வண்ணாத்திக்குளம்.; வியாபாரிமூலை


விடுதியில் சமையல் என் பொறுப்பானதால் குசினிக்குச் சென்று அரிசியை அளந்தபோது குணதாச எதிரில் வந்தார்.

‘இன்றைக்கு எத்தனை பேர் சாப்பாட்டுக்கு’? என்றேன்.

‘ஜே.வி.பி காரர் வராவிட்டால் ஆறு பேர் எதற்கும் இரண்டு பேருக்குச் சேர்த்து போடுங்கள்’ என கூறியபடி குணதாச சிகரெட்டை பற்ற வைத்தார்.

எங்கள் விடுதியில் சுப்பையாவுக்கு அடுத்ததாக வயதில் மூத்தவர். இவரது குடும்பம் கம்பளையில் வசிக்கிறார்கள். இவர் மேல் எல்லோருக்கும் மரியாதை உண்டு.

‘அதுசரி ஏன் சுப்பையா மாத்தையா வேலைக்கு வரவில்லை? இன்றைக்கு புதன்கிழமை ஆகிவிட்டது ‘ என்று ஏதோ யோசித்தவாறு குணதாச கேட்டார்.

‘ஏதாவது வேலையாயிருக்கும் குடும்பகாரர் ‘ என்றேன்.

‘உங்களுக்குத் தெரியாதா? நீங்களும் யாழ்ப்பாணம் தானே? ‘

‘ நான் கொக்குவில், அவர் வியாபாரிமூலை. இரண்டுக்கும் இடையில் இருபது மைல் தூரம். ‘

‘இருபது மைல் தானே’ என வழமையான சிரிப்புடன்
‘அந்த இருபது மைலுக்கிடையில் ஐந்து லட்சம் மக்கள் இருக்கிறார்கள். ‘

‘டொக்டர்’ என்றபடி ராகவன் வாசலருகே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். முகத்தில் திகில் படர்ந்திருந்தது. இதைத்தான் பேயடித்தது என்பார்களோ என அவன் முகம் என்னை நினைக்கத் தூண்டியது.

‘என்ன ராகவன். ‘

‘சுப்பையா மாத்தையாவை பொலிஸ் பிடித்துக்கொண்டு போய் பருத்தித்துறை பொலிஸ் ஸ்ரேசனில் வைத்திருக்கிறார்களாம் என்று ராகவன் சொன்னான்.

‘ஏன் ‘ என குணதாச அதிர்ச்சியுடன் கேட்டார்.

‘யார் சொன்னது’ என நான் கேட்டேன்.

‘சலூன்கார ஆறுமுகம் சொன்னார், ஆனால் அவருக்கு சரியான காரணம் தெரியாது. ஆனாலும் சுப்பபையாவின் மகன் புலியில் சேர்ந்துவிட்டபடியால் தகப்பனை பிடித்திருக்கவேண்டும் ‘ என கூறினான் ராகவன்.

‘அப்படி முடியுமா? தகப்பன் என்ன செய்வது? ‘ என அப்பாவித் தனமாக குணதாச கேட்டார்.

‘மகன் புலியில் சேர்ந்தால் முழுக் குடும்பத்தையும் ராணுவம் அள்ளிக்கொண்டு போவது வழக்கமான நடைமுறை. மகன் சரணடைந்தால் குடும்பத்தினரை விடுவோம் என அறிவிப்பார்கள் சில வேளைகளில் குடும்பத்தினர் அனைவரும் அப்படியே கொல்லப்பட்டதும் உண்டு. எனவே சுப்பையா மாத்தையாவை பொறுத்தவரை அதிஷ்டசாலி’ என விரக்த்தியுடன் கூறினேன்.

‘இது மிககொடுமை’ என்றார் குணதாச கரகரத்த குரலில்.

அன்று அரிசியை மட்டும் போட்டு வடித்தேன். எவரும் விடுதியில் சாப்பிடவில்லை.

