வண்ணாத்திக்குளம்.; வட்டப்பாறை.



யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததும் என்னுடைய அப்பா அம்மா திருமணத்துக்கு சம்மதித்த செய்தியைச் சித்ராவிடம் சொல்ல வேண்டும் என துடித்தேன். தொடர்ந்து கந்தோரில் வேலை இருந்தது. மதவாச்சி பிரதேசத்து மாடுகளுக்கு மழைகாலம் வரும் முன்பு தடுப்பூசி போட வேண்டுமென்பதால் இரவு பகலாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மனதுக்குள் திட்டியபடியே வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை பதவியா சென்றேன்.

நான் போகும் போது வாசலில் என்னை எதிர்பார்த்து அவள் காத்து நின்றாள். பூப்போட்ட சட்டையும் அதன் கீழ் பூப்போட்ட துணியும் அணிந்திருந்ததால் ஒரு பூங்கொத்தாக காட்சியளித்தாள்.

நான் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘எங்கள் வீட்டில் சம்மதித்து விட்டார்கள் ‘ என்றேன்.

கண்களை அகல விரித்தபடி ‘உண்மையாகவா? ‘

அவள் என்னை நம்பவில்லை என தெரிந்தது. ‘சத்தியமாக’ எனக்கூறி அவள் தலையில் அடித்தேன்.

‘நோகிறது’ என சிணுங்கினாள்.

‘என் ராசாத்தி’ என கூறியபடி அணைத்தபோது ‘அம்மா வருகிறார்’ என விலகினாள்.

‘எப்படி மாத்தையா’ என சித்ராவின் தாயார் கேட்டார்.

என் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை கூறியதும், மகிழ்ச்சியுடன் ‘கடவுளுக்கு புண்ணியம் ‘ என கூறினார். பின்னர் எதையோ நினைத்துக் கொண்டவரைப் போல, ‘எல்லோரும் சுகமா? ‘ என வழமையான கேள்வியையும் கேட்டு வைத்தார்.

‘பதவியாவுக்கு வருகிறாயா? ‘ என சித்ராவிடம் கேட்டேன்.
அவள் தாயைப் பார்த்தாள்.

‘கவனமாக போய் வா’ என விடை கொடுத்ததும் வீட்டுக்குள் சென்று உடனே உடுத்தியிருந்த துணியை கழற்றிப் போட்டு விட்டு அரைப் பாவாடையோடு வந்தது ஆச்சரியமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. முழங்காலுக்கு மேல் சிறிய கச்சித உடையிலே அவள் பாடசாலை ஆசிரியர் போல் அல்லாது மாணவி போலத் தோன்றினாள். சித்ராவின் கால்களை முதன்முறை பார்ப்பது இதயத்தில் ஒரு கிளுகிளுப்பை ஊட்டியது.

சித்ரா மோட்டார் சைக்கிளில் ஏறி பின் பக்கத்தில் அமர்ந்ததும் என் இடுப்பை பிடித்தபடி தாயாருக்கு கையசைத்தாள்.

சிறிது தூரம் சென்றதும் ‘இவ்வளவு அழகான கால்கள் இருக்குமென்றால் சேலை வாங்கித் தந்திருக்க மாட்டேன் ‘என்று குசும்பு செய்தேன்.

‘அடிப்பேன்’ என கூறியபடி கைகளால் தன் கால்களை மூடினாள். மோட்டார் சைக்கிளின் வேகம் எனக்கு சார்பாக இருந்ததால் பாவாடை மேலும் உயர்ந்தது.

‘இனிமேல் அரை பாவாடைகள் தான் என் பரிசுப்பொருட்கள்’

‘இப்படி என்றால் நான் இனி அரை பாவாடை போடமாட்டேன் ‘

‘சரி சரி நான் அப்படி சொல்லவில்லை. ‘

பதவியாவின் குளக்கரையை அடைந்தோம். மதிய வெயிலில் பதவியா குளத்தண்ணீர் பொன்னை உருக்கி வார்த்தது போலத் தெரிந்தது. இடையிடை தெரிந்த மெல்லிய நீரலைகள் மட்டுமே தண்ணீர் என்கிற வாஸ்தவத்தை நினைவு படுத்தின. மோட்டார் சைக்கிளை விட்டு குளக்கரையோடு நடந்தோம்.

