
காமினியும் நானும் வெள்ளி இரவு வேட்டைக்குச் செல்ல தீர்மானித்தோம். காமினி நண்பனின் காரையும் இரண்டு துப்பாக்கிகளையும் இரவலாகப் பெற்று வந்தான்.
செட்டிகுளத்துக்கு அருகில் உள்ள ராமன் குளம் என்னும் இடத்தில் பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அந்த கிராமத்தினை சுற்றி அடர்ந்த காடு உண்டு. இந்த காடுகளும் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்தின் எல்லை வரை செல்வதால் பல மிருகங்கள் அதிக அளவில் வரும். காட்டுப் பன்றிகள் கிராமத்தில் பயிர்களை அழித்து விடும். முஸ்லிம் விவசாயிகள் காட்டுப்பன்றிகளைச்சுட விரும்பாததால் பக்கத்து கிராமங்களில் உள்ளவர்கள் சுடுவதை வரவேற்பார்கள். இந்த காரணத்தால் ராமன் குளத்தை வேட்டைக்கு தெரிவு செய்தோம்.
இரவு எட்டு மணியளவில் ராமன் குளத்தை அடைந்து எமக்கு பரிச்சயமான லத்தீப்பின் வீட்டுக்குச் சென்றோம். லத்தீப் இரண்டு ஓலைப் பாய்களை எமக்கு தந்தார். லத்தீப்பின் சிறிய குடிசை வீட்டின் முற்றத்தில் படுத்திருந்து விட்டு இரவு ஒரு மணிக்கு வேட்டைக்குப் போவது என தீர்மானித்தேன். எனக்கு வேட்டை, காடு என்பன புதுமையாக இருந்ததால் காமினியையே தற்காலிகமாக குருவாக வைத்துக்கொண்டேன்.
முற்றத்தைச் சுற்றி வாழை மரங்கள் நின்றாலும் சிறிது தூரத்தில் பற்றைக்காடுகள் உள்ளன. இருட்டில் சத்தங்கள் கேட்டன.
‘காமினி என்ன சத்தம் ‘.
‘பெரும்பாலும் மயில்களாக இருக்கும். ‘.
‘புலி ஏதாவது இருக்காதா? ‘
‘யாழ்ப்பாண புலி இருந்தால் தான் ‘ என சொல்லி சிரித்தான்.
‘காமினி நான் வேட்டைக்கு வந்தது ஒரு விடயத்தை பற்றி பேசுவதற்கு. ‘
‘என்ன பிரச்சனை’
‘இது எனது தனிப்பட்ட பிரச்சனை. ஆனாலும் காமினியின் அபிப்பிராயத்தைக் கேட்க விரும்புகிறேன். ‘
‘கேளுங்கள் ‘
‘நான் சித்ராவை விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள். ‘
‘அப்ப என்ன பிரச்சனை. எப்போது எங்களுக்கு விருந்து? ‘ எனக் கூறிக்கொண்டு எழுந்து நின்றான்.
‘விருந்து கிடக்கட்டும். நான் சித்ராவின் பெற்றோரிடம் பேச வேண்டும். அத்துடன் ருக்மன்; என்ன நினைக்கிறானோ தெரியவில்லை’.
‘அது எல்லாம் வெல்லலாம். நான் ஏதாவது உதவி செய்யவேண்டுமா? ‘
‘இந்த விஷயத்தை சித்ராவின் பெற்றோரிடமும், ருக்மனிடமும் பேசுவதற்கு உதவி செய்ய வேண்டும். ‘
‘நான் உதவி செய்கிறேன். ஆனால் உங்கள் வீட்டில் எப்படி?
‘அப்பா ஆத்திரப்படுவார். அம்மா கவலைப்படுவார். கடைசியில் சமாளிக்கலாம் என நினைக்கிறேன். ‘
நடுநிசிக்கு மேல் ஆகிவிட்டதால் படுத்த ஓலைப்பாயை சுருட்டி வைத்துவிட்டு இருவரும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டோம். காமினியின் கைகளில் ஐந்து பட்டரி டோர்ச் லைட் இருந்தது.
சாரத்தை முழங்காலுக்கு மேல் கட்டிக்கொண்டு காமினிக்கு பின்னால் நடந்தேன். காலில் செருப்பு அணிந்தால்; மிருகங்களுக்கு அந்தச் சத்தம் கேட்டு ஓடிவிடும் என்றதால் வெறுங்காலோடு நடந்தோம். முட்செடிகள் தொடை வரை கீறின. வாழைத்தோட்டத்தின் அருகில் உள்ள சிறுகொட்டிலுக்கு வந்தோம். அங்கிருந்து மிக அடர்த்தியான காடு உள்ளது. காட்டுப்பகுதியில் இருந்து வாழைத்தோட்டத்துக்கு வரும் பன்றிகளுக்காக காவல் இருந்தோம். சிலமணி நேரத்தின் பின் எதுவும் வராதபடியால் காட்டின் ஓரமாக நடந்தோம். எப்பொழுதாவது தான் டோர்ச் லைட் பாவிக்க வேண்டும் என்பதால் கஷ்டமாகவும் பயமாகவும் இருந்தது. பல தடவை ‘பாம்பு இந்த பக்கமாக வருமா ‘ என காமினியிடம் கேட்டேன். காமினியும் பயப்படவேண்டாம் என ஒப்புக்கு சொல்லி வைப்பான்.
