

நடேசன்.
1954 ஜூலை 7ஆம் திகதி பிறந்த சண்முகம் சபேசன், 2020 மே மாதம் 29 ஆம் திகதி காலமானார் என்ற போதிலும், 2009 மே மாதத்தில் முடித்த ஈழத்துக்கான போரினால் மனக்காயமடைந்தவர். அந்த மனக்காயங்கள் , முள்ளிவாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வெளிநாட்டில் வாழ்ந்த அவருடன் கடந்த பதினொரு வருடங்களாக வலிதந்துகொண்டே இருந்ததை நன்கு அறிவேன். சபேசனது அந்தத் தீராத வலி அவர் மறையும் வரை ஆறவேயில்லை.
அந்தக்காயங்களுடன்தான் அவர் எம்மை விட்டு விடைபெற்றுள்ளார்.
மனப்பாதிப்பை, எழுத்துக்கள் பயணங்கள் மூலம் கடந்து வரவேண்டும் எனச் சொல்லி அவரைத் தேற்றி, சுமுக நிலைக்குக் கொண்டுவர ஓரளவு முயற்சித்தேன். ஆனால் சபேசனது இடுக்கண்கள் , பல வடிவங்களில் தொடர்ந்து வந்து அவரது மூச்சுக்காற்றைத் தடுத்துவிட்டன. கடந்த மாதங்கள் உலகடங்கிலும் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றினால், தொடர்பாடலற்ற நிலைமைகள் விடயத்தை மேலும் சிக்கலாக்கியது.
கடந்த வருடம் நடந்த எனது புத்தகங்களுக்கான ஆய்வு நிகழ்வில் எனது அரசியலற்ற பயண நூலைப்பற்றிப் பேசும்படி அவரை அழைத்தேன் .சந்தோசமாக வந்து கலந்து கொண்டு உரையாற்றிவிட்டுச் சென்றார். அந்த நிகழ்வு முடிந்த பின்பு பேசுவதற்காக நான் கொடுத்த புத்தகத்தையும் , அதற்காக தான் எழுதி எடுத்து வந்த குறிப்பையும் தரையில் விட்டுச் சென்றிருந்தார். ஏற்கனவே அவர் தனக்கு வரும் ஞாபக மறதியைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், அன்றைய அந்தச் சம்பவம் என்னைக் கவலை கொள்ள வைத்தது.
வேகமாகச் சைக்கிளை எம்பி உழக்கியபடி செல்லும் யாழ்ப்பாணம் பிரவுண்வீதி சண்முகம் சபேசனை யாழ். இந்துக்கல்லூரியில் நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் காலத்தில் சந்தித்தேன். 90 களில் மீண்டும் மெல்பனில் அவரை நான் சந்தித்தபோது அரசியல் கொள்கையில் எதிரும் புதிருமாக இருந்தோம்.
சபேசன் விடுதலைப்புலிகளின் அவுஸ்திரேலியா அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் மிக முக்கிய பிரதிநிதியாகவும் மெல்பனில் இயங்கிய உள்ள சமூக வானொலி 3 C.R. தமிழ்க்குரலில் ஒலிபரப்பாளராகவும் இருந்தார். ஒலிபரப்பாளர் என்பது மெல்பனில் விடுதலைப்புலிகளுக்கான பிரசாரப்பணியே. அதேபோல் அக்காலப்பகுதியில் அரசாங்கப் பணத்தில் நடத்தப்படும் சமூக வானொலியான SBS இல் ஜோய் மகேஷ் என்பவரும் அந்த இயக்கத்தின் கொள்கை பரப்பாளராகவே அதே வேலையைச் செய்தார்.
எல்லாச் சமூக வானொலிகளும் விடுதலைப்புலிகளின் பிரசார பீரங்கிகளாகவே இயங்கின. இந்த வானொலிக்குப் பொறுப்பானவர்களிடம், ” சமூக வானொலிகளை இப்படி ஆயுத இயக்க வானொலிகளாக இயக்குவது முறையல்ல “ என முறைப்பாடு செய்தோம். அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை .
அதன் விளைவாகவே என்னைப்போலச் சிந்திக்கும் 15 நண்பர்களுடன் இணைந்து மாத வெளியீடாக உதயம் மாதப்பத்திரிகையை நடத்தி, இலவசமாக வினியோகித்தோம். அதனால் சில தமிழ் சமூகவானொலிகள் உதயம் பத்திரிகையையும் , இதைச்சார்ந்தவர்களையும், என்னையும் தமிழர்களின் பொது எதிரியாகவே பிரகடனப்படுத்தினார்கள்.