படிக்கட்டு இருந்த இடத்தில் பலர் குளித்தனர். ‘எனக்கு தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்’ என்று கூறி சித்ரா என்னை வேறு வழிக்கு இழுத்தாள்.

‘தெரிந்தால் என்ன? ‘

‘எனது மாணவர்கள் கூட இருக்கலாம்.’

அடுத்த பகுதியில் குளத்தின் ஆழமான பகுதி இருந்தது. அங்கு எவரும் இல்லை. கரையில் வட்டமான பெரிய பாறையும் அதன் பக்கத்தில் பெரிய ஆலமரமும் இருந்தது. பாறையில் நாங்கள் இருந்ததும் குளத்து நீர் மட்டும் தெரிந்தது. மற்றைய பக்கங்களைச் செடிகளும் ஆலமரமும் மறைத்தன.

‘சித்ரா இந்த இடம் எவ்வளவு குளிர்மையாக இருக்கிறது.’

‘ஆமாம் ‘ என கூறிய படி சுற்றி சுற்றி பார்த்தாள்.

‘என்ன சுற்றிப்பார்க்கிறாய்? ‘

‘இல்லை இங்கு யாராவது எங்களைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?’

‘சரி’ என இழுத்து எனக்கு அருகில் இருத்தினேன்.

ஆலமரத்தின் நிழலும், கிணற்று நீரும் கோடையில் குளிராகவும் குளிர்காலத்தில் சூடாகவும் இருக்கும் என்பது உனக்குத் தெரியுமா? ‘

‘யார் சொன்னது? ‘

‘பழைய தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது’

‘வேறு என்ன இருக்கு உங்கள் இலக்கியத்தில் ?’

‘வேறு ஒரு இடமும் குளிர்காலத்தில் சூடாகவும் கோடைகாலத்தில் குளிராகவும் இருக்கும். ‘

‘அது என்ன’?

‘இங்கு கிட்ட வா’ என அவளை இழுத்து அவளுடைய மார்புகளிpல் என் தலையை புதைத்தபடி ‘இதுதான் ‘ என்றேன்.

‘நீங்களும் உங்கள் இலக்கியமும் நல்லா இல்லை’.

‘ஏய் என்னை நல்லா இல்லை என்றாலும் எங்கள் தமிழ் இலக்கியத்தை குறை கூறாதே. ‘

சித்ரா மௌனமாக என் தலையைத் தடவினாள்.

‘சித்ரா திருக்குறள் என்னும் தமிழ் நூலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? ‘

‘கேள்விப்பட்டிருக்கிறேன். ‘

‘அங்கு ஒரு பாடலில் அழகிய பெண்ணின் உமிழ்நீர் பாலும் தேனையும் கலந்தது போலச் சுவை இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. ‘

‘என்ன உங்களுக்கு இன்று இலக்கியம் அதிகமாக வருகிறது?’

‘உன் போன்ற அழகிய பெண் அருகில் இருப்பதுதான் காரணம். ‘ என கூறியபடி அவள் மடியில் சாய்ந்தேன்.

‘வீட்டில் என்ன சொன்னார்கள். ‘

‘சிங்களத்தியைக் கல்யாணம் முடித்தால் யாழ்ப்பாணம் வரமுடியாது. ‘கலவரம் வரும் போது சிங்கள நாட்டில் சீவிக்க முடியாது. இதை யோசித்து விட்டு திருமணம் செய்’ என்று தந்தையார் கூறினார். அம்மா ‘நீ சந்தோஷமாக இருந்தால் சரி’ என கூறினார். மொத்தத்தில் அம்மாவின் இதயபூர்வமான சம்மதமும் அப்புவின் அறிவுபூர்வமான எச்சரிக்கையுடன் கூடிய சம்மதமும் கிடைத்தன.’

