
அக்கினிஞானஸ்நானம்
பழையபுலிகள் மனம் திறந்துகதைப்பதுஅரிது.
தங்களின் இயக்கநடவடிக்கைகள் குறித்துவாயேதிறக்கமாட்டார்கள். எமது நிறுவனத்தில் இரண்டு வருடங்களாகப் பணிபுரியும் முன்னாள் ‘பளைப்பொறுப்பாளரும்,மல்லாவிப் பொறுப்பாளரும்’ இதற்குவிதிவிலக்கல்ல. நான் சிலசமயங்களில்,அவர்கள் பங்குபற்றிய தாக்குதல்கள்,மறக்கமுடியாததாக்குதல்கள் மற்றும் ஏன் அவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறினார்கள் என்றுபவ்வியமாகக் கேட்பேன். ‘பெரிசாய் சொல்வதற்க்குஒன்றும் இல்லை தம்பி இயக்கத்திலசேர்ந்திட்டன். அம்மா தனிச்சுப்போனா.குடும்பத்தைப் பார்க்க ஒருதரும் இல்லை…’போன்ற சாட்டுக்களைக் பட்டும்பாடாமலும் கூறுவார்கள். நானும் ஒன்றையும் விடுத்துவிடுத்துக்கேட்கமாட்டேன். அவர்கள் இயக்கத்தைவிட்டுவெளியேறுகையில் இயக்கநடவடிக்கைகளைப்பற்றி வெளியில் வாய் திறக்கக்கூடாது என்ற கடும் நிபந்தனை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாதல்ல.
எவ்வளவுநாட்களுக்குத்தான் எல்லாவற்றையும் மனதுக்குள் அடைத்துவைத்திருப்பது. என்றோஒருநாள் அவை வெளியில் வந்தே ஆகும் என்று நான் நம்பினேன். ஒருநாள் வெளிக்கள விஜயத்தின் போது எமது மன்னார் அலுவலகத்தில் நானும் முன்னாள் பளைப் பொறுப்பாளரும் ஒன்றாகத் தங்க நேரிட்டது. இரவு உணவின் பின்னர் அவர் ஏதோஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பதுபோல் எனக்குப்பட்டது.
அவனுக்கருகில் சென்று ‘என்ன அடுத்தது எந்த காம்ப் அடிக்கலாம் என்றுதிட்டம் போடுகிறீர் போல கிடக்கு’என்றேன் பகிடியாக. ‘இல்லை சேர்’என்றான் உடனடியாகவே. ‘அப்ப என்ன கடும் யோசனை’என்று நான் கரிசனையுடன் கேட்டேன். ‘ஒண்டும் இல்லை சேர்’என்று இழுத்தான். நான் வேறேதுவும் கேளாமல் அவ்விடத்திலேயே நின்றேன்.
‘சேர் இரண்டு சம்பவங்கள் திடீரென என்ரமனசில வந்துஎன்னை பைத்தியக்காரன் ஆக்குது. அந்த பாவங்கட்கு என்ன பிராயச்சித்தம் செய்யப்போறனோ தெரியவில்லை’என்றான்
சற்றே பதட்டத்துடன் குனிந்ததலை நிமிராது. நான் இன்னும் ஒன்றும் கூறாது சிகரட் ஒன்றை பற்றவைத்தேன். அவனேதொடர்ந்தான்.
‘இந்தியன் ஆமிக்காலத்தில ஒரு பொம்பிளைப்பிள்ளை எங்கட காம்ப்புக்கு வந்தது. தனது தகப்பன் ஒரு இந்தியன் ஆமியை கல்லியாணம் கட்டுமாறு தன்னை எந்தநேரமும் ஆக்கினை தாறரார் என்றும் தனக்கென்றால் துப்பரவாய் விருப்பம் இல்லை என்றும்,நீங்கள்தான் அவரை ஒருக்கா கூப்பிட்டு வெருட்டி விடவேணும்’எனறு சொன்னது.