சுப்பையா எங்களுடன் சாப்பிடுவதில்லை. வீட்டில் இருந்து கொண்டுவரும் புளிச்சோற்றை வைத்தே கிழமை முழுவதும் சமாளித்து விடுவார். அவரது அறையில் எந்த உடைமைகளும் இராது. பாய் தலையணை என எதுவும் இல்லாமல் பழைய பத்திரிகையை நிலத்தில் விரித்து தோல்பையை தலைக்கு வைத்து தூங்குவது அவரது வழக்கம். எங்களோடு சமைத்தால் தனக்கு பணசெலவு என கூறியதால் நாங்கள் வற்புறுத்தவில்லை.

சிலவேளைகளில் சிறிது கேலி செய்வோம். ‘இப்படி மிச்சம் பிடித்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்றால் ‘நீங்கள் இளம் பிள்ளைகள். காசு பற்றி கவலை இல்லை. ‘ என்று சிரித்தபடியே கூறிவிட்டு போய்விடுவார்.

சுப்பையாவுக்கு மூத்தவர்கள் இருவரும் பெண்கள். கடைசியாக மகன். கடந்த கிழமை மகனது படிப்பு பற்றி பெருமையாக கூறினார். அப்பொழுது காமினி சுப்பையா மாத்தையாவின் மகளை தான் திருமணம் செய்யபோவதாகவும் தனக்கு அதிக சீதனம் கிடைக்கும் என சீண்டியதும் நினைவுக்கு வந்தது.

வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்ல ஏற்கனவே தீர்மானித் திருந்தேன். அம்மாவுக்கு சித்ரா சம்பந்தமான விஷயத்தை சொல்ல வேண்டும். அப்பு முறுகுவார். அம்மா அழுவா இவை நான் எதிர்பார்த்தவை. இதைவிட சுப்பையாவின் வீட்டுக்கும் போய் ஆறுதல் சொல்லவேண்டும்; இவ்வாறெல்லாம் நினைத்தபடியால் மாலை ரயிலில் யாழ்ப்பாணம் சென்றேன்.

கொக்குவில் ரயில்வே ஸ்ரேஷனில் இறங்கி ஸ்ரேசன் ரோட்டால் போவதுதான் இலகுவான பாதை. ஆனால் அந்த வீதியால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போய்வருவதால் இரவில் அடிக்கடி இராணுவம் போகும் என நினைத்து, சிறிய ஒழுங்கையால் இறங்கி நடந்தேன். நாய்களின் வரவேற்பு அதிகமாக இருந்தாலும் இராணுவத்தை விட நாய்கள் பரவாயில்லை என நினைத்து நடந்தேன். லைட் இல்லாத ஒழுங்கைகளில் மனமதிப்பீட்டில் கால் பதித்து நடந்து வீடு சேர்ந்தபோது இரவு பத்து மணியாகி விட்டது. முன் மாமரத்தின் கீழ் இருந்து வந்த சுருட்டுப் புகை அப்புவை அடையாளம் காட்டியது.

‘ஏன்டா தம்பி இருட்டில் வருகிறாய்? ‘ கொஞ்சம் வேளைக்கு வரக்கூடாதா’ என்று என் கையை பிடித்துத் தனக்கருகில் இழுத்தாள் அம்மா. ‘எனக்காக யாழ்தேவி நேரத்தோடு வருமோ?’என்று கேட்டாலும் அம்மாவின் அர்த்தமில்லாத கேள்வியில் இருந்த பாசத்தை உணர்ந்து நின்றேன். நான் எப்பொழுது லேட்டாக வந்தாலும்; என்னை திட்டியபடியே முத்தமிடுவது அம்மாவின் வழக்கம். நான் உயரமாக வளர்ந்தபின் கையையோ தோளையோ முத்தமிடுவாள். நான் இழுத்தபடியே உள்ளே செல்வேன். ஆனால் இன்று அம்மா முத்தமிட்டு முடிக்கும் மட்டும் நின்றேன். எனக்குள் இருந்த குற்ற உணர்வு இதற்குக் காரணமாக இருக்கலாம்.

‘அவனைக் கூட்டிக்கொண்டு போய் சாப்பாடு கொடு’ என அப்பு சொல்லிக் கொண்டு இருக்கும்போது, தம்;பி ரவி சைக்கிளில் வந்து இறங்கினான்.