‘நீங்கள் என்ன சொன்னீர்கள். ‘

‘சிங்களத்து குயில் என் இதயத்தை கொத்தி எடுத்து விட்டது என்றேன் ‘

‘சீரியஸாக கதையுங்கள். உங்களது பகிடிகளைப் பின்பு வைத்துக் கொள்ளலாம்.’


‘என்ன சொல்லி இருப்பேன். சித்ரா என்ற பெண்ணைத் தான் பார்த்தேன். மொழி இனம் மற்றும் சமயத்தை நான் பார்க்கவில்லை. அவள் உள்ளத்திலே அன்பு சுரந்து கொண்டிருக்கிறது..’ என்று கூறினேன்.

‘உண்மையில் அப்படி கூறினீர்களா? ‘ என கேட்டபோது இரு கண்ணிலும் இரண்டுதுளிகள் கண்ணீர் கீழ் நோக்கி உருண்டோடின.

‘ஏய் அழுகுணி’ என கூறியபடி தலையை கைகளால் அணைத்து உதட்டில் முத்தம் கொடுத்து விட்டு ‘திருவள்ளுவர் அநுபவசாலி’ என்றேன்.

அழகான சிரிப்பு பதிலாக வந்தது.

‘சித்ரா அடுத்தமாதம் மூன்றாம் திகதி பதிவுத் திருமணம் செய்வோம். ‘

‘என்ன, என்ன? ‘என்று கேட்டுத் திடுக்கிட்டாள்.

‘ அது மதவாச்சியில் நடக்கும். ‘

‘இன்னும் இரண்டு கிழமைதான் இருக்கு. ஏன் அவசரம் ?’

‘நான் பலமுறை யோசித்து விட்டுத்தான் முடிவு செய்தேன். யாழ்ப்பாணத்தில் நிலைமை சரியில்லை. எப்போதும் பிரச்சனை வரலாம். புதிவுத் திருமணம் செய்தபின் நீ என்னோடு வந்து யாழ்ப்பாணம் வந்து பெற்றோரை பார்க்கலாம். பிரச்சனை தீர்ந்தபின் கல்யாணத்தை எல்லோருக்கும் சொல்லி நடத்தலாம்.’

‘உங்களது விருப்பம் எதுவோ அது எனக்கு சம்மதம். பதவியாவில் என் வேலையை என்ன செய்வது? ‘

‘மூன்று மாத லீவு எடு. அதற்குள் மதவாச்சிக்கு மாற்றம் எடுத்து விடலாம்;.’

‘அம்மா தேடுவா’ போவோம்.

வட்டபாறையை விட்டு வர மனமில்லாமல் எழுந்து நடந்தேன்.

சித்ராவின் வீட்டை அடைந்த போது ருக்மனும் பண்டாரவும் முற்றத்தில் நிற்பது தெரிந்தது.

அவள் வீட்டினுள் ஓடினாள்.

‘எப்படி சுகம் பண்டார’?

ருக்மனை நோக்கி கிண்டலாக ‘நல்ல சுகம். ஆனால்; மச்சான்தான் நல்லா இல்லை’ என்றான்

எப்படி அரசியல் நிலை இருக்கிறது. ‘?

‘பெரும்பாலான தொழிலாளர்கள் இளைஞர்கள் எங்கள் பக்கம். ‘

‘சிங்களத் தொழிலாளர் ‘ என சிறிது அழுத்தமாக கூறினேன்.

‘தமிழ்த் தொழிலாளரும் எங்கள் பக்கம் வருவார்கள் ‘

‘பத்து லட்சம் மலையக தொழிலாளர்களை மறந்து விட்டீர்களா? ‘

‘தொண்டமானும் ஐக்கிய தேசியக்கட்சியும் தங்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிந்தால் அவர்கள் எங்கள் பக்கம் வருவார்கள் ‘.