நானும் இன்னொருவனும் அந்த தகப்பனை எங்கட இடத்துக்கு கூப்பிட்டு விசாரித்தோம். அவனும் இறாங்கியாக கதைத்தான். ஆளை முழங்கால் இருத்தி மற்றப் பொடியன் நெத்தியில பிஸ்டல வைத்து வெருட்டிக் கொண்டிருந்தான். நான் கொஞ்சம் தள்ளிபார்த்துக்கொண்டுநின்றேன். அந்தத் தகப்பன் இருந்தாப்போலநெத்தியிலிருந்தபிஸ்டலைஓங்கிஒருகையால தட்டிப்போட் டுஓட வெளிக்கிட்டான். அவன் தட்டியவேகத்திலஎங்கடமற்றப்பொடியன் நிலைகுலைஞ்சு போனான். பிஸ்டல் என்ட காலுக்கு பக்கத்திலதான் விழுந்தது. டக்கென்றுநான் துவக்கை எடுத்து ஒண்டையும் யோசிக்காமல் ஓடினவனை சுட்டன். ஆள் ஒன் த ஸ்பொட்டில முடிஞ்சுது. அந்த அறை முழவதும் ஒரே ரத்தம்.’என்று மூச்சுவிடாமல் கூறிவிட்டு,மடமடவெனமுக்கால் போத்தல் தண்ணியைகுடித்து விட்டு மேலும் தொடர்ந்தான்.
‘அதுபெரியபிரச்சினையாய் போச்சு. செத்தவன் படகுஓட்டியாம்,ஆரம்ப காலங்களில் அண்ணைக்கு கனக்க உதவி செய்தவனாம். இயக்கம் எங்களை 3 கிழமை கவுஸ் அரஸ்ட்ரில் வைச்சுது. அம்மான்ட ஆக்கள்தான் விசாரித்தார்கள். விசாரணை என்றால் தெரியும்தானே சேர்,ஒருமாசமாய் சரியாய் எழும்பிக்கூட நிக்க ஏலாது. மலத்தோடயும் சலத்தோடயும் ஒரே ரத்தம்.’மடைதிறந்தவெள்ளம் போல் தனது உள்ளக் கிடைக்கைகளை விடாதுதொடர்நுகொட்டித் தீர்த்தான்.
‘ஆனால் சேர் மற்றசம்பவம் தான் மனதை தொடர்ந்து சித்திரவதை செய்துகொண்டிருக்கு.
அதைநினைத்தால் ஒரு நிமிஷம் கூட நிம்மதியாக இருக்கமுடியாது. அதுவும் இந்தியன் ஆமிக்காலத்திலதான் நடந்தது.’அவன் சொல்வதையேவாயைப் பிளந்தபடிகேட்டுக்கொண்டிருந்தநான்,எனது விரல் சுள்ளென்று சுடத்தான் கையிலிருந்த சிகரட் முடிந்ததைஉணர்ந்தேன். அதை எறிந்துவிட்டு இன்னுமொன்றை பற்றவைத்தேன். இம்முறைஅவனுக்கும் ஒன்றை நீட்டினேன்.
அவன் தயங்கினான்.
பெட்டியிலிருந்தஒன்றைவெளியில் இளுத்துவிட்டுமீண்டும் நீட்டினேன்.
இம்முறைஅவன் பயபக்தியுடன் அதைஎடுத்துவாயில் வைத்தான். நெருப்புபெட்டியையும் கொடுத்தேன். நீண்டகாலம் பழக்கப்பட்டவன் போல் ஸ்டைலாக சிகரட்டை மூட்டினான்.
‘எங்களுக்கு ஓடர் வந்தது மயிலிட்டியில் ஒரு பொம்பிளையைபோட்டுத் தள்ளவேண்டுமென்று. அவள் ஈ.பி.ஆர.;எல்.எவ். இன்ர உளவாளி. ஆவளாள எங்கட கனக்கபோராளிகள் பிடிபட்டுட்டாங்கள். இது அண்ணேன்ர நேரடி உத்தரவு என்றுதான் எங்கடபொறுப்பாளர் சொன்னார்.’அவன் இவற்றைக் கூறும் பொழுது சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டன் போலவும் சில சமயங்களில் எவ்வித உணர்ச்சிகளுமற்ற பிணம் போலவும் விபரித்துக்கொண்டிருங்தான். நான் தொடர்ந்து சிகரட்டை இழுத்துக்கொண்டே இருந்தேன்.
சாதாரணமாக என்னுடன் இயக்க விடயங்களை கதைக்கும்பொழது எப்பொழதும் அங்குமிங்கும் வேறு யாராவது வருகிறார்களா என அவதானித்தவாறே அவன் கதைப்பான். ஆனால் இன்றோ அதைப்பற்றி ஒருவித கவலையுமின்றி தொடர்ந்தான். நான்தான் அங்குமிங்கும் நோட்டம் விடவேண்டியிருந்தது.
‘நாங்கள் அவளிண்ட நடமாட்டத்தை ரெக்கி எடுத்தோம் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 6 மணிபோல தன்ர பேரப்பிள்ளையுடன் விளையாடுவதற்க்காக தனது மகளின்ட வீட்டிற்க்கு போய் வருவாள். ஒருநாள் அப்படித்தான் தனது மகளின்ட வீட்டு முற்றத்தில் பொழுதுபடுகின்ற நேரத்தில பேத்தியை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பாடு தீத்திக் கொண்டிருந்தாள்.
