ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை
பழையபுலிகளின் அனுபவப்பகிர்வு எனது நினைவுகளை இரண்டுவருடம் பின் நோக்கி இழுத்துச் சென்றது. வன்னியில் அப்பொழுது மாத்தையா கொடிகட்டிபறந்தகாலம். TRO அப்பொழுதுதான் அங்கே காலூன்ற ஆரம்பித்தது. ஒருநாள் காலைஅப்போதைய TRO பொறுப்பாளன் என்னைசந்திப்பதற்காகஅவசரஅவசரமாக வந்தான்.
‘சேர் இண்டைக்குமத்தியானம் ஒரு கூட்டம் இருக்கு நீங்கள் கட்டாயம் வரவேணும,; மாத்தையாஅண்ணையும் வாறார்’என்றான் கதையோடுகதையாக.
‘என்னடாப்பா என்ன கூட்டம் என்றுகொஞ்சம் விபரமாகச் சொலலுமன்’என்றேன் சற்றே சந்தேகத்துடன்.
‘ஒண்டும் பெரிசாய் இல்லை சேர்….சில நிறுவனங்களைஅவர் சந்திக்கவேணுமென்றார.; நான் உடனே உங்கட நிறுவனத்தைத்தான் நினைச்சனான்’என்றான்.
இவன் ஏதோமழுப்புறான் என்றுமட்டும் எனக்கு விளங்கிவிட்டது. இவனோட இனிகதைத்துவேலை இல்லை. சரி வாறேன் என்று கூறிகூட்டம் நடக்கும் இடத்தையும் நேரத்தையும் குறித்துக்கொண்டேன்.
குறித்த நேரத்திற்குஅவர்களது ஜெயந்திநகர் அலுவலகத்திற்குச் சென்றேன். என்னைக் கண்டதும் மலர்ந்தமுகத்துடன் ‘வாங்கோசேர்…மாத்தையாஅண்ணை வருமட்டும் இந்தஅறையில் இருங்கோ’என ஓர் பெரிய அறைக்குள் என்னைஅழைத்துச் சென்று வசதியான கதிரையைக் காண்பித்து அமரச் சொன்னான்.
அங்கிருந்தமேசையில் சில புத்தகங்கள் இருந்தன.அவற்றைநோட்டம் விட்டேன். அமுது சஞ்சிகை என் கண்ணைக்குத்தியது. டக்கென்று அதையெடுத்து புரட்டத்தொடங்கினே;. கத்தோலிக்க ஆயர் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த இன்னோர் இயக்கபோராளிக்குஅபயம் கொடுக்க மறுத்தபோதும் பாதர் ஜெயசீலன் என்பவர்அவனுக்குஉதவினார்என்றகட்டுரையைவாசித்துக்கொண்டிருக்கும்பொழுது…
‘உங்களை யார் உந்தப்புத்தகத்தைவாசிக்கச் சொன்னது? உது தடை செய்யப்பட்ட புத்தகம் எண்டு தெரியாதோ?’என்றஉரத்தகுரல் கேட்டு திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தேன். தன் சைஸில் யுனிபோம் போட்டபொடிப்பயல்ஒருவன்கோபத்தடன் நின்றுகொண்டிருந்தான். நல்லவேளை கையில துவக்கொண்டுமில்லை.
‘தம்பி இது… இதிலைதான்…கிடந்தது’என்று நான் கூறிமுடிப்பதற்குள் பறிக்காதகுறையாக அமுதை என் கையில் இருந்து இழுத்துச் சென்றான் அவன்;. இந்த சத்தங்கேட்டு வேறோர் அறையிலிருந்த ஓரு புலி பாய்ந்துவந்தது. என்னைக் கண்டதும் சற்றேஆச்சரியத்துடன் ‘என்ன சேர் என்னவாம் பெடியன்? ;’என்று கூறி அவனது கையிலிருந்த அமுதைக் கண்டதும் விடயத்தை புரிந்தவனாக அதைப்பறித்து என்னிடம் மீண்டும் தந்து, ‘வவுனியாவில இருந்துவரும் ஆட்களிடமிருந்து இது பறிமுதல் செய்யப்பட்டது இது’என்றான் சகஜமாக.