‘இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பை போன்றவர்கள் மலையகத் தொழிலாளர்கள். அவர்கள் இல்லாமல் எந்தப் புரட்சியும் இலங்கையில் நடக்காது என்பது இலங்கை அரசாங்கத்துக்கு நன்றாகத் தெரியும்.’

‘அதற்கு நாங்கள் என்ன செய்யலாம்’ என்றான் ருக்மன்;.

உங்கள் ‘அடிப்படை கொள்கையில் மாற்றம் வேண்டும் அந்த தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமை வேண்டும்’ என்ற போது எவரும் வாய் திறக்கவில்லை. எல்லோருமாக சேர்ந்து இந்தியாவுக்கு அனுப்பப் பார்த்தார்கள். சிங்கள இடதுசாரிகள் மட்டுமல்ல இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களும் ஈடுபட்டார்கள், இதன் மூலம் இலங்கையின் சிங்களத்தொழிலாளர்கள் தங்களது சகோதர தொழிலாளர்கள்pன் பலத்தை இழந்தார்கள். வடக்கு கிழக்கு தமிழர்கள் தமிழ் பேசும் சகோதரர்களை இழந்தார்கள்.’

‘நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கு’ என்றான் பண்டார.

பண்டார விடை பெற்று சென்றபின் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம்.

பாதி சாப்பாடு சாப்பிடும் போது வெளியே வாகன சத்தம் கேட்டது.

சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த சித்ரா வெளியே ஓடிச்சென்று விட்டு மீண்டும் வந்த போது முகத்தில் கலவரம் தெரிந்தது.

‘என்ன சித்ரா’

‘பொலிஸ் வந்திருக்கு’

ருக்மனும்; நானும் கையைக் கழுவி விட்டு வெளியே வந்தோம்.

பதவியா பொலிஸ் இன்ஸ்பெக்டரும் அவருடன் நாலு கான்ஸ்டபிள்களும் நின்றார்கள். இன்ஸ்பெக்டர் சந்திரசிறி பதவியா காட்டில் யானையை பிரேத பரிசோதனை செய்;த போதும் பின்பு சட்டவிரோதமாக மாடு கடத்தல் வழக்கிலும் எனக்கு அறிமுகமானவர்.

என்னைக் கண்டவுடன், ‘என்ன டொக்டர் இந்தப் பக்கம்’ என்றார்.

‘மாடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக வந்தேன்.’ என சிறு பொய்யை கூறி வைத்தேன்.

‘இந்தப் பகுதி உங்களுக்கு நல்ல பழக்கமாகி விட்டது போலும்.’

‘ஆமாம், நீங்கள் என்ன இந்த பக்கம்? ‘

‘ருக்மனுடன்; பேச வேண்டும்,’ என கூறிவிட்டு ‘ருக்மன்; இந்தப்பக்கம் வர முடியுமா?’ என்று ஜீப்பின் அருகே கூட்டிச் சென்று சில நிமிடங்கள் பேசினார்.

சந்திரசிறி என்னருகே வந்து விடைபெற்றுச் சென்றார்.

‘என்ன விடயம் ருக்மன்; என்றேன் ‘

‘ஒன்றுமில்லை. ‘

‘ஒன்றுமில்லாமல் ஏன் பொலிஸ் வருகிறது? ‘என்று சித்ரா பேச்சிலே குறுக்கிட்டாள்.

ருக்மனின் முகத்தில் உள்ள சஞ்சலம் புரிந்தபடியால்; ‘சரி எல்லோரும் உள்ளே சென்று சாப்பிடலாம்’ என கூறியபடி உள்ளே சென்றேன். என்னைத் தொடர்ந்து மேசையை சுற்றி ருக்மனும், சித்ராவும் அமர்ந்தனர்.

‘என்ன விஷயம் அண்ணா? ‘ என சித்ரா மீண்டும் கேட்டாள்.

‘என்னை அரசியல் வேலையில் ஈடுபடவேண்டாம். ஈடுபட்டால் கைது செய்ய வேண்டி வரும் ‘ என்றார்.