சிறிது தூரம் நடந்த போது எதிரே ஒரு சத்தம் கேட்டது. காமினி ‘பன்றி, சுடுங்கள் ‘ என்றான். சத்தம் வந்த இடத்தை நோக்கி சுட்டேன். காமினியின் துப்பாக்கியிலிருந்தும் சத்தம் வந்தது. எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் சிதறி ஓடும் சத்தம் கேட்டது.
‘காமினி லைட்டை அடி’ என்றேன்.
பிரகாசமான வெளிச்சத்தில் காட்டுப்பகுதி நன்றாகத் தெரிந்தது. ஆனால் பன்றி எதுவும் காணவில்லை.
நான் ஏமாற்றத்துடன் ‘இருவர் சுட்டும் பிரயோசனம் இல்லை’, என்றேன்.
காமினி பதில் பேசாமல் லைட் வெளிச்சத்தில் பரவலாக தேடி இலை ஒன்றை எடுத்து என்னிடம் காட்டினான்.
‘இது இரத்தம் ‘ என்றேன்.
‘பன்றி சுடுபட்டு இங்கு பக்கத்தில் கிடக்கவேண்டும். தேடுவோம். ‘
இருவரும் தேடினோம். கிடைக்கவில்லை. கடிகாரம் நான்கு மணி காட்டியது.
‘நாங்கள் கொட்டிலுக்கு போய்விட்டு ஐந்து மணிக்கு திரும்பி வருவோம். அப்போது வெளிச்சத்தில் தெரியும் ‘ என்றான் காமினி.
கொட்டிலுக்குப் போய் குளிருக்கு இதமாக இருக்க நெருப்பு மூட்டினோம். இது எனது முதல் வேட்டை அநுபவம். எனக்குள்ளேயே அசை போட்டுக் கொண்டேன். காமினி ஒரு குட்டித் தூக்கம் போட்டான்.
சொல்லி வைத்தாற்; போல் ஐந்து மணிக்கு வெளிச்சம் வந்தது. விடியும் காலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. இருட்டைப் பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்கு மென்மையான வெளிச்சம் இதமாக இருந்தது. இளம்தென்றல் உடலை தொட்டுத் தழுவிக்கொண்டு சென்றது. நாட்டுப்புறத்தில் கோழி கூவுவது போல் இங்கு பல பறவைகள் வித்தியாசமான தொனியில் கதம்ப இசை தொகுத்து வாசித்தன. ஆண் மயில்கள் மரங்களை விட்டு இறங்கி வந்து தோகையை விரித்து ஆடின. பெண்மயில்கள் மரங்களிலும், நிலத்திலும் இறங்கி வந்து ஆண்மயில்களின் ஆட்டத்தை ரசித்தன. மனதை விட்டு அகல முடியாத காட்சி.
நாங்கள் கொட்டிலில் இருந்து திரும்பவும் பன்றிகளைச் சுட்ட இடத்திற்கு வந்து இரத்ததுளிகளைப் பின்தொடர்ந்தோம். மிகவும் நெருக்கமான காடு. அங்கு நிமிர்ந்து நடக்க முடியாது. முட்பற்றைகளும், மரங்களும் சிறிதும் இடைவெளி இல்லாமல் இருந்தபடியால் துப்பாக்கியால் விலத்தியபடி நடந்தோம். பல இடங்களில் முழங்காலில் தவழ்ந்து சென்றோம். இப்படி பல நூறு யார் தூரம் சென்றபோது ஆண்பன்றி ஒன்று இறந்து கிடந்தது.
காமினி சந்தோஷத்துடன் பின் காலை பிடிக்கும்படி கூறி விட்டு முன்கால்களை தானே தூக்கினான்;.
மரத்தின் கொப்பில் பன்றியை கட்டி தூக்க்p விட்டு கீழே நெருப்பைக் கொழுத்தி பன்றியின் ரோமங்களை பொசுக்கினோம். காமினி தன்னிடம் இருந்த கத்தியால் குடலை வெட்டி எறிந்து விட்டு நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த பொலித்தீன் பைகளில் கட்டி காரில் ஏற்றி விட்டு மீண்டும் லத்தீப்பின் குடிசைக்குச் சென்றோம்.
லத்தீப் இருவருக்கும் தேநீர் தந்ததால் குடித்து விட்டு, பத்து ரூபாயை லத்தீப்பிடம் கொடுத்தோம். ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்பு வாங்கிக்கொண்டார்.
பன்றி வேட்டை வெற்றியில் முடிந்த சந்தோஷத்தில் மன்னார் வீதியால் மீண்டும் மதவாச்சி வந்து சேர்ந்தோம்.
மறுமொழியொன்றை இடுங்கள்