ஒருகாலத்தில் அவன் எனதுமாணவன். அந்த மரியாதையால்தான் அன்றுநான் தப்பினேனாக்கும்.
சற்றுநேரத்தில் TRO பொறுப்பாளன் என்னை கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு கூட்டிச்சென்றான். சுமார் முப்பதுபேர் வரை வாங்கில் அமர்ந்திருந்தனர். அநேகமானோர் பெண்கள். கூட்டத்தை மேலோட்டமாகப் பார்தேன். ஒருவரது முகத்திலும் ஈ ஆடவில்லை. கவலை,ஏக்கம்,பயம் என் பலஉணர்வுகளும் கலந்திருந்தன. கூட்டத்தில் ஒருவரது முகமும் எனக்குப் பரீட்சயமானதாக தென்படவில்லை. ஓர் 50 வயதுமதிக்கத்தகஆணின் முகத்தைமட்டும் எங்கேயோ கண்ட ஞாபகம். எங்கே என்று தெரியவில்லை.
பக்கத்திலிருந்த வேறோர் நிறுவனத்தை சேர்ந்த நண்பர் ‘மச்சான் என்ன கூட்டமடா இது’என்று என் காதுக்குள் கேட்டார். ‘நான் உன்னைக்கேட்பமெண்டால் நீ என்னைக்கேட்கிறாய்’என்று நானும் குசுகுசுத்தேன். ‘ஒண்டும் விளங்குதில்லை,மாவீரர் போராளிகள் குடும்ங்களோ’என்றார் சற்றே துணிச்சலுடன். ‘இருக்காது மச்சான் அவைக்கெண்டால் இராசமரியாதையாக இருக்கும். ஆனால் இங்கை வந்திருக்கின்ற சனத்தின்டமுகத்தில பசிக்களை எல்லோ தெரியுது’என்றுநான் கூறிமுடிப்பதற்குள் எல்லோரும் உசாராகிவிட்டினம்.
‘மாத்தையா….மாத்தையா’என்ற கிசுகிசுப்புகேட்கத்தொடங்கியது. எல்லோருடனும் சேர்ந்து நானும் பயபக்தியுடன் எழுந்து நின்றேன்.
நான்கைந்து மெய்ப்பாதுகாவலர்களுடன் கோபாலசாமி மகேந்திரராசா கம்பீரமாகநடந்து மேடையிலேறி கதிரையில் அமர்ந்தார். பொடிகாட்மார் எல்லாம் அவரைச் சுற்றிநின்றார்கள். சுதுமலையில் பிரபாகரனைச்சுற்றி மாத்தையா,கிட்டு,குமரப்பா,புலேந்திரன் போன்றோர் வட்டமாகநடந்து பாதுகாப்புகொடுத்தது ஏனோ உடனே என் ஞாபகத்திற்கு வந்தது.
TRO பொறுப்பாளனின் ஆரம்பஉரை 5 நிமிடங்கள் வரைமட்டுமே இடம்பெற்றது. அதில் 4 நிமிடங்கள் மாத்தையாவை புகழ்வதிலேயேகண்ணும் கருத்துமாக செலவுசெய்தான் அவன். பின்னர் மாத்தையா பேசஆரம்பித்தார். பேச்சு உப்புச் சப்பற்றுதொடர்ந்தது. ஆனால் பார்வை மட்டும் எல்லோரையும் ஊடறுத்துப் பார்த்தது. எனக்கோவயிற்றுக்குள் ஏதோ செய்தது. முறுக்கிக் கொண்டு வந்த வாயுவை வெளியேற்றவேணும் போல் இருந்தது. மெதுவாக சத்தமின்றி நைசாகவெளியேற்றுவதற்க்காக கொஞ்சமாக சரிந்துகொண்டு ஒரு முழங்காலை சற்று உயர்த்தினேன்.
‘போராட்டத்தில் களைபிடுங்குவது கட்டாயமானதும் தவிர்க்கமுடியாததொன்றாகும்.’என்றார் மாத்தையா. எனக்குப் பக்கென்றது. சட்டென்றுமுழங்காலைகீழேவிட்டேன். வாய்வு தன்டபாட்டிலே புறுக்கென்ற சத்தத்துடன் வெளியேறியது.
நான் நிமிர்ந்து அமர்ந்தேன். எல்லோரும் என்னையேபார்ப்பதுபோல் உணர்ந்தேன். நான் மாத்தையாவைப் பார்த்தேன். அவர் பேச்சைத்தொடர்ந்தார்.
‘எதிரியைவிடதுரோகிகளே ஆபத்தானவர்கள்’என்றபழைய பல்லவியைதானும் பாடினார் மாத்தையா.
ஆனால் அவருடையஅடுத்த இரண்டு மூன்றுவசனங்கள் எனக்குள் இருந்தசில சந்தேகங்களை தீர்த்தன.
‘உங்கடகணவன்மார்கள்,பிள்ளைகள்,சகோதரங்கள்தான் எங்களை காட்டிக்கொடுக்க முற்பட்டார்கள். அதனாலதான் நாங்கள் அவர்களை கைதுசெய்யவேண்டி வந்தது. அவர்களை நாங்கள் வடிவாய் விசாரித்துக்கொண்டு இருக்கிறம் விசாரணை முடிய கனகாலம் செல்லும். ஆனால் நீங்கள் ஒத்துழைத்தால் அவர்களைகெதியாக விடமுடியும். அவர்கள் செய்ததுரோகத்திற்காக உங்களை நாங்கள் கைவிடமாட்டோம். உங்களுக்கு உதவுவதற்காகத்தான் சிலநிறுவனங்களை இங்குஅழைத்து வந்துள்ளோம். அவர்களும் உங்களுக்கு உதவுவதற்க்கு தயாராக இருக்கிறார்கள்’என்றுபெரிசாக ஒருபோடுபோட்டார் மாத்தையா.
நான் என்னை இந்தக் கூட்டத்திற்குகூப்பிட்ட பொறுப்பாளரை மேடையில் தேடினேன். ஆளைக் காணவில்லை. எனக்குஅருகாமையில் அமர்ந்திருந்தவர்களை கடைக்கண்ணால் பார்த்தேன். அவர்களும் என்னைப்போல் இப்போதான் முதற்தடைவையாக இதைப்பற்றிகேள்விப்படுகிறார்கள் என்பதை முகங்கள் சொல்லின.
‘உங்களுக்கு இது குறித்து ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் இப்ப கேட்கலாம்’என்று தனதுவிளல்உரையை மொட்டையாகமுடித்து கதிரையில் அமர்ந்தார் மாத்தையா.
சிலகணங்கள் மண்டபத்தில் பயங்கரஅமைதிநிலவியது.
‘பயப்படாமல் கேளுங்கோ நாங்கள் உங்களைஒண்டும் செய்யமாட்டோம்’என்று நக்கலாக கொடுப்புக்குள் சிரித்தார்.
நடுவரிசையில் அமர்ந்திருந்த 30வயதுமதிக்கத்தக்கபெண்னொருவர் எழுந்துநிற்க,எல்லோரது பார்வையும் அப்பெண் மேல் சட்டென்றுதிரும்பியது.
‘ஜயா எனதுகணவனை நீங்கள் கைதுசெய்து ஒரு வருடத்திற்க்கு மேலாகிறது. அவரைத் தேடி நானும் என்ரபிள்ளைகளும் அலையாத காம்ப் இல்லை. நீங்கள் அவரைக் கைதுசெய்தபிறகு இதுவரைக்கும் நாங்கள் அவரைகண்ணால கூட காணவில்லை.’
அந்தப் பெண் தன் நெத்தியில் வைக்கப்பட்ட பெரியசிவப்புப்குங்குமப் பொட்டை ஆட்காட்டிவிரலால் தொட்டுகாட்டியபடி,…
‘ஒவ்வொருநாளும் நான் இந்த பொட்டைவைக்கும் பொழுதும் எனது கணவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தான் வைக்கிறேன். இந்தப்பொட்டைவைக்க நான் தகுதியுள்ளவளா? இல்லையா?என்பதை மாத்திரம் கூறுங்கள்.
வேறெந்த உதவியும் எனக்கு வேண்டாம்’என்று எவ்வித பதட்டமுமின்றி சலனமுமின்றி கூறி நிமிர்ந்து நின்றாள் அப்பெண்.
அன்று முழு நாளும் என்னால் வேறெந்த விடயத்திலும் கவனத்தைச ;செலுத்தமுடியவில்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்