‘தற்போது ஜே.வி.பி தடைசெய்யப்படவில்லை தானே’?என்றேன.;

‘அரசாங்கம் ஜேவிபியுடன் இரட்டை வேஷம் போடுகிறது. வெளிநாடுகளில் இந்த அரசாங்கம் கடன் வேண்டுவதற்காக செய்தது. தெல்தெனியாவில் இரண்டு தோழர்களை பொலிஸ் கடந்த மாதம் கைது செய்தது. அதில் ஒருவரை சுட்டுக்கொன்று விட்டதாக ஏற்கனவே தகவல் வந்துள்ளது.’ என ருக்மன் வெறுப்புடன் பதிலளித்தான்.

‘சரி என்ன செய்வதாக உத்தேசம். ‘

‘அரசாங்கத்துக்குப் பயந்து அரசியல் வேலையை நிறுத்த முடியாது. நாங்கள் அமைதியான முறையில் தான் செய்து வருகிறோம்.’

‘எதற்கும் கவனமாக நடக்க வேண்டும்.’

‘எனக்குப் பயமாக இருக்குது’ என்று கூறி சித்ரா குரல் உடைந்தாள்.

அவளின் தாய் தந்தையர் குசினியுள் நின்றதால் இந்த சம்பாஷனைகள் கேட்கவில்லை. சித்ராவின் தந்தையார் அப்பாவித்தனமாக, ‘பொலிஸ் என்னவாம் ‘ என்றார்.

அதற்கு ருக்மன்; ‘இந்தப்பக்கம் வந்தார்கள். அது தான் விசாரித்து விட்டு போகிறார்கள்’ என்று சொன்னான்.

இரவு பத்துமணி வரை எங்களுடன் இருந்து விட்டு ருக்மன் நண்பனை சந்திக்க வேண்டும் என கூறிச் சென்றான்.

சித்ரா எனக்கு ஒரு பாயும் தலையணையும் கொண்டு வந்து முன் விறாந்தையில் வைத்தாள். சித்திரா வீட்டில் ஒரு அறை மட்டும் இருந்தது. அது அவளின் உபயோகத்திற்காக இருந்தது. முன்புறத்தை அவளின் பெற்றோர்கள் பாவித்து வந்தார்கள். அவர்கள் இன்று குசினிப்பக்கம் போய் விட்டார்கள்.

‘என்ன வெளியில் படுக்க வைக்கிறாய்? என்ன நோக்கம் ‘ என்றேன் சித்திராவிடம்.

‘நல்ல நோக்கம் தான் ‘ என கூறி படுக்கையை விரித்தாள்.

‘சரி நீ எங்கே படுக்கிறாய்? ‘

‘அறைக்குள் ‘.

‘உனது அறைக்குள் நான் உடை மாற்றலாமா? ‘

‘தாராளமாக. ‘

உள்ளே சென்று உடுப்பு மாற்றி வந்து நான் சித்ராவிடம் தண்ணீர் கேட்டேன்.

சிறிது நேரத்தில் கோப்பையுடன் வந்தவளை கோப்பையுடன் சேர்த்து இழுத்தேன்.

‘ எனக்குத் தெரியும் இது நடக்கும் என்று. ‘

‘அப்போ நீயும் எதிர்பார்த்தாய் அல்லவா? ‘
பதில் பேசவில்லை.

‘சித்ரா குஞ்சு ஏன் பதில் பேசவில்லை.’

‘நீங்கள் வந்ததில் சந்தோஷமாக இருந்தேன். ஆனால் ருக்மன்; அண்ணாவின் விடயம் இப்போது பயமாக இருக்கிறது.’