இந்த பத்திரிகையை எரிப்பது, எறிவது, மற்றும் அழிப்பது என்பது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மூச்சாக இருந்தது. அக்காலகட்டத்தில் விக்ரோரியா மாநிலத்தின் பொறுப்பாளராக யாதவன் என்பவர் தளபதியாக முன்வந்து உதயம் பத்திரிகையை காணுமிடத்தில் அதனைக் கட்டாகத் தூக்கி எறியுமாறு உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் அறிந்தேன். இதனால் இலங்கைத் தமிழர்கள் தங்கள் கடைகளில் உதயம் பத்திரிகையின் பிரதிகளை வைக்கவும் பயந்தார்கள். எனது நண்பர் ஒருவர் “ ஊரோடு ஒத்துப் போங்கள் “ என அறிவுறுத்தினார். மருத்துவரான எனது மனைவியின் கிளினிக்கிற்கு செல்லவேண்டாம் என்று கூட பிரசாரங்களை மேற்கொண்டனர். எனது குடும்பத்தின் இன்ப – துன்ப நிகழ்ச்சிகளுக்கு எவரும் வரமாட்டார்கள் என்றும் அச்சுறுத்தினர்.
எங்கள் உதயம் இருமொழிப் ( தமிழ் – ஆங்கிலம் ) பத்திரிகை. சிங்களவர், இந்தியர்கள் நடத்தும் கடைகளில் வைத்து விநியோகித்தோம். உதயம் விளம்பரதாரர்களுக்குத் தொலைபேசியிலும் பயமுறுத்தினார்கள். இறுதியில் பிரான்ஸிலிருந்து ஈழமுரசு பத்திரிகையை இறக்குமதி செய்தும் , பின்னர் அதனையே இங்கும் அச்சடித்து விநியோகித்தார்கள்.
இந்தப் பனிப்போர் உச்சமடைந்தபோது, அந்த ஈழமுரசுவில் என்னை துரோகியாகவும் என்னை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடைய வாரிசாகவும் வர்ணித்தும் ஒரு கட்டுரை எழுதப்பட்டது. அதற்கு நான் சட்டரீதியாக வழக்கு தொடரும்பொருட்டு வழக்கறிஞர் மூலமாக அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். அப்பொழுது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக இருந்த தில்லை ஜெயக்குமார் என்னிடம் வந்து, “ டொக்டர், நாங்கள் சமாதானமாகப் போகவிரும்புகிறோம் “ எனச்சொன்னபோது நானும் “ நீங்கள் அந்தக் கட்டுரைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டால் பிரச்சினை முடிந்தது “ என்று சொன்னபோது ஜெயக்குமார் வீட்டில் ஒரு சமாதான சந்திப்பு நடந்தது.
அச்சந்திப்பில் எனக்கு எதிராக எழுதியவரை அடையாளம் காட்டினார்கள். மகேந்திரன் என்ற அந்த மனிதரிடம், “ உங்களுக்கு என்னைத் தெரியுமா? “ என்று கேட்டேன் . “ இல்லை இன்பத்தமிழ் வானொலியில் உங்களைப் பற்றிப்பேசுவதைக் கேட்டேன்..“ என்றார்.
உண்மையில் அவர் அதனை எழுதவில்லை. அவர் இவர்களது “போடு தடி” எனத் தெரிந்ததும் சமாதானமாகினேன். என்னிடம் சபேசன் வந்து இவர்கள் சின்னப்பிள்ளைத்தனமாக நடப்பதாகக் கூறி, என்னிடம் வந்து “ எப்படி மன்னிப்புக் கடிதம் எழுதவேண்டும் “ எனக் கேட்டு எழுதியவாறு அந்தக்கடிதம் ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது.
அதன் பின்பு சபேசனுடன் எனக்கு நெருக்கமேற்பட்டது . விடுதலைப்புலி ஆதரவாளராக அவர் இருந்தபோதிலும் அவர் என்னோடு நேரடியாகப் பேசுவதும் பிடித்தது. இதைவிட இலக்கியத்திலும் பரிசயமுள்ளவர் என்பதும் எனக்குத் தெரிந்தது. எல்லாவற்றையும் விட சபேசனிடம் நகைச்சுவை உணர்வும் இருந்தது. மேற்கூறிய மூன்று அம்சங்களையும் தீவிர விடுதலைப்புலி ஆதரவாளர்களிடத்தில் காண்பது அரிதானது.