நானும் இன்னொருத்தனும் சைக்கிளிலபோய் ‘குழந்தையைஅங்கால கிடத்து’என்றோம். அவள் குழந்தையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு உரக்க கத்தத் தொடங்கினாள்.
‘யோசிக்கநேரமில்லை படபடவென வெடிவைத்தேன் குழந்தையின்டஉடம்பிலதான் அதிகமானசூடு விழுந்தது. இரண்டுபேரும் அந்த இடத்திலேயை சரி. சைக்கிளில் நாங்கள் பறந்து வந்திட்டம்’என்றான் முகத்தை மறுபக்கம் திருப்பி நா தளதளதத்தவாறே.
இன்னுமொருசிகரட்டைஅவனுக்கு கொடுத்து விட்டு கட்டிலில் போய் சாய்ந்துகொண்டேன்.தலைஒருமாதிரியாகச் சுற்றியது. என் இரு கடைக் கண்ணிலும் மண்ணீர்கசியத் தொடங்கியங்கியது.
பிறிதொருநாள் மல்லாவிப் பொடியனும் இவ்வாறன இன்னொரு சம்பவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டான்.
‘துரோகி ஒருவனை போட்டுத் தள்ளுவதற்க்காக அவன்ர வீட்டைபோய் வாசலில நிண்டுஆளின்டபெயரைச் சொல்லி கூப்பிட்டன். இரண்டுதரம் கூப்பிட்டும் ஒரு பதிலும் இல்லை. ஆனால் எனக்குத்தெரியும் ஆள் உள்ளுக்கதான் இருக்கெண்டு. மூன்றாம் முறையும் ‘அன்பாய்’ கூப்பிட்டன். ஒரு பெண் வெளியில் வந்து தம்பி நீர் ஆர்? உமக்கு என்ன வேணும்?என்றுபடபடப்புடன் கேட்டா.
லொறி ஒன்று விக்கவேணும் அவர் நிக்கிறாரோ என்று கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுது ஆள் வெளியில் வந்தான். ஆளைக் கண்டதும் இடுப்பில செருகியிருந்த றிவோல்வறை டக்கென்றுஎடுத்து நீட்டினேன்.
ஜயோ அவரை ஒண்டும் செய்யாதையுங்கோ என்று மனுசி கத்திக்கொண்டு குறுக்கபாஞ்சுது. முதல் சூடு மனுசின்ரபிடரியில விழு பொத்தென்று கீழே விழுந்தது. அடுத்த சூடு குறிதவறாமல் மனுசன்டநெத்தியில வைச்சன். ஆளும் சரி. திரும்பி இரண்டு மூண்று அடிவைக்கவில்லை வீட்டுக்குள்ள இருந்து ஜஞ்சு அல்லது ஆறு வயசுப்பொம்பிளைப்பிள்ளைஒன்றுஅம்மா…!அப்பா…!என்று கத்தியழுது கொண்டு வெளியே ஓடிவந்தது. எனக்கென்னசெய்வதென்றுதெரியவில்லை. மனசிலஎன்னதோன்றியதோஞாபகமில்லை. அந்தக்குழந்தையையும் அந்த இடத்திலேயேபோட்டுத்தள்ளிவிட்டுவந்திட்டன். நடந்தஎல்லாவற்றையும் பொறுப்பாளரிட்ட பயத்துடன் சொன்னன். ‘நீ என்னவேணுமென்டேமனுசியைச் சுட்டனி. தாயும் தகப்பனும் செத்தாப்பிறகுசின்னப்பிள்ளையை ஆர் பாக்கிறது. நீ செய்ததுதான் சரி நான் அம்மானிட்ட எல்லாத்தையும் சொல்லிறன்’என்றுபொறுப்பாளர் எனக்கு சப்போட் பண்ணினார். இதுவரையும் எனக்குஒருபிரச்சனையும் வரவில்லை. ஆனால் சேர் அங்சு ஆறு வயதுப்பொம்பிளைப்பிள்ளைகளைக் காணும் பொழுது சிலவேளைகளில் உடம்பெல்லாம் வேர்த்து தலைசுற்றிமயக்கம் வரும்’என்றான் அந்த மல்லாவிப் பொடியன்.
எனக்கோ என் காலுக்கடியில் நிலம் பிளந்து பூமி கீழிறங்குவது போல் உணர்ந்தேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்