‘உனது பயம் எனக்குப் புரிகிறது. மேலும் ருக்மன்; நான் சொல்லியோ நீ சொல்லியோ கேட்கப் போவதில்லை. உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதல்லவா? பிரார்த்தனை செய்வதே நீ செய்யக் கூடிய விடயம். ‘

‘நீங்கள் இலகுவாக சொல்லி விட்டீர்கள். ‘

‘அநுபவத்தால் சொல்கிறேன். யாழ்ப்பாணத்தில் பல விடயங்களை பார்த்திருக்கிறேன். அண்ணாவை தற்காலிகமாக மறந்து விட்டு என்னை கொஞ்சம் நினை என்று கூறி அவளை அணைத்தேன். மடியில் விழுந்த வேகத்தில் அண்ணனை மறந்து விட்டாள் என்பது புரிந்தது.

முன்னிரவில் அவள் வீட்டிற்கு பின்னால் செழித்திருந்த நெல் வயலின் ஊடாக வரும் குளிர்காற்று இதமாக இருந்தது. நெற்கதிர்களின் சலசலப்பு ஒர் அபூர்வ ராகமாக ஒலித்தது. ஆனால் தவளைகளின் ஒலி இன்ஸ்பெக்டர் சந்திரசிறியைப் போல் அமைதியை கலைத்தது.

மடியில் கிடந்த சித்ராவை ‘என்ன நித்திரையோ’ என உலுப்பினேன்.

‘இல்லை நீங்கள்தானே இழுத்தீர்கள். ‘.

‘அம்மாவிடம் அடுத்தமாதம் கல்யாணம் என்று கூறினாயா? ‘

‘சொன்ன போது ஏன் அவசரப்படுகிறார் என்று கேட்டார்; ‘.

‘நீ என்ன சொன்னாய்? ‘

‘ஆளே அவசரக்காரர்தான் என்றேன். ‘

‘முத்துக்குளிக்க கடலில் இறங்கியவன் அவசரமாக முத்து எடுத்துவிட்டு திரும்பி விடுவான். எதற்கும் எனக்கு முத்தம் கொடு. நான் அவசரக்காரன்’ என இழுத்து முத்தமிட்டேன். பதில் சொல்ல முயல்வது உதடுகள் அசைவதில் இருந்து தெரிந்தது. வாயாடி பெண்களின் வாயை அடைப்பதற்குத்தான் மேல் நாட்டில் அடிக்கடி முத்தம் இடும் வழக்கம் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தபடி அவளை என்னுடன் நீக்கமற இறுக அணைத்தேன்.

சித்ரா தேநீரோடு எழுப்பிய போதுதான் சுற்றிப்பார்த்தேன். நன்றாக விடிந்திருந்தது. தலையணைக்கு அடியில் வைத்திருந்த கைக்கடிகாரம் மணி ஒன்பது எனக் காட்டியது.

‘என்ன விடிய விடிய நித்திரை’ குறுஞ்சிரிப்புடன் கேட்டாள் சித்ரா.

‘இரவில் நித்திரை கொள்ள நீ விடவில்லை. ‘

‘மெதுவாக’ என்று சுற்றிப்பார்த்தாள்.

‘உண்மையை தான் சொன்னேன் நீ எப்ப எழும்பினாய்? ‘
நாலுமணிக்கு அறைக்குள் சென்று படுத்து விட்டேன்.

‘கெட்டிக்காரிதான். அதுசரி வெறும் தேநீர் கொண்டு வந்திருக்கிறாய்? எங்கள் ஊரில் இப்படியான நாட்களில் முட்டை கோப்பி கொடுப்பதுதான் மனைவிமாரின் வழக்கம். ‘

‘முட்டைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ‘ என்றாள் வெகுளியாக.

‘ திருமணம் முடிந்த பின் ஆறுதலாக விளக்கம் தருகிறேன். ருக்மன்; வந்து விட்டானா? ‘

‘அண்ணா வந்து இப்போது தான் குளிக்கிறார்.’

‘நானும் குளித்து விட்டு மதவாச்சி போகவேண்டும்.’

‘ அடுத்தகிழமை யாழ்ப்பாணம் போகிறேன். அங்கு தான் சேலையும் ஏனைய பொருட்களும் வாங்க வேண்டும். அம்மாவுக்கு காட்ட உன் புகைப்படம் ஒன்று தரவேண்டும்’.