‘என்னடா பத்து மணிவரை ஊர் சுத்திப்போட்டு வருகிறாய்? ‘ மீண்டும் அப்பு சுருட்டின் கசப்பை மீண்டும் காறி துப்பியவாறே கேட்டார்.

‘இப்பதான் ரியுசன் முடிந்தது. அண்ணை, நீ எப்ப வந்தனி?’.

‘இப்பத்தான். நீ எப்படி படிக்கிறாய்? ‘

‘ஏதோ ரிசல்ட் வந்தால் தெரியும்தானே? ‘ என்று அப்புதான் பதில் சொன்னார்.

குளித்துவிட்டு குசினிக்கு போனபோது அம்மா மீன்குழம்புடனும், சம்பலுடனும் புட்டு வைத்திருந்தார். ‘வழமையான வெள்ளிக்கிழமை மரக்கறி சாப்பாடுதான். அண்ணை வந்தால் எனக்கும் மீன் குழம்பு கிடைக்கிறது’ என்றபடி பக்கத்தில் வந்து அமர்ந்தான் தம்பி ரவி.

மௌனமாக சாப்பிட்டு விட்டு பாயை வாசலுக்கு அருகில் போட்டு படுத்தேன். அம்மா சிறிது நேரத்தில் நெற்றியில் திறுநீறை பூசிவிட்டு சென்றாள். இது எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நடக்கும் விஷயம். இதைப் பற்றி கேட்டபோது ‘திருநீறு பூசினால் கெட்ட கனவுகள் வராது’ என பதில் வந்தது. நான் கோயிலுக்கு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது நான் திருநீறு பூசாவிட்டாலும், அம்மா என் நெற்றியிலே பாசத்துடன் திருநீறு பூசும் பொழுது, அதைத் தடுக்க எனக்கு மனம் வருவதில்லை.

நித்திரையால் விழித்தபோது ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது.

அம்மா கோப்பியுடன் வந்த போது ‘எங்கே அப்பு’ என்றேன்.

‘சந்தைக்கு போய்விட்டார் ‘

‘ரவி எங்கே? ‘

‘ரியுசனுக்கு’

‘சரி கோப்பியை வைத்து விட்டு எனக்கு பக்கத்தில் இரு ஒரு சங்கதி சொல்லப் போகிறேன். ‘

‘என்ன புதிர் போடுகிறாய்? ‘

‘நான் ஒரு பெட்டையை விரும்புகிறேன். அவளைக் கல்யாணம் கட்ட தீர்மானித்திருக்கிறேன். ‘

‘யார் பெட்டை? உன்னோடு பல்கலைக்கழகத்தில் படித்தவளா? ‘

‘இல்லை சிங்களப்பெட்டை. மதவாச்சியை சேர்ந்தவள். ‘

‘துலைவானே, உங்கப்பனிடம் அடிவாங்கி சாகப்போகிறாய். நீ வேலை பார்த்தது போதும். வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வா’.

‘விசர்க்கதை பேசாமல் நான் சொல்வதைக் கேள். அவள் ஆசிரியராக வேலை பார்க்கிறாள். ‘

‘சிங்களத்தியை கல்யாணம் கட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திலும் இருக்கமுடியாது. அந்த மதவாச்சியிலும் நீ இருக்க முடியாது. ‘ எனக் கூறிய அம்மா என்னை பரிதாபமாகப் பார்த்தாள்.

‘ நான் சிங்களப்பெட்டையை தேடித் திரியவில்லை. சந்தர்ப்பவசமாக அப்படி அமைந்தது ‘ என்று முன்னுரை கூறி வவனியாவில் என்னைக் காப்பாற்றிய கதையையும் கூறினேன். அம்மாவின் முகத்தில் சிறிது இணக்கம் வந்தது. தனது மகனை காப்பாற்றியதால் ஏற்பட்ட நன்றி உணர்வை உடனே பயன் படுத்த விரும்பினேன்.