போர் தொடங்குவதற்கு சில காலத்தின் முன்பு, இங்கு மெல்பனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் தில்லை ஜெயக்குமாரின் எதிர்பாராத மரணம் நிகழ்ந்தது. அதன்பின்னர் போர்க்காலத்தில் சபேசனே இங்கு அதன் பொறுப்பாளராக இருந்தார். அந்த நியமனம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் நடந்தது.
அதனால் சபேசனுக்குப் பல எதிரிகள் உள்ளும் புறமும் உருவாகினர். வெளிநாட்டு விடுதலைப்புலிகளின் பொறுப்பு ஒரு அதிகாரத்தின் சாவி மட்டுமல்ல, பணப்பெட்டியின் திறவுகோலுமாகும். ஒரு காலத்தில் உலகின் பல பாகங்களிலும் இருந்து வரும் பணம், அவுஸ்திரேலியா ஊடாகவே தென்கிழக்காசிய நாடுகளில் ஆயுத கொள்வனவுக்குச் சென்றது.
சபேசனின் காலத்தில் இங்கு சுனாமிப்பணத்தை கையாடியதாக அவுஸ்திரேலிய பொலிஸ் மேற்கொண்ட கைது நடவடிக்கையில் , பணத்திற்கான திறவுகோல் தொலைந்து விட்டது ! சேமிப்பில் இருந்த பணம் சொத்துக்கள் கைதாகியவர்களை காப்பாற்றுவதற்குச் செலவானது.
ஆனால், அக்காலத்தில் ஆயுதக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதுடன் ஆயுத பற்றாக்குறையால் பணம் வன்னியில் தேவைப்பட்டது. மற்றவர்களது தாலிகளை இலகுவாக அறுக்கும் வன்னிப்புலிகளுக்கு இங்கு பொலிஸாரால் பிடிபட்டவர்கள் பெரிய விடயமில்லை. அத்துடன் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பு அந்தப்போர்க்காலத்தில் சபேசனின் தலைமையிலிருந்தது.
விடுதலைப்புலிகளின் அவரோகணம் சம்பூரிலிருந்து முள்ளி வாய்கால்வரையும் தொடர்ந்தது . அங்கு அனுப்புவதற்கும் பணமில்லை . அத்துடன் விடுதலைப்புலிகளைக் காப்பாற்ற இங்கு உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள், கன்பரா பஸ் பயணங்கள் தொடர்ந்தன. ஆனால், இவற்றிற்கும் பணம் வேண்டும். சபேசன் தனது வீட்டை அடைவு வைத்து பணத்தை எடுத்துச் செலவழித்தார்.
விடுதலைப்புலிகள் அழிவது திண்ணமெனத் தெரிந்த என் போன்றவர்கள் மக்களை காப்பாற்றவேண்டும் என இலங்கை அரசோடு பேசினோம்.
சிலகாலத்தின் பின்பு எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் சுந்தரமூர்த்தி ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் முக்கிய பொறுப்பிலிருந்தவர். மெல்பன் கோயில்களில் ஒருங்கிணைப்புக்குழுவைத் தலையிடவேண்டாமென்ற அவரது கருத்துகளினால், அவர் மெல்பனில் “ மாத்தையா “வாக ஆக்கப்பட்டவர்.
அவரே எனக்கு சபேசனைப்பற்றிச் சொல்பவர். சபேசனது குடும்பத்தில் நெருக்கடி வந்தது. அதனால் அவர் வீட்டை விற்கப்போவதாகக் கூறியதும், நானும் நண்பர் முருகபூபதியும் சபேசனது வீடு சென்று அவருக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளைப் பேசினோம். தொடர்ந்தும் அடுத்தடுத்து அவருக்கு வந்த அழுத்தங்களினால், மனரீதியில் பாதிப்படைந்திருப்பது.அறிந்து சபேசனுடன் பல முறை பேசியிருக்கின்றேன்.
சபேசனது வீடு விற்பனைக்குப்போனபோது, அவரிடத்தில் புத்தகங்கள் ஆயிரத்துக்கு மேல் இருந்தன. அவற்றை வைக்க இடமில்லாது மிகவும் சிரமப்பட்டார். என்னிடம் கேட்டபோது, ஒரு வருட காலம் அவற்றை எனது கிளினிக்கில் வைத்தேன். சபேசன் புதிதாக ஒரு அபார்ட்மெண்ட்டில் குடிபுகுந்தபோது அவற்றை மீள எடுத்துக் கொண்டார். சபேசனது புத்தகங்கள் எனது பாதுகாப்பிலிருந்தபோது அவற்றில் சிலதை எடுத்துப் படித்தேன்.