குளித்து விட்டு மதவாச்சிக்கு புறப்பட்டேன்.


அன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் விடுதியில் ஒருவரும் இல்லை. தலைமயிர் வெட்டும் நோக்கில் ஆறுமுகண்ணையின் கடைக்குள் சென்றேன்.

‘தலைமயிர் வெட்டவோ’, என்றார் ஆறுமுகம். தலைமயிர் வெட்டும் போது சலூனில் தொங்கும் சினிமா நடிகைகளின் உருவப்படங்களை பார்ப்பதும், ரசிப்பதும் சின்னவயதில் இருந்து வந்த பழக்கம்.

‘உங்களது சலூனில் தான் சம உரிமை தெரிகிறது. ‘

‘ஏன் அப்படி சொல்கிறியள்? ‘

தமிழ் சினிமா நடிகைகள் மட்டுமல்லாமல் மாலினி பொன்சேகாவுக்கும் இடம் அளித்திருக்கிறீர்கள். அதுதான் சொல்கிறேன். ‘

‘ஓ அதுவா’ என பெரிதாக சிரித்தார். இருவரும் சேர்ந்து சிரித்தோம்.

‘அது சரி, ஐயாவுக்கு ஊர் புதினம் தெரியுமா? ‘
நான் ஊர் பக்கம் போய் நாளாகிறது. நீங்கள் தான் சொல்லவேண்டும்.’


‘ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தை அடித்து விட்டார்களாம். போனகிழமை நல்ல அடி. ”பொடியள் கெட்டிக்காரர் தான். ‘

‘யார் செய்தது. ‘

புலிகள் என்று சிலர். புலிகளில் இருந்து பிரிந்தவர்கள்; என்றும் சிலர் பேசுகிறார்கள். யாரென்ராலும் நல்லா செய்திருக்கிறார்கள். ‘

‘அப்படியா’?

‘என்ன ஒரு மாதிரி சொல்கிறியள்? அரசாங்கத்துக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேணும். ‘

‘ஆறுமுகத்தண்ணைஇ நீங்க சொன்ன செய்தியில் பொலிஸ் ஸ்ரேசனை அடித்தது நல்ல விடயம். ஆனால் ஏதோ பிரிந்தவர்கள் என்றியளோ அதுதான் என்னைச் சிந்திக்க வைத்தது. ஆயுதம் ஏந்துவது என தமிழ் சமுதாயம் முடிவு செய்து விட்டது. ஆனால் இப்படி பிரிந்து ஏந்தினால் கொல்லப்படுவது அரசாங்கத்தின் பாதுகாப்பு படைகளை விட தமிழர்களே அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எங்களுக்கு புதிய விஷயம் அல்ல. தமிழ்க் காங்கிரசுக்கட்சியும், தமிழரசுக் கட்சியும் ஒருவரை ஒருவர் எதிர்த்த போது அதிக ஆள் சேதமில்லை. ஒருவரது கூட்டத்துக்கு கல்லெறிந்து குழப்புவது. துரோகிகள் என வாயால் திட்டுவதும்தான். ஆனால் ஆயுதங்களை ஏந்தியவர்கள் பிளவுபடும் போது நிலைமை மோசமடையும். ‘

‘நாம் என்ன செய்வது? நடப்பது நடக்கட்டும். ஆனாலும் ஐயா நான் ஒரு கதை கேள்விப்பட்டேன் பிழை என்றால் மன்னியுங்கள். ‘

‘கேளுங்கோ ஆறுமுகமண்ணை. உங்கள்pடம் என் தலையை தந்து விட்டேன். ‘

‘உங்களுக்கு பதவியாவில் ஒரு சின்ன தொடுசல் இருக்குதெண்டு கேள்விப் பட்டேன்.’

‘ உங்களுக்கு யார் சொன்னது’?.

‘சும்மா காற்று வாக்கில் கேள்விப்பட்டேன். ‘

‘உங்களுக்கு ருக்மனை தெரியுமா? ‘

‘ஜே.வி.பி ருக்மன்; தானே? ‘

‘ருக்மனின் தங்கை. அவளை நான் கல்யாணம் கட்டப் போகிறேன். ‘

ஆறுமுகம் என் தலையை வெட்டுவதை விட்டுவிட்டு ‘என்ன ஐயாவுக்கு விசரா? நான் அப்பவே சொன்னேன். அந்த விடுதியில் தங்கவேண்டாம் என்று. ‘ நான் ஏதோ ஆபத்திலே மாட்டியுள்ளதாக அவர் அவதிப்பட்டார்.

‘சரி, இப்ப என்ன நடந்து விட்டது. என் தலைமயிரை வெட்டி முடியுங்கள். ‘

‘அதில்லை. உங்கள் வீட்டில் சம்மதமா? ‘

‘இல்லை. ‘

‘நான் சொல்கிறேன் நீங்கள் இடமாற்றம் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் போங்கள் ‘.

‘நான் விரும்பித்தானே கல்யாணம் செய்யப்போகிறேன் ‘ என கேட்டபடி காசை கொடுத்தேன்.

‘சரி நீங்கள் படித்தவர் ‘ என காசைப்பெற்று லாச்சியிலே வைத்தார்.

‘நீங்கள் கல்யாணத்துக்கு வர வேண்டும். ‘

‘ஐயாவின் கல்யாணம் நான் இல்லாமலா? ‘என சிரித்தார்.

திங்கட்கிழமை அதிக வேலைப்பழுவினால் விடுதி செல்ல மாலை ஆறு மணியாகி விட்டது. அங்கு எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சுப்பையா அங்கிருந்தார்.

‘எப்படி சுகம் ‘ என விசாரித்த போது பரவாயில்லை எனச் சிரித்தபடியே கூறினார். உடல் மெலிந்திருந்தாலும் சிரிப்பு அப்படியே இருந்தது.

குணதாச வழமையான கிண்டலுடன் ‘பொலிஸ் ஸ்ரேசனில் சாப்பாடு கிடைத்ததா? ‘ என்றான்.

‘அடி உதையையோ, சோறு கறியையோ கேட்கிறீர்கள். ‘

குணதாசவின் முகத்தில் அசடு வழிந்தது.

குணதாசவிடம் ‘சுப்பையா மாத்தையா ஜெயிலிலிருந்து வந்ததை கொண்டாட வேண்டும். ஆளுக்கு ஐந்து ரூபா போடுங்க’ என்றேன். எல்லோருமாக நூறு ரூபா சேர்த்து இரண்டு கிலோ இறைச்சியும் ஏளுழுயு போத்தலும் வாங்கி வரும்படி ராகவனிடம் கொடுத்தோம்.

‘ஐயா சுப்பையா மாத்தையாவிடம் மற்ற புதினம் சொல்லவில்லை.’ என்றான் ராகவன்.

‘அது என்ன’ என்றேன்.

‘ருக்மனின் நங்கியை கல்யாணம் கட்டுவது’

‘உண்மையாகவா’ – சுப்பையா.

‘ஆம்’

‘எனது நல்வாழ்த்துக்கள்.’

‘அதற்கு நாங்கள் பிளக் அன்ட் வைட் விஸ்கிதான் குடிப்பதாக முடிவு செய்திருக்கிறோம்’. குணதாச.

அன்று எங்கள் விடுதியில் சந்தோஷமான நாள். ருக்மன்;;; மட்டும் எதுவும் குடிக்கவில்லை. நாங்களும் வற்புறுத்தவில்லை. ஜே.வி.பி அங்கத்தவர்கள் குடிக்கக் கூடாது என கட்டுப்பாடு இருப்பதாக குணதாச சொன்னதாக நினைவு. ராகவனின் சமையலை எல்லோரும் ரசித்து சாப்பிட்டோம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: