
நான் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடிதம் வந்திருந்தது. அது சித்திராவின் கடிதம். அந்தக்கடிதத்தை மட்டும் சட்டைப்பையில் வைத்து விட்டு மற்றைய கடிதங்களை விரைவாக வாசித்து முடித்தேன். சின்னவயதில் ‘மஞ்சி’ பிஸ்கட் பெட்டியில் முக்கோண வடிவமான பிஸ்கட் எனக்கு பிடிக்கும். ஆகவே அதைத் தனியாக எடுத்து வைத்து விட்டு வட்டமான, நீளமான பிஸ்கட்டுகளை முதலில் சாப்பிடுவேன். சுpன்ன வயது நினைவுக்கு வந்தது.
என் பிடித்தமான கடிதத்தை வாசிப்பதற்கு முன் கதவை மூடி விட்டு வந்தேன். முன்னறையில் யாருமில்லை எனினும் யாரும் எதிர்பாராமல் வந்து எனது வாசிப்பைக் கெடுப்பதை நான் விரும்பவில்லை.
சித்ரா ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுக்காமல் எழுதியிருந்தாள். ஆங்கிலம் நான் நினைத்ததை விட நன்றாக இருந்தது. எனது பெயரை விளித்து எழுதி இருந்தது மனதுக்கு இதமாக இருந்தாலும் ‘உண்மையுள்ள’ என முடிக்காமல் ‘அன்புள்ள’ முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
என்னை சனிக்கிழமை வீட்டுக்கு வரும்படி எழுதியிருந்தாள். காமினியிடம் மட்டும் சனிக்கிழமை பதவியா போவதாக சொல்லி இருந்தேன். ஏற்கனவே காமினி எனது வேண்டுகோளுக்கு இணங்கி சித்திராவின் பெற்றோரிடம் பேசியுள்ளான். ருக்மன்; வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு பதவியாவில் அரசியல் வேலை செய்வதாகக் கேள்விப்பட்டேன்.
அன்று அதிகாலை எழுந்து விட்டேன் என கூறுவதை விட நித்திரை கொள்ளவில்லை என கூறுவதே உண்மையாகும். கண்களை மூடியபடி பல மணி நேரம் படுக்ககையில் கிடந்திருப்பேன். கண்ணைத் திறந்தால் யன்னல் ஊடாக தெரியும் நிலா வெளிச்சம் கவனத்தை ஈர்த்து சித்திராவின் நினைவை மனதில் இருந்து தற்காலிகமாக இல்லாமல் செய்வதை விரும்ப வில்லை. உண்மையில் வளரிளம் பருவத்துக் காதலின் மனேபாவத்துடன் நான் நடந்து கொள்வதாக நினைத்து வெட்கப்படவும் செய்தேன்.
அதிகாலை எழுந்தவுடன் எனது தோல்பைக்குள் இருந்த சிவப்பு சேலையை மெதுவாக எடுத்துப்பார்த்தேன். இந்த சேலையில் என் சித்திரா எப்படி இருப்பாள் என மனதுக்குள் நினைத்துப்பார்த்தேன். நெஞ்சுக்குள் மீண்டும் வண்ணத்திப்பூச்சிகள் சிறகடிக்கலாயின.
இந்தச் சேலையை யாழ்ப்பாணம் நியூ மாக்கட்டில் வாங்கினேன். என்னுடன் படித்த துரைதான் கடையின் சொந்தக்காரன்.
‘சேலை வேணும். அதுவும் இந்திய சேலை’ என்றவுடன் ‘எப்படா கல்யாணம் ‘என்றான்.
‘எனக்கு இல்லை என் நண்பனுக்கு, அவன் வவனியாவில் இருக்கிறான் என கஷ்டப்பட்டு பொய் சொன்னது நினைவிற்கு வந்தது. அந்தப்பொய்யை அவனும் நம்பவில்லை. மேலும் வீட்டில் அம்மாவுக்கு தெரியாமல் அந்தச் சேலையை வைப்பதற்கு மிக கஷ்டப்பட்டேன்.