‘நீ தான் அப்புவிடம் சொல்ல வேண்டும். ‘

‘எனக்கு தெரியாது நீயும் உன் அப்பனும் பட்டது பாடு’ என எச்சரிக்கை உணர்வுடன் கழன்று கொள்ளப்பார்த்தாள்.

‘உன்னைத்தான் நம்பி இருக்கிறேன். ‘எனக் கூறியபடியே அம்மாவைக் கட்டி முத்தம் கொடுத்தேன்.

‘டேய் போய் முகத்தைக் கழுவு’ எனத் தள்ளி விட்டாள்.

‘நான் பருத்தித்துறைக்கு போக வேண்டியிருக்கிறது. ‘

‘ஏன் என்ன விடயம் ‘

‘என்னுடன் விடுதியில் இருப்பவருக்கு உடம்பு சுகமில்லை’ என கூறினேன். உண்மையை சொல்லி இருந்தால், ‘இது ஆமி பொலிஸ் விடயம் நீ போகாதே’ என தடுத்திருப்பா.

பக்கத்து வீட்டு மாஸ்டரிடம் மோட்டார் சைக்கிளை இரவல் பெற்றுக்கொண்டு நல்லூர்கோவில் அருகில் பருத்தித்துறை வீதியை அடைந்த போது எதிரில் வந்த ராணுவ ஜீப்புக்கு இடம் கொடுத்து விலகி நின்றேன். எதிரில் ராணுவ ஜீப் வந்த போது பயம் ஏற்பட்டு என்னை கடந்த போது வெறுப்பு ஏற்பட்டது. இப்படியான உணர்வு வவனியாவுக்கு தெற்கால் ஏற்படுவதில்லை. யாழ்ப்பாணம் எனது பிரதேசம். இங்கு நாங்கள் அடங்கி வாழ்கிறோம் என்ற நினைப்பு மனதில் ஏற்பட்டதாலே இந்த உணர்வு வந்து போகிறது என நினைத்துக்கொண்டேன்.

மனதில் பல நினைவுகள் அலை மோதியதால் வழியை கவனிக்க வில்லை என நினைத்து பாதையை கவனித்தபோது நெல்லியடி வந்து விட்டதை உணர்ந்தேன். கடைவீதியை கடந்து போகும் போது எதிரில் ஒரு மாடு வந்ததும் சடுதியாக பிரேக்கை பிடித்தேன். மோட்டார் சைக்கிள் மாட்டில் மெதுவாக மோதி நின்றது. மாடு வேலியில் நீளக்கயிற்றில் கட்டப்பட்டு இருந்தது. தங்கள் பக்கத்து புல்லை மட்டும் அல்ல அடுத்த வளவில் வளரும் புல்லையும் தின்ன வேண்டும் என்ற தாராள மனப்பான்மை கொண்ட வடமராட்சிக்காரரை மனதில் திட்டடியபடி வியாபாரி மூலையை நோக்கிச் சென்றேன்.

சுப்பையாவின் வீட்டுக்கு எதிரில் நிறுத்திவிட்டு படலையை தட்டியபடி ‘யார் வீட்டில் ‘? என சத்தம் கொடுத்தேன்.

புது பெயின்ரின் வாசனை வந்தது. சிறிது சிறிதாக பணம் சேர்த்து கட்டிய வீடு என நினைத்தேன்.

‘யார் வேணும் ‘ என ஒரு பெண் குரல் கிணற்றுப்பக்கமாக இருந்து வந்தது.

‘ நான் சுப்பையாவை பார்க்கவேணும் அவரோடு மதவாச்சியில் வேலை செய்கிறேன். ‘

‘உள்ளே வாருங்கள். ‘

படலையைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற போது எதிரில் இரட்டைச் சடைப்பின்னலுடன் நெற்றியில் திறுநீறுடன் இருபது வயது மதிக்கத்தக்க இளம் பெண் வந்தாள். சிரிப்பில் சுப்பையாவின் சாயல் தெரிந்தது.

‘அப்பா வருவார் இருங்கோ’ என கதிரையைக் காட்டினாள்.

சுப்பையாவுக்கு இவ்வளவு அழகான பெண்பிள்ளை இருக்கும்போது சீதனம் சேமிக்க வேண்டிய தேவையில்லை. வரிசையில் ஆண்கள் மணம் முடிக்க தயாராக இருப்பார்கள் என எண்ணினேன்.

சுப்பையா தலையில் கட்டுடன் உடல் மெலிந்தவராக வந்தார்.

‘என்ன இப்படி இருக்கிறீர்கள்?’ என்றேன்.

‘அரசாங்கத்தின் பரிசுதான். ‘ என புன்முறுவல் பூத்தார்.

‘இப்ப எப்படி? ‘

‘நேற்றுத்தான் பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுதலை செய்தார்கள். பத்து நாளில் மகனை கொண்டு வரவேண்டும் என நிபந்தனை விதித்து இருக்கிறார்கள்.

தேனீர் கோப்பையுடன் வந்த மகளை ‘இது சுமதி எனது மூத்த மகள் ‘ என அறிமுகப்படுத்தினார்.

சுமதியின் சிரிப்பில் வேதனை இழையோடியது.

‘அம்மாவும் தங்கச்சியும் செல்லச்சன்னதி கோயிலுக்குப் போய் இருக்கிறார்கள். ‘

சுப்பையாவை பார்த்து ‘மகனைப்பற்றி ஏதாவது தெரியுமா’ எனக் கேட்டேன்.

‘திட்டமாக எதுவும் தெரியாது. இந்தியாவுக்கு ஆயுதப் பயிற்சிக்கு போனதாக சிநேகிதப்பொடியள் கதைக்கிறார்கள். ‘ அவர் கண்ணில் நீர் கரை கட்டியது.

‘என்ன செய்ய உத்தேசம் ‘.

‘என்ன செய்வது கடவுள் விட்டவழி. அடுத்தகிழமை வேலைக்கு வரவேண்டும்.’

‘ஏன் கொஞ்ச நாட்கள் லீவு எடுத்தால் என்ன’?

‘போனவனை விட இருக்கிறவர்கள் சாப்பிட வேண்டும் ‘ என்றார் விரக்தியாக.

என்னுடைய கண்கள் கலங்கி விட்டன.

நான் எழுந்து ‘மனதைத் தைரியப்படுத்தி கொள்ளுங்கள் ‘ என ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். என் ஆறுதல் வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கனத்த நெஞ்சத்துடன் கையசைத்து விடைபெற்றேன்.

வீட்டை அடைந்த போது பின்னேரம் மூன்று மணிக்கு மேலாகி விட்டது. இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொடுத்து விட்டு வரும் போது அம்மா வாசலில் குந்தி இருந்தாள். அம்மாவின் கண் சிவந்திருந்தது.

‘என்ன பிரச்சனை’ என அம்மாவை நெருங்கி போனபோது ‘எல்லா பிரச்சனையும் உன்னால் தான்’ என கூறினாள்.

கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது.
‘எங்கே அப்பு’

‘முன் கடைக்கு போய் இருக்கிறார். ‘

‘சரி நான் அவரோடு பேசுகிறேன். இப்ப எனக்கு பசிக்கிறது. சாப்பாடு போடு’.

சாப்பாட்டை உண்ணும் போது நெஞ்சு கனத்தது. சுப்பையாவின் நிலைமை என்னில் ஏற்படுத்திய தாக்கம் போகவில்லை. இத்துடன் அம்மாவின் பாசமும் அப்புவின் பிடிவாதமும் மனதைக் குடைந்தன.

சாப்பாடு முடித்து எழுந்தபோது அப்பு வந்தார். அவரது முகத்தை பார்க்க தைரியம் இல்லாததால் அடுத்த பக்கம் பார்த்தேன்.

‘அம்மா சொல்லுவது உண்மையா’ என அப்புவின் குரல் கேட்டு திரும்பினேன்.

‘என்ன சொல்வது?’ அப்புவின் கண்கள் சிவந்திருந்தன.

‘உனக்கும் ஒரு பெட்டைக்கும் பழக்கமா……?’ என்று நேரடியாக கேட்டார்.

‘ஆம் ‘.

‘எங்களை எல்லாம் விட்டுப்போக தீர்மானித்து விட்டாயா? ‘

‘அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?’

‘தமிழரும், சிங்களவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் இந்தக்க காலத்தில் சிங்களப்பெட்டையை கல்யாணம் செய்து விட்டு எங்களுடன் இருக்கலாம் என நினைக்கிறாயா? ‘

‘சிங்களவர் தமிழர் பிரச்சனைக்கும் இருவர் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம் ‘? என்றேன் எரிச்சலுடன்.

‘சம்பந்தம் இருக்கடா, படிச்ச முட்டாள்! நான் மற்ற தகப்பன் மாதிரி சீதனம் வேண்டும் என்றோ குறைந்த பட்சமாக நாங்கள் பார்த்துப் பேசிய பெண்ணைத்தான் நீ மணக்க வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் நீ நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். ‘

அப்புவுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. முரட்டுத்தனமான பிடிவாதத்தில் உள்ளுக்குள் ஆழமான அன்பு பலாப்பழத்தின் சுளை போல் இனித்தது.

அப்பு இவ்வளவு சுலபமாக சம்மதிப்பார் என எதிர்பார்க்கவில்லை. பிடிவாதமும், முரட்டுத்தனமும் உங்கப்பனுடன் கூடப்பிறந்தது என அம்மா அடிக்கடி கூறுவது வழக்கம். பாடசாலையில் படிக்கும் போது ஆசிரியருடன் சண்டை இட்டுக்கொண்டு புத்தகத்தை நயினாதீவுக்குளம் ஒன்றில் வீசிவிட்டு பிரித்தானிய படையில் சேர்ந்தார் என்றும் பின்னர் எகிப்துக்கு போகும்படி சொன்ன ராணுவக் கட்டளையை மீறி சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்ததுமான விடயத்தை மாமி மூலம் கேட்டிருக்கிறேன். மூன்று வருட இராணுவச் சேவையின் அடையாளமாக யுனிபோம் ஒன்றை மட்டுமே நான் கண்டிருக்கிறேன்.

இப்படியான பல கதைகளின் மூலம் அப்புவை சுற்றி அம்மாவும் எனது உறவினர்களும் ஒரு முள்வேலி போட்டிருந்தபடியால் நானோ எனது தம்பியோ அவரது உள்ளத்தை புரிந்து கொள்ளவில்லையோ என பலமுறை எண்ணியுள்ளேன்.

சிறிது நேரத்தின் பின் கூறினேன். ‘ அப்பு நான் சித்ராவை காண முன்பு பல பெண்களை சந்தித்தும் பேசிப்பழகியும் இருக்கிறேன். என் மனதில் எந்த எண்ணமும் எழவேயில்லை. மதவாச்சி போன்ற இடத்தில் ஒரு பெண்ணை சந்திப்பேன் என நான் கூட எதிர்பார்க்க வில்லை. மேலும் அவளை ஒரு பெண்ணாக தான் பார்த்தேன். அதற்காக நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் என்னை பாதிக்காது என்றோ எங்கள் காதல் தெய்வீக காதல் என்ற கற்பனையிலோ நான் இல்லை. கட்டிடங்கள் பாலங்கள் கட்டுவதைப் போன்று மனித வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படுத்த முடியாது. மனங்களில் ஏற்படும் எண்ணங்கள் தான் மனித வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதை நான் உண்மையில் நம்புகிறேன். என்னால் சித்திராவை கல்யாணம் செய்து வாழமுடியும் என உறுதியாக
நம்புகிறேன் ‘.

‘தம்பி நீ வளர்ந்து விட்டாய்’ உனக்குத் தெரியும் உனது செயல்களினதும் அதன் விளைவுகளுக்கும் நீயே பொறுப்பு என்பது. நாங்கள் சொல்வதை சொல்லி விட்டோம் ‘என எங்களுடைய உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்து எழுந்தார்.

பாயையும் தலகணியையும் முற்றத்து மாமரத்தின் கீழ் விரித்துப் போட்டுவிட்டு ஆகாயத்தைப் பார்த்தபடி படுத்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: