘என்ன நடந்தது’ என்றேன்.
‘ஆமி சுடுகிறான்கள்’ என குழறியபடியே சென்றார். பம்பலாக ஓடி வந்த சைக்கிள்களுக்கு பின்னால் ஆண்களும் பெண்களுமாக பலர் ஓடி வந்தனர். அதில் ஒருவர் சிறிது விபரமாக கூறுவதற்கு எங்கள் ரோட்டில் நின்றார். ‘நாச்சிமார் கோயில் முன்னால் நடந்த கூட்டத்தில் பொடியள் இரண்டு பொலிசாரை சுட்டுக் கொன்று போட்டார்கள். ஆமி வந்து எல்லோரையும் அடித்துக் கொண்டிருக்கிறான்கள். நாச்சிமார் கோயிலையும் கொழுத்து கின்றார்கள். ‘
‘அறுவான்கள் கோயிலைக் கொழுத்துறான்களோ’ என்றாள் அக்கா.
‘நீங்கள் எங்கே போகிறீர்கள். வீட்டை வந்து இருந்து விட்டு ஆறுதலாக போங்கோ.’ என்று செய்தி சொன்னவரை அழைத்தேன்;.
‘நான் திருநெல்வேலிதான் போயிடலாம்.’
‘சரி தண்ணீரை குடித்து விட்டு போங்கள்’ என அக்கா உள்ளே சென்று செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவர் குடித்துக்கொண்டு இருக்கும் போது ‘யார் கூட்டத்தில் பேசியது’ என்றேன்.
‘தமிழர் கூட்டணி தலைவர் சிவசிதம்பரம் பேசும் போது சூடு கேட்டது’
‘யார் சுட்டது அண்ணை.’
‘யாருக்கு தெரியும் புலி என்கிறார்கள். ஆமிதான் சுட்டாங்களோ யாருக்கு தெரியும்.’
‘நன்றி’ என கூறி விட்டு ஓட்டமும் நடையுமாக சென்றார் அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த மனிதர்.
‘நீ கொஞ்சம் இருந்து விட்டு போ’ என மறித்தாள் அக்கா.
‘இல்லை. ஒழுங்கையால் செல்வேன்’ எனக் கூறிவிட்டு இருளாகக் கிடந்த சிறு ஒழுங்கைகள் வழியாக வீட்டுக்கு சென்றேன்.
வீடு வந்து சேர்ந்த போது அம்மா ஒரு கதிரையை போட்டுக்கொண்டு வாசலில் இருந்தாள். ‘ஏன் இவ்வளவு நேரம். ஆமி அடிக்கிறான்’ என்றாள்.
‘நான் ஒழுங்கையால் வர லேட்டாகிவிட்டது. உங்களுக்கு யார் சொன்னது?’
‘ரவி அங்கிருந்து தான் வந்தான்.’
‘சரி நான் படுக்கப் போகிறேன். நாளைக்கு மதவாச்சி போகவேண்டும்.’
‘நிலைமை இப்படி இருக்க நீ போகப் போகிறாயா தம்பி’,
‘நான் போகாமல் எப்படி இருப்பது?’
அப்பு விறாந்தையில் படுத்திருந்தபடி, ‘அவன் எதைக் கேட்டான் நீ சும்மா இரு’ என்றார்.
அப்புவோடு கதைக்காமல் இருப்பது மேலானது என நினைத்து விறாந்தையில் பாய் விரித்து படுத்தேன். சிறிது நேரத்தில் அம்மா வந்து நெற்றியில் திறுநீறு பூசிவிட்டு என் மேல் போர்வையை போட்டுவிட்டு சென்றாள்.
மறுமொழியொன்றை இடுங்கள்