மோட்டார் சைக்கிளில் பதவியாவுக்கு கிளம்பிய போது பிற்பகல் மூன்று மணி இருக்கும். ஆனாலும் வெயில் குறையவில்லை. வெயிலின் அகோரம் தெருவில் கானல்நீராக தெரிந்தது. ஆடி மாதமானதால் தெரு ஓரத்தில் எந்த வித பச்சைத் தன்மையுமில்லை. புல்லுகளும், செடிகளும் இருந்த இடங்களில் கம்பும் கட்டையுமாக இருந்தன. கண்ணுக்கு எரிவை கொடுக்கும் புழுதியும் வெக்கையும் அடித்தாலும் உள்ளத்தில் மட்டும் சித்ராவின் நினைப்பு வெள்ளரிக்காய் உள்புறம் கோடையில் குளிர்வது போல் இருந்தது.
பதவியா நகரத்தில் இருந்து சிறிபுர செல்லும் தெரு சிறிது குளிர்மையாக இருந்தது. தெருவுக்கு அருகிலே பதவியா குளத்தின் தண்ணீர் வாய்க்கால் வழியாக சிறிபுர செல்கிறது. கால்வாயில் அதிக தண்ணீர் ஓடாவிட்டாலும் புற்கள் கரையோரங்களில் பசுமையாக இருந்தன. இதை விடப் பெண்கள் குறுக்கு கட்டு சேலையுடன் மார்பை பாதி மூடியும், மூடாமலும் குளிக்கும் காட்சி.. ‘பாலைவனத்தில் சோலை’ என்பது இதுதான் என எண்ண வைத்தது. இதைத்தான் ‘ஓடையில் பூத்த மலர்கள்’ என்பதோ? சித்ராவை பார்க்க போகும் போது இப்படி மனதை அலைய விடக்கூடாது என நினைத்துக்கொண்டு அக்சிலேட்டரை வேகமாக திருகினேன்.
மோட்டார் சைக்கிளின் சத்தம் கேட்டவுடன் உள்ளே இருந்து சித்ரா வாசலுக்கு வெளியே வந்தாள். மஞ்சள் கலர் சேலையும் அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். வழமைக்கு விட அன்று அலங்காரம் கூடுதலாக இருந்தது. கண்ணுக்கு மை தீட்டியிருந்ததால் வழக்கமான பெரிய கண்கள் இப்போது காதளவு ஓடிய கண்களைப் போலத் தோன்றின.
அவளைப் பார்த்து, ‘உண்மையில் நீ அழகிதான் ‘ என்றேன்.
‘சும்மா போங்கள் ‘ என பொய்யாக சிணுங்கினாள்.
‘அப்பா அம்மா இருக்கிறார்களா? ‘
‘ஆம், எனகூறியபடி ‘தாத்தே’ என்று உள்ளே திரும்பி அழைத்தாள்.
‘ஏன் அப்பாவை கூப்பிடுகிறாய்? அவர் இல்லாமல் இருந்தால் நல்லது’ என செல்லமாக என் மேலுதட்டை ஈரப்படுத்திக் கொண்டேன். தந்தை உள்ளேயிருந்து வந்தார். பின்னால் தாயும் வந்தார்.
தந்தையார் வழக்கத்துக்கு மாறாக சேட் அணிந்திருந்தார்.
‘போமஸ்துதி; மாத்தயா’.
பதில் வணக்கம் கூறிவிட்டு ‘ருக்மன் எங்கே? ‘ என்று கேட்டேன்.
ருக்மன் வரும் திசையை காட்டினாள்.
எல்லோருமாக வீட்டின் உள் சென்றோம்.
நானும் ருக்மனும் கதிரைகளில் அமர்ந்தோம். சித்ரா குசினிக்குள் சென்று விட்டாள்.
‘ருக்மன், ஏன் வேலைக்கு வரவில்லை? ‘ என்றேன்.
‘சின்ன வேலை இருந்தது’ என்றான் சிரித்தபடி.
‘உங்கள் அம்மா அப்பா சுகமா’ என சித்ராவின் தகப்பனார் வினவினார்.
‘நல்ல சுகம் ‘.
அப்பொழுது குசினியிலிருந்து தேநீர் வந்தது. எல்லோரும் மௌனமாக தேநீர் பருகினோம். மௌனமே உலகெங்கும் ஒரு மொழியாக இருந்தால் பல பிரச்சனைகள் குறையுமே என யோசித்தேன்.
எப்படி என்ன பேசுவது என தெரியவில்லை. பேசி முடிக்கும் கல்யாணத்தில் இந்த உபத்திரவம் இருப்பதில்லை. எந்த சங்கடமும் இல்லாமல் காசு பணத்தில் எவ்வளவு இலகுவாக ஆரம்பிப்பார்கள்.
இந்த மௌன நாடகத்தில் பொறுமை இழந்து சித்ரா மீண்டும் குசினிக்குள் போய்விட்டாள். இனி தாங்காது என நினைத்தபடிஇ
‘காமினி உங்களுக்கு ஏதாவது கூறினாரா? ‘ என்றேன்.
‘ஆம் மாத்தையா’ என்றார் சித்திராவின் தாயார் மிகவும் வெட்கத்துடன்.
நானும் சித்ராவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். திருமணம் முடிக்கவும் எண்ணியுள்ளோம் என பாடசாலை மாணவன் போல ஒப்புவித்தேன்.
‘தங்களது வீட்டில் சம்மதிப்பார்களா’, என்றார் தாயார்.
‘உங்களிடம் பேசிய பின் அவர்களிடம் பேச விரும்புகிறேன். எனது தாய் தகப்பனார் விரும்பா விட்டாலும் குறுக்கே நிற்க மாட்டார்கள்’ என்று என் தரப்பினைச் சொன்னேன்.
‘உங்களைத் திருமணம் செய்ய சித்ரா கொடுத்து வைத்தவள்’. என்றார் தந்தையார்.
‘அப்பே வாசனாவ’ என தாயார் கூறினார்.
‘அப்படி சொல்லவேண்டாம். நான் தான் அதிஷ்டசாலி. சித்ராவை விட, ‘ என்றேன்.
குசினி கதவோரம் சித்ரா தன்னுடைய கண்களை துடைப்பது தெரிந்தது. இது நிச்சயமாக ஆனந்த கண்ணீராக இருக்கும் என நினைத்து நானும் ஆனந்தித்தேன்;.
ருக்மன் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு ‘ஏன் ருக்மன்; பேசவில்லை’ என்றேன்.
‘தங்கச்சிக்கு சந்தோசம் என்றால் எனக்கும் சந்தோசம். மேலும் உங்களைப் போல் நல்ல மனிதர் கிடைப்பது அரிது ‘ என்றான்.
‘என்னைப் புகழ்ந்து பேசி என்னை சங்கடப்படுத்தாதே ‘ எனக்கூறி சித்திராவின் தந்தையாரை பார்த்து ‘மாச நடுப்பகுதியில் பதிவுத் திருமணம் செய்ய நினைக்கிறோம் ‘ என முடித்தேன்.
‘ எங்களுக்குப் பூரண சம்மதம். ‘ என ஒரே குரலில் எல்லோரும் கூறினார்கள். அவர்களது குரலில் ஒருவித அதிர்ச்சி இளையோடியிருந்தது.
‘நான் அடுத்த கிழமை யாழ்ப்பாணம் சென்று என் பெற்றோரிடம் பேசுகிறேன். எப்படியும் பிரச்சனை இருக்கும். ஆனால் சமாளிக்கலாம்’ என கூறியபடி வெளியே நடந்தேன்.
சித்ராவின் பெற்றோருக்கு விருப்பமாக இருந்தாலும் நான் கேட்ட விதமும் பதிவு திருமணம் எனப் பிரேரித்ததும் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருப்பது அவர்கள் முகங்களில் தெரிந்தது. அவர்கள் தங்களுக்குள் பேசுவதன் மூலம் இந்த அதிர்ச்சியை போக்குவார்கள் என நினைத்துக்கொண்டேன்.
வெளியே நின்ற போது ருக்மன்; வந்து ‘நான் உங்களோடு பேசாததற்கு மன்னிக்க வேண்டும். எனக்கு வார்த்தை வரவில்லை..’
‘நீ என்னை சாப்பாட்டுக்கு அழைத்திராவிட்டால் நான் சித்ராவை சந்தித்திருக்க முடியாது. எனவே நான் தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘
‘என்ன அண்ணா சொல்கிறார் ‘ என்றபடி சித்ரா வந்தாள்.
‘ருக்மன்; என்னை சாப்பாட்டுக்கு அழைத்து முள்ளம் பன்றிச்சம்பலுடன் உணவு அளித்ததற்கு நன்றி கூறுகிறேன்.’ எல்லோரும் சிரித்தோம்.
ருக்மன்; கடைக்குப் போவதாகக் கூறி விட்டுச் சென்றான்.
‘சித்ரா நான் உனக்கு வாங்கி வந்தது’ எனத் தோல் பைக்குள் இருந்த சேலையைக் கொடுத்தேன்.
‘மிகவும் நன்றாக இருக்கிறது. எங்க வாங்கினீர்கள்? ‘
‘யாழ்ப்பாணத்தில். ஆனால் இது ஜெய்ப்பூர் சேலை’ என்றேன் பெருமையுடன்.
சேலையை தன் மார்புகளின் மீது போட்டுப் பார்த்தாள்.
அவளுடைய மஞ்சள் சேலை மேல் அந்த சிவப்பு சேலை சந்தனக் கிண்ணத்தில் தற்செயலாக சிந்திய குங்கமமாகக் காட்சி கொடுத்தது.
‘இங்கே கிட்டவா’ என கையைப் பிடித்து இழுத்தேன்.
‘அம்மா பார்க்கிறா’ என விலகினாள். உண்மையில் தாயார் வருவது தெரிந்தது.
‘சேலையை உள்ளே வைத்து விட்டு வா, வயற்கரைப்பக்கம் சிறிது நேரம் நடந்து வருவோம்… ‘
புள்ளி மானாக ஓடிச்சென்று தாயாரிடம் சேலையை கொடுத்து விட்டு வந்தாள். வீட்டின் பின்புறத்தில் வயல் வரப்போடு நடந்தோம்.
ஆறுமணியானதால் சிறிய வெளிச்சம் மட்டும் இருந்தது. வயல் முடிந்த இடத்தில் பதவியா குளத்தை வயலுடள் இணைக்கும் வாய்க்கால் இருந்தது. அங்கு சீமெந்தினால் கட்டப்பட்ட பாலத்தில் இருவரும் அமர்ந்தோம்.
‘சித்ரா உன்னைக் கண்டது, பேசியது எல்லாம் ஒரு கனவு போல் இருக்கிறது’ என கூறி இழுத்து அணைத்தேன்.
‘எனக்கும் அப்படியே’ என கூறியபடி மடியில் விழுந்தாள்.
அவளது கழுத்துக்குள் கையை கொடுத்து தலையை உயர்த்தி என்னருகே வைத்து பார்த்தபோது சித்ரா கண்ணை மூடிவிட்டாள்.
‘சித்ரா’ என்றேன் மெதுவாக.
‘இம் ‘
மேலும் என் முகத்தருகே அவள் முகத்தைக் கொண்டு வந்தேன்.
இம்முறை கண்களை திறந்தாள். அவள் உதட்டில் என் உதட்டை பதித்தேன். மீண்டும் கண்ணை மூடிவிட்டாள். ஆனால் என் கழுத்தை அவளது கைகள் கொடி என படர்ந்து இறுக்கியது. எனக்கு மூச்சு திணறினாலும் இவ்வளவு பலம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என நினைத்தபடி, அவள் இடையை என் கைகளால் வளைத்தேன். இப்போது இந்த உலகத்தை பார்ப்பது நல்லதல்ல என நானும் கண்களை மூடினேன்.
‘கிளுக்’ கென சத்தம் கேட்டு இருவரும் கண் விழித்தோம். எதிரில் எதுவும் தெரியாதபடி இருட்டாகி விட்டது. மீண்டும் ‘கிளுக்’ என்ற சத்தம் கேட்டது.
கால்வாய் கரையில் ஒரு எருமை மாடு போய்க் கொண்டிருந்தது.
‘ஐயோ அம்மாவுக்கென்ன பதில் சொல்வது.? ‘
‘எருமை மாடு எழுப்பி விட்டதென போய் உன் அம்மாவுக்கு சொல்லு.’
‘போங்கள் எப்போதும் பகிடிதான் ‘
வீடு வந்து சேர்ந்த போது தாய்தந்தையர் வாசலிலே நிற்பது தெரிந்தது.
‘வயல்கரையோரமாக நடந்த போது இருட்டாகி விட்டது’ என்று ஏதோ முணுமுணுத்தாள்.
‘இந்தப் பக்கம் பாம்பு அதிகம். இருட்டில் நடப்பது நல்லதல்ல’ என்று அவளுடைய தந்தையார் சகஜமாக கூறினார்.
‘அப்படியா! ‘ என மனப்பாரம் நீங்கியவனாக கதிரையில் அமர்ந்தேன்.
தொடரும்.
மறுமொழியொன்றை இடுங்கள்