தமிழ் இலக்கியம் , வரலாறு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்களோடு ஆங்கில புத்தகங்களும் இருந்தன அவைகளைப் படித்திருக்கும் சபேசன், எப்படி ஆயுதங்களை மாத்திரம் நம்பிய புலிகளின் ஆதரவாளனாகியிருந்தான் என்பதே எனது வியப்பூட்டும் கேள்வியாக எப்போதும் தொடர்ந்தது.
மாதமொரு முறையாவது அவருடன் பேசுவேன். தலைவர் பிரபாகரனைச் சந்தித்த விடயங்கள்தான் எப்பொழுதும் சபேசனது வாயில் வரும். அதன்போது எந்தக் கருத்தும் சொல்லாது நான் மவுனமாகியவாறு சபேசன் சொல்வதைக் கூர்ந்து கேட்பேன். இருவரும் எக்காலத்திலும் எங்கள் நம்பிக்கைகளை பரஸ்பரம் பேசவில்லை. அதனாலேயே இருவரும் தொடர்ந்து உரையாடமுடிந்தது.
இறுதியில் சபேசனிடம், உமக்கும் தலைவருக்கும் இடையே நிகழ்ந்த வன்னி சந்திப்பைப் பற்றி எழுதும். அதில் மற்றவர்களுக்குத் தெரியாத பல செய்திகள் இருக்கலாம். நானோ அல்லது முருகபூபதியோ அவற்றை செம்மைப்படுத்தி தருகிறோம் என்பேன்.
சபேசன், நீடித்த இந்தபோர் ஒருநாள் தோற்கும் என்பதைப்பற்றியும் பிரபாகரனிடம் கூறியதாக எனக்குப் பல முறை கூறியிருந்தார். அதைவிட மெல்பன் ஒருங்கிணைப்பு குழுவில் நடந்த உள்குத்துகளையும் சொன்னார். எனது கானல் தேசம் நாவலில் அது பற்றி இரண்டு அத்தியாயங்கள் எழுதியுள்ளேன் .
விடுதலைப்புலிகளில் முன்னர் இருந்தவர்களான கருணா என்ற முரளீதரன், கே பி என்ற குமரன் பத்மநாதன் மற்றும் சில முன்னாள் வெளிநாட்டு உள்நாட்டு புலிகளுடனும் சந்தித்தும், தொலைபேசியிலும் பேசியும் இருக்கிறேன். ஆனால், அவர்களில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனில் சபேசனைப்போன்று இவ்வளவு அன்பாகப் பேசும் ஒருவரைக்கூட நான் காணவில்லை. குண்டியில் ஒட்டிய மண்ணைத் தட்டுவதுபோல சென்றவர்கள் மத்தியில் சபேசனின் இந்தத் தன்னலமற்ற தன்மையே, எனக்கு சபேசனிடம் மரியாதையை ஏற்படுத்தியது.
போரின் பின்பு நான் இலங்கை செல்லும்போது, என்னிடம் தனது உறவினனான யோகி மாஸ்டருக்கு என்ன நடந்ததது..? எனக் கேட்டு அறிந்து வரும்படி அவர் சொல்வதுண்டு. அதன்படி நான் ஒரு முக்கிய உளவு அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரிகளிடம்கேட்டு வந்து சொன்னேன். பின்னாளில் “ தலைவர் இறந்து விட்டார் “ என்று இன்னமும் சொல்லாது இருப்பது, அவரை அவமானப்படுத்தும் செயல் என்று சபேசன் சொன்னபோது, “ நான் ஒரு மண்டபத்தை ஒழுங்கு பண்ணுகிறேன். நீர் வந்து அதில் அவருக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.
சபேசன் சுமார் கால்நூற்றாண்டுகளாக ஒவ்வொரு கிழமையும் குளிர் , மழை, நோய் , உடல் உபாதை எனப்பாராது நடத்திய தமிழ்க்குரல் வானொலியிருந்தும் அர்ப்பணிப்புடன் இணைந்து இயங்கிய ஒருங்கிணைப்புக்குழுவிலுமிருந்தும் நீக்கப்பட்டதை சபேசனால் தாங்க முடியவில்லை. சபேசன் நேசித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அழிவு, இலங்கை அரசால் நடந்தது. தமிழ்க்குரலில் மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டது அவருடன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவருடன் தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்தவர்களால் நடந்தது.
சபேசனுக்கு கான்சர் நோய் வந்ததும் வேலையிலிருந்து ஓய்வெடுத்ததை அறிந்தேன். அதன் பின்பாக நடந்த கீமோ சிகிச்சையால் ஞாபக சக்தியில் தாக்கம் வந்தபோதும் கூட வன்னியில் அவர் தங்கியிருந்த விடயங்கள் திரைப்பட காட்சிகளாக இருந்தன. ஒருவிதத்தில் அந்த நினைவுகளிலேயே அவர் வாழ்ந்தார் எனலாம்.
எனக்கு அவர் சொல்லிய விடயங்கள் சில:
“ நான் இருந்தபோதே சீமானின் வருகை வன்னியில் நடந்தது. அது மிகவும் சுருக்கமான சந்திப்பு. சீமான் புளுகுவதுபோல் எதுவும் அங்கே நடக்கவில்லை.
ஜோய் மகேஷினால் புலித்தளபதிகளிடம் பிரச்சினை ஏற்படுவதால், தலைவரே அவரை திருப்பி அனுப்பினார்.
சபேசனின் நேர்மை பலரை அவருக்கு எதிரியாக்கியது.
காலச்சுவடு கண்ணன் மெல்பன் வந்தபோது, கண்ணனுக்கு காலச்சுவட்டின் நெடுநாளைய சந்தாதாரர்தான் சபேசன் என அறிமுகமாக்கி, சபேசனின் வீட்டில் சிலமணிநேரம் பேசவிட்டேன். அதே போன்று எனது நண்பனான ஜெயக்குமார் கனடாவிலிருந்து வந்தபோது ஜெயக்குமாரையும் அவரது விட்டிற்கு அழைத்துச் சென்றேன். பிற்காலத்தில் எனது தனிப்பட்ட விடயங்களால் அவரிடம் போய் வரமுடியாதபோதிலும், தொடர்ச்சியாக தொலைபேசியில்பேசி பழைய விடயங்களிலிருந்து மீண்டு எழுந்து வருமாறு வலியுறுத்துவேன். என்னைப்போல் நண்பர் முருகபூபதியும் சபேசனிடத்தில் பேசுவர்.
சபேசனுக்குக் கடந்த பத்து வருடங்களில் இரண்டு விடயங்கள் நன்மையாக நடந்தவை.
சுந்தரமூர்த்தி அவர்களது நட்பு அதில் முக்கியமானது. அவர் பேசிவிட்டு, என்னிடம் “ சபேசனிடம் பேசினீர்களா? “ என ஞாபகப்படுத்துவார்.
ஐந்து வருடங்கள் முன்பாக சபேசன் தனக்கு இலங்கைப்பெண்ணெருவருடன நட்பு இருப்பதாகச் சொன்னபோது, அதை வரவேற்று உற்சாகப்படுத்தினேன். அத்துடன் நான் ஒருநாள் அவரது வீடு சென்றபோது அந்தப்புதிய துணையையும் கண்டேன். அவருடன் ஏதும் பேசாதபோதிலும், சபேசனுக்கு நல்ல துணையாக அவர் அமைந்ததையிட்டு மகிழ்ந்தேன். இந்தியாவிற்கு ஒருமுறை இருவரும் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். .
சபேசனது மறைவு அறிந்து, சபேசனது மனைவியான மலரிடம் பேசியபோது, கடந்த ஐந்துவருடங்களும் தாங்கள் இருவரும் சந்தோசமாக இருந்தோம் என்று அவர் சொன்னதும், கடவுளை நம்பாத சபேசனுக்கு மலரின் வருகை ஒரு வெகுமதியாக இருந்துள்ளது என்ற திருப்தியுடன் என்னால் எனது நண்பர்
சபேசனது இறுதி மரியாதைக்குப் போய் வந்தபோது எனக்கு ஏற்பட்ட சில எண்ணங்களைப்பரிமாறாது இந்த நினைவுக் குறிப்பை முடிப்பது நேர்மையாகாது.
வழக்கத்தைப்போல் வாழும் வரை கவனிக்காது மரணமடைந்த பின்பு கவனமெடுக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் புலிக்கொடியைப் போர்த்து தமிழ்த் தேசியப் பற்றாளர் என்ற பட்டத்தையும் அளித்து மிகவும் சிறப்பாக விடை கொடுத்தார்கள். நான் அஞ்சலிகாக எடுத்த இரு மலர்களை மிகக் கவனமான புலிக்கொடியில் படாது நண்பர சபேசனது முகத்தருகே வைத்து விடைகொடுத்தேன்.
https://www.belindajanevideo.com/client-video/sabesan-sanmugam/
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்